sirukathaigal

பெண் சக்தி

பெண் சக்தி-Woman power

பெண் சக்தி

கல்வியே, பெண்களை சுயமரியாதையுடன் உலகில் வாழ வைக்கும் என. திடமாக நம்பியவர், புகழ்பெற்ற மருத்துவர், ஒருவர். எனவே, தன் மகளை நன்கு படிக்க வைத்தார். கர்நாடக மாநிலம், ஹூப்ளியில் உள்ள, பி.வி.பூமரட்டி பொறியியல் கல்லுாரியில், மின் பொறியியல் துறையில், மாநிலத்திலேயேமுதலாவதாக தேறி, தங்கப்பதக்கத்தை வென்றார், மகள்.

மேற்படிப்புக்காக, பெங்களூருவில் உள்ள, இண்டியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் கல்லுாரியில் சேர்ந்து, கணினி துறையில், எம்.டெக்., முடித்தார். அதிலும், மாநிலத்திலேயே முதலிடத்தில் வந்து, தங்கப் பதக்கம் பெற்றார். படிப்பை முடிக்க இருந்த நிலையில், அன்றைய நாளிதழில், டாடா குழுமத்தின், 'டெல்கோ' - டாடா இன்ஜினியரிங் அண்ட் லோகோமோட்டிவ் கம்பெனி தந்த விளம்பரம் கண்ணில் பட்டது.

அந்நிறுவன காலி பணியிடங்களை குறிப்பிட்டு, இதற்காக விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும், கடைசி வரியில், பெண்கள் விண்ணப்பிக்க வேண்டாம்' என்றும் கூறப்பட்டிருந்தது. இளம் வயதிலிருந்தே சுயமரியாதை சிந்தனையுடன் வளர்க்கப்பட்ட அப்பெண்ணால், இதை ஏற்க முடியவில்லை. அந்நிறுவன பணிக்கான அனைத்து தகுதி, திறமை தனக்கு இருந்தபோதிலும், பெண் என்பதற்காக பணி மறுக்கப்படுகிறதே என்று வேதனைப்பட்டார்.

தன் வேதனையை, 'டாடா போன்ற பெரிய நிறுவனங்களே, இப்படி பாலினப் பாகுபாடு காட்டலாமா?' என்று, போஸ்ட் கார்டில் எழுதி, டாடா குழுமங்களின் தலைவரான, ஜே.ஆர்.டி.டாடாவிற்கு அனுப்பி வைத்தார். கடிதத்தைப் படித்ததும், பதறிப் போனார், டாடா உடனடியாக தன் நிறுவன அதிகாரிகளை அழைத்து, 'இந்தப் பணிக்கான தகுதி, இப்பெண்ணுக்கு இருந்தால், அவரை உடனடியாக பணியில் அமர்த்துங்கள்.

இனி, டாடா குழும நிறுவனங்கள் எவற்றிலும், பணிகளுக்கான நடைமுறையில், ஆண் - பெண் என, எந்த பாகுபாடும் காட்டப்படக் கூடாது...' என, ஆணையே பிறப்பித்தார். தன் துணிச்சலான செயல்பாட்டால், ஒரு பெரும் நிறுவனத்தின் விதியையே மாற்றி எழுதிய அந்தப் பெண் தான், பிற்காலத்தில் தான் உழைத்து சம்பாதித்து சேர்த்த பணத்தில், 10 ஆயிரம் ரூபாயை, தன் கணவரின் கனவுத் திட்டமான ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தார்.

அவரது அந்த, 10 ஆயிரம் ரூபாயை முதல் முதலீடாகக் கொண்டு உருபெற்று, இன்று பல லட்சக்கணக்கான கோடிகள் பெறுமான நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின் மட்டுமல்ல, சமுதாயம், குடும்பம் மற்றும் ஒரு நாட்டின் வெற்றிக்குப் பின், நிச்சயமாக ஒரு பெண் இருப்பாள் என்று நிரூபித்த பொறியாளர் தான், சுதா நாராயணமூர்த்தி; 'இன்போசிஸ்' நிறுவனத்தை துவங்கிய, என்.ஆர்.நாராயண மூர்த்தியின், மனைவி.

சுதா நாராயணமூர்த்தி தந்த, 10 ஆயிரம் ரூபாயை முதல் முதலீடாக கொண்டு உருவான நிறுவனம் தான், இன்போசிஸ். பெண்களால் முடியாதது என்று எதுவுமே இல்லை. நியூட்டனின் ஆற்றல் விதி கூட. ஆற்றலின் வடிவம் தான், பெண்; அதுவே சக்தி; சர்வம் சக்தி மயம். மகளிருக்கு என்று தனியாக எந்த நாளும் இல்லை. எல்லா நாளுமே மகளிர் தினம் தான்.


கதை ஆசிரியர்:எம்.அசோக்ராஜா  

வாரமலர் 


Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best storie

 

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."