sirukathaigal

மகாபாரதம்

மகாபாரதம்-mahabharata

மகாபாரதம்

மறுநாள் போர் ஆரம்பமாகும் இப்படித்தான் என்ற நிலையில் அன்றிரவு துரியோதனன் தன் படைதளபதி களில் முக்கியமானவர்களை அழைத்து “நீங்கள் பாண்டவர்களின் படைகளை அழிக்க எவ்வளவு நாட்கள் பிடிக்கும்? என்று கேட்டான். பீஷ்மரும் துரோணரும் முப்பது நாட்களில் அழித்து விட முடியும் என்றனர். கிருபர் தனக்கு அறுபது நாட்கள் பிடிக்கும் என்றார். அசுவத்தாமா பத்து நாட்களில் அவற்றைத்தன்னால் அழித்து விட முடியும் என்றான்.
 
ஆனால் கர்ணனோ தன்னால் ஐந்தே நாட்களில் அவற்றை அழித்து விட முடியும் என்று கூறவே அது கேட்டு பீஷ்மர் சிரித்து "கிருஷ்ணரின் துணையுடன் அர்ஜுனன் உன்னை எதிர்க்காமல் இருக்கும் வரை நீ இப்படித்தான்  தற்பெருமை அடித்துக் கொள்வாய்" என்றார். கர்ணன் வாயடைத்துப் போனான். இந்த விஷயம் ஒற்றர்கள் வாயிலாக தருமருக்குத் தெரிந்தது. அதனை அவர் அர்ஜுனனிடம் கூறி "உன்னால் கௌரவர்களின் படைகளை எத்தனை நாளில் அழிக்க முடியும்?" என்று கேட்டார்.
 

அர்ஜுனனும் "நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? நம்படை யால் எதிரிகளை அழித்து விட முடியும்.மூவுலக வீரர்களும் ஒன்று திரண்டு வந்தாலும் அவர்களை எதிர்த்து ஒழித்து விட என்னால் முடியும். ஏனெனில் என்னிடம் பாசுபத அஸ்திரம் உள்ளது. ஆனால் அதைக் கொண்டு எல்லோரையும் கொன்று விடக் கூடாது" என்றான். மறுநாள்காலை கௌரவப்படைகள் போர்க்களத்திற்கு வந்து முகாமிட்டு அதனை ஒரு பெரிய நகரம் போலச் செய்தன. இது போலவே பாண்டவரின் படைகளும் எதிர் படைகளின்  முகாமிட்டன.

உலகிலுள்ள வீரர்களெல்லாம் குருக்ஷேத்திர மைதானத்திற்கு வந்து விட்டதால் வீடுகளில் வயதானவர் களும், சிறுவர்களும் பெண்களும் மட்டுமே இருந்தனர். போர் ஆரம்பமாவதற்குச் சற்று முன் வியாச முனிவர் திருதராஷ்டிரனைக் கண்டு "உன் மைந்தர்களுக்கும் அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் முடிவுகாலம் நெருங்கிவிட்டது. அதற்காக வீணாக வருத்தப்படாதே. நீ போரைக் காண விரும்பினால் உனக்கு திவ்வியதிருஷ் டியை அளிக்கிறேன். அதைக் கொண்டு நீ போர்க்களத்தில் நடப்பதை உடனுக்குடனே பார்க்க முடியும்" என்றார்.

திருதராஷ்டிரனும் "உறவினர்கள் இறப்பதைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பதா? வேண்டாம். போர்க்களத்தில் என்ன நடக்கிறது என்று கேட்டுக் கொள்ள மட்டும் விரும்புகிறேன். அதற்கு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்'' என்றான். அப்போது வியாசர் "சரி இந்த சஞ்சயனால் இரவும் பகலும் போர்க்களத்தில் நடப்பதை எல்லாம் பார்க்க முடியும். அவன் உனக்குப் போர்க்களத்தில் நடப்பதை விவரித்துக் கூறுவான்" என்று கூறி விட்டுச் சென்றார்.

