sirukathaigal

மாதவன் மாப்பிள்ளையானான்!

 மாதவன் மாப்பிள்ளையானான்!-Madhavan has become a groom!

மாதவன் மாப்பிள்ளையானான்!

மாயனூரில் மாதவன் இருபத் தைந்து வயதிலேயே வியாபாரத்தில் புலி என்று பெயர் பெற்று விட்டான். அது கண்டு அவனது பெற்றோர் "மாதவா! வியாபாரத் தில் உன் கால் நிலைத்து விட்டது. இனி உன் கல்யாணம் பற்றிப் பேசலாமா என்று உன் அத்தான் அருணாசலம் எழுதி இருக்கிறான். என்ன சொல்கிறாய்? என்று கேட்டார்கள். 

மாதவனின் தமக்கை உமையாள் அவனைவிடப் பதினைந்து வயது மூத்தவள். அவளுடைய பதினாறாவது வயதில் அவளுக்கும் அருணாசலத்திற்கும்திருமண மாயிற்று. அடுத்த ஆண்டில் அவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தை தான் சரசு. அவள் பிறந்ததுமே அவள்தான் மாதவனின் மனைவி என்று எல்லோரும் பேசி மகிழ்ந் தார்கள். மாதவன் அதுபற்றி அதிகம் கவலைப் படவில்லை. அவன் அத்தான் அருணாசலத்தின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தான். அவனுடன் தாராளமாகப் பேசிப் பழகினான்.

அருணாசலம் மாயனூரிலிருந்து சற்று தூரத்திலுள்ள மருதூரில் வாழ்ந்து வந்தான். கப்பல் போன்றது அவனது வீடு. ஏராளமான நஞ்சை வயல்கள் அவனுக்குச் சொந்தம். நல்லவனெனப் பாராட்டப் படு பவன். சரசுக்குப் பிறகு அவனுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. மாதவனின் பெற்றோர்கள் அருணாசலத்தின் கடிதம் பற்றிக் கூறிய போது அவன் "உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்" என்று கூறிவிட்டான்.

ஐந்து வருடங்களுக்கு முன் அருணாசலம் தன் குடும்பத்தோடு மாமனார் வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது தோட்டம் துறவுகளைக் காட்ட மாதவன் தன்னை அழைத்துப் போவான் என்று சரசு எதிர்பார்த்தாள். அவனோ அவளைப் பார்க்கக் கூடவில்லை. இரண்டொருமுறை அது பற்றி அவனிடம் கேட்ட போதும் மாதவன் "சும்மா நச்சரிக்காதே" என்று கூறிவிட்டுப் போய் விட்டான். தன்னை லட்சியம் அவன் செய்யவில்லை என்ற எண்ணம் சரசுவின் மனதில் பதிந்து விட்டது. அது கோபமாகி அவள் மனதில் புகைந்து கொண்டே இருந்தது. 

அதன் பிறகு மாதவனின் பெற்றோர்கள் மருதூருக்குப் போய் இரண்டொரு நாட்கள் இருந்து விட்டு வந்தார்கள். போகு முன் தம்மோடு வரும்படி மாதவனையும் அழைத்தார்கள். அவனோ தனக்கு வேலை இருக்கிறது எனக் கூறி மறுத்து விட்டான். சரசு தன் தாத்தா வுடனும் பாட்டியுடனும் நன்கு பழகினாள். ஆனால் அவர்கள் தம் மகன் மாதவனின் திறமை பற்றி அவளிடம் கூறியபோது அவள் எதுவும் பேசாமல் மௌனமாகவே கேட்டுக் கொண்டாள்.

உமையாள் தன் மகளிடம் திருமணம் பற்றிக் கூறிய போது தனக்கு ஏன் மாதவனைப் பிடிக்க வில்லை என்று காரணங்களையும் விளக்கினாள். அப்போது உமை யாள் "என் தம்பியைப் பற்றி உன்னை விட நான் நன்கு அறிவேன். அவனை நீ மணந்து கொண்டால் வாழ்நாள் முழுவதும் சுகமாக இருப்பாய்" என்று எடுத்து ரைத்தாள். ஆனால் சரசு மட்டும் இஷ்ட படாதது போல தலையை ஆட்டினாள்.

உமையாள் சரசுவின் மன நிலையைத் தன் கணவன் அருணாசலத்திடம் கூறினாள். அருணாசலமும் சிரித்தவாறே 'கவலைப்படாதே. இது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. அது மாதவன் பால் அவள் கொண்ட தப்பபிப்பிராயம். இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டால் எல்லாம் சரியாகி விடும்" என்றான். அதன்பின் அருணாசலம் தன் மாமனாருக்கு "திருமணத்திற்கு முன் பெண் பார்ப்பது என்பது நம் சம்பிரதாயம். ஆனால்  இதை ஒரு சுப நிகழ்ச்சியாக நடத்தாமல் மாதவன் சரசுவை இப்போது பார்த்துப் பேசும்படிச் செய்ய வேண்டும்.ஏதோ ஒரு வேலையைச் சொல்லி அவனை என் ஊருக்கு அனுப்புங்கள். அவனுடன் நீங்கள் யாரும் வரவேண்டாம்.” எனக் கடிதம் எழுதினான்.

