லத்தியடி திருவிழா
![]() |
| லத்தியடி திருவிழா -Lathiadi festival |
லத்தியடி திருவிழா
விழாக்களின் போது, கரகம் ஆடுவது, வில்லிசை பாடுவது, மஞ்சள் நீரை ஒருவர் மீது ஒருவர் ஊற்றுவது என்று தானே பார்த்திருப்பீர்கள்! ஆண்களை, பெண்கள் லத்தியால் அடித்து விரட்டும் விழா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா! அது தான் ஹோலி.
பிரகலாதன் என்ற திருமால் பக்தனின் தந்தையான, இரண்யனின் சகோதரி ஹோலிகா எரிக்கப்பட்ட நாள். ஹோலிகாவிடம் ஒரு துப்பட்டா இருந்தது. இதை அணிந்து கொண்டால், நெருப்பு அவளைச் சுடாது. எனவே, தன்னை வணங்க மறுத்த மகன் பிரகலாதனை, ஹோலிகாவின் மடியில் அமர்த்தி, நெருப்பு குண்டத்தில் இறங்கச் செய்தான், இரண்யன்.
அந்த சமயத்தில், திருமாலின் கருணையால் பெருங்காற்றடித்து, துப்பட்டா பறந்தது. அது பிரகலாதனை மூடிக்கொண்டது. துப்பட்டாவை இழந்த ஹோலிகா சாம்பலானாள். அவளது பெயரில் உருவானதே, ஹோலி பண்டிகை.
கிருஷ்ணரும், அவரது காதலி ராதாவும், இந்த நிகழ்வின் அடிப்படையில், ஹோலி பண்டிகையை கொண்டாடினர். ஊர் மக்கள் மீது, வண்ணப்பொடிகளையும், வண்ண நீரையும் வாரி இறைத்து, அமர்க்களம் செய்தனர்.
உத்தரபிரதேசத்தின், மதுரா மாவட்டத்திலுள்ள பர்சானாவில், கிருஷ்ணரின் காதலியான, ராதா பிறந்தாள். இங்கு, ஒரு ஹோலி பண்டிகையின் போது வந்த கிருஷ்ணர், கோபியர் மீது வண்ணப்பொடிகளை வாரியிறைத்தும், அவர்கள் முகத்தில் பூசியும் விளையாடினார். கோபமடைந்த கோபியர், தடிகளை எடுத்து வந்து, கிருஷ்ணரை அடிக்க விரட்டினர்.
இப்போதும் இவ்வூர் பெண்கள், தங்களைக் கோபியராகத்தான் கருதுகின்றனர். ஹோலி அன்று, லத்தி எனும் தடிகளை எடுத்துக் கொண்டு, தங்கள் கிராம ஆண்களை அடிக்க ஓடுவர். இதற்காகவே இவ்வூர் மாமியார்களும், அம்மாக்களும் தங்கள் மருமகள்களுக்கும், மகள்களுக்கும் ஊட்டச்சத்து உணவு கொடுத்து தயார் செய்வர். இந்த நிகழ்வை பார்க்க, பல மாநிலத்தவரும், வெளிநாட்டவரும் கூட சுற்றுலா வருகின்றனர்.
இவ்விழாவுக்கு ‘லத்மார் ஹோலி' என, பெயரிட்டுள்ளனர், பர்சானா மக்கள். இவ்வாண்டு, மார்ச் 8ம் தேதி ஹோலி கொண்டாடப் படுகிறது. இவ்விழாவில் வண்ணப்பொடிகள் துாவி விளையாட, இன்னொரு காரணமும் உள்ளது. இக்காலத்தில், சூரியனின் கதிர்களில் இருந்து மாறுபட்ட வண்ணங்கள் தோன்றுகின்றன.
இந்த வண்ணங்கள், நம்மைச் சுற்றியுள்ள பொருட்களின் மீது படியும்போது, அவை ஏராளமான சக்தியைப் பெறுகின்றன. இதைப் பயன்படுத்தும் மக்கள் உடல் நலனும், மனநலனும் அடைவர். இதனாலேயே, இந்த வண்ணப்பொடி துாவும் வழக்கம் ஏற்பட்டது.
மஞ்சள் துாள், தரமான குங்குமம், வில்வப்பொடி, வேப்பிலை பொடி ஆகியவை கலந்து இது துாவப்படும்; உடலுக்கும் நல்லது. இப்போதிருப்பது போல, செயற்கை வண்ணங்களைத் துாவுவதை, ஹோலி காலத்தில் தவிர்க்க வேண்டும்.
கதை ஆசிரியர்:தி.செல்லப்பா
வாரமலர்
Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best storie

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."