குள்ளன் கல்யாணம்
![]() |
குள்ளன் கல்யாணம்-Dwarf wedding |
குள்ளன் கல்யாணம்
குள்ளக் குன்றம் என்ற ஊரில் சொக்கன் என்ற சித்திரக் குள்ளன் இருந்தான். அவன் மிகவும் குள்ள மாயும் அவலட்சணமாயும் இருந்தான். ஆனால் யானைகளை அடக்கிப் பழக்குவதில் அவன் திறமைமிக்கவன். அதனால் அந் நாட்டு மன்னனுக்கு யானைகள் வியாபாரத்தில் மிகவும் உதவியாக இருந்தான்.
மன்னன் அவனது திறமையை ஒருமுறை நேரில் கண்டு மகிழ்ந்து போய் "என் நாட்டின் ஒரு கிராமத்தில் பிறந்த உன்னைப் பற்றிப் பெருமிதம் அடைகிறேன். நீ என் தர்பாரில் இருக்கத் தகுதி பெற்றவன். எனவே என் அரண்மனையில் யானைகளின் கட்டுத்தறியின் முதல் அதிகாரியாக உன்னை நியமிக்கிறேன்." என்றான். சொக்கனும் அப்பதவியை ஏற்றுக் கொண்டான்.
சொக்கன் எல்லா வசதிகளையும் பெற்றான். அவனுக்கு எவ்விதக் குறைவும் இல்லை. அவன் கீழ் வேலை செய்யப் பல அதிகாரிகளும் பணியாட்களும் இருந்தனர். இவ்வளவு இருந்தும் அவன் தன் உருவம் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான்.
மன்னன் இதை கவனித்து "நீ கவலைப்படுவதைப் பார்த்தால் உன் வாழ்க்கையில் துணையாக இருக்க உனக்கு மனைவி தேவைப்படுகிறாள் என்றே நினைக்கிறேன். எனவே விரைவில் நீ கல்யாணம் செய்து கொள்வதே சரியானது" என்றான்.
சொக்கன் சிரித்தவாறே “அரசே! தங்கள் தயவால் எனக்கு நல்ல உத்தியோகம் கிடைத்திருக்கிறது. ஆனால் எனக்குக் கல்யாணம் நடக்குமா என்பது சந்தேகமே" என்றான். மன்னனும் "ஏன் நடக்காது? நானே உனக்குக் கல்யாணம் செய்து வைக்கிறேன்" என்றான். சொக்கன் பணிவுடன் மன்னனை வணங்கினானேயொழிய அவன் கூறியதற்குப் பதில் எதுவும் கூறவில்லை.
மன்னன் சொக்கனின் கல்யாணம் பற்றி யோசிக்கலானான். அவனைப் பார்க்கும் எந்தப் பெண்ணும் அவனை மணக்க இசைய மாட்டாள். அப்படி எந்தப் பெண்ணாவது அவனை மணந்து கொண்டால் அது அவள் செய்யும் பெரும் தியாகமே. மன்னன் யோசித்து "சொக்கனுக்குத் தன் மகளை விவாகம் செய்து வைக்கும் தந்தைக்கு அந்நாட்டில் அவன் விரும்பும் இடத்தில் விளை நிலமும், வீடும், அவன் கேட்கும் பணமும் கொடுக்கிறேன்" என்று பறைசாற்றுவித்தான்.
மன்னன் அவர்களை ஒவ் வொருவராகத் தனியாகக் கண்டான். முதலாவது பெண்ணிடம் "நீ பயப்படாமல் கூறு. ஏன் இந்தத் திருமணத்திற்கு இசைகிறாய்? என்று கேட்டான். அவளும்“என் மாற்றாந்தாயின் கொடுமை தாங்காமல் அவளிட மிருந்து விடுபடவே இதற்குச் சம்மதிக்கிறேன்" என்றாள். மன் னன் அப்போது "உனக்கு இந்தக் குள்ளன் அல்லாது வேறு ஒருவனைக் கல்யாணம் செய்து வைக்கிறேன். உனக்கு அது சம்மதமா? என்ன சொல்கிறாய்?" எனவே அவளும் "நீங்கள் என்ன சொன்னாலும் அதன்படியே நடப்பேன்" என்றாள்.
இரண்டாவது பெண்னை அழைத்து மன்னன் கேட்கவே 'என் தந்தைக்கு ஐந்து பெண்கள். நான் மூத்தவள். எனக்கு இந்தக் கல்யாணம் நடந்தால் இதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு என் தந்தை என் மற்ற சகோதரி களின் விவாகங்களை நடத்தி விடுவார். அதனால் அவர் பொறுப் பும் தீர்ந்துவிடும்" என்றாள்.
மூன்றாவது பெண் குள்ளமானவளே. அவளிடம் மன்னன் "நீ இந்தக் குள்ளனை மணப்பதை விட உனக்கு வேறு அழகான வாலிபனைக் கல்யாணம் செய்து வைக்கிறேன். சம்மதமா?" என்று கேட்டான். அவளோ மன்னனை வணங்கி 'அரசே! உங்களால் எனக்கு அழகான இளைஞனை கல்யாணம் செய்து வைக்க முடியும். ஆனால் என் மனம் ஒப்ப வேண்டுமே. நான் சொக்கனை மனதார விரும்புகிறேன் எனவே அவர் மனம் அறிந்து அதன்படி நடப்பேன்" என்றாள்.
குள்ளனோ அந்தக் குள்ளப் பெண்ணையே மணப்பதாகக் கூறினான். மன்னன் அவர்களுக்கு விவாகம் செய்து வைத்ததோடு மற்ற இரு பெண்களுக்கும் நல்ல இளைஞர்களாகத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் விமரிசையாக விவாகத்தை நடத்தி வைத்தான்.
கதை ஆசிரியர்: ரேணுகா ரவி
அம்புலிமாமா
கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."