sirukathaigal

வீர ஹனுமான்


            வீர ஹனுமான்

இராமர் ஆண்டபோது வடக்கு பல எல்லையில் கந்தர்வர்களின் அட்ட காசம் அதிகமாகி மக்கள்   பல தொல்லைகளுக்கு ஆளாயினர். அதன்பின் வடமேற்கு எல்லையில் லவணாசுரன் என்ற அரக்கன் மக்களைத் துன்புறுத்தி வந்தான். இராமர் அவனை அடக்க சத்ருக்கனனை அனுப்பினார். சத்துருக்கனனுக்குத் துணையாக விபீஷணனும் சென்றான். விபீஷ்ணனை அனுமார்தான் இதற்காக அழைத்து வந்தார்.

சத்துருக்கனன் விபீஷணனுட னும் அவனது ராட்சஸப் படைகளோடு போய் லவணாசுரனை எதிர்த்துப் போரிட்டான். கடும் போர் நிகழ்ந்தது. முடிவில் லவணாசுரன் சத்துருக்கனனின் கையால் மடிந்தான். வெற்றிவாகை சூடி சத்துருக்கனன் விபீஷணனுடன் அயோத்திக்குத் திரும்பி வந்தான். 

ஒரு நாள் இராமர் சீதையுடன் அவையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். இராமரின் முன் அனுமாரும், இரு பக்கங்களிலும் இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன் ஆகியோரும் இருந்தனர். சபையில் விபீஷணன், சுக்கிரீவன், அங்கதன், நலன், நீலன், ஜாம்பவான் முதலானோர் கூடி இருந்தனர். வசிஷ்டர், வாமதேவர், ஜா பாலி போன்ற முனிவர்கள் தம் ஆசனங்களில் அமர்ந்து அவையை அலங்கரித்தனர்.

அச்சமயத்தில் அந்த அவைக்குள் அகத்திய முனிவர் விஜயம் செய்தார். இராமர் அவரை வணங்கி வரவேற்றுத்தக்க மரியாதைகளைச் செய்து ஆசனத்தில் அமர்த்தினார். பின்னர் இராமர் அவரது நலன் விசாரித்தார்.

அகத்தியரும் 'இராமா! நீ இருக்கையில் எங்களுக்கு என்ன கவலை? துஷ்டர்களை ஒழித்து தூயவர்களின் துயர் துடைப்பவன் நீ. தசகண்ட இராவணனைக் கொன்று புகழ் பெற்றாய். இப்போது திக்த சமுத்திரத்திற்கு அப்பாலுள்ள மாயா நகரத்தில் சதகண்டன் என்ற கொடிய அரக்கன் இருக்கிறான். அவனை நீ ஒழிக்க வேண்டும்" என்றார்.

அதைக் கேட்ட இராமர் ஆச்சரியப்பட்டு "இந்த சதகண்டன் யார்? இவனைப்  பற்றி சற்று விவரமாகக் கூறுங்கள்” என்று வேண்டவே, அகஸ்தியரும் சொல்லலானார். 

"கஸ்யப முனிவரின் மனைவி விவசு. அவள் அசுர சந்தியா வேளையின் போது கர்ப்பமுற்று மிகவும் அவலட்சணமான சத கண்டனைப் பெற்றெடுத்தாள். அவன் பிரம்ம தேவனைக் குறித் துக் கடுந்தவம் புரிந்தான். பிரம்மாவும் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்கவே அவனும் தனக்கு தேவர்களை எல்லாம் வெல்லக்கூடிய சக்தியை அளிக்குமாறு வரம் கோரினான். பிரம்மாவும் அவன் கேட்ட வரங்களை அளிக்கவே அவன் மூவுலகையும் தன் வசமாக்கிக் கொள்ள நினைத்துக் கொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட கொடியவனை நீதான் கொல்ல வேண்டும். அதனால் மூவுலகமும் க்ஷேமமாக இருக்கும்” என்றார். 

