sirukathaigal

தொடுக்கும் கடவுள்...

தொடுக்கும் கடவுள்...-God who touches...

தொடுக்கும் கடவுள்...

தம்பியுடன் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார், புலவர் ஒருவர். வரும் வழியில், அம்பிகை மீது பிள்ளைத்தமிழ் நூல் ஒன்றைப் பாடினார், புலவர். கூட இருந்த தம்பி, அதை எழுதினார். இருவரும், திருப்பரங்குன்றத்தில் தங்கி, தரிசனம் செய்து கொண்டிருந்த சமயத்தில், மதுரையை ஆண்ட மன்னர், திருமலை நாயக்கர் கனவில், அன்னை மீனாட்சி காட்சி கொடுத்தார். 

முருகப்பெருமான் திருவருளைப் பெற்ற பக்தன் ஒருவன், எம் மீது பிள்ளைத்தமிழ் பாடி, வந்து இருக்கிறான். இப்போது அவன் திருப்பரங்குன்றத்தில் தங்கி இருக்கிறான். உன் பரிவாரங்களோடு போய், அவனை அழைத்து வந்து, இங்கே எம் முன்னால் அந்நூலை அரங்கேற்றம் செய்...' என்று கூறி மறைந்தார். 

உடனே, பரிவாரங்களோடு திருப்பரங்குன்றம் போய், புலவரையும் அவர் பாடிய பிள்ளைத்தமிழ் நுாலையும் பட்டத்து யானை மீது, ஏற்றி, நகர் வலமாக மதுரையை அடைந்தார், மன்னர். மதுரையை அடைந்த புலவர், அன்னை மீனாட்சியையும், சொக்கநாதரையும் தரிசித்து, மனம் உருகினார். அப்போது, தன் திருகோலத்தை புலவருக்குக் காட்டி அருள் புரிந்தார், அம்பிகை.

'பிள்ளைத்தமிழ் பாடியதற்கு, அன்னை அளித்த பரிசு இது...' என மகிழ்ந்தார். புலவர். மன்னர் உட்பட ஏராளமானோர் கூடியிருக்க. அம்பிகையின் முன், அரங்கேற்றம் துவங்கியது. பாடலைக் கூறி, அதற்கான பொருளையும் கூறினார், புலவர்.

''காலத்தோடு' எனும் பாடலைப் பாடி. அதற்குப் பொருள் சொல்லும் போது, அர்ச்சகரின் மகள் வடிவில் வந்து, மன்னரின் கழுத்திலிருந்த முத்துமாலையைக் கழற்றி, புலவரின் கழுத்தில் அணிவித்தார், அன்னை மீனாட்சி. அதன்பின், 'தொடுக்கும் கடவுள்...' எனும் பாடலைப் பாடி, பொருள் சொல்லும்போது, அர்ச்சகர் மகள் வடிவிலிருந்த அன்னை மீனாட்சி, 'இப்பாடலை இன்னும் ஒரு முறை பாடு...' என்றார். 

அதன்படியே புலவர் பாடி முடித்ததும், அனைவரும் காணும்படியாக அங்கிருந்து மறைந்தருளினார். அனைவரும் அதிசயித்தனர். அரங்கேற்றம் முடிந்ததும், புலவரைத் தன் சிம்மாசனத்தில் அமர வைத்து, செய்ய வேண்டிய சிறப்புகளை எல்லாம் செய்தார், மன்னர். அந்தப் புலவர், குமரகுருபரர். அவர் பாடப்பாட அதை எழுதிய, அவரது தம்பி பெயர், குமாரகவி. அரங்கேறிய நுல், 'மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்!'

 ‘தொடுக்கும் கடவுள்...' எனும் பாடலைப் பாராயணம் செய்யச் செய்ய, அப்பாடலில் உள்ளபடி அருள் புரிவார், அம்பிகை!


கதை ஆசிரியர் : பி.என் பரசுராமன் 

வாரமலர் 


Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best storie

 

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."