சஞ்சயனும் திருதராஷ்டிரனுக்கு குருக்ஷேத்திரத்தில் நடக்கும் போரைப் பற்றி வர்ணிக்கலானான். போர் தொடங்கு முன் கௌரவப்  படைகளின்    தலைமைத் தளபதியான பீஷ்மர் தன் பக்கத்து மன்னார்களிடம் "மன்னர்களே! உங்களுக்கு வீர சொர்க்கத்தின் வாயில் திறந்துள்ளது. அச்சமில்லாது போரிடுவது க்ஷத்திரி யர்களின் கடமை. க்ஷத்திரியனின் மரணம் போர்க்களத்தில்தான், வேறெங்கும் இல்லை" என்றார். போர்க்களத்தில் கர்ணன் ஒருவனைத்தவிர மற்ற மன்னர்கள் யாவரும் இருந்தனர்.

இருதரப்புப் படைகளும் வியூகங் களை அமைத்தன. பாண்டவர்களின் படைகளின் முன்னால் பீமன் நின்று கொண்டிருந்தான். சிகண்டி வியூகத் தின் நடுவே நின்றான். வலது புறம் சாத்தியகியும் நின்று கொண்டான். திருஷ்டத்துயும்னன் படை முழு வதையும் நடத்திச் செல்லத் தயாரானான். அர்ஜுனன் தன் தேரோட்டியாக கிருஷ்ணரிடம் தேரை இரு படைகளுக்கும் நடுவே நிறுத்தும் படிக்கூறினான். கிருஷ்ணரும் தேரை அவ்வாறே நிறுத்தி “அர்ஜுனா, பீஷ்மர், துரோணர், கிருபர், அசுவத்தாமன், ஆகிய யாவரும் போர்க்களத்தில் இருப்பதைப் பார்'' என்றார். 

அர்ஜுனனும் அங்கு தன் பாட்டனார், பெரியப்பா, சித்தப்பா, ஆசிரியர், மாமன்மார்கள், சகோதரர் கள், பேரன்கள் என்று எல்லாவகை உறவினர்களும் இருப்பதைக் கண்டு இவர்களையா நான் கொல்ல வேண்டும் என்று எண்ணித் திகைத்து நின்றான்.

அவனது கையிலிருந்த வில் காண்டீபம் தானாக நழுவியது. அவன் "கிருஷ்ணா! இந்த உறவினர் களை எல்லாம் கொன்றா நான் நாட்டைத் திரும்பப் பெற வேண்டும்? இப்படியான நிலையில் நாடும் வேண்டாம். எவ்வித சுகமும் வேண்டாம்" என்று கூறிச் சிலை போலானான். 

அதைக் கண்ட கிருஷ்ணர் ''அர்ஜுனா! உனக்கு திடீரென இப்படி ஒரு விரக்தி ஏன் ஏற்பட்டது? இதனால் நீ சொர்க்கலோகத்தை அடைய மாட்டாய். உன் பெயர்தான் கெடும். வீரன் இவ்வாறு நிலை குலைந்து நிற்கக் கூடாது அறிவாளிகள் வாழ்விற்கும் மரணத்திற்கும் அஞ்சுவதில்லை. ஆத்மா ஒரு உடலில் நிலையாக இருப்பதில்லை. அது பல தேகங்களில் புகுந்து கொண்டே இருக்கும். ஆத்மாவிற்கு அழிவே கிடையாது. பழைய கந்த லான ஆடைகளை எறிந்து விட்டு புத்தாடைகளை அணிவதுபோல ஆத்மா நசிந்துப் போன உடலை விட்டுவிட்டு புதிய உடலுள் புகுந்து கொள்கிறது. 

எனவே மரணம் கெடு தலை விளைவிக்கிறது என வருந் தாமல் போர் புரிய வேண்டும். க்ஷத்திரியனின் தலையாய கடமை போர்க்களத்தில் போர்புரிவதே. போர் சொர்க்கத்திற்குச் செல்வதைத் தடுக்காது. புகழ் பெறுவதை நிறுத்தி விடாது. கெட்ட பெயரைப் பெறுவதைவிட மரணம் அடைவதே  மேல். போரில் வெற்றி பெற்றால் சுகபோகங்களை அடைவாய். அதில் இறந்தால் சொர்க்க லோக போகத்தை அடைவாய். சுகத்தையும் துக்கத்தை யும், லாபத்தையும் நஷ்டத்தையும், வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுபவனே சஞ்சலமற்ற நிலையான மனம் கொண்ட அறிவாளி'' எனப் பலவாறு உபதேசம் செய்தார்.