இராமரும் புன்னகை புரிந்தவாறே அகஸ்தியரை வணங்கினார். அவரும் இராமருக்கு ஆசிகள் கூறி அங்கிருந்து சென்றார். அப்போது இராமர் தன் சகோதரர்களிடம் “இந்த சதகண்டனை ஒழிக்கயாரை அனுப்பலாம்? அவன் பல கடல்களுக்கு அப்பால் எங்கோ இருக்கிறானாம். இது எளிதான வேலை அல்லவே எனக் கூறி யோசிக்கலானார். 

அவர் சுற்றிலும் பார்த்தபோது . அவர் பார்வையில் முதலில் தென்பட்டவர் அனுமார்தான். அவர் உடனே 'அனுமாரே! இந்த வேலை உம்மால்தான் முடியும். நீர்தாம் சிவபிரானின் அம்சம் ஆயிற்றே" என்றார். அனுமாரும் "உங்களால் இந்த ராட்சஸனை எளிதில் ஒழித்து விட முடியுமே. நான் உங்களை எல்லாம் என் முதுகின் மீது ஏற்றிக் கொண்டு கடல்களைக் கடந்து செல்கிறேன் நீங்கள் அவனைக் கொன்று உலகைக் காப்பாற்றுங்கள்" என்றார்.

இராமர் அனுமாரைப் பாராட் டியவாறே "அனுமாரே! உமது சக்தி வேறு யாருக்கு இருக்கிறது?" என்று கூறினார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சீதை 'அனுமார் சிவபெருமானின் அம்சம் என்றீர்களே. இதுபற்றி விவரமாகக் கூறுங்கள்" என்று வேண் டினாள். இராமரும் சொல்லலா னார். 

'சிவபிரானை ருத்திர கணங்கள் துதி செய்து கொண்டிருக்கையில் அவர் தன் தியான சக்தியால் மகாவிஷ்ணுவின் உருவத்தைக் கண்டார். அவர் காக்கும் பொறுப்பை ஏற்றுள்ளவர் என வும் கண்டு கொண்டார். அவர் அவதரிக்கும் போது உறுதுணை யாக இருக்க வேண்டும் என எண்ணி சிவபிரான் தன் அம் சத்தை அனுமாரின் உடலில் செலுத்தினார்” என்று கூறினார். 

சீதைக்கு இவ்வாறு விளக்கிய பின் இராமர் சதகண்டனின் மீது படை எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யலானார். அவருடன் தானும் வருவதாக சீதை கூறவே அவரும் அனுமதி அளித்தார். இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், சுக்கிரீவன், விபீஷணன் முதலியோரும் படை களுடன் கிளம்பத் தயாராயினர்.

அப்போது இராமர அனுமாரைப் பார்த்தார். அவரோ விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார். அதன் ஆரம்பம் எது, முடிவு எது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதைக் கண்டு யாவரும் திகைத்துப் போனார்கள்.

அப்போது அனுமார் நான் குனிந்து கொள்கிறேன். என் முதுகில் எல்லோரும் ஏறிக் கொள்ளுங்கள்' என்றார். அதுகேட்டு இராமர் சீதையின் கையைப் பற்றிக் கொண்டு அனுமாரின் முதுகின் மீது ஏறியவுடன் தொடர்ந்து அவரோடு செல்ல விரும்பியவர்கள் எல்லாம் அனுமாரின் முதுகில் ஏறிக் கொண்டனர். அவர்கள் எல்லோரும் கொஞ்சமும் சிரமப் படாமல் ஏதோ தொட்டிலில் படுத்து ஆடுவது போல ஆகாய வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அனுமாரோ ஆகாயத்தில் மேருமலையே கிளம்பிச் செல்வது போலத் தென்பட்டார். 

அனுமார் ஏழு கடல்களைக் கடந்து சென்று கொண்டிருந்த போது இராமர் ஒவ்வொரு கடலை யும் சீதைக்குக் காட்டி அதுபற்றிக் கூறி வந்தார். முடிவில் சதகண் டன் வாழும் மாயா நகரம் தென் பட்டது. அது தங்க மயமாக ஒளி விட்டுப் பிரகாசித்துக் கொண்டி ருந்தது. அனுமார் என்னவோ ஏழு கடல்களைத் தாண்டி வந்து விட்டார். ஆனால் அந்த மாயா நகரத்தின் பலமான கோட்டைக்குள் புகுவது அவ்வளவு எளிதல்லவே.