கடிதத்தைப் படித்த மாதவனின் தந்தை அவனை அழைத்து "மருதூர் கைத்தறிச் சேலைகளுக்கு இப்போது நல்ல கிராக்கி இருக்கிறது. நீ போய் அதுபற்றி விவரங்களை முழுமை யாகத் தெரிந்து கொண்டு வா. இது விஷயத்தில் அருணாசலம் உனக்கு உதவுவான்" என்று கூறி அவனை மருதூருக்கு அனுப்பினான். 

மாதவன் மருதூரில் தன் அத்தான் வீட்டை அடையும் போது விடியற் காலை வேளை. அந்த வீட்டு வாசலில் சரசு கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். வீட்டு வாசலில் குதிரை வண்டி நிற்க, அதிலிருந்து மாதவன் இறங்கியதும் அவனைப் பார்த்த சரசு வெட்கப்பட்டவாறே உள்ளே ஓடி விட்டாள். அப்போது உமையாள் வாசலுக்கு வந்து திகைத்து நின்ற தன் தம்பி மாதவனைக் கண்டு "வா! வா! ஏன் அப்படியே நின்று விட்டாய்? அவள் வேறு யாருமில்லை, நம் சரசுதான். நன்றாக வளர்ந்து விட்டாள்" என்றாள்.

உள்ளே சென்ற சரசு அருணாசலத் தை எழுப்பி "அப்பா! மாமா வந்திருக்கிறார்" எனவே அவனும் "யார்? மாதவனா? ஏது! அத்தி பூத்தது போல வந்திருக்கிறான். என்ன விஷயம் என்று கேட்கலாம்" என்று கூறிக் கொண்டே எழுந்து வந்தான். அவன் மாதவனைப் பார்த்து "வா வா. முதலில் முகம் கழுவி பல் துலக்கி காப்பி சாப்பிடு. பிறகு பேசலாம்" என்றான்.

மாதவன் குளித்து விட்டு வந்து அருணாசலத்திடம் ''இவ்வூர் கைத்தறி சேலைகள் பற்றிய விவரம் அறிய வந்திருக்கிறேன்" என்றான். அருணாசலம் ஏதோ சொல்லப் போகையில் நல்லசாமியின் ஆள் வந்து "ஐயா உங்களைக் கையோடு அழைத்து வரச் சொன்னார்' என்றான்.அருணாசலமும் "சரி நீ போ. நான் பின்னாலேயே வருகிறேன்” என்று கூறி அனுப்பி விட்டு மாதவனிடம் “ஊர் பிரமுகன் என்றால் இதுதான் தொல்லை. ஏதாவது திறப்பு விழா என்று கூப்பிட்டுக் கொண்டே  இருப்பார்கள். சரசுவும் என் போல எல்லோருக்கும் உதவுபவள். எல்லோரையும் நன்கு அறிவாள். அதனால் உன்னை சரசு எல்லாத் தறிக்காரர்களிடமும் அழைத்துச் செல்வாள்' என்று கூறினான். பிறகு சரசுவிடமும் "நீ உன் மாமனை நெசவாளர்களின் வீடுகளுக்கு அழைத்துக் கொண்டு போ" எனக் கூறி விட்டு வெளியே சென்றான்.

சரசு மாதவனிடம் நூல் சேலை களைப் பற்றி விளக்கினாள். அவனோ அவளைப் பார்த்தவாறே "நீ உடுத்தி இருக்கிற சேலை அழகாக இருக்கிறது. நீயும் மிகவும் அழகாக இருக்கிறாய்" என்றான். வெட்கி அது கேட்டு அவள் புன்னகை புரிந்து தலை குனிந்து கொண்டாள். அன்று மாதவனை ஓரிரு கைத்தறியாளர் வீட்டிற்கும் அழைத்துச் சென்றாள்.

அன்றிரவு படுத்தபோது மாதவனுக்கு சரசுவின் நினைவே இருந்தது. 'சரசுதான் எவ்வளவு அழகாக வளர்ந்து விட்டாள்! எவ்வளவு விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறாள்! அவளது தகப்ப னாரைப் போலவே எல்லோருக்கும் உதவுகிறாள்! எல்லோரிடமிருந்தும் பாராட்டுதல்களையும் பெறுகிறாள்! நான் ஐந்து வருடங்களுக்கு முன் பார்த்த சரசு அல்ல இவள்.இவளைப் பற்றி முன் நான் எண்ணியது சரியல்ல"என்று நினைத்துக் கொண்டான்.

