கவிஞர் கண் திறந்தது!
![]() |
| கவிஞர் கண் திறந்தது!-kavignar-kan-thirandhathu |
கவிஞர் கண் திறந்தது!
முன்னொரு காலத்தில் மகாநதிக் கரையில் மரகதவனம் என்ற சிறு ஊர் இருந்தது. அங்கு ஞானேஸ்வரர் என்ற பண்டிதர் இருந்தார். அவருக்குப் பண்டிதர்களிடையேயும் படித்தவர்களிடையேயும் நல்ல பெயர் இருந்தது. அவரது படைப்புக்கள் அவர்களது பாராட்டுகளைப் பெற்றன. அவரும் தம் படைப்புகளும் இதர இலக்கிய நூல்களும் படித்தவர்களால் மட்டுமே படிக்கப் பட்டு ரசிக்கத்தக்கது என்றும் பாமரர்கள் அவற்றைக் கேட்கக் கூட அரு கதையற்றவர்கள் எனவும் எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்.எனவே அவரது சொற்பொழிவுகளும், வாதவிவாதங்களும் ஒரு குறிப் பிட்ட படித்தவர்களின் வட்டத் திற்குள் தான் அடங்கி இருந்தது. பாமர மக்களுக்கும் அவருக்கும் தொடர்பே இருக்கவில்லை.
ஆனால் அவரது மகன் சித்தேஸ்வரன் அவருக்கு நேர்மாறான இயல்புடையவன். அவன் இலக்கியப் பாடல்களை வயல் வரப்புகளில் அமர்ந்து பாமரர்களுக்கும் விவசாயத் தொழிவாளிகளுக்கும் எடுத்துக் கூறி அவர்களை அவற்றைக் கேட்டு மகிழும்படிச் செய்து வந்தான். ஞானேஸ்வரர் தம் மகனின் இந்த செயலைக் கண்டித்து "இலக்கி யங்கள் மிகப் புனிதமானவை. அவை பற்றி கண்டவர்களுக்குக்கெல்லாம் எடுத்துக்கூறினால் அவற்றின் புனிதத் தன்மையே போய் விடும்” என்று கூறிப் பார்த்தார்.
ஆனால் சித்தேஸ்வரனோ தன் போக்கை மாற்றிக் கொள்ளவே இல்லை. அவனுக்கு பண்டிதர்களிடையேயும் பாமர மக்களிடையேயும் பேரறிஞர் என்ற மதிப்பு இருந்தது. சித்தேஸ்வரன் இளம் வயதானாதால் அவனுக்குத் தன் மகளை விவாகம் செய்து வைக்க அயலூர் பண்டிதர் பரமேஸ்வரபட்டர் முன் வந்தார். ஞானேஸ்வரரும் அப்பண்டிதரின் மகளான காதம்பரியிடம் பேசிப்பார்த்து அவள் இலக்கியங்களை நன்கு கற்றறிந்தவள் எனக் கண்டு கொண்டு அவளைத் தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார். அவளும் ஞானேஸ்வரரின் வீட்டிற்கு வந்து குடித்தனம் செய்யலானாள். அவளது நற்குணங்களையும், நல் அறிவையும் கண்டு அவ்வூராரும் அவளைப் புகழ்ந்தார்கள்.
ஒரு நாள் மாலைப் பொழுதில் ஞானேஸ்வரர் தம் வீட்டுக் கொல்லைப் புறத்திலுள்ள மாட்டுக் கொட்டிலின் பக்கம் சென்றார். அங்கே ஏதோ பேச்சுக் குரல் கேட்கவே அவர் ஒரு ஓரமாக நின்று அதைக் கேட்கலானார்.
மாட்டுக்கார மாதவன் ஒரு பசு மாட்டின் பாலைக் கறந்து கொண்டிருந்தான். அவனுக்குச் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த காதம்பரி தன் இனிய குரலில் லீலாசுகரின் கிருஷ்ண லீலா தரங்கிணியிலிருந்து ஒரு சுலோகத்தைக் கூறினாள்.
அதைக் கேட்ட மாதவன் “கேட்க மிக நன்றாக இருக்கிறதே. இதன் அர்த்தத்தைச் சொன்னால் நான் புரிந்து கொள்வேன்" என்றான். காதம்பரியும் ''சொல்கிறேன். கேட்டுக் கொள்" என்று கூறிச் சொல்லலானாள்.
இந்த சுலோகத்தை லீலாசுகர் என்ற மாபெரும் பண்டிதர் கிருஷ்ண லீலா தரங்கிணி என்ற காவியத்தில் எழுதியுள்ளார். அது சமஸ்கிருத மொழியில் சிறந்த படைப்புகளில் . ஒன்றாகும். இதில் கவிஞர் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகளை விவரித்தி ருக்கிறார். மாதவா! ஒரு நாள் மாலை கோகுலத்தில் யசோதை உன்னைப் போலவே பாலைக் கறந்து கொண்டிருந்தாள்.
அப்போது அந்த சின்னக் கிருஷ்ணர் என்ன செய்தார் தெரியுமா? அவர்தம் இரு கண்களையும் இறுக மூடிக் கொண்டு 'அம்மா! எனக்கு இப் போது எதுவும் தெரியவில்லை. இருட்டி விட்டது. அதனால் பாலைக் கொடு” என்று கேட்டாராம். இந்த மாதிரி ஸ்ரீ கிருஷ்ணரின் பல குறும்பு விளையாட்டுகளை லீலா சுகர் தம் படைப்பில் வர்ணித்து இருக்கிறார்.''
