sirukathaigal

திடீர் சோதிடர்!

 திடீர் சோதிடர்!-thidir-sothidar

திடீர் சோதிடர்!

சாவித்திரியம்மா தன் பேத்தி சமேலியை மணம் செய்து கொடுத்து விட்டுத் தன் கிராமத்தில் நிம்மதியாக வாழ்ந்து வந்தாள். சமேலியின் கணவன் பதிங்கா. இளைஞன். சமேலியும் அவனும் சுகமாக வாழ்வார்கள் என சாவித்திரியம்மா எண்ணி மகிழ்ந்தாள்.
 
ஒரு நாள் சாவித்திரியம்மாவைக் காண சமேலியும் அவள் கணவன் பதிங்காவும் வந்தனர். சாவித்திரி உடனே பால் வாங்கி வர பாலேஸர் என்ற சிறுவனை அனுப்பினாள். சமையலுக்கான ஏற்பாடுகளையும் உடனே செய்தாள். சமேலி வீட்டிற்குள் சென்றாள். பதிங்கா அந்த வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்தான். சாய் வான ஓட்டுக் கூரை. அதைத் தாங்க மரத் தூண்கள். சுவரில் சிவப்பும் வெள்ளையுமாக திருஷ்டி கழிக்கக் கோடுகள் போடப் பட்டிருந்தன.

இவற்றை எல்லாம் பார்த்து விட்டு வீட்டின் பின்புறம் சென்று பார்க்கலானான். அப்போது சமையலறை யிலிருந்து சத்தம் வரவே அவன் வீட்டினுள் சென்றான். சாவித்திரியம்மா ஓடியாடி சமையலைச் செய்து முடித்தாள். சாப்பாட்டுத் தட்டையும் கிண்ணங்களையும் எடுத்து வைத்து பெரிய கிண்ணியில் சுண்டக் காய்ச்சிய பாலை வார்த்து நிரப்பினாள். மற்றதில் 'சாக்' எனப்படும் காய்கறியைப் போட்டாள். மற்றொன்றில் 'தால்' என்பதை வைத்தாள். பிறகு சில ரொட்டிகளும் உருளைக் கிழங்குக் கறியையும் சாப்பாட்டுத் தட்டுகளில்  வைத்து அவர்களிருவரையும் சாப்பிட வரும்படி அழைத்தாள்.

தன் தட்டில் ஐந்து ரொட்டிகளும் சமேலியின் தட்டில் நான்கு ரொட்டிகளும் வைக்கப்பட்டிருப்பதை பதிங்காகவனித்தான். உடனே அவன் 'அம்மா! உங்களுக்கென ரொட்டி ஏன் எடுத்து வைத்துக் கொள்ளவில்லை?" என்று கேட்டான். ஏனெனில் சாவித்திரியம்மா ஒன்பது ரொட்டிகள் மட்டுமே சுட்டு வைத்திருந்ததை அவன் முன்பே கவனித்திருந்தான்.

ஆனால் சாவித்திரியம்மாவோ "நான் எனக்கென சமையலறையில் ரொட்டிகளை எடுத்து வைத்திருக்கிறேன். நீங்கள் சாப்பிடுங்கள்! என்றாள். பதிங்காவோ "நான் சோதிடன். பொய் சொல்லாதீர்கள். நான் கண்டு பிடித்து விட்டேன்” என்றான் சிரித்துக் கொண்டே. அப்போது சமேலி "அம்மா மொத்தம் எவ்வளவு ரொட்டிகள் செய்தா ளென்று சோதிடப்புலியான நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்" என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

பதிங்காவும் கண்களை மூடிக் கொண்டு மந்திரங்கள் கூறுபவன் போல ஏதோ முணு முணுத்து "மொத்தம் ஒன்பதே" என்றான். சமேலி தட்டத்தைப் பார்த்தாள். அதில் ஒன்று கூட இல்லை. சாவித்திரியும் "நான் சாதம் சாப்பிட்டுக் கொள் கிறேன். நீங்கள் ரொட்டிகளைச் சாப்பிடுங்கள். அவை சூடு ஆறிவிடப் போகின்றன" என்றாள். இந்த சம்பவம் பதிங்காவிற்கு 'சோதிடர்' என்ற பெயரை ஏற்படுத்தி விட்டது.

மறுநாள் மதிய உணவிற்குப் பின் சாவித்திரியும் சமேலியும் கோதுமை வைக்கோல் தண்டுகளைக் கொண்டு விசிறிகள் செய்து கொண்டி ருந்தார்கள். அப்போது சலவைத் தொழிலாளி கல்லூ ஓடோடி வந்து சாவித்திரியிடம் “என் கழுதை காணாமல் போய் விட்டது. உங்கள் மாப்பிள்ளையிடம் கேட்டு அது எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள்” என்று கெஞ்சினான். 

சாவித்திரியும் பதிங்காவிடம் அதைக் கூறி கல்லூவின் கழுதை எங்கே இருக்கிறது என சோதிடம் பார்த்துக் கூறும்படி வேண்டவே அவன் திகைத்துப் போனான். பிறகு அவன் சமாளித்துக் கொண்டு "கழுதை கெட்டால் குட்டிச்சுவர் பக்கம் இருக்கும். அங்கே போய்ப் பார்' என்றான். கல்லூவும் கிராமத்தில் ஒரு குட்டிச்சுவரருகே தன் கழுதையைக் கண்டு பிடித்து விட்டான். இதனால் பதிங்காவை மாபெரும் சோதிடர் என்று அவ்வூரார் புகழ்ந்தார்கள்.

