sirukathaigal

சரியானசூடு

சரியானசூடு-sariyana-soodu

சரியானசூடு

நரியூரில் இருந்த கோமதி ஊதாரித் தனமாக செலவு செய்பவள். அவள் தன் கணவன் கிருஷ்ணனின் பேச்சை அவ்வளவாகக் கேட்பதும் இல்லை. அவனுக்குத் தெரியாமலேயே சில வேலைகளைச் செய்வாள். அவளுடைய மகள் பத்மா. அவளுக்கு மோகன் என்பவளைக் கல்யாணம் செய்து வைத்தார்கள்.

அப்போது பத்மாவின் கணவன் மோகன் அங்கு வரவே கோமதி "நீங்கள் வாழும் பட்டணத்தில் உயர்தரி அத்தர் கிடைக்கிறது. நீங்கள் அடுத்த தடவை வரும்போது எனக்கு வாங்கி வாருங்கள்" என்றாள்.

பத்மா பட்டணத்திற்கு வந்து தனிக்குடித்தனம் செய்ய ஆரம்பித்ததும் தன் தாயைப்போலவே கண்ட கண்ட பொருள்களை எல்லாம் வாங்கிக் குவிக்கலானாள். புடவைகள், பாத்திரங்கள், திரைச்சீலைகள் என்று கணக்கில்லாமல் வாங்கிப் போட்டுக் கொண்டே இருந்தாள். இதெல்லாம் வீண். நமக்குக் கொஞ்சமும் உபயோகமில்லையே என்று மோகன்  அவ்வப்போது சொல்லியும் பார்த்தான். பத்மாவோ “நான் என் அம்மாவைப்போலத்தான் எனக்கு இஷ்டமானதை வாங்கத்தான் வாங்குவேன்" என்று பட்டெனக் கூறலானாள்.

தீபாவளி நெருங்கியது. மோகனுக்கு மாமனார் வீட்டிலிருந்து அழைப்பு வரவே பத்மா "என் அம்மா அத்தர் வாங்கி வரச் சொன்னாளே, இன்று சாயந்திரம் வாங்கி வந்துவிடுங்கள். நாளை எங்கள் ஊருக்குக் கிளம்ப வேண்டும்" என்றாள். 

ஆனால் அன்று மாலையாகி பத்து மணிக்குத்தான் தள்ளாடிக் கொண்டே வந்து மோகன் ஒரு நாற்காலியில் பொத்தென்று விழுந்தான். அது கண்டு பத்மா. "என்ன இது? ஏன் இப்படி இருக்கிறீர் கள்? என்று கேட்டாள். மோகனும் 'அதை ஏன் கேட்கிறாய் போ! நான் அத்தருக்காகக் கடைக் கடையாக ஏறிப் பார்த்தேன். இப் போதெல்லாம் சிறிய பாட்டில் களில் அத்தர் வருவது இல்லை யாம். வழியில் ஒருவன் சிறிய பெட்டியில் சிறு பாட்டில்களை வைத்துக் கொண்டு அத்தர், ஜவ்வாது என்று கூவிக் கொண்டிருந்தான். அவனிடம்போய் அத்தர் கேட்டேன். அவன் ஒரு சிறிய பாட்டிலை என்னிடம் கொடுத்து முகர்ந்து பார்க்கச் சொன்னான். 

அவ்வளவுதான்! நான் மறு நிமிடமே என் நினைவை இழந்து விழுந்துவிட்டேன். நான் கண் விழித்துப் பார்த்தபோது அந்த வியாபாரியையும் காணோம். தீபாவளிச் செலவுக்காக என் சட்டை பையில் வைத்திருந்த ஆயிரம் ரூபாயையும் காணோம். உன் அம்மாவுக்கு அத்தர் வாங்கப் போய் என் பணம் பறிபோய் விட்டது. அந்தப் பணத்தை உன் அம்மாவிடமிருந்துதான் வசூல் செய்ய வேண்டும். அந்தப் பணத்தை உன் அம்மா கொடுக்காவிட்டால் உன்னைவிட்டுவிட்டு நான் மாத்திரம்இங்கு வந்துவிடுவேன் என்றான்.

அதுகேட்டு பத்மா பயந்து போனாள். அதற்கு முன் மோகன் அவ்வளவு கோபமாகப் பேசி அவள் கேட்டதே இல்லை. மறுநாள் குதிரை வண்டியில் அவர்கள் நரியூருக்குப்போய் இறங்கினார்கள். அப்போது பத்மா உள்ளேபோய்த் தன் தாயாரைக் கொல்லைப்புறத்திற்கு அழைத்துப் போனாள். 

அவள் தன் தாயாரிடம் "உன் அத்தரால் என் வாழ்க்கையே பாழாகிவிடும் போலிருக்கிறது. என்று கூறித் தன் கணவனுக்கு நேர்ந்ததைக் கூறினாள். முடிவில் அவள் "நீ என்ன செய்வாயோ எனக்குத் தெரியாது இன்னும் இரண்டு நாட்களுக்குள் அவருக்கு ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட வேண்டும் தெரிந்ததா?' என்றாள். 

