பண்டிதரே தான்!
![]() |
| பண்டிதரே தான்!-its the scholar |
பண்டிதரே தான்!
பூங்குடியில் பூபதி என்ற பிராம்மண இளைஞன் இருந்தான். சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்து உற்றார் உறவினர் என யாரும் இல்லாமல் ஊரார் வீட்டில் கிடைத்ததை உண்டு காலம் கழித்து வந்தான். அதற்காக அவன் புரோகிதர் போலப் பணி புரிந்தான். அதில் கிடைத்த பணத்தைச் சிறிது சிறிதாகச் சேர்த்து வரலானான்.
சிறுவயதிலிருந்தே அவனுக்கு இலக்கியம் கற்பதில் ஆர்வம் இருந்தது. ஊரிலிருந்த பண்டிதர்களிடம் கற்றுக் கவிதை புனையும் திறனும் பெற்று விட்டான். அவன் குரல் வளமும் பெற்றிருந்ததால் தான் இயற்றிய கவிதை களைப் பாடி மகிழ்ந்தும் வந்தான். ஒரு நாள் வெளியூரிலிருந்து வந்த கவிஞர் ஒருவர் அவனது கவிதைகளைக் கேட்டு விட்டு "தம்பீ! இசை பாடுபவனின் இசையும் கவிஞனின் கவிதையும் தக்க ஆதரவு பெறாவிட்டால் அவற்றிற்கு மதிப்பே இல்லை. உன் திறமை வெளிப்பட நீ மன்னனை அணுகி அவனது தர்பாரில் பண்டிதர் பதவியைப் பெற வேண்டும். எனவே நீ தலைநகருக்குப் போய் அதற்கான முயற்சி செய்" என்றான்.
அந்தக் கவிஞர் கூறியபடியே தலை நகருக்குப் போய் மன்னனின் தர்பாரில் உத்தியோகம் பெறுவது என்று பூபதி தீர்மானித்துக் கொண்டான். தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு அவன் தலைநகரை நோக்கிச் சென்றான். தலைநகரை அடையுமுன் ஒரு கிராமத்தை அடைந்தான். அங்கு உணவு விடுதியோ அல்லது சத்திரமோ இருக்கிறதா என்று விசாரிக்கலானான். அப்படி அவன் ஒரு பிராம்மணரிடம் விசாரித்த போது அவனைப் பற்றிய விவரங்களைக் கேட்டு அறிந்து கொண்ட அவர் 'பூபதி! நீயோ பிராம்மணன். என் வீட்டிற்கு வா. அங்கு சாப்பிட்டு இளைப்பாறி விட்டு நாளை தலை நகருக்குப் போகலாம்” என்று கூறி அவனைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்தப் பிராம்மணரின் கிழத்தந்தை இருந்தார். அவரும் பூபதியிடம் கேள்விகளைக் கேட்டு அவனது குடும்பத்தைப் பற்றித் தெரிந்து கொண்டு 'பூபதி! நீ எங்களுக்கு ஒரு வகையில் உறவினனே. இந்த ஊரிலேயே இரு. நான்கு வீடுகளில் புரோகிதம் என்று போனாலே உனக்கு வேண்டியது கிடைக்கும்" என்றார்.
அதற்கு அவன் பதில் சொல்லப் போகையில் அக்கிழவனின் பேத்தி ஈஸ்வரி அங்கு வந்தாள். அங்கு தன் தாத்தாவுடன் ஒரு இளைஞன் இருப்பது கண்டு வெட்கத் துடன் தாத்தாவைப் பார்த்து "தாத்தா! சாப்பிட வாருங்கள். அப்பா அழைத்து வரச் சொன்னார்" என்றாள். அப்போது அவர் "ஈஸ்வரி! இவன் பெயர் பூபதி. இவன் பெயர் பூபதி. இவன் ஒரு கவிஞன். நன்கு படித்த பண்டிதர்" என்றார்.
அவளும் சிரித்துக் கொண்டே "அப்பா இவரைப் பற்றி விவரமாகச் சொன்னார். மன்னரின் தர்பாரில் இப்போது மூன்று பண்டிதர்கள் இருக்கிறார்கள். ஒருவர் பகலிலும் மற்றவர் மாலையிலும் மூண்றாமவர் இரவிலும் மகாபண்டிதர்கள். இவர் எந்தப் பொழுதில் எப்படிப்பட்ட பண்டிதராம்? " என்று கேட்டாள். அதைக் கேட்ட பூபதி சிரித்தவாறே! "நான் இன்னும் எல்லா வேளைகளையும் எதிர்பார்த்து இருப்பவனே. நீங்கள் கூறிய அந்த மூன்று பண்டிதர்களிட மிருந்து பாராட்டுதல்களைப் பெற்றாலே நானும் குறிப்பிட்ட வேளைப் பண்டிதர் என்று பெயர் பெற முடியும்" என்றான்.
