அதுவே உயர் செல்வம்
அதுவே உயர் செல்வம்
சிதம்பரம் தன் மாமனார் ஊருக்குப் போய்த் தன் மனைவியையும் அப்போதே அவள் பெற்ற குழந்தையையும் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தான். அவன் தன் வீட்டிற்குச் சற்று முன் ஒரு பெட்டி வண்டி நிற்பதையும் அதன் பட்டுத் திரையை விலக்கிக் கொண்டு ஒரு பணக்காரப் பெண் மணி ஏறி அமர்வதையும் கண்டான். அது யார் என யோசித்து நடக்கையில் அவன் தாயாரே அப் பெண்மணியை வழி அனுப்பி வைத்ததையும் அந்த வண்டியும் அங்கிருந்து வேகமாகச் சென்றதையும் கண்டான்.
அவனது தாயார் லட்சுமி திடுக் கிட்டு "ஓ! அதுவா! என்னோடு பள்ளியில் படித்தவள். அவள் மகனுக்குக் கல்யாணமாம்,விவாக தினத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பே நாம் வந்துவிட வேண்டும் என்று அழைத்துவிட்டுப் போனாள். நாமும் அத்திருமணத்திற்குப் போகலாம்" என்றாள்.
சிதம்பரமும் "அம்மா! இந்தப் பணக்காரர்கள் வீட்டில் எல்லாம் நம்மை மதிக்க மாட்டார்கள். நான்கு நாட்களுக்கு முன்பே ஒன்றும் போக வேண்டாம். அதனால் கூப்பிட்டதற்காக முகூர்த்தத்தின் போது மட்டும் தலையைக் காட்டிவிட்டு வந்துவிடலாம்' என்றான்.
லட்சுமியோ "என் சிநேகிதி சியாமளா சாதாரண நிலையில் இருந்தவளே. இப்போதுதான் பணக்காரி. ஆனாலும் என்னை மறக்கவில்லை. அதனால்தான் நேரில் வந்து கூப்பிட்டுப் போனாள் எனவே நாம் போகத் தான் வேண்டும்" என்றான்.
சிதம்பரம் அந்தப் பணக்கார வீட்டுக் கல்யாணத்திற்கு முதல் நாள் தான் தன் தாயுடன் கிளம்பினான். அப்போது அவனது தாய் புதிதாய் வாங்கிய கைத்தறி வேஷ்டியை எடுத்துப் பைக்குள் வைக்கவே சிதம்பரமும் "இதை வாங்கினது வீண் செலவு. அந்த வீட் டில் நீ இதைக் கொடுத்தால் யாரும் மதிக்காமல் கேலிதான் செய்வார்கள். நீயே பார்க்கப் போகிறாய்" என்றான்.
லட்சுமி ஒன்றும் சொல்ல வில்லை. அவர்கள் கல்யாண வீட்டை அடைந்தபோது அங்கு எல்லோரும் சரிகை வேஷ்டிகளும் பட்டுப் புடவைகளும் கட்டியவர் களாகத்தான் இருந்தார்கள். எளிய நூலாடைகளை அணிந்து சென்ற சிதம்பரத்தையும் அவன் தாயை யும் வாருங்கள் என்று அழைக்கக்கூட யாருமே இல்லை.
லட்சுமி சியாமளா எங்கு இருக்கிறாள் என்று விசாரித்து சிதம்பரத்துடன் அவள் இருக்கும் அறைக்குள் சென்றாள். லட்சுமியைக் கண்டதும். சியாமளா எழுந்து ஓடி வந்து "வந்தாயா லட்சுமி! ரொம்ப சந்தோஷம்'' என்று அன்புடன் கையைப் பற்றிக் கொண்டு கேட்டாள்.
லட்சுமியும் "எங்கே உன் மகன்?" எனவே சியாமளா அவளையும் சிதம்பரத்தையும அழைத்துக் கொண்டு தன் மகன் இருக்கும் அறைக்குச் சென்றாள். பணக்கார நண்பர்களோடு இருந்த அவன் தன் தாயார் வருவதைப் பார்த்து "என்னம்மா இது! நான் என் நண்பர்களோடு இருக்கையில் நீ வந்து என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று எவ்வளவு தடவை சொல்லி இருக்கிறேன்" என்று எரிந்து விழுந்தான்.
சியாமளாவும்“இல்லை பாலு! என் வெகுநாள் சிநேகிதி உன்னைப் பார்க்க வேண்டும் என்றாள். அதனால் அவளை அழைத்து வந்தேன்" என்றாள். பாலுவோ "உனக்குத் தெருவில் போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் சிநேகிதிகளே!" எனக் கூறி லட்சுமியை ஏளனமாகப் பார்த்தான்.
விவாகம் சற்றுத் தள்ளி இருந்த பெண் வீட்டில் தான் நடந்தது. பெண் பார்க்க அவலட்சணமாக இருந்தாள். அது பற்றி பாலு விடம் அவனது நண்பர்கள் கேட்கவே அருகில் சியாமளாவும் லட்சுமியும் இருப்பதைக்கூட லட்சியம் செய்யாமல் பாலு" என்ன செய்வது? எல்லாம் என் தலை விதி. இப்போது என் வியாபாரம் நஷ்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஐந்து. லட்சம் தேவை. இந்தப் பெண்ணின் தகப்பனார் அந்தத் தொகையை வரதட்சணையாகக் கொடுப்பதாகக் கூறவே இதற்குச் சம்மதித்தேன். இந்த சம்மதம் தெரிவித்த மறுநாளே இன்னொரு வியாபாரி தன் குருட்டு மகளை எனக்கு கொடுப்பதாயும்- எட்டு லட்சம். வரதட்சணை கொடுப்பதாயும் கூறினார். ஆனால் என்ன செய்ய முடியும்? இப்போது இதிலும் எனக்கு மூன்று லட்சம் நஷ்டம்' என்றான்.
