வறுமையை வெல்ல வழி!
வறுமையை வெல்ல வழி!
கடலூர் மாவட்டம், கிள்ளை, அரசு உயர்நிலைப் பள்ளியில், 1984ல், 10ம் வகுப்பு படித்த போது, தலைமை ஆசிரியராக இருந்தார் ராமசாமி முதலியார். ஆங்கில பாடத்தை எளிமையாக புரியும் வகையில் நடத்துவார். வாழ்க்கை அனுபவ கதைகளையும் கூறுவார்.
ஏழை குடும்பத்தில் பிறந்தவர். கல்லுாரியில் படித்த காலத்தில், சினிமா, 'டூரிங்' தியேட்டரில், ஆப்ரேட்டராக பகுதி நேரம் பணிபுரிந்து, பொருள் ஈட்டியவர். அப்படி பெற்ற வருமானத்தை படிப்பு செலவுக்கு பயன்படுத்தியதாக கூறினார். அது, பெரும் துாண்டுதலாக அமைந்தது.
வறுமை குடும்பத்தில் பிறந்திருந்த நான் அவரது வாழ்க்கை முறையை பின்பற்றினேன். பள்ளியில் வகுப்புகள் முடிந்ததும், இரவு நேரத்தில், மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக்கினேன். அந்த வருமானத்தை பாலிடெக்னிக்கில் தொழில் நுட்பப் படிப்புக்கு பயன்படுத்தினேன்.
படிப்பை முடித்து, ஆசிய நாடான சிங்கப்பூரில் பணிபுரிந்தேன். தற்போது, சொந்த கிராமத்தில், சுயதொழில் செய்து வாழ்கிறேன். கல்லுாரியில் உயர்கல்வி படிக்கும், என் பிள்ளைகளும், கல்விக் கட்டணம் உள்ளிட்ட தேவைகளை பகுதி நேர உழைப்பில் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
எனக்கு, 54 வயதாகிறது; பள்ளியில் அந்த தலைமை ஆசிரியர் கற்பித்த அனுபவப்பாடம். என் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கியுள்ளது. அவரை வணங்குகிறேன்!

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."