கோரைப்புல் கோதை
கோரைப்புல் கோதை
ஐரோப்பிய நாடு ஒன்றில் ஒரு பணக்காரர் இருந்தார். அவருக்குப் பல மாளிகைகளும் ஏராளமான நில புலன்களும் இருந்தன. அவருக்கு மூன்று புதல்விகள் இருந்தனர். ஒரு நாள் அவர் தம் மூத்த மகளிடம் ‘"நீ என்னை எதற்கு இணையாக நேசிக்கிறாய்?" என்று கேட்டார். அவளும் "நான் உங்களை என் உயிருக்குச் சமமாக நேசிக்கிறேன்” என்று கூறினாள். அடுத்து அவர் தன் இரண்டாவது மகளிடம் அதே கேள்வியைக் கேட்கவே, அவளும் "உலகிலேயே எல்லாவற்றையும் விட உங்களைத் தான் நேசிக்கிறேன்” என்றாள்.
அதைக் கேட்ட அவர் "பேஷ்! பேஷ்! இருவரும் நன்றாகச் சொன்னீர்கள்" என்று பாராட்டிவிட்டு தம் மூன்றாவது மகளிடம் "நீ என்னை எந்த அளவிற்கு நேசிக்கிறாய்'' என்று கேட்டார். அவளும் "நாம் சாப்பிடுவதில் எந்த அளவிற்கு உப்பைச் சேர்க்கிறோமோ, அந்த அளவிற்கு உங்களை நேசிக்கிறேன்" என்றாள். அது கேட்டு அவர் கோபம் கொண்டார். ஏனெனில் அவள் அவரை சாப்பாட்டில் சேர்க்கும் சாதாரண உப்புக்குச் சமமாகக் கருதி விட்டாளே என்று அவர் எண்ணியது தான்காரணம்.
அவர் உடனே "இது நாள் வரை நான் என் வீட்டில் ஒரு நச்சுப் பாம்பை வளர்த்துக் கொண்டு வந்தேன் என்று இப்போது தான் எனக்குப் புரிகிறது. நீ என்னை நேசிக்கவே இல்லை. அதனால் உனக்கு இந்த வீட்டில் இடம் இல்லை. நீ இப்போதே வீட்டை விட்டு வெளியே போ” என்று உரக்கக் கூவினார். அந்தப் பெண்ணும் பதில் பேசாமல் உடனேயே வீட்டை விட்டு வெளியே சென்றாள்.
கடுங் குளிர் அவளை பாதித்தது. அதனால் ஆற்றின் கரையில் அடர்ந்து வளர்ந் திருந்த கோரையைப் பிடுங்கி தான் அணிய தொப்பியையும், ஆடைகளையும் தயாரித்து தான் ஏற்கனவே அணிந்திருந்த விலையுயர்ந்த ஆடைகளை அவற்றால் மறைத்துக் குளிரிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டாள்.
அவள் நடந்து நடந்து ஓரிடத்தில் ஒரு மாளிகையைக் கண்டாள். அதன் வாசல் கதவைத்தட்டவே, அதைத் திறந்து கொண்டு வந்தவளிடம் 'இந்த வீட்டில் வேலை செய்ய ஆள் தேவையா?" என்று கேட்டாள். அவள் அந்த வீட்டின் சமையல்காரி. அவள் உடனே யாரும் தேவை இல்லை” என்று கூறினாள்.
அப்போது அவள் ''எனக்கு யாருமே இல்லை. இந்த வீட்டில் இடம் கொடுத்தால் எல்லா வேலை களையும் செய்வேன். சம்பளம் என்று எதுவும் கொடுக்க வேண்டாம். சாப்பாடு மட்டும் போட்டால் போதும்” என்று கெஞ்சினாள்.
சமையல்காரியும் அவள் மீது இரக்கப்பட்டு 'சரி. எனக்கு உதவியாக இருந்து பாத்திரம் பண்டங்களைத் தேய்த்துக் கொடு. உனக்கு இந்த வீட்டில் இருக்க அனுமதி வாங்கி விடுகிறேன்'' என்றாள். அவளும் அதற்குச் சம்மதித்து சமையல்காரி கூறிய வேலைகளைச் செய்தும் பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவிக் கொடுத்தும் வரலானாள்.