இதைக் கேட்ட சிதம்பரம் மலைத்துப் போனான். லட்சுமியின் கண்களிலோ நீர் நிறைந்தது. அப்போதே சிதம்பரம் ஒரு வாடகை வண்டியை அமர்த்திக் கொண்டு தன் தாயாருடன் தன் ஊருக்குக் கிளம்பிவிட்டான். தன் தாயார் அடிக்கடி கண்களைப் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொள்வதைக் கண்ட சிதம்பரம் "ஏனம்மா வருத்தப்படுகிறாய்? அந்த பாலு சொன்னதை நினைத்தா கண்ணீர் சிந்துகிறாய்! அவன் பணத் திமிரில் ஏதோ உளறினான். அதை விட்டுத் தள்ளு" என்றான்.
அப்போது லட்சுமி 'அந்த பாலு யார் தெரியுமா?" என்று கேட்கவே சிதம்பரமும் ஆச்சரியத்துடன் "தெரியாதே! யாரம்மா அவன்? அவன் உன் சிநேகிதி சியாமளாவின் மகன்தானே" என்று கேட்டான். லட்சுமியும் "இல்லையப்பா. அவன் உன் தம்பி. இவ்வளவு நாட்களாக மறைந்து வைத்த ரகசியத்தை இப்போதே கூறுகிறேன். என்று கூறி சொல்லலானாள்.
"உன் தந்தை இறந்த பிறகு நான் பல வீடுகளில் வேலை செய்தேன். நீ தெருத்தெருவாக அலைந்து இளநீர் விற்று வந்தாய். அப்போது உன் தம்பி சிறு குழந்தை. அப்போது ஓருநாள் சியாமளா ஒரு வண்டியில் இந்த ஊருக்கு வந்தாள். அவள் திடீ ரென மயங்கி வண்டிக்குள் நினை விழந்து விழவே அந்த வண்டிக் காரன் வண்டியை நம் குடிசை முன் நிறுத்தி உதவி கோரினான். அப்போது நீ மத்தியான சாப்பாட்டிற்கு வந்தாய். சியாமளா நினைவு இழந்து விழுந்திருப்பது கண்டு நீ ஒரு இளநீர் காயை எடுத்துச் சீவி இளநீரை அவளது முகத்தில் தெளித்தாய். இன் னொரு இளநீர் காயை வெட்டி அவளைக் குடிக்கச் செய்தாய். அவள் மாலையாகும்வரை நம் குடிசையில் இருந்து இளைப்பாறி னாள். அவள் உன்னை தெய்வம் என்று போற்றிப் புகழ்ந்தாள்.
அவள் கிளம்புமுன் "அம்மா! எனக்குக் குழந்தையே இல்லை. நீயோ மிகவும் சிரம திசையில் இருப்பது தெரிகிறது. உன் மகனை சுவீகாரம் எடுத்துக் கொள்கி றேன். என்ன சொல்கிறாய்? நான் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவள்' எனக் கூறித் தன் பெயரையும் முகவரியையும் கூறி னாள்.
"நான் சற்று யோசித்து "அம்மா! நானும் இரு மகன்களை வளர்க்கச் சிரமப்படுவது உண்மையே. என் மூத்த மகன் சிதம்பரம் எனக்கு உதவியாக இருக்கிறான். அவனைக் கொடுக்க முடியாது. வேண்டு மானால் குழந்தை பாலுவை எடுத்துக் கொள்ளுங்கள். என்றேன்.
சியாமளாவும் "இதுவும் சரியே. இக் குழந்தையை இப்போது எடுத்து வளர்த்தால் இவன் என் னையே தன் தாயாக எண்ணி வளர் வான். ஆனால் இனி நீ இவனைப் பார்க்கக் கூடாது. இவன் பெரிய வனாகி இவனுக்குக் கல்யாணம் நடக்கும்போது நீ வந்து பார்த்து விட்டுப் போகலாம்" என்றாள். பாலு சுகப்படட்டும் என்று எண்ணி அவனை சியாமளாவிடம் ஒப்படைத்தேன். ஊராரிடம் பாலு திருவிழா வின்போது காணாமல் போய் விட்டதாகக் கூறினேன். அந்த பாலு தான் இவன். உன்னை அன்று சியாமளாவிடம் கொடுத்திருந் தால் நீ இன்று பணக்கார வீட்டுப் பிள்ளையாக இருந்திருப்பாய்.
இவ்வாறு லட்சுமி கூறியதும் சிதம்பரம் "அம்மா. உலகில் பணம் இருந்துவிட்டால் மட்டும் சுகம் கிடைத்துவிடாது. திருப்தி இருக்க வேண்டும். பாலுவைப் பார்! வரதட்சணை வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அது மேலும் அதிகமாக கிடைக்கவில் லையே என்று மனம் ஓடிந்து போகிறான். அவனுக்குப் பணம் இருந்தும் திருப்தி இல்லை. நாம் உள்ளதைக் கொண்டு திருப்தி அடைந்து வருகிறோம். இதுவே நமக்குக் கிடைத்துள்ள அரிய செல்வம்" என்றான். அதுகேட்டு லட்சுமி பூரித்துப் போனாள்.
கதை ஆசிரியர்:சிவனார் செல்வன்
அம்புலிமாமா,
Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories

.jpg)



கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."