sirukathaigal

நிலவுக்கும் நெருப்பென்று பேர் !


 நிலவுக்கும் நெருப்பென்று பேர் ! 

முன்கதைச் சுருக்கம்:

தருணுக்கு போன் செய்த ஜோஷ், முகிலா கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தான். இந்நிலையில், புவனேஷுக்கு நினைவு வந்து, தருண் பெயரை சொல்லி கூப்பிட்டதாக நர்ஸ் கூற, அவளுடன் சென்றான்- 

ஐ.சி.யூ.,வின் கெட்டியான கண்ணாடிக் கதவைத் தள்ளியபடி, தயக்க நடையோடு உள்ளே நுழைந்தான், தருண். அந்த பெரிய ஹால், 'பாலிவினைல்' பலகைகளால் சீராக பிரிக்கப்பட்டு, ஐ.சி.யூ.,வாக மாறி, 'ஏசி'யின் குளிர்ச்சியில் உறைந்து போயிருந்தது. நீல நிற அங்கிகளில் நோயாளிகள், சலனமில்லாமல் படுத்து, ஆக்சிஜன் சிலிண்டர்களின் உதவியோடு உயிர் வாழ்ந்து கொண்டிருந்தனர். 

சுற்றும் முற்றும் பார்த்தபடி நர்சை பின் தொடர்ந்தான், தருண். கண்ணாடிச் சுவர்களால் சூழப்பட்ட சதுரமான அறைக்குள் டாக்டர்கள் உட்கார்ந்து, நோயாளிகளை கண்காணிக்கும் கருவிகளை, மவுனமாய் கையாண்டு கொண்டிருந்தனர்.

யூனிட்டின் மையப்பகுதிக்கு வந்ததும், வலது பக்கமாய் திரும்பி, திரைச்சீலையைத் தள்ளி அந்த அறைக்குள் நுழைந்தாள், நர்ஸ். உயர்த்திப் போடப்பட்டிருந்த கட்டிலில் கண் மூடி படுத்திருந்தான், புவனேஷ். அவனுடைய தலைபாகத்திற்கு மேல், 'கார்டியோ வேஸ்குலார், பல்மனரி, நியூரோலாஜி மானிட்டர்ஸ்' பொருத்தப்பட்டிருந்தது.

அவைகளின் திரைகளில் சிவப்பு நிற எண்கள் விநாடிக்கு விநாடி மாறிக் கொண்டிருந்தன. 'நார்மல்' என்ற வார்த்தை பச்சை நிறத்தில் ஒளிர்ந்தது. கட்டிலை நெருங்கி, புவனேஷின் காதருகே குனிந்து குரல் கொடுத்தாள், நர்ஸ். 

"சார்... உங்க நண்பன் தருண் வந்திருக்கார். அவர்கிட்டே ஏதோ பேசணும்ன்னு சொன்னீங்களே..." புவனேஷின் கண்ணிமைகள் அவஸ்தையோடு பிரிந்தன. அவன் கையைப் பற்றினான், தருண்.

“புவனேஷ்... உனக்கு இப்போ எப்படியிருக்கு ?'' ''பரவாயில்ல, '' என சொல்லி, லேசாய் மூச்சு வாங்கினான். "பேசறதுக்கு கஷ்டமாயிருந்தா வேண்டாம்.'' "இல்ல தருண்... நான் உன்கிட்ட பேச வேண்டியிருக்கு; பேசித்தான் ஆகணும்." 

"என்ன விஷயம்?" புவனேஷின் பலகீனமான பார்வை, நர்சின் மேல் நிலைத்தது. "சிஸ்டர்... என் நண்பனிடம் தனியா பேசணும்.'' புரிந்து கொண்ட நர்ஸ், புன்சிரிப்போடு தலையசைத்து அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.

"தருண்... இப்ப உன்கிட்ட சொல்லப் போற விஷயம், உனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாய் இருக்கலாம்; இருந்தாலும் வேற வழியில்லை.

"எதுவாயிருந்தாலும் பரவாயில்லை சொல்லு.''

"முகிலாவைப் பத்தி ஏதாவது தகவல் கிடைச்சதா?"

"இன்னும் இல்ல... எப்படியும் இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள நல்ல தகவல் கிடைக்கலாம். தைரியமாயிரு புவனேஷ்.'