மாயாநகரம் ஒரு தீவில் உள்ளது. அதைச் சுற்றி அடர்ந்த காடு இருந்தது. அனுமார் எல்லோரையும் அந்தக் காட்டில் ஒரு ஓரமாக இறக்கி விட்டார். இராமர் சுக்கிரீவனிடம் இனி நம் படைகளைக் கொண்டு மாயாநகரின் மதில் சுவரை தகர்த்து உள்ளே நுழைய வேண்டும்" என்றார். சுக்கிரீவனின் கட்டளைப்படி வானரர்கள் மாயாநகரக் கோட்டையைச் சுற்றி இருந்த அகழியைத் தூர்த்து விட்டு மதில் சுவரை ஒரே சமயத் தில் பல பகுதிகளில் இடிக்கலா னார்கள்.

அக்கோட்டையைப் பாதுகாத்து வந்த காலகேயர்கள் திடீரெனக் குரங்குகளும் ராட்சஸர்களும் சேர்ந்து மதில் சுவரை உடைப்பது கண்டு ஆச்சரியப்பட்டனர். "இந்த நகர் சதகண்டரின் ஆதிக்கத்தில் உள்ளது என்று உங்களுக்குத் தெரியாதா? என கர்ஜித்தவாறே அவர்கள் வானரர்களை நோக்கி ஓடினார்கள். 

காலகேயர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் வானரங்கள் சிதறி ஓடின. ஆனால் ராட்சஸப் படைகள் காலகேயர்களைக் கடுமையாகத் தாக்கவே போர் பயங்கரமாக நடக்கலாயிற்று. அப் போது சிவபூஜை செய்து கொண்டிருந்த சதகண்டன் கோட்டைக்கு வெளியே இருந்து வரும் சத்தம் கேட்டு "இது என்ன இரைச்சல்?'' என்று காவலாளியிடம் கேட்டான். 

காவலாளிகளும் அவனை வணங்கி "யாரோ மன்னனாம்! குரங்குகளோடும் ராட்சஸர்களோ டும் வந்து நம் கோட்டையைத் தாக்குகிறான். அந்தப் படைகளை நம் காலகேயர்கள் எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறார் கள்' என்றனர்.

அதுகேட்டு சதகண்டன் “யாரோ மன்னன் குரங்குகளோடு வந்து நம்மைத் தாக்குகிறான் என்றால் இதைக் கேட்டு யார்தான் சிரிக்க மாட்டார்கள்? என்னைக் கண்டு தேவர்களே நடுங்கும்போது இந்த மன்னன் மட்டும் என்ன துணிச்ச லோடு என்மீது படை எடுக்கிறான்?' என யோசித்தவாறே தன் மந்திரிகளை அழைத்து வரச் சொன்னான். 

அவன் எல்லோரையும் போர் புரியக் கிளம்பச் சொல்லிவிட்டுத் தானும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அவனைக் கண்ட இராமர் அவனது கம்பீரத் தோற்றத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். அதுகண்டு அனுமார் 'இவனைக் கண்டு ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள்? உங்கள் முன்னால் இவன் எம்மாத்திரம்? இவனை அடித்து வீழ்த்துங்கள்'' என்று கூறியவாறே சதகண்டனை நோக் கிப் பாய்ந்தார். சதகண்டனின் அகண்ட மார்பின் மீது அவர் ஓங்கி ஒரு குத்துக் குத்தினார். அந்த ஒரு குத்தைத் தாங்க முடியாமல் அவன் துவண்டு கீழே விழுந்தான்.

ஆனால் மறுவினாடியே அவன் சமாளித்துக் கொண்டு எழுந்து அனுமாரைப் பார்த்து “அடேயப்பா! உனக்கும் நிறைய பலம்தான் இருக்கிறது! என்னையே அடித்து விழ வைத்து விட்டாயே. ஆனால் இதோ பார். இந்த சூலத்திற்கு என்ன பதில்?" என்று கூறி ஒரு சூலத்தை எடுத்து அனுமாரின் மீது எறிந்தான். அதை அனுமார் பிடித்து ஒடித்து எறிந்தார்.