இந்த உரையாடலை மன்னனின் ஒற்றர்கள் கேட்டார்கள். இது ஏதோ சதிகாரர்களின் ரகசியத் தகவல் என எண்ணி அவர்கள் தாம் கேட்டதை அப்படியே மன்னனிடம் கூறினார்கள். மன்னனும் அதற்குப் பொருள் என்ன என்று தெரிந்து கொள்ளத் தன் தர்பாரிலுள்ள மூன்று பண்டிதர்களையும் அழைத்து ஒற்றர்கள் கேட்ட உரையாடலைக் கூறி அதன் பொருள் என்ன என்று அவர்களிடம் கேட்டான்.
பண்டிதர்கள் மூவரும் அது கேட்டு ஆத்திரம் அடைந்து "அரசே! அறிவற்ற அற்பங்கள் கூறுவதற்கு எல்லாம் என்ன பொருள் இருக்கிறது? அந்தப் பெண் ஈஸ்வரியும், பூபதியும் எங்களைத் திட்டி அவமானப்படுத்தியுள்ளார்கள். பகல் பண்டிதர் என்றால் சூதாடி என்றும் மாலை பண்டிதர் என்றால் திருடர் என்றும் இரவு வேலைப் பண்டிதர் என்றால் பிற பெண்களை நாடுபவர் என்ற பொருளில் தான் கூறி இருக்கிறார்கள்" என்றனர்.
மன்னன் மறுநாள் பூபதியையும். ஈஸ்வரியையும் தன்தர்பாருக்கு வரவழைத் தான். அவர்களது உரையாடலின் பொருளைப் பண்டிதர்கள் தம்மைத் திட்டினார்கள் என்று குற்றம் சாட்டியதைக் கூறி "இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? கற்றறிந்த பண்டிதர்களை இப்படிக் கேவலப் படுத்தியதற்காக உங்கள் இருவரையும் ஏன் தண்டிக்கக் கூடாது?” என்று கேட்டான்.
அது கேட்டு பூபதியும் ஈஸ்வரியும் கலந்து பேசிய பின் பூபதி அப் பண்டிதர்களைப் பணிவுடன் வணங்கி “பண்டிதமணிகளே! ஒரு வேளை நீங்களே உங்கள் குறைபாடு களை வெளிப்படுத்திக் கொண்டீர்களோ என்னவோ! இது எனக்குத் தெரியாது. எங்கள் உரையாடலின் பொருள் நீங்கள் கூறியதே அல்ல. சூதாடி பல இன்னல்கள் பட்ட பாண்டவர்களின் மகாபாரதத்தைக் கூறுபவர் பகல் பண்டிதர். சீதையை அபகரித்துக் கொண்டுபோன இராமாயணக் கதையைக் கூறுபவர் மாலை வேளைப் பண்டிதர். கோபிகைகளுடன் லீலைகள் புரிந்த ஸ்ரீகிருஷ்ணரின் கதையான பாகவததைக் கூறுபவர் இரவுப் பண்டிதர். இவ்வாறு மகாபாரதத்தையும், இராமாயணத்தையும் பாகவதத்தையும், மக்களுக்கு விளக்கிக் கூறுபவர்கள் இந்த முப் பெரும் பண்டிதர்கள் என்ற பொருளில்தான் நாங்கள் பேசிக் கொண்டோம். இத்தகைய பண்டிதர்கள் என்னைப் பாராட்டினாலே நான் புகழ் பெற முடியும் என்று நானும் கூறினேன்" என்றான்.
இதற்கு ஒரு மாதத்திற்குப் பின் பூபதிக்கும் ஈஸ்வரிக்கும் திருமணம் இனிதே நடை பெற்றது. பூபதி காலை, நண்பகல், மாலை, இரவு என நான்கு வேளைப் பண்டிதர் என்ற புகழைப் பெற்றான்.
கதை ஆசிரியர்: மோகன் சங்கரராம்
அம்புலிமாமா



கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."