தருணையே இமைக்காமல் பார்க்க, புவனேஷின் இதயம் வேகமான துடிப்பில் இருந்தது.

"என்ன அப்படி பார்க்கிற... ஏதோ அதிர்ச்சியான விஷயம்ன்னு சொன்னியே என்ன அது?"
"நான் சொன்னா, நீ தப்பா நினைச்சுக்கக் கூடாது." 

செயற்கையான ஒரு புன்னகையோடு புவனேஷின் கையைப் பற்றிக் கொண்டான், தருண்.

"இதோ பார்... நீ சொல்றது தப்பாவே இருந்தாலும் பரவாயில்லை. நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன்; உன் மனசுல என்ன இருக்கு, சொல்லு.''

புவனேஷ் சில விநாடிகள் மவுனமாய் இருந்து, சன்னமான குரலில் பேச ஆரம்பித்தான். இடையிடையே மூச்சிரைத்தாலும் நிறுத்தாமல் பேசினான்.

"இன்னிக்கு காலையில் விநாயகர் கோவிலுக்கு வரவேண்டிய முகிலா, திடீர்ன்னு காணாம போயிருக்கா. காணாம போறதுக்கு அவ ஒண்ணும் சின்னப் பொண்ணு கிடையாது. யாரோ சதி பண்ணி அவளைக் கடத்திட்டுப் போயிருக்காங்கன்னு நினைக்கிறேன்.''

தருணின் இதயம் தாறுமாறான துடிப்பில் இருக்க, அதை சிறிதும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இயல்பான குரலில், "மாஜி எம்.எல்.ஏ., இதயச்சந்திரன் போட்டுக் காட்டிய அந்த வீடியோ பதிவுகளை பார்க்கும் போது, முகிலா கடத்தப்பட்ட மாதிரி தெரியலையே புவனேஷ் ? ''

"அது கடத்தல்ன்னு தெரியாத மாதிரி திட்டம் போட்டிருக்காங்க.''

''யாரு?''

பேசாமல் மவுனம் காத்தான், புவனேஷ் ; லேசாய் எரிச்சலானான், தருண்.

"சொல்லு புவனேஷ்... யாரு அவங்க?'' 'உன் நண்பர்கள் ஜோஷியும், இக்பாலும் தான்.''

ஒட்டுமொத்த உடம்புக்குள்ளும் மின்சாரம் பாய்ந்த மாதிரியான உணர்வில் ஒரு சில விநாடிகள் நிலைகுலைந்து போனான், தருண். அந்த அதிர்ச்சியை சிறிதும் வெளிக்காட்டாமல் முகத்தை அப்பாவித்தனமாக வைத்து, 

"புவனேஷ்... நீ என்ன சொல்றே?" என்றான். 

"என் மனசுல பட்டதைச் சொல்லிட்டிருக்கேன். '' "அவங்க எதுக்காக முகிலாவைக் கடத்தணும்?"

"முகிலா மேல அவங்களுக்கு கோபம்." ''என்ன கோபம்?"

"ரெண்டு மாசத்துக்கு முன், இக்பாலும், ஜோஷியும், முகிலாவை தனியா சந்திச்சு, 'ஒரு விளம்பர படத்துல நடிக்க முடியுமா'ன்னு கேட்டிருக்காங்க. அவ முடியாதுன்னு சொல்லி இருக்கா. 10 லட்சம் வரை சம்பளம் பேசி
இருக்காங்க. 'கோடி ரூபாய் கொடுத்தால் கூட நடிக்க மாட்டேன்'னு சொன்னதால, முகிலா மேல அவங்களுக்கு ஏகப்பட்ட கோபம்.'' 

"நீ சொல்ற விஷயம், எனக்கு புதுசா இருக்கு, புவனேஷ். அது என்ன விளம்பர படம்?"

"பார்த்தியா... உன்கிட்ட கூட அந்த விஷயத்தைச் சொல்லாம மறைச்சிருக்காங்க. உன் நண்பர்கள் ரெண்டு பேரும் சரியில்லை; தப்பானவங்க. நீ அவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணும், '' வேகவேகமாய் பேசி, மூச்சு வாங்கினான், புவனேஷ். மார்பு துாக்கி துாக்கிப் போட்டது.

நீ  பற்றப்படாதே, புவனேஷ்."

