அன்புடன் அந்தரங்கம்
அன்புடன் அந்தரங்கம்
அன்புள்ள அம்மா-
நான், 26 வயது பெண். தென்னக ரயில்வேயில் முன்பதிவு கவுன்ட்டரில் பணிபுரிகிறேன். ரயில்வே, 'ஹெல்த் இன்ஸ்பெக்டர்' ஆக பணிபுரிகிறார், கணவர். பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணம். எனக்கும், அவருக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. எங்களுக்கு இன்னும் குழந்தைகள் பிறக்கவில்லை.
எனக்கு விதவிதமான உணவுகள் உண்பதில் விருப்பம் அதிகம். நகைச்சுவையாக பேசுவேன். யாரிடம் பேசினாலும் அவர்களிடம் சில நிமிடங்களில் நட்பாகி விடுவேன்.
என்னிடம் எண்ணி நாலு வார்த்தைகள் தான் பேசுவார்,கணவர். நான் ஏதாவது பேசினால் வெறித்து ஆழமாக பார்ப்பார். அவரிடம் விசித்திரமான குணம் ஒன்று இருக்கிறது. காலையில் கழிவறை புகுந்தார் என்றால் வெளி வர, ஒருமணி நேரம் ஆகும். ஒருமணி நேரமும், அவரே இரண்டு ஆட்களாக மாறி, பேசி கொண்டிருப்பார்.
சில நேரங்களில், 'என்னமோ போடா மாதவா... என்ன கொடுமை சரவணன் இது... சிங்காரம் கொஞ்சம் அடக்கி வாசி... உன் பாச்சா என்கிட்ட பலிக்காது மகனே... தங்க புஷ்பம் தள்ளிப்போ...' என்ற வசனங்களை உதிர்ப்பார்.
படுக்கையில் அமர்ந்து கொண்டே, ஏதோ ஒரு விஷயத்தை சீரியசாக விவாதிப்பார். இரண்டு ஆட்களாக பேசும்போது, அரக்கபரக்க முகவாயை தேய்த்துக் கொள்வார். மீசையை முறுக்கிக் கொள்வார். 'உஷ்'' என்ற பாவனையில் ஆட்காட்டி விரலை உதட்டின் நடுவில் ஒற்றிக் கொள்வார். முழு முகத்தையும் இடது உள்ளங்கையால் முழுவதும் தேய்த்துக் கொள்வார்.
என்னை, 'டபுள்ஸ்' வைத்து, சாலையில், 'டூ - வீலர்' ஓட்டி போகும் போதும் பேசிக் கொண்டே போவார்.
துாக்கத்தில் தெளிவாக, உரக்க எதையாவது பற்றி பேசுவார். கண்ணாடி முன் தலைவார நின்றால் போச்சு. கண்ணாடியை பார்த்து பத்து நிமிஷம் பேசுவார்.
எனக்குள் பயமும், திகிலும் பூத்தது. என்னது என் புருஷன், அந்நியன் அம்பி மாதிரி இருக்கிறார்? 'என்னங்க இது... உங்களுக்கு நீங்களே பேசிக்கிறீங்க... எனக்கு பயமாயிருக்கு...' என, நான் கேட்டால், 'என்ன உளர்ற? அப்படி நான் பேசவே இல்லையே... கனவு கண்டியா?' என, அவசரமாக மறுப்பார், கணவர்.
என் கணவர் மனநோயாளியோ... கொஞ்ச நாளில் நோய் முற்றி, சட்டை, பேன்டை கிழித்து ரோட்டில் ஓடுவாரோ... என் வீட்டுக்கு வரும் நட்புகளும், உறவுகளும் கணவரின் செயலை பார்த்து விட்டால், என் நிலைமை என்னவாகும்... அவருக்கு யாராவது செய்வினை வைத்து விட்டனரா?
கணவருடன் தாம்பத்யம் வைத்துக் கொள்ள எனக்கு பயமாய் இருக்கிறது.
அன்பு மகளுக்கு,
கணவரின் செய்கையை, 'சுய பேச்சு' என்பர். இது, நான்கு வகைப்படும். குறிப்பிட்ட காரியங்களை உற்சாகமாக செய்ய சொல்லி, கட்டளையிடும் சுய பேச்சு;ஊக்குவிக்கும் சுய பேச்சு; நேர்மறை சுய பேச்சு; எதிர்மறை சுய பேச்சு.
முதல் மூன்று வகை சுய பேச்சுகளும், மனிதருக்கு நன்மை பயப்பவை. தன்னை சுயப்பரிசோதனை செய்து கொள்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் தனக்குத்தானே பேசிக் கொள்வதும். கண்ணாடி முன் நின்று பேசிக் கொள்வது, சுய வசியம் செய்து கொள்ளும் தக்க முயற்சி.
எந்த விஷயத்தையும் மனதில் போட்டு ஆழ அமுக்கிக் கொண்டு இருப்பது, மன அழுத்தத்தை தரும். சுய பேச்சு, மனரீதியான ஆரோக்கியத்தை தரும். எதிர்மறை எண்ணங்களை தடுக்கும்.
சுய பேச்சால் மனதையும், நடத்தையையும் ஒருவர் கட்டுபடுத்திக் கொள்ள முடியும். மேலும், எண்ணங்கள், நினைவுகள், திட்டங்களை திறமையாக செயல்படுத்த முடியும். ஒரு சிறப்பான காரியத்தை செய்து முடித்தால், சுய பேச்சின் மூலம் ஒருவர் தன்னைத்தானே பாராட்டி, அடுத்த சிறப்பான காரியத்துக்கு நகர முடியும். மொத்தத்தில் தியானம் போன்றது, சுய பேச்சு.
தன்னை இழிவாக பாவித்து, சுய வெறுப்பை கொட்டும் எதிர்மறை சுய பேச்சுகள், ஒருவருக்கு மன அழுத்தத்தை கூட்டி, 'ஸ்கிசோபெரினியா' என்ற மனநோயை பரிசளிக்கும்.
நான்,
பெற்றோருக்கு நல்ல மகன்; மனைவிக்கு நல்ல கணவன்; ஊழியர்களுக்கு நல்ல அதிகாரி; உறவினர்களுக்கு சிறப்பான உறவினன்; இந்த தேசத்துக்கு நல்லதொரு குடிமகன் என்ற பெருமையை, கணவர் மனதில் உயர்த்தி பிடிக்க சொல்.
சிறப்பான தாம்பத்தியத்தால், கணவரை அழகிய பூனைக்குட்டி ஆக்கி, உன் காலடியில் சுற்றி வர செய்யலாம்.

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."