sirukathaigal

அரிய சக்தி

 அரிய சக்தி-Rare power

 அரிய சக்தி

மருதாசலம் தான் புதிதாக வாங்கிய வீட்டுக் கொல்லைப்புறத்தில் ஒரு கிணறு வெட்ட நினைத்தான். அதை அறிந்த முருகப்பன் என்பவன் அவனை அணுகி "நீங்கள் கிணறு வெட்டப் போவதாகக் கேள்விப்பட்டேன். நான் பூமிக்கு அடியில் நீரோட்டம் எங்கு உள்ளது என்று அறிந்து சொல்பவன். இது என் குடும்பத்தினர் வம்ச பரம்பரையாகக் கற்ற கலை.எனவே இந்தக் கிணறு வெட்டும் வேலையை என்னிடம் ஒப்படைக்கிறீர்களா?' என்று கேட்டான்.

அப்போது மருதாசலத்தோடு இருந்த அடுத்த வீட்டு அண்ணா சாமியும் "மருதாசலம், நீங்கள் ஊருக்குப் புதியவர். இந்த முருகப்பனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதிக செலவில்லாமலும் விரைவிலும் வேலை முடிந்து விடும்" என்றான்.

மருதாசலமோ "அண்ணாசாமி பல சமயங்களில் நம் கண்ணெதிரே உள்ள பொருள்களே நமக்குச் சரியாகத் தெரிவதில்லை. இவர் பூமிக்கடியில் உள்ள நீரோட்டத்தைக் கண்டுபிடித்து விடுவாரா? ஏதாவது மாயாஜாலம் மந்திரம் கற்றவரா?" என்று குத்தலாகக் கேட்டான். 

முருகப்பனும் அதெல்லாம் இல்லை. என் சொந்த அனுபவத்தால் முறைப்படி நீரோட்டம் உள்ள இடத்தைக் கண்டு பிடிக்கிறேன்' என்றான். மருதாசலமோ "இது எல்லோரும் செய்யக் கூடியதே. இதற்கு ஒன்றும் நீண்ட அனுபவம் தேவை இல்லை. நானே கூட நீரோட்டம் கண்டுபிடித்துக் கிணறு வெட்டிக் கொள்கிறேன்" என்றான்.


அதுகேட்டு முருகப்பன் “சரி. உங்கள் இஷ்டம்” என்று பணிவுடன் கூறிவிட்டுச் சென்றான். மறுநாளே மருதாசலம் நான்கு கூலியாட்களை அமர்த்தித் தன் வீட்டுக் கொல்லையில் ஓரிடத்தைக் காட்டி அங்கு கிணறு வெட்டச் சொன்னான். அவர்களும் பத்து நாட்கள் தோண்டியபின் பாறையைத்தான் கண்டார்கள். நீர் ஊற்று சுரக்கவில்லை.

அவர்கள் மருதாசலத்திடம் 'இனிமேல் எங்களால் வெட்ட முடியாது. இங்கே நீரோட்டம் இல்லை. இதுவரை நாங்கள் செய்த வேலைக்குக் கூலி கொடுங்கள்'' என்றார்கள். மருதாசலமும் அவர்களுக்கு கூலியைக் கொடுத்து அனுப்பினான். பிறகு அவன் அடுத்த வீட்டு அண்ணாசாமியைக் கண்டு மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசனை கேட்டான்.

அவனும் "நீங்கள் அன்று நான் சொன்னபடி முருகப்பனிடம் இந்த வேலையை ஒப்படைத்திருந்தால் இந்த வீண் செலவைத் தவிர்த்திருக்கலாம். பரவாயில்லை. இப்போதாவது முருகப்பனிடம் இந்த வேலையை ஒப்படைக்கலாம்' என்றான்.

வேறு வழி இல்லாததால் மருதாசலம் முருகப்பனை அழைத்து வரச் சொன்னான். முருகப்பனும் வந்து கொல்லைப் புறத்தில் நாலைந்து தடவை நடந்து பார்த்து முடிவில் ஓரிடத்தைக் காட்டி “இந்த இடத்தில் நீரோட்டம் இருக்கிறது. இங்கு கிணறு வெட்டலாம்" என்று கூறினான். மருதாசல்மும் கிணறு வெட்டும் வேலையை முருகப்பனுக்கே கொடுத்து, "நீ நாளையே இந்த வேலையைத் தொடங்கு" என்றான். 

மறுநாளே முருகப்பன் ஆட்களை அழைத்து வந்து தான் குறித்த இடத்தில் கிணறு வெட்டலானான். மூன்று நாட்கள் தோண்டிய பின் நீர் ஊற்று வந்தது. அதன் பிறகு இன்னமும் சற்று வெட்டவே கிணற்றில் நீர் ஏராளமாக வந்து விட்டது. அது கண்டு மருதாசலமும் மகிழ்ந்து போனான்.

அப்போது முருகப்பன் "நீங்கள் அன்றே என்னிடம் இந்த வேலையை ஒப்படைத்திருக்கலாம். ஆனால் அன்று என் வார்த்தையில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இப்போது பாருங்கள் நான் எதிர்பார்த்ததை விட நன்றாக ஊற்று எடுத்திருக்கிறது" என்றான். 

மருதாசலமும் “சரி. உனக்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும்?" என்று கேட்கவே அவனும் “எல்லாம் சேர்ந்து ஐநூறு ரூபாய்' என்றான். அதுகேட்டு மருதாசலம் முகத்தைச் சுளித்தவாறே "மூன்று நாட்கள்தானே வேலை செய்தாய்? அதற்கா ஐநூறு ரூபாய்?' என்று கேட்டான். 

முருகப்பனும் "இதில் நூறு ரூபாய் கூலியாட்களுக்கு. மீதம் நானூறு ரூபாய் நீரோட்டம் எங்குள்ளது என்று கண்டுபிடித்த எனக்கு. இதில் மந்திரமோ மாயமோ எதுவும் இல்லை. இதை நீங்களே பார்த்தீர்களே' என்றான். மருதாசலமும் அவன் கேட்ட பணத்தைக் கொடுத்தான். 

அப்போது அங்கு வந்த அண்ணாசாமி "இது சின்ன இடமானதால் சட்டென நீரோட்டம் எங்கே என முருகப்பனால் கண்டு பிடிக்க முடிந்தது. இதுவே தோட்டம், வயக்காடு என்றால் முருகப்பனுக்கு எவ்வளவு சிரமம்? அவன். செய்கையில் மந்திரம் மாயம் இருப்பதாக நீங்கள் நினைத்ததே ஒரு மூடநம்பிக்கை. அவன் தன் பழுத்த அனுபவத்தால் நிலத்தில் நடந்து நீரோட்டம் உள்ள இடத்தை' உணர்கிறான். அது உங்களாலும் முடியாது. என்னாலும் முடியாது. இதுதான் அவன் பெற்ற அரிய சக்தி" என்றான். மருதாசலமும் 'ஆம்' என்பது போலத் தலையை ஆட்டினான்.  

கல்பனா சீனிவாசன்

அம்புலிமாமா



Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."