"எப்படி பதற்றப்படாம இருக்க முடியும். அந்த சம்பவம் இப்பத்தான் என் ஞாபகத்துக்கு வந்தது. மொதல்ல போலீஸ் இன்ஸ்பெக்டரைம் கூப்பிட்டு சொல்லலாம்ன்னு நினைச்சேன்.

"ஆனா, போலீசுக்கு விஷயம் போனா ஜோஷிக்கும் இக்பாறுக்கும் இன்னமும் கோபம் அதிகமாகலாம்ன்னு, ஒரு பயம் வந்தது. அதனால, உன்கிட்ட இதை, 'ஷேர்' பண்ணிக்கலாம்ன்னு நினைச்சு, உன்னை வரச்சொன்னேன்.''

"சரி... அது என்ன விளம்பர படம்?" "நீலம்பூர்ல, இக்பாலுக்கு, 'தி ரியல் லாயல் காஸ்மெடிக்ஸ்' என்ற பெயரில் கம்பெனி இருக்கா?''

"ஆமா... பெண்களுக்கான அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கிற கம்பெனி. இக்பாலுக்கு கோயமுத்துாரைச் சுத்தி நாலைஞ்சு, 'இன்டஸ்ட்ரீஸ்' இருக்கு; அதுல இதுவும் ஒண்ணு.''

“அந்த, 'காஸ்மெடிக்ஸ்' கம்பெனியில் புதுசா தயாரிக்கப் போற, 'பேஷியல் கிரீமு'க்கான விளம்பர படம் அது. முகிலா அழகா, நிறமா இருக்கிறதால, அவளை நடிக்க வெக்கலாம்ன்னு, உன் நண்பன் இக்பால் நினைச்சிருக்கான். அப்படி நினைச்சவன், அதை உன்கிட்ட சொல்லி இருக்கலாம்.

'இல்லேன்னா, உன்கிட்ட என் போன் அப்படி செய்யாம அவனாகவே முடிவு எடுத்து, நம்பரை வாங்கி, என்கிட்ட பேசியிருக்கலாம். ஜோஷைக் கூட்டிகிட்டு போய் முகிலாவை பார்த்து பேசியிருக்கான். இதுவே முதல் தப்பு. நடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவது, ரெண்டாவது தப்பு.''

''இக்பாலும், ஜோஷியும் இப்படியெல்லாம் நடந்துக்க மாட்டாங்களே?" 

"அப்படீன்னா... முகிலா என்கிட்ட சொன்னது பொய்ன்னு சொல்ல வர்றியா தருண்?" 

''நான் அந்த அர்த்தத்துல சொல்லலை."

"அப்புறம்?"

"சம்பவம் நடந்து ரெண்டு மாசமாச்சு... இதுநாள் வரையிலும் நீ,என் அதை என்கிட்ட சொல்லலை?"

முகிலா தான், சொல்ல வேண்டாம்ன்னு தடுத்துட்டா... அவங்க ரெண்டு பேர்கிட்டேயும் தருண் நட்பாய் இருக்கும்போது சொல்றது சரியில்லை.
இன்னொரு தடவை அவங்க என்கிட்ட வரும்போது பார்த்துக்கலாம்'ன்னு,
சொல்லிட்டா.''

"புவனேஷ்... நான் ஒரு விஷயத்தைச் சொன்னா நீ நம்பணும். நம்புவியா?''

"என்ன?"

'நீ, என் பால்யகாலத்து சிநேகிதன். அவங்க ரெண்டு பேரும் என்னோட காலேஜ் நண்பர்கள்: வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவங்க. அந்த வசதிக்கு ஏற்ற மாதிரிதான் பழக்கவழக்கங்களும் இருக்கும். நீ நினைக்கிற மாதிரி அவங்க தப்பானவங்க கிடையாது."

''அவங்க தப்பானவங்கன்னு நான் சொல்லலையே... முகிலாவுக்கு அவங்களால ஏதாவது ஆபத்து ஏற்பட்டு இருக்கலாமேங்கிற என் சந்தேகத்தைத்தான் சொன்னேன்.''

"ஓ.கே., புவனேஷ்... அந்த ரெண்டு பேரைக் காட்டிலும் கூடுதலாய், 1 சதவீதம், என் நட்புக்கு சொந்தக்காரன், நீ. உன் மனசில் இருக்கிற சந்தேகத்துக்கு மதிப்பு கொடுத்து ஜோஷ், இக்பால் ரெண்டு பேரையும், 'ஷேடோ வாட்சிங்' பண்ணப் போறேன்.

