sirukathaigal

வீர ஹனுமான்

 வீர  ஹனுமான்-Veera Hanuman
 

வீர  ஹனுமான்

இராமருடன் வந்தவர்களுக்கு எல்லாம் அஞ்சனாதேவி விருந்தளித்தாள். அதன் பிறகு இராமர் தம் பரிவாரங்களுடன் அயோத்திக்குத் திரும்பிச் சென்றார். வழியில் சீதை யசோதராவிடம் "நான் முன்பு சொன்னபடி அனுமார் உன் கணவரைக் காப்பாற்றி விட்டார் பார்த்தாயா!" என்று கூறினாள்.

யசோதரை சீதைக்கு நன்றி செலுத்தியவாறே “எல்லாம் உங்கள் தயவுதான். அனுமாரின் இதயத்தில் இராமரோடு உங்களையும் கண்டு களித்தேன்" என் றாள். அவளது மகன் சந்திராங்கதனும், மகள் சந்திரமுகியும் 'ஆமாம் சீதாதேவியாரே! நாங்களும் பார்த்தோம்" என்றார்கள். கை தட்டியவாறே. 

யசோதரையும் சீதையிடம் “அம் மணீ! நீங்களும் என்னைப்போல முத்துப் போன்ற இரு குழந்தை களைப் பெற்றெடுப்பீர்களாக’ என்று உளமாற ஆசி கூறினாள். அதுகேட்டு சீதையின் முகம் நாணத்தால் சிவந்தது. 

இவ்வாறு பேசிக் கொண்டே அவர்கள் அயோத்தியை அடைந்தார்கள். யயாதி தன் குடும்பத்தவ ரோடு இராமரின் விருந்தாளியாக இருந்தான். யசோதரையும் அவள் இரு குழந்தைகளும் சீதா தேவியுடன் சிரித்துப் பேசி மகிழ்ந்து பொழுதைப் போக்கினார்கள். சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் இராமரிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றார்கள்.

ஒரு பௌர்ணமியன்று மாலையில் இராமர் சீதையுடன் அந்தப்புர நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது சந்திரோதயம் ஆகிக் கொண் டிருந்தது. இராமர் சீதையிடம் "அதைப் பார்த்தாயா?" என்று கூறினார். 

சீதையும் "கிழக்கில் தங்களது முகத்தின் பிரதிபிம்பம் தெரிகிறது'' என்றாள். அப்போது இராமர் "அது என் முகமா! உன் முகம் அல்லவோ பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது” என்று சிரித்துக் கொண்டே கூறினார். 

சீதையோ "இந்தச் சந்திரன் தங்களது பெயரோடு தன் பெயரையும் சேர்த்துக் கொண்டு புகழடையப் பார்க்கிறான்" என்றாள். இராமரும் "ஓஹோ! சந்திரன் இப்படி ஒரு விஷமம் செய்ய ஆரம்பித்துவிட்டானா! நான் கவனிக்கவே இல்லையே" என்றார் புன்னகை புரிந்தவாறே.

இப்படியாக அவர்கள் அங்குள்ள சிறு குளக்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் அக்குளத்தில் இரு அன்னங்கள் நிலவொளியில் பிரகாசித்தன. சீதை அவற்றைப் பார்த்தவாறே எழுந்து மெதுவாக இராமருடன் அந்தப் புரத்திற்குச் சென்றாள்.

இரவில் சற்று நேரமான பிறகு சீதை உப்பரிகை மிது நின்று பால் பொழியும் நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சந்திரனின் பொன் போன்ற கிரணங்கள் நந்தவனத்திலுள்ள குள் நீரில் விழுந்து அலைகளில் ஆடிக் கொண் டிருந்தன. குளத்தில் இருந்த இரு அன்னங்களோ இரு நட்சத்திரங்கள்போல விளங்கின.

அனுமார் கந்த மாதன மலை யில் தவம் செய்து கொண்டிருந்தார். வருடங்கள் பல கழிந்தன. அனுமாருக்கு எவ்வளவு வருடங்கள் கழிந்தன என்பது கூடத் தெரியவில்லை. ஒருநாள் அயோத்தியிலிருந்து அனுமாரைக்காண இராமரின் கிழ வேலையாளான பத்திரன் வந்தான். அவன் அவரிடம் 'இராமர் உங்களை வரச் சொன்னார்" என்று கூறினான். 