 கிருஷ்ணரின் இந்த கீதோபதேசத் தால் அர்ஜுனனின் மனம் மாறியது. அவனது சந்தேகங்கள் மறைந்தன. இச்சமயம் தருமர்தம் கவசங்களைக் கழற்றி வைத்து விட்டு தேரிலிருந்து இறங்கி நடந்து கைகளைக் கூப்பியவாறே பீஷ்மரை நோக்கிச் சென்றார். அது கண்டு அர்ஜுனனும் மற்ற பாண்டவர்களும் தம் தேரிலிருந்து இறங்கி தருமரின் பின்னால் சென்றனர். எல்லோருக் கும் பின்னால் கிருஷ்ணரும் சென்றார். 

அப்போது அர்ஜுனன் தருமரிடம் 'அண்ணா! தாங்கள் எதிரிகளின் படைகளுள்ள இடம் நோக்கி நடந்து செல்வதன் நோக்கம்யாதோ?" என்று கேட்டான். தருமரோ பதில் எதுவும் கூறாமல் நடந்து கொண்டே இருந்தார். கிருஷ்ணர் சிரித்துக் கொண்டே "அவன் பீஷ்மரிடமும் துரோணரிடமும், கிருபரிடமும், சல்லயனிடமும் அனுமதி பெற்றுக் கொண்டு பிறகு போரை ஆரம்பிக்கப் போகிறான். இவ்வாறு பெரியவர்களி டம் அனுமதி பெற்றுப் போர் புரிந்தால் வெற்றி நிச்சயம் கிட்டும்" என்றார். 

இதே சமயம் கௌரவர்களின் படையிலுள்ளவர்கள் தருமரின் இந்த செயலைக் கண்டு பலவிதமாகப் பேசலானார்கள். "இந்த தருமர் போர்புரியத் தெரியாமல் நம் துரியோதன மன்னரிடம் சமாதானம் செய்து கொள்ள வந்திருக்கிறார் போலிருக்கிறது. அதனால் தான் மற்ற சகோதரர்களையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார். போர்க்களத்திற்கு வந்து இப்படியா சோர்ந்து போவது? இது அவர்களுக்கு அவமானம் இல்லையா?''

தருமர் பீஷ்மரிடம் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க எல்லோரும் ஆவலாக இருந்தார்கள். தருமர் கௌரவப் படைகளினிடையே உள்ள பீஷ்மரின் முன்நின்று வணங்கி "போரில் யாராலும் வெல்ல முடியாத உங்களு டன் நான் போரிட நீங்கள் எனக்கு அனுமதி அளிக்க வேண்டும்" என்று வேண்டினார். பீஷ்மரும் "நீ இங்கு வந்த இவ்வாறு கேட்டது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. நீ போர் புரி. வெற்றி உனக்கே. பணம் என்னைக் கட்டிப் போட்டு கெளரவர் களில் அடிமையாக்கிவிட்டது. அதனால் நான் கௌரவர்களின் பக்கம் நின்று போராடியே ஆக வேண்டும். எனவே இதைத் தவிர உனக்கு வேண்டியது எதுவானாலும் வரமாகக் கேள். நான் கொடுக் கிறேன்" என்றார்.

தருமரும் "தோல்வியே கண்டி ராத உங்களை நாங்கள் போரில் எந்தவழியில் வெல்ல முடியும்  என்பதைக் கூற வேண்டும்" என்று வேண்டினார். பீஷ்மரும் "அது பற்றி பிறகு கண்டிப்பாகக்கூறுகிறேன்" என்றார். அடுத்து தருமர்துரோணரின் தேரருகே சென்று அவரை வலம் வந்து வணங்கி "ஆசாரிய சிரேஷ்டரே! போர் புரிய உங்களது அனுமதியைப் பெற வந்திருக் கிறேன். உங்களது அனுக்கிரகம் இல்லாமல் போரில் நாங்கள் எப்படி வெற்றி பெற முடியும்?" என்றார்.

