sirukathaigal

உயர்ந்த மனிதர்

உயர்ந்த மனிதர்-High man

உயர்ந்த மனிதர்

பொன்னனுக்கு அவசரமாக ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. யார் யாரிடமோ கேட்டுப் பார்த்தும் கடன் கிடைக்கவில்லை. முடிவில் மகாக் கஞ்சனான தன் சிற்றப்பா சின்னசாமியிடம் போனான்.

சின்னசாமியோ “நான் உனக்கு கடன் கொடுத்தால் நீ எப்படித் திருப்பிக் கொடுப்பாய்? உனக்கு வீடோ நிலமோ எதுவும் இல்லையே. நீ சிவகிரிக்குப் போய் சிவானந்தம் என்ற புண்ணிய வானைப் பார். அவர் யாருக்கு வேண்டுமானாலும் இரக்கப்பட்டுக் கடன் கொடுக்கிறவர். அவரிடம் கடன் வாங்கி உன் முடையைத் தீர்த்துக் கொள்" என்று சொல்லி அனுப்பினான்.

பொன்னன் சிவகிரிக்கு போய் சிவானந்தத்தைக் கண்டு கடன் கேட்டான். அவரும் அவனைப் பற்றி அவனிடமே விசாரித்து விட்டு "கடன் சுலபமாகக் கிடைக்கிறதே என்று வாங்கக் கூடாது. உன்னால் நன்கு வியாபாரம் செய்ய முடியும் என்று தெரிகிறது. நான் ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்தால் நீ மறு வருடம் இரண்டாயிரம் ரூபாயாகத் திருப்பித் தர வேண்டும். தவறினால் அதற்கு அடுத்த வருடம் நாலாயிரம். இப்படியே அது ஆண்டுக்கு ஆண்டு இரட்டிப்பாகும். சம்மதமா?" என்று கேட்டார். 

பொன்னனுக்கோ பணம் தேவை. இவரை விட்டால் வேறு யாரிடமிருந்தும் கிடைக்காது. இப்படி வட்டிக்கு வட்டியாக நிறையப் பணம் கறக்கும் இவரையா புண்ணியவான் என்று எல்லோரும் புகழ்கிறார்கள்? என்ன வானாலும் இப்போது பணம் கிடைக் கிறதே என்று எண்ணி அவன் பத்திரம் எழுதிக் கொடுத்துப் பணம் வாங்கிக் கொண்டு சென்றான்.

முதல் வருடம் பொன்னன் அந்தப் பணத்தைக் கொண்டு வியாபாரம் செய்ததில் செலவெல்லாம் போக ஐயாயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது. அதிலிருந்து இரண்டாயிரம் ரூபாய் சிவானந்தத்திற்கு திருப்பிக் கொடுக்கலாம் என அவன் நினைத்தான். அப்போது ஒரு வியாபாரி அவனிடம் “உன்னிடம் ஐயாயிரம் ரூபாய் உள்ளது. உன்னை என் வியாபாரத்தில் கூட்டாளி யாகச் சேர்த்துக் கொள்கிறேன். ஒரே வருடத்தில் உனக்கு முப்பதாயிரம் ரூபாய் கிடைக்கும்" என்று ஆசை காட்டினான்.

அந்த ஆசை வார்த்தையில் விழுந்த பொன்னன் “இப்போது இவனோடு கூட்டு சேர்ந்து ஒராண்டில் முப்பதாயிரம் சம்பாதித்து சிவானந்தருக்கு நாலாயிரம் ரூபாய் கொடுத்து விடலாம். அப்போது இருபத்தாறாயிரம் லாபம் தானே" என எண்ணி அதற்குச் சம்மதித்தான்.

அந்த ஆண்டு நிறைய லாபம் வரவே ஆண்டு முடிவில் சிவானந்தருக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் அதற்கடுத்த ஆண்டிற்குத் தள்ளிப் போட்டான். இப்படியே ஐந்து ஆண்டுகள் கழிந்தன. பொன்னனிடம் பல லட்ச ரூபாய்கள் சேர்ந்து விட் டன. அப்போது பொன்னன்" ஒரு ஆயிரம் ரூபாய் கடன் முன்பு வாங்கியதற்கு இப்போது முப்பத்தி ரெண்டாயிரம் ரூபாய் கொடுப்பதா? இது அநியாயம்" என எண்ணினான்.

அப்போது சிவானந்தம் தம் மகளின் கல்யாணத்தை நிச்சயித்து நகைகள் வாங்க பொன்னின் கடைக்கு வந்தார். அவர் நாலாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு நகையைத் தேர்ந்தெடுத்து "இதை எடுத்துக் கொள்கிறேன். இப்போது கையில் மூவாயிரம் ரூபாய்தான் இருக்கிறது. பிறகு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன்" என்று பொன்னனிடம் கூறினார். பொன்னனுக்கு அது இஷ்டமில்லை என்றாலும் சரியெனக் கூறி நகையைக் கொடுத்து மூவாயிரத்தை வாங்கிக் கொண்டான்.

அவர் போனதும் பொன்னன் "இவரிடம் நான் வாங்கின கடன் ஆயிரம் ரூபாயை வசூலிக்க நினைக்கிறாரோ? அப்படியானால் இந்த ஐந்து வருஷ வட்டியை எப்படி இந்தப் புண்ணி வான் வசூலிக்கப் போகிறாரோ பார்க்கலாம்" என்று எண்ணிக் கொண்டான்.

