sirukathaigal

சோழர்களின் சிறப்பு

பிரகதீஸ்வரர் ஆலயம் -சோழர்களின் சிறப்பு -Specialty of Cholas
 

சோழர்களின் சிறப்பு 

சோழமன்னர்கள் காவேரி டெல்டாப் பகுதியை ஒன்பதாவது நூற்றாண்டிலிருந்து பதிமூன்றாம் நூற்றாண்டுவரை சுமார் நானூறு ஆண்டுகாலம் ஆண்டனர். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கண்டு பொன்னான ஆட்சி அவர்களது காலத்தில் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் இசை, இலக்கியம், நடனம், ஓவியம் ஆகிய துறைகளுக்குப் பெரிதும் ஊக்கம் அளித்தனர்.

சோழ மன்னர்களில் முதலாவது ராஜராஜ சோழன் (கி.பி.985-1014) தஞ்சாவூரில் மிகப் பெரிய பிரகதீசுவரர் ஆலயத்தைக் கட்டினான். ஆறாண்டுகளில் 370 கிராமத்தவர்களின் அன்பளிப்பு கொண்டு இதைக்கட்டினார்கள். கோபுரம் மீதுள்ள  சிலைகளின் அடிப் பாகத்தில் நன்கொடை அளித்தவர்கள் பெயர்களை பொறிக்கும் முறையைக் கொண்டு வந்தவன் ராஜ ராஜ சோழனே. பலவித நன்கொடைகள் பணம் தானியம் என்ற வகையில் கிடைத்தன. 

சோழ சிற்பக்கலையின் உயர்வை இந்த ஆலயம் எடுத்துக் காட்டுகிறது. ஆலய விமானம் 64 மீ.உயரமானது. இது 80 டன் நிறையுள்ள ஒரே கருங்கல் மீது நிர்மாணிக்கப் பட்டது. இக்கல்லை உயரக் கொண்டுபோக கோவிலிலிருந்து 6 கி.மீ தூரத்திலுள்ள வயலூரிலிருந்து உறுதியான சாரம் கட்டப் பட்டதாம். கோவிலில் ஒரேகல்லில் உருவாக்கப் பட்ட நந்தியின் சிலை உள்ளது. இதன் உயரம் 3.5மீ. நீளம் 6 மீ நிறை 2.5 டன். இங்குள்ள லிங்கம் 3 மீ உயரம். இரண்டடுக்கு மேடை மீது இது அமைந்திருப்பதால் இதற்கு அபிஷேகம் செய்ய அர்ச்சகர் ஏணி மீது ஏறித்தான் செய்கிறார். ஆலய மண்டபத்தில் அழகிய சிற்பங்கள் உள்ளன. ஆலயச் சுவர்களில் பரத நாட்டியச்சிலைகள் பல பாவங்களை வெளிப்படுத்துபவையாக உள்ளன. நாயன்மார்களின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சைக் கலையில் சிலை 

சோழர்களுக்குப்பின் பாண்டியர் கள்ஐம்பது ஆண்டுகள் ஆண்டார்கள். பின் சிறிது காலம் மாலிக்காபூர் ஆட்சி அதன் பின் விஜயநகர மன்னர்கள் பிரதிநிதி களாய் நாயக்க அரசர்கள் 200 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். அவர்களேதஞ்சை அரண்மனையைக் கட்டியவர்கள். இலக்கிய, இசைக்கு ஆதரவளித்த ரகுநாத நாயக்கர் (1600-34) சரஸ்வதி மகாலில் ஓலைச் சுவடிகளை வைத்துப் பாதுகாக்க முதன் முதலாக ஏற்பாடு செய்தாராம். 

விஜயநகர சாம்ராஜ்ஜிய வீழ்ச்சிக்குப்பின் இங்கு மராட்டியர் ஆட்சி வந்தது. இவர்கள் பீஜப்பூர்சுல்தானின் பிரதிநிதி களாக முதலில் சகாஜி, பிறகு வெங்கோஜீயின் ஆட்சி இவர்கள் சத்ரபதி சிவாஜியின் வம்சத்தவர். 18வது நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சி இங்கு வந்தது. மராட்டிய மன்னர்களில் துல்சாஜி, சரபோஜி குறிப்பிடத்தக்கவர்கள். சரபோஜி தரங்கம் பாடிடேனிஷ் மிஷன் பள்ளியில் கல்வி பயின்றவர். இலக்கிய, இசை, நடனக்கலை என்றவற்றில் புலமை பெற்றவர். பரமரசிகர். சரஸ்வதி மகாலில் பண்டிதர்களை அமர்த்தி நூல்களை ஒழுங்கு படுத்தினார். இதில் இன்று சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மராட்டி, பெர்ஷியன், உருது, சில ஐரோப்பிய மொழிகள்ஆகியவற்றின் நூல்கள் 22,000க்கும் மேல் உள்ளன. 

