sirukathaigal

ஆசைக்கு ஏது எல்லை

ஆசைக்கு ஏது எல்லை-What is the limit to desire?

ஆசைக்கு ஏது எல்லை

மீஞ்சூரில் குப்புசாமி என்ற கூலி வேலை செய்பவன் இருந்தான். அவனுக்குப் போதிய வருமானம் கிடைக்காததால் அவனது குடும்பம் பல நாட்கள் பட்டினி கூடக் கிடந்தது. குப்புசாமியின் ஒரே மகன் மாணிக்கம். அவன் தன் தந்தைபடும் பாட்டைக் கண்டு மனதில் தான் பெரியவனானால் லட்சலட்சமாகச் சம்பாதித்து சுகமாக வாழவேண்டும் என்று தினமும் எண்ணி வரலானான்.

அவன் தாயும் இரண்டாண்டுகளுக்குப் பிறகு குப்புசாமியும் இறந்து போனான். அப்போது அவ்வூர் மணியகாரர் அவனை அழைத்து "மாணிக்கம்! நீ கஷ்டப் படக் கூடாது என நினைத்து உன்தந்தை என்னிடம் நூறு ரூபாய் கொடுத்து வைத்து அதை அவர் இறந்த பின் உனக்குக் கொடுக்கச் சொல்லி இறந்தார். நீ அதை வைத்து என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டார். 

அப்போது அவன் நீண்ட நாளாகத் தன் மனதில் உள்ள லட்சாதி பதியாகும் ஆசையை அவரிடம் கூறினான். அதைக் கேட்டு மணியகாரர் சிரித்து “அது கிடக்கட்டும். முதலில் நீ இந்த நூறு ரூபாயைக் கொண்டு ஆயிரம் ரூபாய் சம் பாதித்து வா, பார்க்கலாம்' எனக்கூறிப் பணத்தை அவனிடம் கொடுத்தார். 

மாணிக்கம் அந்த நூறு ரூபாயைக் கொண்டு கோழி வியாபாரம் செய்யலானான். சில மாதங்களில் அவனது கோழிகள் முட்டைகள் இட்டன. அவற்றை விற் றதில் லாபமே கிடைத்தது. ஆனால் கொஞ்ச காலத்திற்குப் பின் அவனது கோழிகள் ஏனோ இறந்து போயின. கணக்குப் பார்த்ததில் அவன் கையில் மிஞ்சியது இருநூறு ரூபாய்களே.

கோழி வியாபாரத்தில் லாபம் இல்லை என்று மாணிக்கம் ஆட்டு வியாபாரம் செய்து பார்த்தான். அதில் சில ஆடுகள் திருடு போயின வேறு சிலவற்றை காட்டி லுள்ள ஓநாய்கள் வந்து கொன்று தின்றன. அதனால் அந்த வியாபாரத்தை விட்டு பூ வியாபாரத்தில் இறங்கினான். அதில் வாங்கின பூக்கள் எல்லாம் விலைபோக வில்லை. விலை போகாதவை வாடிப் போயின. அதில் நஷ்டமே ஏற்பட்டது. அடுத்து பொரி வியாபாரம் செய்து பார்த்தான்.ஒரு நாள் சந்தையில் கடை போட்டபோது மழை பெய்து பொரி நனைந்து நஷ்டமாகியது. 

இனி வியபாரத்திற்கே முழுக்குப் போட்டுவது என்று எண்ணி அவன் வீடு திரும்பலானான். வழியில் ஒரு சிறுவன் அழுது கொண்டிருக்கவே அவன் அச்சிறுவனைத் தேற்றி அவன் வழிதவறி விட்டான் என அறிந்தான். சிறுவனிடம் ஊர் பேர்கேட்டு ஒருரூபாய் செலவு செய்து அவனது தந்தை இருந்த ஊருக்குப் போய் அவனை அவனது வீட்டில் சேர்த்தான். அவர்களோ ஏழை. மாணிக்கத்திற்கு நன்றிதான் அவர்களால்கூற முடிந்ததேயொழியப் பரிசாகப் பணமோ பண்டமோ கொடுக்க முடியவில்லை.

தன் அதிர்ஷ்டம் இவ்வளவு தானா என்று நொந்து கொண்டே அவன் தன் ஊருக்குத் திரும்பிச் செல்லலானான். அப்போது ஒரு சிறு மூட்டை வழியில் காலில் இடறியது. அதை எடுத்துப் பார்த்தான். அதில் நூறு ரூபாய் இருந்தது. யாராவது இருக்கிறார்களா என்று சுற்றிலும் பார்த்தான். யாரும் தன் பை காணவில்லை என்று தேடிக் கொண்டு வரவும் இல்லை. மாணிக்கம் அங்கிருந்து கிளம்பி வழியில் ஒரு கிராமத்தை அடைந்தான்.