அன்று மாலை பதிங்கா பானகம் குடித்துக் கொண்டிருந்த போது அந் நாட்டு சேனாதிபதி ஷேர்சிங் வந்து அவனிடம் “என் குதிரைக் காணாமல் போய் விட்டது. அது எங்கே இருக்கிறது என சோதிடம் பார்த்துக் கூறுங்கள்" என்றான்.
பதிங்கா வெலவெலத்துப் போனான்! இதென்ன சங்கடத்தில் மாட்டிக் கொண்டேனே என்று எண்ணி அவன் ''குதிரையா? அது ஏதாவது ஒரு புல் கட்டினருகே இருக்கும்” என்றான். சேனாதிபதியும் புல்கட்டுகள் வைக்கப்பட்டிருந்த இடங்களிளெல்லாம் தேடி முடிவில் ஒரு புல் கட்டருகே தன் குதிரை புல்லைத் தின்று கொண்டிருப்பதைக் கண்டான். இதனால் மகிழ்ந்து போய் சேனாதிபதி பதிங்காவிற்கு சில தங்க நாணயங்களைப் பரிசளித்து விட்டுச் சென்றான்.

பதிங்காவோ இன்னமும் என்னென்ன சங்கடங்கள் வருமோ எனப் பயந்து விரைவிலேயே அந்த கிராமத்தை விட்டுப் போய் விட நினைத்தான். இதை அவன் தன் மனைவியிடம் தெரிவிக்கவே அவளோ இன்னமும் சில நாட்கள் இருந்து விட்டுப் போகலாம் என்று கூறினாள்! ஆனால் பதிங்கா அதற்குச் சம்மதிக்க வில்லை. 

அடுத்த நாள் அவன் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண் டிருந்த போது அரண்மனை யிலிருந்து ஒரு வீரன் வந்து பதிங்காவிடம் "சோதிடரே! மகாராணியின் நவரத்தின மாலை காணாமல் போய் விட்டது. நீங்கள் வந்து கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டும். இது அரச கட்டளை” என்றான். 

அரசகட்டளை என்றதும் நடு நடுங்கியவாறே பதிங்கா அரண் மனைக்குச் சென்றான். அங்கு அவன் ''மகாராணி நவரத்தின மாலையை எங்கே வைத்திருந்தார்?" என்று கேட்டான். ''அவரது படுக்கையின் பக்கத்தில் மற்ற நகைகளோடு தான் அவர் வைத்திருந்தார். ஆனால் அந்த மாலை மட்டும் தான் காணவில்லை. மற்ற நகைகள் உள்ளன" என்றாள்.

ஒரு பணிப்பெண். "அப்படியானால் மகாராணி தூங்கும் போது மாலை திருடப்பட்டுள்ளது. அவர் அயர்ந்து தூங்கி சொப்பனம் கண்டு கொண்டு இருந்திருப்பார். ஸ்வப்னா! ஸ்வப்னா!!" என்று பதிங்கா கனவைப்பற்றி எண்ணி உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தான்.

மகாராணியின் பணிப்பெண்களில் ஒருத்தியின் பெயர் ஸ்வப்னா. அவள் தான் நவரத்தின மாலையைத் திருடியவள். சோதிடர் தன் பெயரைக் கூறியது கேட்டு அவள் நடுநடுங்கித் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு மகாராணியிடம் மாலையைக் கொடுத்து விட்டுத் தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். பதிங்காவும் பெரு மூச்சு விட்ட வாறே தான் தப்பியதாக எண்ணி நிம்மதி அடைந்தான்.

அப்போது மன்னனே வந்து "சோதிடப் புலியே! என் கைக்குள் என்ன இருக்கிறது என்று சரியாகச் சொல்லிவிட்டால் உனக்கு ஒரு கிராமத்தையே இனாமாகக் கொடுக்கிறேன். அதைச் சொல்லாவிட்டாலோ உனக்கு சோதிடமே தெரியாது எனத் தீர்மானித்து உன்தலையை மொட்டை அடித்து முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மீது உட்கார வைத்து ஊர்த்தெருக்களில் சுற்றி வரச் செய்வேன்" என்றான். 

பதிங்கா பயந்து நடுநடுங்கிக் கொண்டிருக்கையில் மன்னன் தன் கைவிரல்களை மடக்கி அவன் முகத்தின் முன் காட்டினான். அவனோ பயந்து "ஒரு உயிர்தங்களிடம் சிக்கித்துடிதுடித்துக் கொண்டிருக்கிறதே!" என்று பதிங்கா தன்னைப் பற்றித் தான் மன்னனிடம் கூறினான். மன்னன்தன் கையைத்திறந்து பார்த்தான். அவனது உள்ளங் கையில் ஒரு விட்டில் பூச்சி துடிதுடித்துக் கொண்டிருந்தது. 

மன்னனும் "நீ உண்மையிலேயே சோதிடப் புலி தான்” என்று கூறி பதிங்காவைப் பாராட்டி ஒரு கிராமத்தை இனாமாக அளித்தான். அந்த கிராமம் தன் மாமியாரின் ஊரிலிருந்து வெகு தூரம் தள்ளி இருந்ததால் மகிழ்ச்சியுடன் அதனை அவன் ஏற்று அங்கு தன் மனைவி சமேலியுடன் சுகமாக வாழ்ந்து வந்தான். 

அம்புலிமாமா




Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."