பத்திரனின் முகம் வாட்ட முற்றிருந்தது. அது கண்டு அனுமார் "பத்திரா! அயோத்தியில் ஏதாவது விபரீதமாக நடந்துவிட் டதா? ஏன் நீ கவலையுடன் இருக்கிறாய்?" என்று கேட்டார். பத்திரன் பெருமூச்சு விட்டவாறே 'இன்னமும் என்ன நடக்க வேண் டும்?" என்றான். அனுமாரும் "என்னதான் நடந்தது? சட் டென்று சொல்" என்றார்.

பத்திரனும் சொல்லலானான்: 'ஒரு நாள் அந்தணர்களின் கூட்டம் ஒன்று ரிஷிகளை அழைத்துக் கொண்டு இராமரைக் காண வந்தது. அவர்கள் இராமரிடம் சம்புகன் என்ற கீழ்ச் காதியான் வேதங்களைக் கற்றுவிட்டான். அதனால் தர்மம் குலைந்துவிட் டது. இக்காரணத்தால் ஒரு பிராம்மணின் மகன் அகால மரணம் அடைந்தான். அதனால் நீங்கள் இப்போதே அந்த சம்புகனைக் கொன்றுவிட வேண்டும்" என்றார்கள்.

அவர்களைத் திருப்திப்படுத்த இராமர் கிளம்பினார். சம்புகன் முனிவர்போல வாழ்ந்து தலை கீழாக நின்று தவம் செய்து கொண்டிருந்தான். இராமர் அவனைக் கொன்றுவிட்டார். அப்போது சம்புகனின் மனைவி கபிலை இராமரைப் பார்த்து "இராமா! உனக்குக் கேடு காலம்தான் வரப் போகிறது. அதனால்தான் நீ இப்படிப்பட்ட கொடிய செயலைச் செய்தாய்" என உள்ளம் குமறிக் கூறிவிட்டு உயிர் நீத்தாள். 

இதற்குச் சில நாட்கள் பிறகு ஓரிரவில் இராமரும் நானும் மாறு வேடத்தில் நகரைச் சுற்றி வந்து கொண்டிருந்தோம். அப்போது அயோத்தி நகரின் ஒதுப்புறமாக சலவைத் தொழிலாளிகள் வசிக்கும் இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு கணவன் மனைவியிடையே வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.

கணவன் தன் மனைவியிடம் "நீ எங்கோ போய் இருந்துவிட்டு வந்தாய். அதனால் வீட்டிற்குள் வராதே" என்று உறுமினான். அவளோ அழுதவாறே "நம் மன்னர் இராமரே இராவணன் வீட்டிலிருந்த சீதாதேவியை ஏற்றபோது நீ மட்டும் இப்படிச் செய்வது சரியல்ல. நானும் ஒரு குற்றமும் செய்யவில்லையே என்றாள். 

அதற்கு அவள் கணவன் மன்னரை யாரால் தட்டிக் கேட்க முடியாது. அவர் தாராளமாகப் பிறர் வீட்டில் இருந்துவிட்ட சீதையை ஏற்கலாம், நான் வெட்கம் மானத்திற்கு பயப்படுபவன். எனவே நான் அவர் செய்ததுபோல உன்னை ஏற்க முடியாது" என்று உரக்கக் கூவினான்.

இதைக் கேட்ட இராமர் மனம் பெரிதும் வருந்தியது. மாசற்ற சீதையைப் பற்றி மக்கள் மனதில் இப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளதா? அரசன் மக்களுக்கு முன் மாதிரியாக அல்லவா இருக்க வேண்டும். அதனால் மக்கள் சீதையை களங்கமற்றவள் என்று நம்பும் வரை அவள் தன்னோடு அரண்மனையில் இருக்கக் கூடாது என அவர் தீர்மானித்துக் கொண்டார். அதனால் சீதையைக் காட்டில் விட்டு வரும்படி இலட்சுமணனுக்குக் கட்டளை இட்டார். அப்போது சீதாதேவி நிறை கர்ப்பிணி. முன்பு சீதை தான் மீண்டும் காட்டிற்குப் போய் முனிவர்கள் மத்தியில் வாழ வேண்டும் எனக் கூறியதை ஒரு காரணமாகக் கொண்டு இராமர் அவளைக் காட்டிற்கு அனுப்பி விட்டார்.

