sirukathaigal

குற்றம் குற்றமே !

 

குற்றம் குற்றமே !-Crime is crime!

குற்றம் குற்றமே !

முன்கதைச் சுருக்கம்:

'கார்த்திகா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணிக்கு  சேர்ந்த, தனஞ்ஜெயனுக்கு, முதல் வேலையாக, ஒரு கோடி ரூபாயை, திருப்பதி உண்டியலில் சேர்க்க சொல்லியிருந்தனர். அப்போது, அவனுக்கு, விவேக் என்பவனிடமிருந்து மிரட்டல் வர, அதை அலட்சியம் செய்து, நிறுவன உரிமையாளர் மகளான கார்த்திகாவுடன், திருப்பதிக்கு செல்ல முடிவெடுக்கிறான்.

 நிறுவன பங்குதாரரால், தனஞ்ஜெயனுக்கு என்ன மாதிரியான ஆபத்து உள்ளது என்பதை விளக்கமாக கூறுகிறாள், கார்த்திகா. அதையும் மீறி, கார்த்திகாவோடு, ஒரு கோடி ரூபாயுடன், திருப்பதிக்கு செல்லும் வழியில் தடுத்தனர், போலீஸ்சார் ஜிப் நிற்கவும், போலீஸ்காரர்களில் இருவர், காரை நோக்கி ஓடி வந்தனர்.

''உன் நல்ல நேரம் நிறுத்திட்ட. நிறுத்தாம போயிருந்தா, அடுத்த போலீஸ் பீட்ல பிடிச்சு, ‘ஓவர் ரைடிங்’ன்னு, வழக்கு பதிவு பண்ணியிருப்போம்," என்றார், அவர்களில் ஒருவர். “அதான் நிறுத்திட்டேனே... உங்களுக்கு என்ன வேணும், காரோட ஆர்.சி.கார்டு, இன்சூரன்ஸ் பேப்பர், என் டிரைவிங் லைசென்ஸ் இதுதானே?" “பி.எம்.டபிள்யூ., கார் வரையில, அதெல்லாம் பக்காவா இருக்கும்ன்னு எங்களுக்கு தெரியும். ஆமா, எங்க போறீங்க?” "திருப்பதி போய்க்கிட்டு இருக்கோம். காலைல, 6:30 மணி தரிசனத்துக்கு பணம் கட்டியிருக்கோம்.''

தனஞ்ஜெயன், ஒரு போலீஸ்காரரிடம் பேசும்போது, இன்னொரு போலீஸ்காரர், காருக்குள் கார்த்திகாவை பார்த்தபடியே, பின் இருக்கையில் இருந்த சூட்கேசையும் பார்த்தார். அந்த நொடிகளில், தன்னை நோண்டியபடி இருந்த போலீஸ்காரரின் உடையை  கூர்ந்து கவனித்தான், தனஞ்ஜெயன். பெல்ட்டில் ஒரு இறுக்கமும், தோள் பட்டை கேடர் கோட் தலைகீழாகவும் இருந்தது. காலில் கூட போலீசுக்கான ஷூ இல்லை; ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்திருந்தனர்.

"உள்ளே ஒரு பாக்ஸ் இருக்கு. அதை திறந்து காட்டுங்க," என்றபடியே, தனஞ்ஜெயன் அருகில் வந்தார், நோட்டம் விட்ட போலீஸ்காரர். அவர் உடையிலும், சரியான அளவில்லை. அடுத்த நொடியே, அவர்கள் உண்மையான போலீஸ் இல்லை என்பது, தனஞ்ஜெயனுக்கு புரிந்து விட்டது. “ஹவாலா பணம் கை மாறப் போறதா, எங்களுக்கு தகவல் வந்துருக்கு. சீக்கிரம் சூட்கேசை திறங்க," என்றார், மூன்றாவதாக வந்த போலீஸ்காரர். அவரிடம் ஒரு செயற்கையான பரபரப்பு. 

"ஒன் மினிட் சார்..." என்று கதவை திறந்து, காரில் ஏறிய அடுத்த நொடியே, வண்டியை, 'ஸ்டார்ட்' செய்து, பறக்க ஆரம்பித்தான், தனஞ்ஜெயன். "மிஸ்டர் தனா... என்ன இது, ஏன் போலீசை, 'அவாய்ட்' பண்ணிட்டு இப்படி வண்டி ஓட்டறீங்க," படபடப்புடன் கேட்டாள், கார்த்திகா. "மேடம், அவங்க, 'டூப்ளிகேட்' போலீஸ்காரங்க. அந்த, விவேக் ஆளுங்க பின்னால வர்றாங்களா பாருங்க?" என்றான். அவர்களும் துரத்திக் கொண்டு வந்தனர். 'அது சரி, எப்படி கண்டுபிடிச்சீங்க... ஆர் யூ ஷ்யூர்?" 

"சந்தேகமே இல்லை. வாடகை டிரஸ்சை கூட ஒழுங்கா போட துப்பில்லை. ஜீப்புல கூட போலீஸ்ங்கிற, 'ஸ்டிக்கரை' ஒட்டியிருந்தாங்க. அசலான போலீஸ் ஜீப்புல, 'பெயின்ட்'ல எழுதியிருக்கும். 'ஓ... அஞ்சு நிமிஷத்துல இவ்வளவு துாரம், 'நோட்' பண்ணி இருக்கீங்களா?” "எவ்வளவு நாவல் படிச்சிருப்போம், சினிமாவும் பார்த்திருப்போம்... இந்த ஐ.க்யூ., கூட இல்லேன்னா, நான் உளவியல் படிச்சதில் அர்த்தமில்லாம போயிடும் மேடம்..." என்றபடியே, காரை, 140 கி.மீ., வேகத்தில் செலுத்தினான்.

