sirukathaigal

அதிசய மலர்

அதிசய மலர்-Miracle flower
 

அதிசய மலர்

(அதிசய மலருடன் உத்தமன் கடலில் படகில் சென்றபோது நடுநிசியில் ராட்சஸ மிருகத்தைக் கண்டான். அவன் எங்காவது கரை இறங்க நினைக்கையில் ஒரு பெரிய அலை அடித்து அவனது படகைப் பாறைகளுக்கு மத்தியில் தள்ளியது. அவன் தூங்கிக் கொண்டிருக் கையில் சில மலைச் சாதிப் பெண்கள் அதிசய மலர்களை எல்லாம் எடுத்துக் கொண்டு தம் குடி இருப்பிற்குச் சென்றனர். உத்தமனும் அவர்கள் பின்னால் சென்றான். அப்போது -1)

அந்த மலைச் சாதியினரின் தலைவன் காயாம்பு உத்தமனிடம் "சாங்காய்ப் பகுதியிலிருந்து வெகு தூரம் பயணம் செய்து இங்கு நீ வந்த காரணம் என்னவோ?”என்று கேட்டான்.

உத்தமனும் தனக்கு விரிக்கப்பட்ட பாயின்மீது அமர்ந்தவாறே "நான் மாணிக்கபுரியின் தென் கரையிலிருந்து நேற்று மாலைப் படகில் புறப்பட்டேன்.
காலையில் ஒரு அலை என்னை ஓரிடத்தில் தள்ளியது. இதுதான் நான் இங்கு வந்த விதம்" என்றான். இச்சமயம் ஒரு நடு வயது பெண் மணி இரு பாத்திரங்களில் அவர்கள் குடிக்க பானத்தை வைத்து விட்டுப் போனாள்.

காயாம்பு அவற்றில் ஒன்றை எடுத்துக் குடித்தவாறே "நீயும் குடி. இது எங்கள் வீட்டில் தயாரித்த சிறப்புப் பானம்' என்றான். உத்தமனும் "நான் இங்கே வந்த போதே குடித்தேன்" என்றான். காயாம்புவும் "இங்கே குடித்தாயா? யார் கொடுத்தார்கள்?' என்று கேட்டான்.

உத்தமனும் "நான் அலையால் கரையில் ஒதுக்கப்பட்டபோது அயர்ந்து தூங்கிவிட்டேன். அப்போது சில பெண்கள் நான் படகில் ஏற்றி வந்த அதிசய மலர்களை எல்லாம் எடுத்துக் கொள்ளவே, அவர்களை அவற்றைத் திருப்பிக் கொடுக்கும்படிக் கேட்ட போது அவர்களோ கொடுக்க முடியாது என இங்கே வரவே நானும் அவர்களைத் தொடர்ந்து இங்கு வந்துவிட்டேன்" என்றான்.

இதற்குள் முன்பு பானம் கொண்டு வந்து வைத்த பெண்மணி கையில் ஒரு கட்டு அதிசய மலர்களை எடுத்து வந்து காயாம்புவிடம் காட்டி "இதை நம் மகள் கொண்டு வந்திருக்கிறாள். பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது.?" என்றாள்.

காயாம்புவும் "அழகோடு நறு மண்மும் வீசுகிறது. ஆனால் இவை இந்த இளைஞனுடையதே இதை ஏன் எடுத்து வந்தாள்? ஒருவர் பொருளை அவரது அனுமதி இல்லாமல் எடுத்துக் கொள்வது சரியா?" என்று கேட்டான்.

இதற்கு அந்தப் பெண்மணி எவ்வித பதிலும் கூறாமல் வீட்டினுள் சென்றுவிட்டாள். அவர்கள் பேசிய மொழி உத்தமனுக்குப் புரியவில்லையாயினும் அது என்னவாக இருக்கும் என்பதை அவன் ஊகித்துவிட்டான்.

உத்தமன் "இவற்றை அதிசய மலர்கள் என நாங்கள் கூறி வருகிறோம்.  இவை நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் மலரும். இவற்றை நான் ஒரு முக்கியமான வேலையை ஏற்றுக் கொண்டு எடுத்துப் போய்க் கொண்டிருக்கிறேன்." என்றான்.

