sirukathaigal

சாது மிரண்டால்...!

 சாது மிரண்டால்...!-saadhu mirandhaal

சாது மிரண்டால்...!

நெல்லிக்காய் ஊரில் நஞ்சப்பன் என்ற விவசாயி இருந்தான். அவன் தனக்கிருந்த இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு மனைவி மக்களுடன் சுகமாக வாழ்ந்து வந்தான். அதே ஊரில் அருணாசலம் என்ற பணக்காரன் இருந்தான். அவன் பிறருக்கு சொத்தின் பேரில் கடன் கொடுத்து அநியாய வட்டிபோட்டு அவர்கள் கடனை தீர்க்க முடியாமல் போகும் நிலையை உருவாக்கி அவர் களது சொத்துக்களைத் தனதாக்கிக் கொண்டு வந்தான். 

நஞ்சப்பனின் தந்தை எப்போதோ கொஞ்சம் பணம் அருணாசலத்திடம் கடன் வாங்கி இருந்தான். அதை அவன் தீர்க்க முடியாமல் ஆண்டு தோறும் அறுவடை ஆனதும் நெல்லின் ஒரு பகுதியை வட்டிக் காகக் கொடுத்து வந்தான். நஞ்சப்பனாலும் கடனை அடைக்க முடியாததால் தன் தந்தை செய்தது போல அறு வடையானதும் நெல்லில் ஒரு பகுதியை வட்டிக்காகக் கொடுத்து வந்தான். 

அந்த ஆண்டில் அறுவடைக்கு முன் அருணாசலத்தின் நாலைந்து மாடுகள் நஞ்சப்பனின் வயலில் புகுந்து பயிரில் கணிசமான பகுதியை மேய்ந்து விட்டன. ஊரில் பலர் அது பற்றி கிராம அதிகாரியிடம் புகார் செய்யும்படிக் கூறினர். ஆனால் நஞ்சப்பனோ 'புகார் கொடுப்ப தெல்லாம் எதற்கு? நானே அவரிடம் சமாதானமாகப் பேசி பிரச்சினைக்கு முடிவு காண்கிறேன்” என்றான். 

ஆனால் அது நடக்கவில்லை. வயலில் அறுவடையாகும் போதே அருணாசலம் வந்து வட்டியின் கீழ் எல்லா நெல்லையும் எடுத்து வண்டியில் ஏற்றினான். நஞ்சப்பன் அவனது மாடுகள் வயலில் புகுந்ததைக் கூறிப்பயிரை நாசம் செய்து விட்டதென்றும் நெல் இல்லா விட்டால் தன் குடும்பம் பட்டினி கிடக்க வேண்டுமென்றும் அடுத்த அறுவடையில் எல்லா நெல்லையும் சேர்த்துக் கொடுப்பதாகக் கூறினான். ஆனால் அருணாசலம் அதை ஏற்காமல் வண்டியை ஓட்டச் சொல்லவே, நஞ்சப்பன் கோபமாக “அடே அருணாசலம்!” என்று பற்களை நற நறவென்று கடித்தவாறே கூவினான்.

அருணாசலம் திகைத்துப் போனான். சாதுவாக இருந்த நஞ்சப்பனா துணிவுடன் பெயர் சொல்லித் தன்னைக் கூப்பிடுகிறான் என்று எண்ணி மலைத்தான். அப்போது நஞ்சப்பன் ''நான் மட்டும் நேர்மை யானவன் என்பது உண்மையானால் நாளை விடிவதற்குள் உன் சொத்தெல்லாம் அழிந்து உன் வீடே இடிந்து பாழாகட்டும். நான் உனக்குக் கொடுக்கும் இந்த சாபத்திற்கு வானத்து சூரியனே சாட்சி” என எல்லோரும் கேட்கும்படி உரக்கக் கூறினான். அருணாசலமோ கேலியாகச் சிரித்துக் கொண்டே சென்றான்.

அன்றிரவு அவ்வூர் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. மழை ஒரேயடியாகக் கொட்டியது. மின்னல் வெட் டியது. பலத்த இடி பயங்கரமாக இடித்து அருணாசலத்தின் வீட்டின் மீது விழுந்தது. அதனால் அந்த வீடு இடிந்து அதிலிருந்த அருணாசலத்தின் குடும்பமே அழிந்தது. 

இச்சமயத்தில் நாரதர் பூலோகசஞ் சாரம் செய்தவாறே அங்கு வந்தார். நஞ்சப்பன் அருணாசலத்திற்குக் கொடுத்த சாபம் பலித்து விட்டது கண்டு ஆச்சரியப்பட்டார். ஒரு சாதாரண மனிதனுக்கு இவ்வளவு சக்தியா என்று எண்ணி சத்தியலோகத்தை அடைந்ததும் தன் தந்தையான பிரம்ம தேவரிடம் "தந்தையே! இன்று பூலோகத்தில் ஒரு அதிசயம் நடந்தது. நஞ்சப்பன் என்ற ஒரு சாதாரண மனிதன் அருணாசலம் என்ற பணக்காரனை 'நீ நாசமாகப் போவாய்' என்று சபித்தான். அது அப்படியே நடந்து விட்டது. நஞ்சப்பனுக்கு அவ்வளவு சக்தி உள்ளதா?” என்று கேட்டார்.