கோமதி சற்று யோசித்து பத்மாவிடம் தன் திட்டத்தைச் சொன்னாள். கிருஷ்ணன் தன்னோடு எப்போதும் பணம் வைக்கும் பெட்டியின் சாவியை வைத்துக் கொண்டே இருப்பான். அந்தப் பணப்பெட்டி மீது கனமான பாத்திரப் பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதனை கோமதியும் பத்மாவும் சேர்ந்தால்கூட கீழே இறக்கி வைக்க முடியாது. யாராவது ஒரு ஆணால்தான் முடியும். 

இரவில் கிருஷ்ணன் பெட்டிச் சாவியைத் தன் தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்குவதுதான் வழக்கம். இரவில் அவன் நன்கு தூங்கும்போது தலையணையின் அடியிலிருந்து சாவியை எடுத்துப்போய் பணப் பெட்டியை திறந்து அதிலிருந்து ஆயிரம் ரூபாயை மோகனைக் கொண்டு எடுக்கச் செய்வதுதான் கோமதியின் திட்டம். 

பத்மாவும் கோமதியும் விஷயத்தை மோகனிடம் விளக்க அவனோ தன்னால் அந்தத் திருட்டைச் செய்ய முடியாது என்று கூறினான். அப்போது கோமதி “மாப்பிள்ளை! நம் வீட்டுப் பணத்தை நாமே எடுத்துக் கொள்வது திருட்டு அல்ல. நீங்கள தொலைத்த பணத்தைத்தான் திரும்பப் பெறுகிறீர்கள்" எனவே மோகனும் 'ஆமாம் சரிதான்" என்று கூறி அவர்கள் சொல்கிறபடி செய்ய இசைந்தான்.

கோமதியின் திட்டப்படியே எல்லாம் நடந்தது. விடிந்தால் தீபாவளிப் பண்டிகை. அச்சமயத்தில் நகைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்று கோமதி தன் கணவனிடம் கூறி அவற்றைப் பணப் பெட்டியிலிருந்த எடுத்துக் கொடுக்கும்படி கேட்டாள். 

கிருஷ்ணனும் பாத்திரப் பெட்டியை இறக்கிக் கீழே வைத்து விட்டு பணப்பெட்டியைத் திறந்தான், உள்ளே நகைப் பெட்டி திறந்து கிடந்தது. அதில் ஒரு நகை கூட இருக்கவில்லை. அதைக் கண்டு கோமதி ஆவென அலறினாள். 

அப்போது கிருஷ்ணன் “பெட்டி பூட்டப்பட்டிருக்க, நகைகள் எப்படிக் காணாமல் போயின?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான். கோமதியும் "இது நானாக வரவழைத்துக் கொண்ட தலை வலி. இது அந்தப் பட்டணத்துக்காரன் வேலை" என்று கத்திக் கொண்டே மோகன் இருந்த அறைக் குச் சென்றாள்.

அவள் கோபத்தோடு இது உனக்கே, சரியா? மாமியாரின் நகைகளைத் திருடலாமா? மரியாதையாக என் நகைகளைக் கொடுத்து. விடு. இல்லாவிட்டால் நடப்பதே வேறு. தெரிந்ததா? " என்று மிரட்டினாள்.

மோகன் எதுவும் தெரியாதவன் போல "மாப்பிள்ளையை பண்டிகைக்கு அழைத்துவிட்டுத் திருட்டுப்பட்டம் கட்டுகிறீர்களா? இதுவா உங்கள் வீட்டு மரியாதை! இனி ஒரு நிமிஷம்கூட இந்த வீட்டில் இருக்கமாட்டேன்' என்று கிளம்பினான். 

கோமதியோ “எங்கே போகிறாய்? முதலில் என் நகைகளை வைத்து விட்டுப் போ. உன்னைப் பெட்டி யைத் திறந்து ஆயிரம் ரூபாய் தானே எடுத்துக் கொள்ளச் சொன்னேன். நீ நகைகளை எடுத்து அமுக்கிவிட்டாயே' என்று கத்தினாள். மோகனோ 'இது என்ன கதை? என்னை ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொள்ளச் சொன்னீர் களா? எதற்கு?" என்று கேட் டான். அப்போது கிருஷ்ணன் அங்கு வந்து "கோமதி! கொஞ்சம் மரியாதையாகப்பேசு. மாப்பிள்ளை பெட்டியை திறந்து ஏன் ஆயிரம் ரூபாய் திருடனைப்போல எடுக்க வேண்டும்?" என்று கேட்டான்.

கோமதியும் "என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறித்தான் வகுத்த திட்டம் செயல்பட்ட விதத்தைக் கூறினாள். கிருஷ்ணனும் நிதானமாக 'இந்த வயதில் உனக்கு அத்தர் எதற்கு? அன்று நீ மாப்பிள்ளையிடம் வாங்கிவரச் சொன்னதை நான் கேட்டே மாப்பிள்ளையுடன் சேர்ந்து ஒரு நாடகம் ஆடினேன். உன் நகைகள் எங்கும் போய்விடவில்லை. இதோ! என்னிடம் பத்திரமாக இருக்கிறது. நீ ஊதாரியானதும் அல்லாமல் உன் மகளையும் அப்படி இருக்க உபதேசித்தாய். அவளைத் திருத்த உன் மாப்பிள்ளைதான் இந்த யோசனையை என்னிடம் கூறினார்'' என்றான். கோமதி வெட்கத்தால் தலை குனிந்து கொண்டாள்,


குடந்தை கிரிஜா

அம்புலிமாமா



Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."