காயாம்புவும் ''ஓ அப்படியா! நீ இப்போது நாகபுரம் என்ற நாட்டில் இருக்கிறாய். இது உன் மாணிக்க புரயின் அருகே உள்ள நாடே. இங்கிருந்து நீ எங்கே போக வேண்டும்? இந்த மலர்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறாயே. அதற்குள் அவை வாடி விடாதா? என்று கேட்டான்.

உத்தமனும் தன்னிடமிருந்து விஷயத்தைக் கறக்க காயாம்பு இக் கேள்விகளை கேட்கிறான் என்று புரிந்து கொண்டுவிட்டான். அதனால் அதை மறைக்காமல் விளக்கமாகத் தன் பயணத்தைப் பற்றிக் கூறினான்.

 

அதைக் கேட்ட காயாம்பு "ராட்சஸ மிருகத்தை நடுக்கடலில் சந்திக்க நீ மேற் கொண்டுள்ள முயற்சியை நான் பாராட்டுகிறேன். நீ உன் நாட்டை ஆபத்திலிருந்து காக்கத் துணிச்சலுடன் செயல்பட்டு வருகிறாய். உன் மாதிரி இளைஞர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் தேவை அந்த ராட்சஸ மிருகத்தால் எங்கள் நாட்டிற்கு எவ்வித ஆபத்தும் நேர்ந்து விடாது. ஏனெனில் எங்கள் நாட்டைச் சுற்றி உயர்ந்த மலைகள் உள்ளன. அவை எதிரிகளிடமிருந்து எங்களை காக்கின்றன. அதனால் நாங்கள் கவலை இல்லாமல் சுகமாய் வாழ்கிறோம்'' என்றான்.

உத்தமனும் "நீங்கள் கூறுவது சரியே. நீங்கள் கடலிலிருந்து தள்ளி வெகு தொலைவில் மலைகளுக்கு மத்தியில் இருக்கிறீர்கள். எங்கள் நாடோ நீண்ட கடற்கரையைக் கொண்டது. அதனால்தான் அந்த ராட்சஸ மிருகம் கடற்கரை ஓரமாய் கடும் சேதத்தை விளை வித்து வருகிறது. எனவே அதனை அடக்க இந்த மலர்களின் உத வியை நாடுவதைத் தவிர வேறு வழியே இல்லை" என்றான்.
காயாம்புவும் "இந்த மலர்கள் நூறாண்டிற்கு ஒருமுறை தான் பூத்துத் தொங்குவதாகக் கூறினாயே. அதனால் ராட்சஸ மிருகம் இனி இம்மலர்களுக்காக வராமலேயே இருந்துவிடலாம் அல்லவா?" என்று கூறினான். 

உத்தமனும் 'ஆம்! இம் மலர்கள் மலராவிட்டால் ராட்சஸ மிருகம் வராமல் இருந்துவிடலாம். ஆனால் அதை எங்கள் நாட்டின் அருகே இருக்க விடாமல் வெகுதூரத்திற்கு விரட்டிவிடுவதே என் நோக்கம்' என்றான்.

காயாம்புவும் "உன் நோக்கம் உயர்ந்ததே. அந்த மிருகம் உன் நாட்டிற்குள் வராமலே இருக்க வேறு ஏதாவது வழி உள்ளதா என்று யோசித்தாயா? இதுபற்றி எங்கள் நாட்டு மன்னருடன் பேசி யோசித்தால் ஒருவழி காணலாம். என நான் எண்ணுகிறேன். நாம் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பிப் போய் மன்னர் மகேந்திர சிம்மரைக் காணலாம் என்று கூறி உட்புறக் கதவைத் தட்டினான். முன்பு வந்த பெண்மணி வரவே அவளிடம் ஏதோ கூறினான்.

 

அவள் சற்று நேரத்தில் இருவரும் சாப்பிட உணவு கொண்டு வந்தாள். அவளோடு இளம் பெண் ஒருத்தியும் வந்தாள். இவர்கள் உணவுப் பாத்திரங்களை வைத்து விட்டு உள்ளே போகும்போது காயாம்பு "சித்ரா! இங்கே வா" என்று அழைத்தான். அந்த இளம் பெண்ணும் அவனருகே வந்து நின்றாள்.