"இவ்வாறு காதம்பரி கூறியதும் மாதவன் கண்களை அகல விரித்து 'ஆஹா. எப்படியெல்லாம் கவிஞர் அழகாக மனதில் பதியும்படி எழுதி யுள்ளார்! நீங்கள் இப்படி விளக்கிக் கூறியது போல நம் ஊரிலுள்ள பண்டி தர்கள் எல்லோரும் என் போன்ற பாமரர்களுக்கு விளக்கிப் புரியும் படிக் கூறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்" என்றான்.
காதம்பரியும் "நீ சொல்வது சரி தான். அது எல்லோருக்கும் பொதுவானது. பண்டிதர்களும் சரி, பாமரர்களும் சரி, அவற்றைக் கேட்கவும், படிக்கவும், ரசிக்கவும் உரிமை பெற்ற வர்கள். ஆனால் நம் பண்டிதர்கள் இலக்கியங்களைப் பாமரர் வரை செல்ல விடாமல் தடுத்து விடுகிறார்கள். அவை பற்றி அவர்கள் தமக் குள்ளேயே பேசிக் கொள்கிறார்கள். இவற்றைப் பண்டிதர்களால் மட் டுமே புரிந்து கொண்டு வாதப் பிரதி வாதங்களைச் செய்வதால் பாமரர்களால் அவற்றில் கலந்து கொள்ள முடியாது போகிறது. இதைப் புரிந்து கொண்டு பண்டிதர்கள் நடந்து கொள்வதே நல்லது" என்றாள்.
அதைக் கேட்ட மாதவனும் "ஆமாம் அம்மா! நீங்கள் சொல்வது மிகவும் சரியே. உங்கள் மாமனார் பண்டிதர்கள் மத்தியில் பேசுவதை சில சமயங்களில் கேட்டிருக்கிறேன். அவர் சொன்னது எதுவுமே எனக்குப் புரிந்ததே இல்லை. அவர்கள் எல்லாம் நீங்கள் எனக்கு விளக்கியது போல என் போன்றவர்கள் புரிந்து கொள்ளும்படிக்கூறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்றான்.
இந்த உரையாடலைக் கேட்ட ஞானேஸ்வரின் மனம் பெரிய மாறு தலையே அடைந்தது. அவர் எதுவும் பேச இயலாமல் அங்கிருந்து உடனே சென்றார். மறுநாள் காலை மாதவன் பால் கறந்து கொண்டிருந்த போது ஞானேஸ்வரர் அவனருகே நின்று கொண்டு லீலாசுகரின் தரங்கிணியிலிருந்து வேறொரு சுலோகத்தைக் கூறி மாதவன் புரிந்து கொள்ளும் விதத்தில் அதன் பொருளைச் சொல்லிக் கொண்டு இருந்தார்.
இதையெல்லாம் பார்த்தும் கேட்டுக் கொண்டும் இருந்த காதம் பரியும், சித்தேஸ்வரனும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். வேதாளம் இக்கதையைக் கூறி “ஞானேஸ்வரர் இலக்கியங்கள் மிகப் புனிதமானவை என்றும் அவை பற்றிக் கண்டவர்களுக்கெல்லாம் விளக்கிக் கூறக் கூடாது எனச் சொல்லிக் கொண்டு இருந்தாரே. ஆனால் திடீரென மனமாற்றம் ஏன் அவரிடம் ஏற்பட்டு மாதவன் போன்ற வர்களுக்கு அவை பற்றி விளக்க லானார்? இக்கேள்விக்கு சரியான பதில் தெரிந்திருத்தும் நீ பதில் கூறா விட்டால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகிவிடும்' என்றது.
விக்கிரமனும் "ஞானேஸ்வரர் தாம் மெத்தப் படித்தவர் என்பதால் தமது வட்டாரத்தை மிகவும் குறுக்கிக் கொண்டிருந்தார். அவரைப் பற்றியும் அவரது படைப்புகளைப் பற்றியும் ஒரு சில பண்டிதர்களே புகழ்ந்தனர். அவர் பேசுவதும் பண்டிதர்களின் உயர் நடையிலேயே இருந்தது. ஆனால் காதம்பரி மாதவனுக்கு உயரிய இலக்கியத்தைக் கூறி புரியும் படி எளிய நடையில் கூறி அவனை மகிழவைத்தது. அவர் மனதை மாற்றி விட்டது. இலக்கியத்தை ரசிக்க ஒரு எல்லையை வரையறுக்கக் கூடாது என்பதை காதம்பரியின் செயலால் தெரிந்து கொண்டார். அதனால் மனம் மாறி அவரே மாதவனுக்குப் புரியும் விதத்தில் கிருஷ்ண லீலா தரங்கிணி சுலோகம் ஒன்றை விளக்கினார்" என்றான்.
விக்கிரமனின் சரியான இந்த பதிலால் அவனது மௌனம் கலையவே அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பிப் போய் மீண்டும் முருங்கமரத்தில் ஏறிக் கொண்டது.
அம்புலிமாமா






கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."