அவள் கோரைப் புல்லாலான ஆடைகளை அணிந்து தென்பட்டதால் அவ்வீட்டில் இருந்தவர்கள், அவளைக் கோரைப்புல் கோதை என்று பெயரிட்டு அழைக்கலானார்கள். ஒரு நாள் அவ்வூரின் பிரமுகர் வீட்டில் ஒரு நடன விருந்து நடந்தது. அப்போது அம்மாளிகையின் வேலைக்காரர்கள் யாவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு அந்த விருந்து வேடிக்கைகளைக் காண அப்பிர முகரின் மாளிகைக்கு அனுப்பப் பட்டனர்.
ஆனால் கோரைப்புல் கோதை தான் மிகவும் களைத்திருப்ப தால் தான் அந்த மாளிகைக்கு வர வில்லை என்று தன் சக பணியாட்களிடம் கூறி அனுப்பிவிட்டாள். அவர்களெல்லோரும் போன பின் அவள் தன் கோரைப் புல் ஆடைகளைக்கழற்றி வைத்து விட்டுத்தான் அணிந்திருந்த பகட்டான பட்டு ஆடைகளுடன் அந்தப் பிரமுகரின் வீட்டிற்குப் போய் நடன விருந்தில் கலந்து கொண்டாள்.
விருந்திற்கு வந்திருந்தவர்கள் யாவரும் புதிதாக வந்த அந்த அழகிய பெண் யார் என எண்ணித் திகைத்துக் கொண்டிருந்தார்கள். அந்நாட்டு சம் பிரதாயப்படி அவள் தன் மாளிகையின் சொந்தக்காரரின் மகனுடன் சேர்ந்து நடனமாடினாள். அவனுக்கு அவளை மிகவும் பிடித்துப் போயிற்று. அவள் விருந்து முடிந்ததும் எல்லோருக்கும் முன்னதாகக் கிளம்பித் தன் மாளிகையை அடைந்து தன்கோரைப்புல் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு படுத்து தூங்கு பவள் போல பாசாங்கு செய்தாள்.
விருந்து முடிந்து வெகு நேரம் கழித்து வந்த பணியாட்கள் கோரைப் புல் கோதையிடம் “அடடா! நீ விருந்திற்கு வராமல் போனதால் ஒரு அழகான பெண்ணைக் காணும் பெரும் வாய்ப்பை இழந்து விட்டாய். அவள் எவ்வளவு அழகு தெரியுமா? அவள் அணிந்திருந்த பட்டாடைகள் மிக உயர்ந்தவை. நம் எஜமானரின் மகன் அவளுடன் சேர்ந்து வெகு நேரம் நடன மாடினார். அவருக்கு அவளைப் பிடித்துப் போயிற்று" என்றார்கள்.
அவளும்“அப்படியா? நான் அவளைப் பார்க்க வேண்டுமே" என்று கூறவே அவர் களும் "அடுத்த வாரம் இன்னொரு பிரமுகர் வீட்டில் நடன விருந்து நடக்கப் போகிறது. அப்போது அந்த அழகி வந்தாலும் வரலாம். அப்போது அங்கு போய் அவளைப் பார்க்கலாம்"" என்றார்கள்.
அந்த நடன விருந்து நாளன்றும் மற்ற பணியாட்களை அவள் முன்னதாக அனுப்பிவிட்டுத் தன் கோரைப்புல் ஆடைகளைக் களைந்து விட்டுத் தன் பகட்டான ஆடைகளில் அந்த விருந்திற்குச் சென்றாள். அவளது எஜமானனின் மகன் வந்து அவளை அழைத்துக் கொண்டு போய் வெகு நேரம் நடனமாடினான். விருந்து முடிந்ததும் அவள் எல்லோருக்கும் முன்னதாகத் தானிருக்கும் மாளிகைக்கு வந்து தன் கோரைப்புல் ஆடையை அணிந்துக் கொண்டாள். பணியாட்கள் வந்து அழகி வந்தது பற்றி அவளிடம் கூறினார்கள்.
