யாரோடு யாரோ ?
![]() |
யாரோடு யாரோ ?-yarodu-yaro-tamil-story |
யாரோடு யாரோ ?
கையில், 'பேக் 'குடன் உள்ளே நுழைந்த அக்காவை வரவேற்றார், பார்த்திபன்.
"வாக்கா... எப்படியிருக்கே, வேலையிலிருந்து, 'ரிடையர்' ஆகிட்டே. இருந்தாலும், இந்தப் பக்கம் வர்றதில்லை. பிள்ளை வீடே கதின்னு இருக்கே.' "என்னப்பா பண்றது... மகன், மருமகள் இரண்டு பேரும் வேலைக்குப் போறாங்க. 'ரிடையர்ட் ஆன பிறகு பேரப் பிள்ளைகளோடு நேரம் போகுது. இப்பவும், ஒரு வாரம் என் தம்பி வீட்டுக்குப் போயிட்டு வரேன்னு அவங்ககிட்டே, 'பர்மிஷன்' கேட்டுதான் வந்திருக்கேன், '' சொல்லி சிரித்தாள்.
"இருக்கட்டும் கமலா... அப்புறம் சவீதாவுக்கு மாப்பிள்ளை பார்த்திட்டு இருந்தீங்களே... எதுவும் முடிவுக்கு வந்துச்சா... சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க; தள்ளிக்கிட்டே போகுது."
அக்கா கேட்க, பார்த்திபன் முகத்தில் சோர்வு. "உன்கிட்டே சொல்றதுக்கு என்னக்கா... எத்தனையோ வரன் வந்து பார்த்துட்டு போயாச்சு. யாருமே அவளை வேண்டாம்ன்னு சொல்லலை. இவள் தான் வர்ற வரன் எல்லாத்தையும், இவன், ரொம்ப குண்டாக தெரியறான். இவன், முகமே சரியில்லை. சரியான முசுடாக இருக்கான்.
இவன், பேசுவதைப் பார்த்தால், செலவு செய்யவே யோசிப்பவன் போலிருக்கு. சரியான கஞ்சனாகத் தெரியறான். "இவன், அதிமேதாவியாக பேசறான். அவன் சொல்றது தான் சரிங்கிற மாதிரி பேசறான், சரியா வராது. இவன், எதையும் தானாக முடிவெடுக்க மாட்டான் போலிருக்கு. எல்லாத்துக்கும் அப்பா முகத்தையே பார்க்கிறான். இப்படின்னு, ஏதாவது காரணம் சொல்லி தட்டிக் கழிக்கிறா.
''நல்ல வரன் எல்லாம் அமையாமல் போயிடுச்சு. மனசு கஷ்டமாக இருக்கு. சவீதாகிட்ட எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். 'அப்பா, கடைசி வரை அவனோடு வாழப் போறது நான். எனக்கு பிடிக்கணும்பா. தயவுசெய்து, 'கம்பல்' பண்ணாதீங்க'ன்னு சொல்லிட்டா," என்றார், பார்த்திபன்.
''என்ன வேலை முடிச்சு வந்தாச்சா... 'டயர்டா இருப்பே. போய் 'ப்ரஷ்' ஆகிட்டு வா... இரண்டு பேரும் சேர்ந்து காபி குடிப்போம்."
"இதோ அஞ்சு நிமிஷம்."
சிறிது நேரத்தில் டைனிங் டேபிளில் அத்தையின் அருகில் அமர்ந்து, "ஊரில் எல்லாரும் எப்படி இருக்காங்க?” கேட்டபடி, "அம்மா காபி கொடும்மா," என்றாள், சவீதா.
"அம்மா எதுக்கு சவீ, நீயே இரண்டு பேருக்கும் காபி கலந்து எடுத்துட்டு வா.''
"நானா?'
''ஆமாம். நாளைக்கு கல்யாணம் பண்ணி போகப் போறவ, காபி போடத் தெரியாதா... போய் போட்டு எடுத்துட்டு வா... உன் கையால காபி குடிக்கணும் போல இருக்கு.
"குடுங்க அத்தை, டிகாஷன் சேர்த்து எடுத்துட்டு வரேன். ''
"பரவாயில்லை சவீ குடிப்போம். காபி போடறதில், உங்கம்மா, 'எக்ஸ்பர்ட்!' நாளாக ஆக, நீயும் பழகிப்பே. இப்பத்தானே அடுப்படிக்குள் நுழையறே... புதுசில் எல்லாமே இப்படித்தான்."
ஹாலில் கமலமும், பார்த்திபனின் அக்காவும், சவீதாவுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
அங்கு வந்த பார்த்திபன்,
"மேடவாக்கத்திலிருந்து ஒரு வரன் வந்ததே... ஐ.டி., கம்பெனி வேலை. ஒரே பையன். பேர் விக்ரம். 'வாட்ஸ் ஆப்'பில் போட்டோ பார்த்தோமே. அந்தப் பையனின் அப்பா பேசினாரூ... ஜாதகப் பொருத்தம் அமோகமாக இருக்காம். ஞாயிறன்று, பெண் பார்க்க வரேன்னு சொல்லி இருக்காரு." "யாருப்பா... 'ரெட் கலர் டீ ஷர்ட்'டும், ஜீன்ஸ் போட்டு ஒரு போட்டோ காண்பிச்சீங்களே... அதுவா?'
"ஆமாம் சவீ... பரவாயில்லை பார்க்கலாம்ன்னு நீ கூட சொன்னியே." என்ன சொல்வாளோ என தயங்கியபடி அவள் முகத்தைப் பார்க்க, "ஓ.கே., வரச்சொல்லுங்கப்பா... நமக்கு, 'செட்' ஆகுதான்னு பார்ப்போம்."
