பாபமும் பலனும்!
பாபமும் பலனும்!
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அரசு உயர்நிலைப் பள்ளியில், 1965ல், 9ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...
கணித ஆசிரியராக இருந்த சந்தானம் மிகத் திறமையானவர். பாடங்களை மிக தெளிவாக நடத்துவார்; கையெழுத்து அழகிய வடிவமாக அச்சிட்டது போல் இருக்கும். பாட வேளை ஆரம்பித்த உடன் வகுப்புக்கு வருவார். முடிந்தவுடன் சென்று விடுவார். நேர மேலாண்மைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்.
ஒருமுறை, வகுப்பு கரும்பலகையில் எழுதியிருந்தவற்றை என்னிடம் அழிக்கச் சொன்னார். டஸ்டரால், மேலிருந்து கீழ், கீழ் இருந்து மேல் மற்றும் பக்க வாட்டில் என, முறையில்லாமல் அழிக்க ஆரம்பித்தேன்.
உடனே நிறுத்த சொன்னவர், டஸ்டரை வாங்கி, மேல் இருந்து கீழாக மட்டும் நிதானமாக அழித்தார். அதையும் மென்மையாக கற்பித்தார். பின், 'எந்த செயலையும், ஒழுங்காகவும், நேர்த்தியாகவும், நிதானமாகவும் செய்ய வேண்டும். அப்போது தான் முழு வெற்றிகிடைக்கும். நீ செய்தபடி என்றால், சாக்பீஸ் துகள்கள் மூக்கில் நுழைந்து, உடல் நல பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு...' என அறிவுரைத்தார்.
அன்று, அது தாக்கம் ஏற்படுத்தவில்லை. ஆனால், பின்னாளில் புரிந்தது. நல்ல வாழ்க்கைப் பாடமாக அமைந்தது.
தற்போது, என் வயது, 69; வாழ்வில் எதையும் நேர்த்தியுடன் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். அந்த ஆசிரியரின் அறிவுரையைப் பின்பற்றி வாழ்கிறேன்.
கதை ஆசிரியர்-ரா.வசந்தராசன்

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."