மூன்றாவது தடவையிலும் வேறொரு பிரமுகர் வீட்டில் நடன விருந்து நடந்த போதும் அவள் தன் பகட்டான ஆடைகளை அணிந்து கொண்டு சென்றாள். அவளது எஜமானனின் மகன் வந்து அவளை அழைத்துக் கொண்டு போய் நடன மாடினான். அவளது பெயரைக் கேட்கவே அவள் கூற வில்லை. அவன் தன் மோதிரத்தைக் கழற்றி அவளது விரலில் போட்டு "இது என் அன் பளிப்பு" என்றான்.
வழக்கம் போல விருந்து முடிந்ததும் அவள் தன் எஜமானனின் மாளிகைக்குச் சென்று விட்டாள். எஜமானனின் மகன் தான் கண்ட அழகியை எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்தான். எங்கும் காணாது போகவே அவன் கவலையால் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அப்போது சமையல்காரி அவனுக்குக் கஞ்சி கொடுக்கப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டாள். அப்போது கோரைப்புல் கோதை தான் கஞ்சியைக் கொண்டு போய்க் கொடுப்பதாகக் கூறிக் கஞ்சிப் பாத்திரத்தை வாங்கிக்கொண்டாள்.
அவள் அப்பாத்திரத்துள் தனக்கு அவன் கொடுத்த மோதிரத்தைக் கஞ்சியில் போட்டுக் கொடுத்தாள். கஞ்சியைக் குடித்த அவன் பாத்திரத்தின் அடியில் இருந்த மோதிரத்தைக் கண்டு "ஆ! நான் அந்த அழகிக்குக் கொடுத்த மோதிரம். இது எப்படி இங்கு வந்தது?” என்று கேட் டான். அவளும் "நான் தான் இதை இந்தப் பாத்திரத்தில் போட்டேன். இதை எனக்கு ஒருவர் கொடுத்தார்" என்றாள்.
“உனக்கு அவர் கொடுத்தாரா? நீ யார்? உண்மையைச் சொல்" என்று கேட்டான். அவளும் தன் கோரைப் புல் ஆடைகளைக் களைந்து விட்டுத் தன்பகட்டான பட்டாடையில் அவன் முன் நின்றாள். அவன் ஓரேயடியாக மகிழ்ந்து போய் "ஆ! நீயா! நான் உன்னைத் தான் மணப்பேன்" என்று கூறித்தன் தந்தையிடம் தன் தீர்மானத்தைத் தெரிவித்தான். அவரும் அவளிடம் விசாரிக்கவே, அவளும் 'நானும் ஒரு பணக்காரரின் மகள் தான். என் விவாகத்திற்கு உங்களுக்குத் தெரிந்த பணக்காரர்களை அழையுங்கள். அப்போது யார் என் தந்தை என்று காட்டுகிறேன்" என்றாள்.
அவளது திருமணத்திற்கு வந்த பணக்காரர்களில் அவளது தந்தையும் இருந்தார். அவருக்கு மட்டும் உப்பில்லாத உணவைப் பரிமாறும்படி அவள் சமையல்காரியிடம் கூறினாள். அதைச் சாப்பிட ஆரம்பித்த அப்பணக்காரர் அந்த வீட்டு எஜமானரிடம் "எனக்கு இப்போது தான் உப்பின் மதிப்பு எவ்வளவு என்று தெரிகிறது. என் கடைசி மகள் சாப்பாட்டில் எந்த அளவு உப்பு இருக்குமோ அந்த அளவிற்கு என்னை நேசிப்பதாகக் கூறினாள். அதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவளை வீட்டை விட்டே வெளியேற்றி விட்ட மகாபாவி நான்" என்று கண்ணீர் வடித்தார்.
சோபினி. எஸ்
அம்புலிமாமா







கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."