அவன் உத்தமனிடம் "இவள் தான் என் மகள் சித்ரா" என்று அறிமுகப்படுத்திவிட்டு அவளி டம் "உன் மற்ற தோழிகள் எங்கே? என்று கேட்டாள். அவளும் கதவின் பக்கம் போய் சைகை செய் யவே உள்ளே இருந்து ஐந்து பெண்கள் வந்து நின்றார்கள்.

காயாம்பு உத்தமனிடம் "இவர்களெல்லாம் சித்ராவின் சினேகிதிகள்" என்று சொல்லி அவர்களி டம் "ஆமாம்! இந்த மலர்களை எல்லாம் நீங்கள் ஏன் எடுத்து வந்தீர்கள்?" என்று கேட்டான்.

அவர்கள் தயங்கியவாறே "இவை அழகாயும் மணம் உள்ளனவாயும் இருக்கவே நாங்கள் இவற்றை எடுத்து வந்தோம்" என்றார்கள். காயாம்புவும் "சரி, சரி, நீங்கள் போகலாம்" எனவே அவர்கள் உள்ளே போய்விட்டார் கள்.

சாப்பிட்டு முடிந்ததும் காயாம்பு உத்தமனை அழைத்துக் கொண்டு கிளம்பினான். அவர்களை வழி அனுப்ப வாசல் வரை காயாம்புவின் மனைவியும் மகளும் வந்தார்கள். அந்தக் குடியிருப்பைத் தாண்டியதும் காயாம்பு தான் எடுத்து வந்த அதிசய மலர்க் கட்டை உத்தமனிடம் கொடுத்து "இதை நீயே எடுத்து வா” என்றான். உத்தமனும் அதனை வாங்கிக் கொண்டு அவன் பின்னால் நடந்து சென்றான்.

 

அவர்கள் நடந்தவாறே பல மேடுபள்ளங்களைக் கடந்து சென்றனர். கடைசியில் ஒரு குன்றருகே உள்ள நாகபுரத்தை அவர்கள் அடைந்தார்கள். தலை நகர வீதிகளில் அவர்கள் செல்கையில் அந்ந நகரவாசிகள் காயாம்புவை பயபக்தியுடன் வணங்கினார்கள். ஓரமாக ஒதுங்கி வழி விட்டார்கள். கட்டுமஸ்தான உடலும் கம்பீரமான தோற்றமும் கொண்டு தலையில் சிறிய நாகப் பாம்பு வடிவிலான கிரீடத்தை அணிந்து காயாம்பு கையில் ஈட்டியுடன் நடந்து சென்றபோது அவன் எதிரே வந்தவர்கள் எல்லாம் நடுநடுங்கி வழிவிடுவதை உத்தமன் கண்டான்.

அவர்கள் அரண்மனை வாசலை அடைந்தபோது அங்கு நின்ற காவலாளிகள் காயம்புவைப் பணிவுடன் வணங்கி உள்ளே செல்ல வழிவிட்டார்கள். ஒரு வீரன் வழி காட்டி அவர்கள் இரு வரையும் உள்ளே அழைத்துச் சென்றான். இருபுறமும் உயர்ந்த தூண்களருகே நின்ற காவல் வீரர்கள் காயாம்புவைக் கண்டதும் பணிவுடன் வணங்கினார்கள்.

அவர்களை அழைத்துச் சென்ற வீரன் அவர்களை ஓரிடத்தில் நிற்கவைத்து விட்டு அவன் மட்டும் முன்னதாக மன்னன் இருக்கும் இடத்திற்குப் போய் காயாம்பு வந்திருப்பதைக் கூறினான். மன்னனும் அவனை அழைத்து வரும் படிக் கூறவே அந்த வீரன் வந்து அவர்கள் இருவரையும் மன்னனிடம் அழைத்துச் சென்றான்.

மன்னன் உயரிய அரியாசனத்தில் அமர்ந்து தன் அமைச்சர்களுடன் ஏதோ ஆலோசனை புரிந்து கொண்டிருந்தான். காயாம்பு மன்னனைக் கண்டதும் இருகைகளையும் கூப்பி வணங்கினான். மன்னனும் "காயாம்பு வா. வா. வா. எப்படி இருக்கிறாய்? உன் கூட்டத்தவர் நலந்தானே?" என்று பரிவுடன் விசாரித்தான்.


