பல்லக்கு தூக்கிய எமன்
வீதியில், ராம நாம சங்கீர்த்தனம் பாடியபடி பஜனை கோஷ்டி சென்று கொண்டிருந்தது.
அதை அலட்சியம் செய்த ஒருவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர், 'இதை ஒருபோதும் விற்காதே, ஆத்மார்த்தமாக ஒரே,ஒருமுறையாவது
சொல்லிப் பார்...' என்றார்.
அவனும் அப்படியே செய்தான். காலகிரமத்தில் அவன் இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய் எம தர்மராஜன் முன் நிறுத்தினர்.
அவரும், அவனுடைய பாவ, புண்ணிய கணக்கை பரிசீலித்து, ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய். அதற்காக என்ன வேண்டுமோ கேள்... என்றார்.
ராம நாமத்தை உபதேசித்த ஞானி, அதை விற்காதே என்று கூறியிருந்தது, நினைவுக்கு வந்தது. அதனால், அதற்கு விலை கூற மறுத்து, 'ராம நாமத்திற்கு நீங்கள் என்ன தரவேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்...' என்றான்.
திகைத்த எம தர்மராஜா, ராம நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு போடுவது என்று எண்ணி, 'இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும். வா இந்திரனிடம் போகலாம்...' என்றார்.
'நான் வருவதென்றால், பல்லக்கில் தான் வருவேன். அத்துடன், பல்லக்கு தூக்குபவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும். சம்மதமா...' என்றான். 'இவன் நம்மையும் பல்லக்கு தூக்க சொல்கிறான் என்றால், ராம நாமம், மிகுந்த மகிமை உடையதாகத் தான் இருக்க வேண்டும்; அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறான்...' என்று எண்ணிய எம தர்மராஜா, அதற்கு சம்மதித்து, அவனை பல்லக்கில் உட்கார வைத்து சுமந்தபடி, இந்திரனிடம் போனார்.
'ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது. பிரம்ம தேவரிடம் கேட்போம்; வாருங்கள்...' என்றார், இந்திரன். 'எம தர்மனோடு, இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன்...' என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான். அதற்கு, ஒப்புக் கொண்டான், இந்திரன். பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர்.
அவரும், 'ராம நாம மகிமை சொல்ல, என்னால் ஆகாது. வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள்...' என்று சொல்ல, அவரும் பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று.
அனைவரும், மகாவிஷ்ணுவிடம் சென்று, 'இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா, ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறது. அதற்காக, இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை, தாங்கள் தான் கூறவேண்டும். எங்களால் முடியவில்லை...' என்றனர்.
இந்த ஜீவனை பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே... இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா...' என்று சொல்லி, பல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார், பகவான்.
ஆ.சி. கோவிந்தராஜன்
Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories
கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."