பிரம்மாவும் சிரித்தவாறே “நாரதா! நீ நினைப்பதுபோல நஞ்சப்பன் சாதாரண மனிதனல்ல. நேர்மையானவன் நியாய வழியில் செல்பவன். சுயநலமற்றவன். அதனால் தான் அவன் கூறியது அப்படியே பலித்தது. இதை நீ புரிந்து கொள்ள பூவுலகில் அங்கே பார்" என்று ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினார். 

ஒரு காட்டுப்பாதையில் வினயசாகரர் என்ற சன்னியாசி போய்க் கொண்டிருந்தார். அங்கே கால துஷ்டன் என்ற கொடிய விஷப்பாம்பு ஒரு புதரருகே படுகாயமுற்று விழுந்து துடிதுடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அது வினயசாகரரைப் பார்த்ததும் ''சுவாமி! என்னைத் தெரிகிறதா?" என்று கேட்டது. அவரும் அதை உற்றுப் பார்த்து விட்டு ''ஓ! நீ காலதுஷ்டன் தானே? உனக்கா இந்த கதி!'' என்று கேட்டார். 

காலதுஷ்டனும் "ஆமாம் சுவாமி. அன்று நீங்கள் கூறியபடி நடந்ததால் இன்று இந்த நிலையில் இருக்கிறேன். இவ்வழியாக வருபவர் களைத் தீண்டாமல் 'புஸ்'ஸென்று சத்தமிட்டு பயமுறுத்தலானேன். இப்படியே கொஞ்காலம் வரை நான் செய்து கொண்டிருக்கவே அவர்கள் என் விஷக் கோரைப்பற்கள் போய் விட்டதாக எண்ணி விட்டார்கள். அதனால் என்னைக் கண்டு பயப் படாமல் என்னைக் குத்தி, அடித்துக் காலால் உதைத்துத் தள்ளலானார்கள். நான் எல்லா வற்றையும் பொறுத்துக் கொண்டு வருகிறேன். இனி நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்" என்று கேட்டது. 

அதைக் கேட்ட வினயசாகரர் பெரு மூச்சு விட்டு "உனக்கு நடந்தது போல முன்பு பலருக்கும் நடந்திருக்கிறது. இதற்குக் காரணம் உன் போன்ற தர்ம நியாயத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் மனிதன் பிறரைத் தொல்லை படுத்துவதைச் சரியாகப் புரிந்து கொள்ளாதது தான் காரணம். கால துஷ்டா! முதலில் உன் உடலின் காயங் களையும் வலியையும் போக்குகி றேன்" எனக் கூறி அதன் உடலைத் தடவினார்.

அதன் உடலின் காயங்கள் மறைய, அது முன்பிருந்தது போலாகியது. பிறகு அவர் ''தர்ம நியாயமாய் நடப்பவன் நெருப்பிற்குச் சமம். நெருப்பைத் தொட்டால் அது சுட்டு விடும் என்பதை அறியாத மூடர் களுக்கு அதை அறியவைப்பது நெருப்பே. நான் சொன்னது புரிந்ததா?" என்று கேட்டார். கால துஷ்டனும் தலையை ஆட்டி புரிந்தது என்றது. 

வினயசாகரர் அங்கிருந்து சென்றபின், சற்று நேரம் கழித்து இருவர் வந்தனர். ஒருவன் கையில் நீண்ட கோல் இருந்தது. மற்றவனிடம் பாம்பு களைப் போட்டு மூடி வைக்கும் பாம்புப்பெட்டி இருந்தது. கையில் கோலை வைத்திருந்தவன் கால துஷ்டன் இருக்கும் புதரைப் பார்த்து "இங்கு தான் பல் போன அந்தப் பாம்பு இருக்கிறது. நான் கோலால் குத்தி பாம்பைப் புதரிலிருந்து வெளியே வரச் செய்கிறேன். நீ பயமில்லாமல் அதனைப் பிடித்துப் பெட்டிக்குள் போட்டு விடு" என்றான். 

அவன் புதரைக் கோலால் துத்தவே காலதுஷ்டன் சீறிப் பாய்ந்து வந்து அவன் கழுத்தில் ஒரு கடி கடித்தது. அடுத்து அது மற்றவன் மீது பாயப் போகவே, இருவருமே "ஐயோ பாம்பு" என்று அலறிக் கொண்டே ஓடினார்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது தானே. 

நாரதரும் "தர்மநியாயம் தவறா தவன் நெருப்புக்குச் சமமே. இது நஞ்சப்பன் விஷயத்தில் உண்மையே” என்றார்.

கதை ஆசிரியர் :பாபநாசம் சாமா

அம்புலிமாமா,



Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories

1 கருத்து:

"Please be respectful. Anonymous comments are allowed."