அங்கு ஓரிடத்தில் ஒரு கூட்டம் நின்றது. அதன் நடுவே ஒரு பெண் நின்று அழுது கொண்டிருந்தரள். மாணிக்கம் என்ன என்று விசாரித்தபோது அந்தப் பெண்ணின் கணவனைப் பாம்பு கடித்து விட்டது என்பது தெரிந்தது. விஷத்தை உடலிலிருந்து எடுக்க வைத்தியன் நூறு ரூபாய் கேட்டான். அவ்வளவு பணம் அந்தப் பெண்ணிடம் இல்லை. மாணிக்கம் உடனே தனக்கு வழியில் கிடைத்த பணமூட் டையை அந்தப் பெண்ணிடம் கொடுத்து இதில் நூறு ரூபாய் இருக்கிறது. வைத்தியனுக்குக் கொடுத்து உன் கணவனைக் காப் பாற்றிக் கொள்' என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றான்.

அங்கிருந்து அவன் ஒரு காட்டு வழியே செல்லலானான். அப்போது ரத்தினம் என்பவனும் அவனோடு சேர்ந்து வழி நடந்தான். இருவரும் பேசிக்கொண்டே போகையில் அவர்களை நான்கு திருடர்கள் வழிமறித்தார்கள். ரத்தினத்திடம் கொஞ்சம் தங்கம் இருந்தது. ஆனால் முதலில் திருடர்கள் மாணிக்கத்தைச் சோதனை போட்டு அவனிடம் எதுவும் இல்லை என்று கண்டு கொண்டார்கள். அவர்கள் ரத்தினத்தை அணுகுவதற்குள் ரத்தினம் தன்னிடமிருந்த தங்கம் இருந்த பையைத் திருடர்களுக்குத் தெரியாமல் மாணிக்கத்தின் பைக்குள் போட்டுவிட்டான்.

திருடர்கள் ரத்தினத்தை சோதனை போட்டார்கள். அவர்களுக்கு எதுவும் கிடைக்காததால் இருவரையும் வாய்க்கு வந்தபடி திட்டி அவர்களைப் போக விட் டார்கள். இருவரும் சற்று தூரம் போனபின் ரத்தினம் மாணிக்கத்தின் பையை வாங்கி அதிலிருந்து தன்பையை எடுத்தான். அவன் மாணிக்கத்திடம் 'இன்று உன்னால் தான் இந்தத் தங்கம் திருடர்களுக்குக் கிடைக்காமல் தப்பியது. நீ இப்போது என் னோடு என் வீட்டிற்கு வந்து விட் டுத் தான் போக வேண்டும்' என்று வற்புறுத்தினான். மாணிக்கமோ பணிவுடன் மறுக்கவே ரத்தினம் அப்பையிலிருந்து கொஞ்சம் தங்கத்தை எடுத்து மாணிக்கத்திடம் கொடுத்து விட்டுத் தன் ஊருக்குப் போனான். மாணிக்கமும் தன் வழியில் சென் றான். 

சற்று தூரம் போனபோது அவன் ஒரு மனிதன் ஒரு மரத்தில் சுருக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயல்வதைக் கண்டான். அவன் அங்கு ஓடிப் போய் "இதென்ன வேலை! அப்படித் தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்றால் அதை உன் வீட்டில் செய்து கொண் டிருக்கலாமே. இப்படி நடுப் பாதையில் எல்லோரும் பார்க்கும் படியா செய்வது?" என்று சற்று கோபித்துக் கொண்டு கேட்டான்.

அவனும் "என் பெயர் சந்திரன். என் பெண்ணிற்கு கல்யாணம் நிச்சயமாகியது. நான் என் பெண்ணிற்கு தங்க அட்டிகை போடுவதாகக்கூறி இருந்தேன். ஆனால் அதைச் செய்து போட என்னிடம் பணம் இல்லை. அட்டிகை போடாமலிருந்தால் அவமானம். எனவே தற்கொலை செய்து கொள்ள முடிவு செய் தேன்" என்றான்.

