sirukathaigal

மன்னனும் மந்திர சக்தியும்!




மன்னனும் மந்திர சக்தியும்!

வெண்கங்கை நாட்டை ஆட்சி  செய்தான் அங்க மன்னன்; நாட்டில் உலாவிய மந்திர சக்தி நிறைந்த முனிவர் பற்றி, மக்கள் பேசுவதை கேட்டு வியப்பு அடைந்தான்.

அவையில் அமைச்சரிடம், 'முனிவர் பற்றி கேள்விப்படுவது எல்லாம் உண்மையா...' என்றான் மன்னன்.

'உண்மை தான்; முனிவர் நினைத்த நேரத்தில், வித விதமான உணவுகள் வரவழைக்கிறார்; கண் மூடி திறப்பதற்குள் அழகிய குடில் அமைத்து விடுகிறார்...' என்றார் அமைச்சர்.

'ஊரார் ஆயிரம் சொல்வார்; அதை எல்லாம் நம்ப முடியுமா...' என்றபடி, முறையாக விசாரித்து, தகவல் தர கேட்டுக் கொண்டான். 

மறுநாள் அவையில் -"முனிவரை பார்க்க சென்று இருந்தேன்; தாகம் என்று கூறியதும், கண் முன், ஒரு சிறிய குளத்தை உருவாக்கினார். அதில் சுவை மிக்க தண்ணீர் ஊறியது. அது மிகவும் சுவையுடன் இருந்தது...' என வியப்புடன் கூறினார் அமைச்சர்.

'அப்படி என்றால், நானும் அவரை பார்க்க வேண்டும்; பல்லக்கு அனுப்பி, சகல மரியாதையுடன், அழைத்து வர ஏற்பாடு செய்யுங்கள்...' என்றான் மன்னன்.

 'அப்படியே செய்து விடுகிறேன்...'

 பணிவுடன் கூறினார் அமைச்சர்

 மறுநாள்-

‘எங்கே முனிவர்; அழைத்து வந்தீர்களா... 

மன்னன் கேள்விக்கு பதில் கூறாமல் தயங்கி நின்றார் அமைச்சர். 

‘என்ன ஆயிற்று.. பதிலையே காணோம்...'கர்ஜித்தான் மன்னன்.

‘அந்த முனிவர் குடிலை விட்டு எங்கும் வர மறுக்கிறார்...தயங்கியபடியே கூறினார் அமைச்சர். 

ஒரு புறம் கடும் கோபம் இருந்தாலும், மறுபுறம் முனிவரின் தனித்துவத்தை எண்ணி வியந்தான் மன்னன். முனிவரை பார்க்கும் ஆவல் அதிகரித்தது. பரிவாரங்களோடு முனிவர் குடிலுக்கு சென்றான் மன்னன்.

பண்பாக உபசரித்து, 'பரம்பொருளான இறைவனுக்கு இந்த உடலை அர்ப்பணித்து இருக்கிறேன். என்னால் செய்ய முடிந்தது எதுவும் இல்லை. எல்லா செயலும் அறிவாக மலரும் பரம்பொருளின் மேன்மையான செயல். தாங்கள் என்னை பார்க்க வந்த நோக்கம் என்ன...' என, வினவினார் முனிவர். 

'உங்களிடம் சில சக்திகள் இருப்பதாக அறிந்தேன்; அவற்றை எனக்கு வழங்கினால் நாடு செழிப்புறும்...' என்றான் மன்னன். 

அவன் அறியாமையை கண்ட முனிவர், மமதையை அடக்கும் விதமாக, 'சரி... எனக்கு தெரிந்த மந்திரங்களை கூறுகிறேன்; அவற்றை, இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த முடியாது. பிறரிடம் கூறவும் கூடாது; மீறினால், மந்திரம் மறந்து விடும்... அதை கேட்டவருக்கு முழு சக்தி கிடைக்கும்...' என்றார் முனிவர். ஒப்புக்கொண்டான் மன்னன். அதன்படி,மந்திரத்தைக் கற்பித்தார்

முனிவர்.

கற்றதும், புத்துணர்வு பெற்று, அரண்மனைக்கு வந்தான் மன்னன்.

மறுநாள் -

நாட்டு மக்களுக்கு தேவையானது எல்லாம் கிடைக்க வேண்டும்' என எண்ணியபடி மந்திரத்தை கூறினான். அடுத்த நொடி, செல்வந்தன், ஏழை என்ற பாகுபாடு இன்றி, செழிப்பில் திளைத்தனர், நாட்டு மக்கள்.

 மக்களின் புகழ் உரையால் மதி மயங்கினான் மன்னன். பின், 'நாட்டு மக்கள், நோயுறவோ. மரணத்தை தழுவவோ கூடாது' என, மந்திரத்தை கூறினான் மன்னன். நோயற்ற, மரணமில்லாத நாடாக மாறியது வெண்கங்கை.

'இவ்வுலகை, மந்திர சக்தியால் வென்று விட்டேன்' என கர்வம் கொண்டான் மன்னன். நேராக முனிவரிடம் சென்று, 'ஒன்றும் இல்லாத தங்களிடம் மந்திரம் இருந்த வரை, எதற்கும் உபயோகம் இல்லை; என்னிடம் அந்த மந்திரம் வந்ததும், நாடே செல்வ செழிப்புடன் மாறிவிட்டது. கவனித்தீர்களா...' என்று கொக்கரித்தான். 

'இயற்கைக்கு எதிராய், மந்திரத்தை பயன்படுத்தி உள்ளாய்; அந்த விதியின் விளையாட்டில் இருந்து இனி தப்ப முடியாது...' என எச்சரித்தார் முனிவர். 

கடும் கோபத்தில், 'யாரங்கே... முனிவரை, கைது செய்து சிறையில் அடையுங்கள்...' என  உத்தரவிட்டான் மன்னன். 

அதன்படி சிறையில் அடைக்கப்பட்டார் முனிவர்.

நாட்டில் எல்லாரும் பணக்காரராக மாறிவிட்டனர். விவசாயம் மற்றும் பிற வேலைகளில் ஈடுபட மனம் இன்றி, சோம்பி திரிந்தனர். இதனால், நாட்டின் இயக்கமே பாதிக்கப்பட்டது.

பொன்னும், பொருட்களு மக்களிடம் மிதமிஞ்சி இருந்த மரணம் இல்லாமல் போனதால், மக்கள் தொகை பெருகியது. உண்ண. உணவின்றி தலைவிரித்து ஆடியது பஞ்சம். 

சிறிது நாட்களுக்கு பின், ஒருவரை ஒருவர் தாக்கத் துவங்கினர். அரண்மனையிலும், சண்டை சச்சரவு ஏற்பட்டது. இதை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கி நின்றான் மன்னன். 

சிறையில் அடைபட்டிருந்த முனிவரை சந்தித்து, உதவி கேட்டு கெஞ்சினான். "மன்னா... முதலில் மந்திரங்களை எனக்கு உரை... பின், உனக்கு அதீத சக்தி குறையும்.நாடு படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பும்...' என்றார் முனிவர்.

 அதன்படி மந்திர சக்தியால் வந்த அனைத்தும் மறைந்தன.

மக்கள் வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்பியது.

அனைவரும் உழைப்பில் ஆர்வம் காட்டினர்.

முனிவரை விடுதலை செய்து, தக்க மரியாதை செய்தான் மன்னன்.

குழந்தைகளே... கிடைத்த வாய்ப்பை முறையாக பயன்படுத்தி, உழைத்து முன்னேற பழகுங்கள்!

        கதை ஆசிரியர்-ப்ரணா



Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories


கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."