"முகிலா அவங்களால கடத்தப்பட்டிருந்தா, எந்த வழியிலாவது எனக்கு உண்மை தெரிஞ்சுடும். அவங்க தப்பு செஞ்சிருந்தா போலீசுக்கு போகவும் தயங்க மாட்டேன். அது யாராய் இருந்தாலும் சரி.''

 புவனேஷின் கண்களில் சந்தோஷம் மின்னியது.

"என் மனசுக்குள்ளே இருந்த நெருடலை உன்கிட்ட சொல்லிட்டேன். இனிமே நீ எல்லாத்தையும் பார்த்துக்குவேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.''

"தைரியமா இரு... நான் இருக்கும்போது நீ, எதுக்கும் கவலைப்படாதே. முகிலாவை எப்படியும் கண்டுபிடிச்சு உன் முன் கொண்டு வந்து நிறுத்தறது தான், என் முதல் வேலை.

"ஐ.சி.யூ.,க்கு வெளியே உன்னோட அண்ணன், அண்ணி, முகிலாவோட அப்பா, இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் எல்லாரும் காத்திட்டிருக்காங்க. நான் வெளியே போனதும், நீ என்கிட்ட என்ன பேசினேன்னு கேட்பாங்க. நான் அவங்களுக்கு என்ன பதிலைச் சொல்லட்டும்." 

''மருத்துவ செலவுக்கு தேவையான பணத்தை என் வங்கி கணக்கிலிருந்து எடுக்கும்படியா சொன்னதா, அவங்ககிட்ட சொல்லிடு.''

சரியென்று தலையசைத்து, ஐ.சி.யூ.,வில் இருந்து வெளிப்பட்டான், தருண். மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்ட மாதிரியான உணர்வு.

'துல்லியமாய் யூகித்திருக்கிறான், புவனேஷ். இனி வரப்போகும் ஒவ்வொரு நிமிஷத்தையும் எச்சரிக்கையோடு எதிர் கொள்ள வேண்டியிருக்கும்...' என, நினைத்துக் கொண்டான், தருண்.

ஐ.சி.யூ.,க்கு வெளியே காத்திருந்த முகிலாவின் அப்பா ரத்தினம், புவனேஷின் அண்ணன் மகேந்திரன், அண்ணி சுவர்ணா, இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் என, நால்வரின் பார்வைகளும் குத்தீட்டி முனைகளாய் மாறி, தருணின் முகத்தை மொய்த்தது.

“என்ன சொல்றார், உங்க நண்பர் புவனேஷ்,'' என்றபடியே அருகில் வந்தார், முத்துக்குமரன்.

விரக்தியாய் புன்னகைத்து, "முக்கியமான விஷயமில்லை, சார். ஹாஸ்பிடல் செலவுக்கு, வங்கியில் அவன் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கச் சொன்னான். 'அதைப்பத்தியெல்லாம் நீ கவலைப்படாதே'ன்னு சொல்லிட்டு வந்தேன்,'' என்றான், தருண்.

“இதுதானா விஷயம்... உங்க நண்பன் ஏதாவது சொல்லி இருப்பார். 'க்ளூ' கிடைக்கும்ன்னு எதிர்பார்த்தேன்."

ஏமாற்றம் தடவிய குரலில் முத்துக்குமரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவருடைய சட்டைப் பாக்கெட்டுக்குள் இருந்த மொபைல் போன் வெளிச்சத்தை சிதறடித்தபடி அழைப்பு விடுத்தது.

எடுத்து, யாரென்று பார்த்தார். 'சைபர் கிரைம் பிராஞ்சில்' இருந்து இன்டர்வென்ஷன் ஆபீசர் நேத்ரா கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். மொபைல்போனை காதுக்கு ஒற்றி, "சொல்லுங்க மேடம்," என்றார், முத்துக்குமரன்.

"காணாமல் போன அந்த முகிலா சம்பந்தமாய், ஒரு முக்கியமான தகவல், இப்பத்தான் தெரிய வந்தது. நீங்க உடனே புறப்பட்டு வர முடியுமா சார்... கொஞ்சம் அதிர்ச்சியான செய்தி தான்.”
தொடரும்

ராஜேஷ்குமார்


Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."