கடல் கன்னி நகரம்!
கடல் கன்னி
நகர நீச்சல் பயிற்சியாளரிடம் சேர்ந்த ஆறு மாதங்களுக்கு பின் – மிகிரன், சிற்பிகாவுக்கு எதிரே வேர்க்கடலையை கொறித்தவாறு, அங்குமிங்கும் நடந்தார், கணேசன்.
"மாஸ்டர்... எதற்காக குட்டி போட்ட பூனை மாதிரி உலாத்துறீங்க..." என்றான் மிகிரன்.
“மிகிரா... முதலில் கிணத்துல நீந்துன. அடுத்து குளம், அதற்கடுத்து நீச்சல் குளம், வாமனன் போல், உன் காலடி உலகத்தின் ஒரு முனையில் இருந்து, மற்றொரு முனையை நோக்கி இருக்கணும். இவ்வுலகமே, உன்னைப் பார்த்து, ஆச்சரியப்படணும்..."
"மாஸ்டர்... பெரிய திட்டம் போடுறீங்க... நீங்கள், எதை சொன்னாலும் செய்வேன்; வேண்டுமென்றால், ஒரு பெரிய ஆற்றில் நீந்தட்டுமா..."
"அட போடா... இனி, ஆறெல்லாம் உனக்கு ஜூஜூபி...""சிற்பிகா... வர்ற ஒலிம்பிக்குக்கு நீங்கள், தயாராகி விட்டீர் என, உலகிற்கு அறிவிக்கிறேன். நான், கூறியதை இருவரும் முடித்தால், ஒட்டு மொத்த மீடியாவும் உங்கள் மேல் தான்..."
"மாஸ்டர்... சொல்லுங்க... அசத்திடுறோம்...” என்றான் மிகிரன்.
"இருவரும் கடல்ல நீச்சல் அடிக்கணும்..." அதை கேட்டதும், வியந்தாள் சிற்பிகா.
“அடிச்சிட்டா போச்சு..." என்றான் மிகிரன். "மாஸ்டர்... எந்த கடலில்..." என்றாள் சிற்பிகா.
"பாக் ஜல சந்தியில், இருவரும் நீந்த வேண்டும். இதற்கு முன், சினேகன் எனும், சிறுவன் தனுஷ்கோடி - இலங்கை தலைமன்னார், இலங்கை தலைமன்னார் – தனுஷ்கோடி ; மொத்தம், 56 கி.மீ., தூரத்தை, 19:45 மணி நேரத்தில், நீந்திக் கடந்துள்ளான்...
"தனுஷ்கோடியிலிருந்து பிற்பகல், 2:00 மணிக்கு நீந்தத் துவங்கி, இரவு, 9:55 மணிக்கு தலைமன்னார் சென்றுள்ளான். அன்றிரவே, 10:30 மணிக்கு புறப்பட்டு, காலை, 9:42 மணிக்கு தனுஷ்கோடியை அடைந்துள்ளான்...'"
"சினேகனுக்கு என்ன வயது..." என்றாள் சிற்பிகா."
"அவன் வயது, 14; 8ம் வகுப்பு மாணவன்..."
"மாஸ்டர்... 56 கி.மீ., தூரத்தை, இருவரும், 14:00 மணி நேரத்தில், நீந்திக் கடப்போம். நாங்கள் இருவரும் நீந்துவதில் வேகமான மனிதர்கள்..." என்றான் மிகிரன்.
“கடல் நீச்சல் எளிதான விஷயம் அல்ல; அலைகள் அசுரத்தனமாய் தாக்கும்; நீந்தும் போது, சுறா, திமிங்கலங்கள் தாக்கும். அபாயம் ஏற்படும்...'
"எங்கள் பாதுகாப்புக்கு யார் வருவர்..." என கேட்டாள் சிற்பிகா.
"இந்திய கடலோர காவல் படையின் குறும் கப்பல், இருவரின் துணைக்கு வரும். உடலில், பெட்ரோலியம் ஜெல்லி, லனோலின் அல்லது ஒசன் கிரீஸ் தடவிக் கொள்ளலாம். இரவில், கடலில் நீந்துவது மிகவும் ஆபத்தான காரியம். ஆனால், நாங்கள் உங்களுக்கு துணையாக நிற்போம்...'"
"என்றைக்கு நாங்கள் நீந்த வேண்டும்...' என்றான் மிகிரன்.
"பவுர்ணமி அன்று நீந்துங்கள்; நிலா வெளிச்சம், கடல் நீரில் தங்கத்தை நெசவு செய்யும்; அச்சமயம், கடலை பார்க்கும் போது, ரம்மியமாக காட்சி தரும்..."
"பவுர்ணமி வருவதற்கு, எத்தனை நாட்கள் உள்ளன..." என வினவினாள் சிற்பிகா.
"இன்னும், 18 நாட்கள் உள்ளன; நாம் இன்றே, ராமேஸ்வரம் செல்கிறோம். அங்கு, 15 நாட்கள் தனுஷ்கோடி கடலில் நீந்தி பழகுங்கள்..."
"இலங்கையில் நீந்தினால், இலங்கை கடற்படை எங்களை சுட்டு விடும் அல்லவா..."
"கவலைப்படாதீர்... நீங்கள் இருவரும் சிறப்பான நீச்சல் வீரர்கள் என்பதையும், இந்நீச்சலுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும், எழுத்துப்பூர்வமாய் தெரிவிப்போம்...'
"அனுமதி தருவதில் ஏதேனும் பிரச்னை இருக்குமா..." என கேட்டான் மிகிரன்.
"கட்டாயம் இருக்காது...'
"இது போல், கடலில் நீந்தும் முயற்சிகள் ஏதாவது, தோற்று போய் இருக்கிறதா..." என்றாள் சிற்பிகா.
"கடல் கொந்தளிப்பு, பயங்கர ஜந்துகள் நடமாட்டம் மற்றும் நீச்சல் வீரர்களின் சுகவீனங்கள் என, தோல்விகள் ஏராளம். அமைதி, கொந்தளிப்பு, இரண்டையும் வெளிப்படுத்தும் கடல் பகுதி பாக் ஜல சந்தி; 56 கி.மீ., தூரம், எளிமை என எண்ணி விடாதீர்; தரையில் அது, 500 கி.மீ.,க்கு சமம்...
“நீந்தி விட்டால் அது சாதனை; இல்லையேல், கஜினி முகமது போல், மீண்டும் முயற்சிக்க வேண்டி வரும்..."
"மாஸ்டர்... எங்களுக்குள் அவ நம்பிக்கையில்லை; 200 கி.மீ., துாரம் கூட நீந்துவோம்; இப்படை தோற்கின் எப்படை வெல்லும்..." என்றான் மிகிரன்.
“இருவரின் தன்னம்பிக்கையையும் நேசிக்கிறேன்..." என கூறி, இடது தோளில் சிற்பிகாவையும், வலது தோளில் மிகிரனையும் அணைத்தார் கணேசன்.
கதை ஆசிரியர்-ஆர்னிகா நாசர்

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."