இரண்டாம் சரபோஜி மன்னர் 

இவற்றில் எல்லாத்துறை நூல்களும் உள்ளன. சரபோஜி சேகரித்த அதிசயப் பொருள்கள் கொண்ட அருங்காட்சியகம் ஒன்றும் இங்கு உள்ளது. அரண்மனையில் எட்டடுக்கு கோபுரம், விநாயகர் கோவில், பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நடராஜ மண்டபம் முதலியவற்றை இம் மன்னர்கள் அமைத்தார்கள்.

சோழர்களும் மராட்டியர்களும் இசை நடனக் கலை ஆகியவற்றை நன்கு ஆதரித்தார்கள். கோவில்களில் நடனமாடும் தேவதாசி குடும்பங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. 400க்கும் மேலான இக் குடும்பங்கள் ஆலயங்களருகே வசிக்க வீடுகளும் பெற்றன. அக்காலத்தில் பரத நாட்டியம் 'சதிர்' என்று பெயர் பெற்றிருந்தது. 

தஞ்சை சகோதரர்கள் பொன்னைய்யா, சின்னைய்யா, சிவானந்தம், வடிவேலு 

இந்த சதிராட்டத்திற்கு 19வது நூற்றாண்டில் நான்கு விதிகள் அமைத்துச் சீராக் கினார்கள். தஞ்சை சகோதரர்களான பொன்னைய்யா, சின்னைய்யா, சிவானந்தம், வடிவேலு ஆகிய நால்வரும் சதிராட்டம் இப்படி யெல்லாம் இருக்க வேண்டு மென்று முறைப் படுத்தினார்கள். இந்த நாட்டியமுறை 'தஞ்சாவூர் பாணி' என்று பெயர் பெற்றுப் புகழ் அடைந்தது. இவர்கள் புகழ்பெற்ற சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவ ரான முத்து சுவாமி தீட்சிதரிடம் முறையாக இசை பயின்றவர்கள்.

சித்திரக்கலையிலும் தஞ்சாவூர் முறை என்று ஒரு தனிப்பட்ட அம்சம் உள்ளது. தடிமனான கோடுகள், சிறப்பு வண்ணங்கள் ஆங்காங்கு கண்ணாடித் தூள்கள். தங்க தகடுகள் பதித்தல் ஆகியன இக்கலையின் சிறப்பாகும். தஞ்சாவூர் வீணை, தஞ்சை மிருதங்கம் என இசைக் கருவிகளும் இன்றும் தனிச்சிறப்பு பெற்றுள்ளன.

கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்து சுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரியார் பிறந்த இடம் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவாரூர் தான். மூவரும் சமகாலத்தவர். தியாகராஜர் இங்கிருந்து பஞ்சநதிக்ஷேத்திரமான திருவையாறு வந்து வசிக்கலானார். இவர் ராம பக்தர். இவர்தம் தாய் மொழியான தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும் எண்ணற்ற கீர்த்தனைகள் இயற்றிப் பாடியும் வந்தவர். இவரது அண்ணனுக்கு இவரது போக்கு பிடிக்க வில்லை. அதனால் இவர்வழிபட்ட ராமர் விக்கிரகத்தைத் தூக்கிக் காவேரி நதியில் விட்டெறிந்தார். தியாகராஜர் அதனால் வருந்தி ராமரை வரும்படி பாடவே அந்த விக்ரகம் அவரிடம் வந்து சேர்ந்ததாம். 

கர்நாடக இசை தியாகராஜர்
திருவையாற்றில் காவேரிக் கரையில் தியாகராஜரின் சமாதி உள்ளது. 1920ல் புகழ் பெற்ற பாடகி பெங்களூர் நாகரத்தினம்மா இந்த சமாதியை நேராக்கி ஆண்டுதோற்றும் தை மாதம் அவருக்கு ஆராதனை நடத்த ஏற்பாடு செய்தார். அதில் எல்லா இசைக் கலைஞர்களும் இன்றும் கலந்து கொண்டு வருகிறார்கள். ஆண்டு தோறும் ஆராதனை நடந்து, தியாகராஜரின் 'பஞ்சரத்தினக் கீர்த்தனைகள்' இச்சமாதி முன்பாடப்படுகின்றன. காவேரி நீரோட்டத்துடன் இந்த பக்திரச இசை வெள்ளம் மக்கள் மனதைக் கொள்ளை கொண்டு விடுகிறது.

அம்புலிமாமா


Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories












கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."