ஆனால் அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு மாரடைப்பால் திடீரென சிவானந்தம் இறந்து விட்டார் என்ற செய்தி பொன்னனுக்குக் கிடைத்தது. அதைக் கேட்ட பொன்னன் அப்பாடா! அவரது கடனைத் தீர்க்க வேண்டியது இல்லை. அவரிடம் வாங்கிய கடன் ஆயிரம் ரூபாயை அவர் நகை வாங்கி பாக்கி செலுத்த வேண்டிய ஆயிரம் ரூபாயில் கழித்தால் கணக்கு சரியாகிவிடும். அதுதான் சரி" என்று எண்ணி மகிழ்ந்தான்.

தன் தந்தை இறந்துபோன தகவலை சிவானந்தத்தின் மூத்த மகன் எல்லாப் பிரமுகர்களுக்கும் சொல்லி அனுப்பினான். அவரது ஈமச் சடங்குகளில் கலந்து கொள்ள எல்லோரும் சென்றனர். பொன்னனும் சென்றான்.


அப்போது சிவானந்தரின் மூத்தமகன் 'என் தகப்பனார் எவ்வளவோ பேர்களுக்கு உதவி இருக்கிறார். சிலருக்குக் கடனும் கொடுத்திருக்கிறார். இதையெல்லாம் ஒரு சிறு கையேட்டில் குறித்து வைத்திருக்கிறார். அதில் அவர் எழுதிய உயில் பத்திரமும் இருந்தது. ஆனால் அது காணாமல் போனதால் தேடிக் கொண்டிருக்கிறேன்'' என்றான்.

சிவகிரி மணியகாரர் அவை எல்லாம் உன் தந்தையின் இரும்புப் பெட்டியிலுள்ள ஒரு இரகசிய அறையில் வைத்திருப்பதாக அவர் பலமுறை என்னிடம் கூறி இருக்கிறார். அதை நான் காட்டுகிறேன். ஆனால் இன்று கரி நாள். நாளை நல்ல நாள். நாளை அதைத் திறந்து எடுக்கலாம்' என்றார். எல்லோரும் அப்போது கலைந்து சென்றனர்.

பொன்னனுக்கு திகில் பிடித்து விட்டது. அந்த கையேடு கிடைத்து விட்டால் சிவானந்தரின் குடும்பத்திற்குக் கோடி ரூபாய்க்கு மேல் சேர்ந்துவிடுமே! இதை தடுக்க வேண்டும் என்று பொன்னன் மட்டுமல்ல, மேலும் நால்வரும் நினைத்தார்கள். அவர்களெல்லாம் சிவானந்தருக்கு லட்சம் ரூபாய்களுக்கும் மேலாகக் கடன் பாக்கி கொடுக்க வேண்டி இருந்தது. 

இந்த ஐந்து பேர்களும் அன்றிரவு கூடி ஒரு திருடனை சிவானந்தரின் வீட்டிற்கு அனுப்பினார்கள். அவன் அங்கு போய் சிவானந்தரின் மூத்த மகனைக் கத்தியைக் காட்டி மிரட்டி இரும்புப் பெட்டியைத் திறக்கச் சொன்னான். அதிலிருந்து இரகசிய அறையை அவன் கண்டுபிடித்து அதிலிருந்த கையேட்டை எடுத்துக் கொண்டுபோய் பொன்னனி டமும் மற்ற வியாபாரிகளிடமும் கொடுத்தான். 

அவர்கள் ஐவரும் அந்தக் கையேட்டைக் கொளுத்தி அழித்து விடத் தீர்மானித்தார்கள். அதற்கு முன் அதில் என்னதான் எழுதி இருக்கிறது என்று படிக்க விரும்பினார்கள். அதை படித்ததில் அதில் இவ்வாறு இருந்தது. 

"நான் ஏழைகளுக்குக் கடன் என்ற பெயரில் பண உதவி  செய்து வந்தேன். பணத்தை இனாமாகக் கொடுப்பதென்றால் அது தேவைப்படாதவர்கள் எல்லாம் வந்துவிடுவார்கள். எனவே கடன் கொடுத்து அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினேன். என் பணத்தாலும் அறிவுரைகளாலும் பலர் பயனடைந்தார்கள். அவர்கள் எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தால் அதை நல்ல காரியங்களுக்காகச் செலவு செய்வேன். அதிலிருந்து ஒரு பைசா கூட என் சொந்த செலவிற்கு எடுத்துக் கொள்ள மாட்டேன். அவர்கள் கடனைத் திருப்பிக் கொடுக்காவிட்டால் பேசாமல் இருந்துவிடுவேன். அவர்களிடம் எழுதி வாங்கிய கடன் பத்திரங்களை அவர்கள் என் வீட்டிலிருந்து போனதுமே கிழித்து எறிந்து வந்தேன். என் மூத்த மகனும் என்னைப்போல நடந்தால் என் ஆத்மா சாந்தி அடையும். '

இதைப் படித்து அவர்கள் திகைத்துப் போனார்கள். அக் குறிப்பேட்டில் யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என் பதே இருந்தது. அதில் கடைசி வரி பொன்னானுக்குக் கொடுக்க வேண்டியது ஆயிரம் ரூபாய் என்றிருந்தது. 

சிவானந்தர் எவ்வளவு புண்ணியவான் என்பது அவர்களுக்கு விளங்கியது. அவர்கள் அந்தக் குறிப்பேட்டை இரகசியமாய் மறு படியும் அந்த இரும்புப் பெட்டிக்குள் வைத்துவிட்டார்கள். தாம் கொடுக்க வேண்டிய கடன் பாக்கியை சிவானந்தரின் மூத்த மகனிடம் கொடுத்தார்கள். சிவானந்தரின் மூத்த மகனைப் போலவே பொன்னனும் செயல் பட்டு புதிய மனிதனானான்.

கதை ஆசிரியர்: கி. அருணா

அம்புலிமாமா



Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories





கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."