இராமர் சீதையின் நினைவில் உருகிப் போய்விட்டார். நான் சிறு வயதில் அவரைத் தோளில் சுமந்தவன். அம்புலி காட்டி அகம் மகிழச் செய்தவன். அதனால் இராமருடைய பெயரோடு என் பெயரும் சேர்ந்து இராமபத்திரன் என எங்கும் பரவியது. எனக்கு அந்த சலவைத் தொழிலாளி மீது கோபம் கோபமாகவந்தது. அவனைப் பிடித்துக் கண்ட துண்டமாக வெட்டிப் போட நினைத்து அவனைத் தேடிப் பார்த்தேன். அவன் எங்கும் கிடைக்கவில்லை. அவன் மனைவியும் கண்ணில் படவே இல்லை. எப்படியோ மாயமாய் மறைந்துவிட்டார்கள்.

காட்டில் விடப்பட்ட சீதா தேவியை வால்மீகி முனிவர் கண்டு தம் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். சீதாதேவிக்கு இரு குழந்தைகள் பிறந்தன. வால்மீகி அவர்களுக்கு லவன், குசன் என்று பெயர் வைத்து கல்வி புகட்டினார். தாம் இயற்றிய இராமாயணத்தை அவர்கள் தம் இனிய குரலில் பாடவும் பயிற்சி அளித்தார். அவர்களுக்கு அஸ்திரங் களைப் பிரயோகிக்க சீதாதேவி கற்றுக் கொடுத்தாள். 

ஒரு நாள் லவனும் குசனும் இராமரும் சீதையும் எப்படி இருப்பார்கள் என நேரில் போய்ப் பார்ப்பது என நினைத்து அயோத்திக்குச் சென்றார்கள். அவர்கள் இராமாயணத்தைப் பாடியவாறே அந்நகர வீதிகளில் சென்று கொண்டிருந்தார்கள். 

அப்போது வசிஷ்டரின் யோசனையின் பேரில் இராமர் தம்மருகே தங்கத்தாலான சீதையை வைத்துகொண்டு அசுவமேத யாகம் செய்யலானார். அச்சமயத்தில் இலட்சுமணன் தெருவில் இராமயணத்தைப் பாடிக் கொண்டு வரும் லவனையும் குசனையும் கண்டான். அவர்களது தோற்றம் கண்டு திகைத்து அவர்களை அழைத்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றான். 

அரண்மனையில் அச்சிறுவர்கள் சீதாதேவி அக்கினிப் பிரவேசம் செய்யும் நிகழ்ச்சியை உருக்கமாகப் பாடினார்கள். அதைக் கேட்டு கௌசல்யை முதலிய அந்தப்புர பெண்மணிகளும் யாகம் செய்து கொண்டிருந்த பெரியவர்களும் சபையில் இருந்த பிரமுகர்களும் கண்ணீர் வடித்தார்கள். இராமர் அவர்களை யாரோ ஒரு முனிவரது புதல்வர்கள் என எண்ணி அவர்களுடன் நன்கு பேசிப் பல பரிசுகளையும் கொடுத்து அனுப்பினார்.

யாகம் முடிவதற்காக அசுவ மேதயாகக் குதிரை அலங்கரிக்கப்பட்டு சூரிய வம்சத்துக் கொடி யுடன் பல நாடுகளில் திரிந்து வர அனுப்பப்பட்டது. அதன் பின்னால் வீரர்களும் சென்றார்கள். அக்குதிரை வால்மீகி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தது. அதன் நெற்றியில் கட்டப் பட்டிருந்த பட்டை மீது அது இராமரின் குதிரை என எழுதப்பட்டிருந்தது. லவனும் குசனும் அக்குதிரை யைப் பிடித்துக் கட்டிப் போட்டு விட்டார்கள். 