காயாம்புவும் "தங்கள் தயவால் யாவரும் நலமே. இந்த வாலிபன் மாணிக்கபுரியிலிருந்து வந்திருக்கிறான். உத்தமன் என்பது இவன் பெயர்" என்றான். மன்னனும் "அப்படியா! உத்தமா உங்கள் நாட்டு மன்னர் பிரதாப வர்மர் எப்படி இருக்கிறாய்?' என்று கேட்டான்.

உத்தமனும் மன்னனை வணங் கியவாறே 'நலமாகவே இருக்கி றார் அரசே' என்றான். மன்னனும் அவர்கள் இருவரையும் ஆசனங்களில் அமரச் சொன்னான். அப்போது காயாம்பு "உத்தமன் வந்ததே ஒரு பெருங்கதைதான்.' எனக் கூறி அவன் வைத்திருந்த மலரை வாங்கி மன்னன் முன் வைத்தான்.

மன்னனும் "நீங்கள் இருவரும் வரும்போதே நறுமணம் வீசு வதை உணர்ந்தேன். அது இம்மலரிலிருந்துதானா?'' என்று கேட்டான். காயாம்புவும் "ஆம். அரசே. சிங்காய் மலையிலிருந்து இவற்றை உத்தமன் கொண்டு வந்திருக்கிறான். இது நூறு வருடத்திற்கு ஒரு முறை மலரும் அதிசய மலர். இதால் மாணிக்கபுரிக்கே ஆபத்து வந்திருக்கிறது" எனக் கூறி ராட்சஸ மிருகம் பற்றியும் அதைத் தேடிகொண்டு உத்தமன் வந்துள்ளதையும் விவரமாகக் கூறினான்.

மன்னனும் "சபாஷ்! தன் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய முன் வந்துள்ள உத்தமனைப் பாராட்டுகிறேன். அவன் அந்த மிருகத்தை அடக்கத் தனியாகப் போகக் கூடாது. நம் வீரர்களில் சிலரை இவனுடன் அனுப்புகிறேன்" என்றான்.

இச்சமயத்தில் பதினைந்து வயதுள்ள இளம் மங்கை ஒருத்தி ஓடி வந்து “அப்பா! இந்த மலர் ஏது? மிக அழகாக இருக்கிறதே. எனக்குத் தானே இது" என்று கேட்டாள். மன்னனும் 'இதை இந்த இளைஞன் மாணிக்க புரியிலிருந்து கொண்டு வந்திருக்கிறான்" என்றான். உத்தமனும் "இளவரசியே! இதை தாங்கள் எடுத் துக் கொள்ளலாம்" என்றான்.

இளவரசி மல்லிகாவும் “அப்பா! இதை நான் எடுத்துக் கொண்டு போகிறேன்" எனக் கூறி அம் மலர்களை எடுத்துக் கொண்டு போய்விட்டாள். அவள் போன பின் மன்னன் "இந்த மலருக் குள்ள சாபம் பற்றி யாரும் மல்லி காவிடம் கூறிவிட வேண்டாம்'' என்று கூறிச் சற்று யோசித்தான்.

அவன் காயாம்புவிடம் "நீங் கள் இருவரும் இன்றிரவு இங்கே தங்கி இளைப்பாறுங்கள் நாளை நாம் இனி என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றான். 

ஒரு அமைச்சர் அவர்களை ஓரு வசதியான பெரிய அறைக்குக் கொண்டுபோய்விட்டு இங்கு இளைப்பாறுங்கள். உங்களுக்கு வேண்டியதைச் செய்யப் பணி யாட்கள் தயாராக இருக்கிறார்கள்” என்று கூறிவிட்டுச் சென்றார்.

அமைச்சர் போன சற்று நேரத் திற்கெல்லாம் ஒரு வீரன் வந்து "அதிசய மலர் கொண்டு வந்த வரை இளவசரியார் அழைத்து வரச் சொன்னார்” என்றான். உத்தமன் ஆச்சரியப்பட்டவனாய் காயாம்புவைப் பார்க்கவே அவனும் "நீ போய் வா. ஆனால் மன்னர் சொன்னதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்” என்று எச்சரித்து அனுப்பினான்.     
 (தொடரும்)
அம்புலிமாமா





Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories


கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."