அதே இரவில் சரசுவும் "ஐந்து வருடத்திற்கு முன் நான் பார்த்த இந்த மாமா எவ்வளவு மாறி விட்டார்! அப்போது 'வியாபாரம்' 'வியாபாரம்' என்று ஒரே கவனமாக இருந்தார். அதனால்தான் அன்று என்னை அலட்சியப்படுத்தினார். இன்றோ மிக நன்றாக என்னுடன் பேசுகிறாரே. எனவே இவரைப் பற்றி இதற்கு முன் நான் எண்ணியது முற்றிலும் தவறே'' என நினைத்தாள்.

மறுநாள் காலை சரசு மாதவனுக்கு காப்பி கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது வேலுசாமி என்பவன் வந்து அருணாசலத்தைப் படுக்கை அறைக்குப் போய்ப் பார்த்து ''ஐயா! இன்று என் நிலத்தில் கிணறு வெட்டப் போகிறேன் அதற்கான கங்கைப் பூஜை உங்கள் கையால் தான் நடக்க வேண்டும்" என்றான். அருணாசலமும் "சரி நீ போ இன்னும் ஐந்தே நிமிஷத்தில் உன் தோட்டத்திற்கு வருகிறேன்" என்று கூறி அவனை அனுப்பினான்.

அதன்பின் அவன் மாதவனிடம் "மாதவா! இன்றும் உனக்கு உதவ முடியாது. சரசுவே உனக்கு உதவுவாள்" என்று கூறிவிட்டு வெளியே சென்றான். அதற்குப்  பிறகு மாதவனை அழைத்துக் கொண்டு கிளம்பிய சரசு 'இன்று நாம் தறிகாரர்களை காணப் போவதில்லை. எங்கும் தறியும் நெசவும் ஒரே மாதிரித்தான். அதனால் உங்களை இன்று இங்கிருந்து மூன்று மைல் தொலைவிலுள்ள ஒரு கோவிலுக்கு அழைத்துக் கொண்டு போகிறேன் அங்குள்ள அழகிய சிற்பங்களைக் காணலாம். உச்சி கால பூஜைவரை அங்கே இருந்து விட்டு பூஜைக்குப் பின் கிடைக்கும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு வருவோம்" என்றாள். மாதவனும் 'அப்படியே செய்யலாம்" என்று கூறவே இருவரும் அந்தக் கோவிலுக்குச் சென்றார்கள்.

கோவில் மண்டபத்திலுள்ள சிலைகளை சரசு மாதவனுக்குக் காட்டி அவற்றைப் பற்றிக் கூற மாதவனும் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவளிடமிருந்து அக் கோவில் பற்றி பல விஷயங்களைத் தெரிந்து கொண்டான். உச்சி வேளைப் பூஜைக்குப் பின் அவர்கள் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்தார்கள்.

மகிழ்ச்சியுடன் இருவரும் வந்ததைப் பார்த்த உமையாள் தன் மகளை தனியாக அழைத்துப் போய் ''உனக்கு என் தம்பியைப் பிடித்தி ருக்கிறதுதானே?” என்று கேட்டாள். சரசுவும் 'ஓ! பிடித்திருக்கிறது. மாமா முந்தைய மாமா இல்லை" என்று சிரித்துக் கொண்டே வெட்கப்பட்டவாறே சொன்னாள். அன்று மாலை அருணாசலத்திடம் தனிமையில் பேசிய மாதவன் 'அத்தான்! எனக்கு சரசுவை மிகவும் பிடித்துப் போயிற்று. அவளுக்குத் தான் எவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்கிறது. உங்கள் மாதிரியே இருக்கிறாள்' என்றான். 

அருணாசலமும் “உனக்கு பிடித்துப் போயிற்றல்லவா. இனி நீ தான் என் மாப்பிள்ளை" என்று அவன் முதுகில் தட்டினான். அன்றிரவு உமையாள் அருணாசலத் திடம் சரசு மாதவனை மணக்க சம்மதித்து விட்டாள் என்று கூறவே அருணாசலமும் "இப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியும். அன்று நான் சொன்னது நினைவில் இருக் கிறதா? சரசுவும் மாதவனும் சந்தித்துப் பேசினால் பிரச்சினை தீர்ந்து விடும் என்றேன். அது தீர்ந்து விட்டது பார்த்தாயா?" என்றான். விரைவிலேயே சரசுவின் திருமணம் மாதவனோடு நடக்க மாதவன் அருணாசலத்தின் மாப்பிள்ளையாக ஆனான்.

 கதை ஆசிரியர் :சிவனார் செல்வன்

அம்புலிமாமா



Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories



 

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."