துரோணரும் "நீ வந்து அனுமதி கோரியது எனக்கு மகிழ்ச்சியையே அளிக்கிறது. கௌரவர்களின் உப்பைத்தின்றதால் உனக்குப் போரில் உதவ முடியாது. வேறு எது வேண்டுமானாலும் என்னிடம் கேட்டு நீ பெறலாம்" என்றார்.

தருமரும் "போரில் தங்களை வெல்ல யாராலும் முடியாது. தங்களைத் தோற்கடிக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். துரோணரும் "நான் ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு போர் புரியும்வரை யாரா லும் என்னை வெல்ல முடியாது. யாராவது நான் விரும்பத்தகாத செய்தியைக் கூறினால் நான் ஆயுதத் தைக் கீழேபோட்டு விடுவேன். அந்நிலையில் என்னைக் கொல்ல லாம். ஆனால் அச்செய்தியைக் கூறுபவன் நான் மிகவும் நம்பத்தக்கவனாக இருக்கவும் வேண்டும்" என்றார்.

அதன் பின் தருமர் கிருபரிடமும் போய் அவரது அனுமதியும் ஆசிகளும் பெற்றுக் கொண்டார். அதன்பின் அவர் சல்லியனிடம் சென்று "மாமா! உங்களுடன் போர் புரிய அனுமதியும் ஆசிகளும் அளியுங்கள்" என்றார். சல்லியனும் "நான் கௌரவர்களுக்கு வாக்கு கொடுத்துவிட்டதால் உங்களுக்கு உதவ முடியாது. இதைத் தவிர வேறு எது கேட்டாலும் செய்கிறேன்" என்றான். தருமரும் "மாமா! போரில் கர்ணனைக் கொல்ல நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும்" என்று கேட்டார்.

சல்லியனும் ''ஆகட்டும் செய் கிறேன். போர் புரி, வெற்றி உனக்குத்தான்' என்று கூறி ஆசிகளை அளித்தான். அதன்பின் தருமர் தன் தம்பிகளுடன் தன் படைகள் இருக்கும் இடத்திற்குத் திரும்பிச் சென்றார்.

கிருஷ்ணரோ கர்ணன் இருக்கும் இடத்திற்குச் சென்று அவனிடம் 'கர்ணா! நீதான் பீஷ்மர் போர்க் களத்தில் இருக்கும்வரை கௌரவர் பக்கம் நின்று போரிட முடியாது என்று கூறிவிட்டாயே. பீஷ்மரது மரணத்திற்குப் பிறகு போர்புரி. அவர் போர் புரியும்வரை பாண்டவர்கள் பக்கம் நின்று போர் புரியலாமே" என்றார். கர்ணனோ "நான் ஒருபோதும் துரியோதன னுக்குத் துரோகம் செய்ய மாட்டேன்” என்றான்.

தருமர் தம் படைகளிலிருந்த பக்கம் வந்து நின்றதும் கௌரவப் படையினரைப் பார்த்து "உங்களில் யாராவது எங்கள் பக்கம் வந்து சேர விரும்பினால் தாராளமாக வரலாம்" என்று அறிவித்தார். அப்போது திருதராஷ்டிரனின் புதல்வர்களில் ஒருவனான யுயுத்தசு தருமரைப் பார்த்து "நான் தங்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவன். என்னை நீங்கள் உங்களோடு சேர்த்துக் கொண்டால் நான் கௌரவர்களை எதிர்த்துப் போராடுவேன்" என்றான். தருமரும் அவனை ஏற்றுக் கொண்டார்.

தருமர் கவசங்களை அணிந்து கொள்ளவே மற்ற பாண்டவர்கள் தம் தேர்களில் ஏறி அமர்ந்து கொண் டார்கள். சங்குகள் முழங்கின. முரசொலிகள் கேட்டன. போர் ஆரம்பமாகியது.

அம்புலிமாமா


Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories


கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."