'ஆ! அப்படியா!" எனக் கருவியவாறே பலவகை ஆயுதங்களை எடுத்து அவன் அனுமார் 'மீது எறிந்து பார்த்தான். அவற்றை எல்லாம் அனுமார் பிடித்து ஒடித்து எறிந்தார். அப்போது இராமர் வில் அம்புகளுடன் சதகண்டனை எதிர்க்கச் சென்றார். சதகண்டன் அவர்களை அம்புகளால் கட்டி ஒரு தீவில் போய் விழச் செய்தான். 

ஆனால் அனுமார் தன் வாலை நீட்டி அவர்களை விழாமல் தடுத்து இராமரையும் விபீஷணனையும். அதன்மீது உட்கார வைத்து இழுத்து வந்தார். அவர்கள் இருவரும் சத கண்டனுடன் போர் புரியலானார் கள். சதகண்டனின் மீது வானரர் கள் கற்களால் தாக்கினார்கள். அவற்றை எல்லாம் சதகண்டன் தவிடு பொடியாக்கினான். அவனது தாக்குதலைச் சமாளிக்க முடியா மல் அங்கதன், நலன், நீலன் ஆகி யோர் பயந்து ஓடினார்கள். 

அப்போது இராமர் சீதையுடன் அனுமாரின் தோளின் மீது ஏறிக் கொண்டு சதகண்டனை எதிர்க்க வந்தார். அப்போது சதகண்டன் 'என்னையும் இராவணன் என்று எண்ணிவிடாதே. நீ போர் புரியத் தானே வந்தாய்? உன் மனைவியையும் ஏன் அழைத்து வந்தாய்?" என்று கேட்டான். இராமர் அவனை அம்பால் அடிக்கவே அங்கு பல ஆயிரம் சதகண்டர்கள் நிற்பதைக் கண்டார்.

அனுமார் ஆத்திரம் கொண்டு சதகண்டனைத் தாக்கலானார். இராமர் வில்லையும் அம்புகளை யும் சீதையிடம் கொடுத்தார். சீதை சதகண்டன் மீது அம்புகளை எய்ய அவற்றை எல்லாம் அவன் எதிர்த்துப் பயனற்றுப் போகும் படிச் செய்தான். அப்போது சீதை இராமரை மனதில் தியானித்துக் கொண்டு ஒரு அம்பை எய்தாள். மறுநிமிடமே சதகண்டன் ‘ஆ'வென அலறிக் கீழே விழுந்து இறந்தான். 

இராமர் அதுகண்டு மகிழ்ந்து தன் மணியாரத்தை எடுத்துச் சீதைக்குப் பரிசாக அளித்தார். சீதையோ 'நமக்கு இப்போரில் பெரிதும் உதவிய அனுமாருக்கே இதனைக் கொடுங்கள்" என்றாள். இராமரும் அதனை அனுமாருக்குக் கொடுக்கவே அவர் அதைப் பெருமையுடன் அணிந்து கொண்டு “இது என் மார்பில் பட எப்போதும் இராமரும் சீதையும் என் மனதிலிருந்து அகலாமல் இருப்பார்கள்' என்றார்.

எல்லோரும் அயோத்திக்குத் திரும்பினார்கள். விபீஷணன் இரா மரிடம் விடைபெற்றுக் கொண்டு இலங்கைக்குச் சென்றான். அது போல சுக்கிரீவனும் கிஷ்கிந்தைக் குச் சென்றான். அனுமார் அயோத் திலேயே இருந்து விட்டார். 

இராமருக்குப் பணிபுரிந்து வந்த அனுமார் மனதில் தன் தாயான அஞ்சனாதேவியை காண -வேண் டும் என்ற ஆசை எழுந்தது. அத னால் அவர் இராமரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு கந்தமாதன் பர்வதத்திற்கும் சென்றார். அங்கு தான் அஞ்சனாதேவியின் ஆசிரமம். இருந்தது.

அம்புலிமாமா



Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories


கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."