அப்போது மாணிக்கம் 'ஒன்றைச் செய்ய முடியாதபோது அதைச் செய்வதாகக் கூறுவது மகாத் தப்பு. இதோ பார்! என் னிடம் கொஞ்சம் தங்கம் உள்ளது. இதை எடுத்துப் போய் விற்று உன் மகளுக்கு தங்க அட்டிகை வாங்கி போடு' என்று கூறி தான் ரத்தினத்திடமிருந்து பெற்ற தங்கத்தை அவனிடம் கொடுத்தான்..

சந்திரனும் மகிழ்ந்துபோய் மாணிக்கத்திற்கு நன்றி செலுத்தி "நீ என்னைவிட வயதில் சிறியவன். என்னை முன்பின் அறிந்தவனும் அல்ல. ஆனால் சமயத்தில் வந்து நீ எனக்கு உதவி இருக்கிறாய். என்னோடு வந்து என் மகளை ஆசீர்வாதம் செய்" என் றான். 

மாணிக்கமும் சந்திரனோடு அவன் வீட்டிற்குச் சென்றான். அப்போது ஒரு பெரியவர் மாணிக் கத்தைக் கண்டு "நீ மீஞ்சூர் குப்புசாமியின் மகன்தானே. உன் தகப்பனார் ஒருமுறை என் உயிரைக் காப்பாற்றினார். திருடர்கள் என்னை அடித்துப் போட்டு விட்டார்கள். உன் தகப்பனார் என்னைத் தூக்கி கொண்டுபோய் வீட்டில் படுக்கவைத்தார். இப் போது அவர் எப்படி இருக்கிறார்?" என்று கேட்டார். 

மாணிக்கம் தன் தகப்பனார் இறந்துவிட்டார் என்று கூறவே அந்தப் பெரியவர் மிகவும் வருந்தினார். அவர் மாணிக்கத்தை தன் வீட்டிற்கு அழைத்துப் போய்ப் புத்தாடைகளைக் கொடுத்து ஆயிரம் ரூபாய்களையும் கொடுத்தார்.மாணிக்கம் அந்தப் பணத்தோடு தன் ஊரை அடைந்து மணியகாரரிடம் அந்தப் பணத்தைக் காட்டினான். அவரும் அவனுக்கு அந்தப் பணம் கிடைத்தது எப்படி என்று கேட்டுத் தெரிந்து கொண் டார்.

அப்போது அவர் சிரித்துக் கொண்டே "நீ இந்த ஆயிரம் ரூபாயை உன் சொந்த முயற்சி யால் சம்பாதிக்கவில்லை. யாரோ ஒருவர் உன் நற்குணத்திற்காகக் கொடுத்தது. ஆனால் நீ செய்த வியாபார முயற்சிகள் எல்லாம் பயனில்லாமல் போயினவே. அதனால் உன் சாமர்த்தியம் எவ் வளவு என்பதைப் புரிந்து கொண் டாயா?" என்று கேட்டார்.

மாணிக்கமும் சற்று யோசித்து ஆமாம். நான் லட்ச லட்சமாகச் சம்பாதிப்பேன் என்று மனக் கோட்டை கட்டினேன். அது என்னால் முடியாது என்று இப்போது தான் தெரிகிறது” என்று அவரை வணங்கியவாறே கூறினான்.மணியகாரர் அவனைத் தட்டிக் கொடுத்து “இதோ பார். லட்ச லட்சமாக சம்பாதிப்பது தான் செல்வம் என்பது அல்ல.  

எனெனில் பணம் சம்பாதிக்கும் ஆசைக்கு ஒரு எல்லையே இல்லை. நீ இந்தப் பணத்தை வைத்துக் கொள். ஆனால் என்னோடு விவசாய வேலைகளைச் செய். நல்ல சம்பளம் கொடுக்கிறேன். ஆனால் பணத்தை மட்டும் வீணாகச் செலவு செய்யாதே. அப்போது உன்னிடம் பணம் சேரும். இவ் விதமாய் கிடைப்பதே உண்மையான செல்வம்' என்றார்.

மாணிக்கம் அவரது அறிவுரையை ஏற்று எல்லா விவசாய வேலைகளையும் மணியகாரரின் வயல்களில் வேலை செய்து நல்லவன், திறமை மிக்கவன், நம்பக மானவன் என்று பெயர் பெற்றான். பிறகு அவன் திருமணம் செய்து கொண்டு நல்லவிதமாய்க் குடும்பம் நடத்தி வந்தான்.

கதை ஆசிரியர்:-பாபநாசம் சாமா

அம்புலிமாமா



Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories


கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."