"அக்கா, நாளைக்கு பெண் பார்க்க வர்றாங்க. நீ வந்திருக்கிற நேரம், இந்த இடமாவது நல்லபடியாக முடியணும், " ''சவீதாவுக்கு பிடிச்சிருந்தா சரின்னு சொல்லப் போறா, நீ ஏன் மனசைப் போட்டு அலட்டிக்கிறே. அவங்களைப் பத்தி நல்லா விசாரிச்சுட்டே இல்லையா?''
“ரொம்ப நல்ல இடம்க்கா. அவள் விருப்பப்பட்ட மாதிரி மாப்பிள்ளை, ஐ.டி., கம்பெனியில் வேலை. ஒரே பையன். சென்னையில் சொந்த வீடு. அம்மா, அப்பா கிராமத்தில் நிலபுலம்ன்னு சகல வசதியோடு இருக்காங்க. இருந்தாலும், சவீதா என்ன குறை கண்டுபிடிப்பாளோன்னு பயமா இருக்கு," அக்காவிடம் சொன்னார், பார்த்திபன்.
மறுநாள்,
'பார்த்தி... நானும், சவீதாவும் தெரு முனையில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு போய் வர்றோம். 'இந்த இடம் எல்லாருக்கும் மனசுக்கு பிடிச்ச மாதிரி அமையணும்'ன்னு வேண்டிட்டு வர்றேன்."
"என்ன அத்தை இப்படியெல்லாம். 'சென்டிமென்ட்' பார்க்கறீங்க. எனக்குன்னு இருந்தால் நிச்சயம் நடக்கும்."
''சரி, என் திருப்திக்கு வா... கோவிலுக்குப் போயிட்டு வருவோம்." மருமகளை வற்புறுத்தி அழைத்துச் சென்றாள்.
சந்தனக்காப்பு அலங்காரத்திலிருந்த விநாயகரை கும்பிட்டனர்.
"மாப்பிள்ளை போட்டோ பார்த்தியே... உனக்குப் பிடிச்சிருக்கா, சவீ,''
"பரவாயில்லை அத்தை. பார்க்கிற மாதிரி இருக்காரு. குணம் எப்படியோ தெரியலை."
"நான் ஒண்ணு சொல்லட்டுமா. உன்னை வந்து பார்த்துட்டு போன வரன்கள்... நீ சொன்ன குறைகள் எல்லாத்தையும் சொல்லி சங்கடப்பட்டான், உங்க அப்பா.
"தெரியாமல் தான் கேட்கிறேன். நீ மட்டும் என்ன அப்படியொரு அழகா... கடைந்தெடுத்த சிற்பம் போல இருக்கியா... பார்க்க லட்சணமாக இருக்கே. மூக்கு சற்று பெரிசு, மேட்டு நெற்றி, ஒப்பனைகள் மூலம் உன் அழகை மிகைப்படுத்திக் காட்டறே... இந்த அழகு எத்தனை நாள் நம்மோடு வரும்.
“உன் அம்மாவும் கல்யாணத்தின்போது அவ்வளவு அழகாக இருந்தாள். இப்ப அந்த அழகு எங்கே போச்சு?
''குண்டாக இருக்கான், அழகில்லை. படிச்சு, ஒரு தகுதியான வேலையில் இருக்கும் ஒரு பையனை நிராகரிக்க, இதெல்லாம் காரணம்ங்கிறது கஷ்டமா இருக்கு. பெத்தவங்களை கலந்து பேசி முடிவெடுப்பது தப்பா. நீயே ஒரு புடவை எடுத்தால், நல்லாயிருக்கான்னு அடுத்தவங்களை கேட்கத்தாளே செய்யறே.
"வாழ்க்கைங்கிறது நீ நினைக்கிற மாதிரி கிடையாது, சவீ. பெத்தவங்க தகுதியான ஒருத்தனை தான் தேர்வு செய்வாங்கன்னு, முதலில் நீ அவங்களை நம்பணும். இரண்டாவது, அழகை மட்டும் பார்க்காமல் இவனோடு என் வாழ்க்கை இணைந்தால் நிச்சயம் நல்லாயிருக்கும்ன்னு மனசார நம்பணும்.
"குறைகளை மட்டுமே பார்க்கிறதாலே வர்ற வரன்களின் நிறைகள் உனக்கு தெரியாமல் போகுது. எத்தனையே நல்ல வரன்களை, ஏதேதோ காரணம் சொல்லி தட்டி கழிச்சுட்டே. இப்ப, உன் அப்பா பார்த்திருக்கிற வரனாவது அமையட்டும்.
''அதுவும், நீ அவன்கிட்டே குறைகளைத் தேடப் போறியா, இல்லை அவனிடம் இருக்கிற நிறைகளைப் பார்க்கப் போறியாங்கிறதில் தான் இருக்கு. சரி வா, வீட்டுக்குப் போகலாம். "
வீட்டிற்கு வந்தவுடன், "என்னக்கா... நல்லபடியாக சாமி கும்பிட்டியா," என்றார், பார்த்திபன்.
"திருப்திகரமாக, சந்தனக்காப்பு அலங்காரத்தில் விநாயகரை தரிசனம் பண்ணினோம். சவீதாவுக்கு இந்த இடம் அமையப் போகுது பாரேன்.''
“அக்கா... சவீதா சம்மதிப்பாளா?' முகம் மலர கேட்டார்.
"என் மருமகள் முட்டாளில்லை, புத்திசாலி. நிச்சயம் நல்ல முடிவெடுப்பாள்."
சொன்ன அத்தையை பார்த்து புன்னகைத்தாள், சவீதா.
பரிமளா ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."