அக்குதிரையை விடுவிக்கப் போன சத்துருக்னனும், பரதனும், இலட்சுமணனும், லவனுட னும் குசனுடனும் போர் புரிநது தம் நினைவு இழந்து விழுந்தார்கள். இதன்பின் இராமரும் அச்சிறுவர்களை எதிர்த்துப் போரிட்டுத் தம் நினைவு இழந்து விழுந்தார். சீதா தேவி அங்கு வந்தாள். களத்தில் நினைவு இழந்து விழுந்து கிடக்கும் இராமரையும் லவனையும், குசனையும் அவள் பார்த்துக் கண்ணீர் வடித்தவாறே "குழந்தைகளே! இவரை யாரென்று நினைத்தீர்கள்? இவர்தான் உங்கள் தந்தை. அயோத்தி மன்னர் இவரது சகோதரர்களான பரதன், சத்துருக்கனன், இலட்சுமணன் ஆகியோரையும் நீங்கள் தோற்கடித் திருக்கிறீர்கள்” என்று விளக்கிய பிறகே எல்லாம் சரியாயிற்று.

 
அப்போது வால்மீகி முனிவர் சீதை புனிதமானவள் என இராமரிடம் கூறி அவளை ஏற்குமாறு கூறினார். இராமரோ சீதைதான் மாசற்றவள் என மக்கள் முன் பகிரங்கமாகக் கூறினால் தாம் அவளை ஏற்பதாகக் கூறினார். சீதா தேவி தம் இரு புதல்வர்களுடன் அயோத்திக்கு வந்து அவர்களை இராமரிடம் ஒப்படைத் தாள். 

பிறகு அவள் "நான் கற்புடைய மங்கையானால் பூமா தேவி என்னை ஏற்கட்டும்" எனக் கூறினாள். மறு நிமிடமே பூமி அதிர்ந்து இரண்டாகப் பிளந்தது. அதிலிருந்து தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து பூமா தேவி வெளி வந் தாள். அதிலிருந்து அவள் இறங்கி ஒரு தாய் தன் மகளை அழைத்துப் போவது போல சீதா தேவியை அழைத்துக் கொண்டு தன் ஆசனத்தில் அமர்த்திக் கொண்டு பூமிக்குள் சென்றுவிட்டாள். பிளந்த பூமி ஒன்று சேர்ந்து முன் போலாகிவிட்டது.

இராமர் கோபத்தோடு வில்லை எடுத்து பூமியைப்பிளக்கப் போனார். அப்போது ஒரு அசரீரி வாக்கு "இராமா! ரகுவம்ச மன்னர்கள் பூமியைப் பேணி நன்கு பாதுகாத்தார்கள். நீ பூமியைப் பிளக்கவா பார்க்கிறாய்? நீ சீதையை அவளது பிறந்த வீட்டிற்கே அனுப்பி விட்டாய். இதற்குக் கோபம் கொள்வானேன்?' என்று கூறியது.

இராமர் தாம் எடுத்த வில்லைக் கீழே வைத்துவிட்டார். பிறகு லவனுக்கும் குசனுக்கும் இளவரசுப் பட்டம் கட்டி சிம்மாசனத்தில் அமர்த்தினார். அவரோ ஒரேயடியா கக் கவலையில் மூழ்கிவிட்டார்.

அசுவமேத யாகம் முடியவில்லை யாகக் குதிரை கீழ் திசையில் இப்போது திரிந்து கொண்டிருக்கிறது. இலட்சுமணனும், பரதனும், சத்துருக்கனனும் அதன் பின்னால் வீரர்களுடன் சென்று கொண்டிருக்கிறார்கள்."

பத்திரன் இவ்வாறு கூறியது கேட்டு அனுமாரின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. அவர் சட் டென எழுந்து "நான் இப்போதே இராமரைக் காணப் போகிறேன். நீ மெதுவாக வா" எனக் கூறித் தன் கதையை எடுத்துத் தோளின் மீது வைத்துக் கொண்டு ஆகாய வழியாக அயோத்திக்குச் சென்றார்.

அயோத்தி அனுமன் சென்றார்.



Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories



கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."