பின்னால், அவர்களும் துரத்திக் கொண்டு வந்தனர். வெறிச்சோடி கிடந்த பெரியபாளையம் செல்லும் சாலை மேல், ஆங்கில படங்களுக்கு நிகரான, ‘சேஸ்' நடக்கத் துவங்கியது. ஒரு வளைவில் திரும்பிய தனா, அருகில் தெரிந்த சோளக்காட்டு வயலுக்குள், துளியும் தயக்கமின்றி காரை உள் செலுத்தி, 'ஹெட் லைட்'டையும் அணைத்தான். துரத்தி வந்தவர்கள், கடந்து போவது தெரிந்தது. நல்லவேளை, அவர்கள் பக்கவாட்டில் பார்க்கவில்லை. பார்த்தாலும், கார் உள்ளே இருப்பது தெரிய வாய்ப்பில்லை.

கார்த்திகாவிடம், ஒரு பயப் பெருமூச்சு. "பயப்படாதீங்க...நமக்கு இப்ப துணிச்சலும், விவேகமும் தான் முக்கியம்..." என்றபடியே, காரை மெல்ல பின்னுக்கு எடுத்து, திரும்ப சாலைக்கு வந்தான். "நாம இனி, இந்த வழியில போக வேண்டாம். திருத்தணி வழியா, கனகம்மாசத்திரத்தை பிடிச்சு போயிடுவோம்," என்று வந்த வழியிலேயே திரும்பி காரை செலுத்தினான். "அவங்க துரத்திக்கிட்டு திருப்பதிக்கே வந்துட்டா என்ன பண்றது?” என்று படபடத்தாள், கார்த்திகா.

''உடனே ஒரு புகார் கொடுப்போம். அவங்கள ஊத்துக்கோட்டை எல்லையை, நம்ம போலீசும் தாண்ட விட மாட்டாங்க, " என்றபடி, காரை ஓரம் கட்டினான். தன் மொபைல் போனில், 'கூகுளு'க்குள் புகுந்து, ரெட்ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷன் எண்ணை, 'சேஸ்' செய்தான். இரவு பணியிலிருந்த சப்- இன்ஸ்பெக்டரை பிடித்தான். "சார், என் பேர் தனஞ்ஜெயன். நான், திருப்பதிக்கு சாமி கும்பிட போய்கிட்டிருக்கும் போது, ஒரு போலீஸ் ஜீப் என்னை வழி மறிச்சுது. அவங்க உண்மையான போலீஸ்காரங்க இல்லை. ஏதோ, 'ப்ராடு' கும்பல். 

"போக வர்ற கார்களை, 'ப்ளாக்மெயில்' பண்ணி பணம் பறிக்க, முயற்சி செய்யிறாங்கன்னு அவங்க டிரஸ்சை வெச்சு கண்டுபிடிச்சேன். அவங்ககிட்டேர்ந்து சாமர்த்தியமா தப்பிச்சுட்டேன். “அவங்க இப்ப, ஊத்துக்கோட்டை நோக்கி போய்கிட்டு இருக்காங்க. நீங்க, ஊத்துக்கோட்டை ஸ்டேஷனுக்கு தகவல் தந்தா, அவங்களை பிடிச்சுடலாம்,” என்று சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறி முடித்தான். 

"மிஸ்டர், நீங்க சொல்ற தகவல், 'பேக்' இல்லையே... நிஜம் தானே?" "பொய்யா இருந்தா, என் போனிலிருந்து பேசுவேனா சார்? நான், பிரபல, 'கார்த்திகா இண்டஸ்ட்ரீஸ்' எம்.டி., மிஸ்டர் கிருஷ்ணராஜோட செகரட்டரி சார். திருப்பதிக்கு சாமி கும்பிட போயிக்கிட்டு இருக்கிறதால, நேர்ல வர முடியலை. ஏன்னா, காலை, 6:30 மணிக்கு நாங்க அங்க இருக்கணும்," என்றான். "ரைட்... நாங்க பார்த்துக்கறோம். தேங்க்ஸ் பார் யுவர் இன்பர்மேஷன்," என்று போனை, 'கட் செய்தார், சப் - இன்ஸ்பெக்டர்.  மொபைல் போனை பாக்கெட்டில் போட்டபடி, கார்த்திகாவை பார்த்தான், தனஞ்ஜெயன்.

அவள், அவனது வேகமான செயல்பாட்டில் சுற்று பிரமித்தாள். "என்ன மேடம்... அப்படி பார்க்கறீங்க?" "டக் டக்னு முடிவெடுத்து, அதை வேகமா, செயல்படுத்துறீங்க. பண்றீங்க. ஆமா, நிஜ போலீஸ், அவங்கள பிடிச்சுடுவாங்களா?" என்றாள், கார்த்திகா. "கட்டாயம் பிடிச்சுடுவாங்க. போலீஸ்காரங்களால, 'அக்யூஸ்ட்' எந்த வேஷம் போடறதையும் சகிக்க முடியும். போலீஸ் வேஷம் போடுறதை மட்டும் சகிக்கவே முடியாது,' என்றான், தனஞ்ஜெயன்.

''ஒருவேளை, அவங்க தப்பிச்சுட்டா?" என்றாள், கார்த்திகா. "நாம் பாசிட்டிவா நினைப்போமே... அதையும் மீறி அவங்க நெருங்கினா, அப்ப அந்த சூழ்நிலைக்கு எப்படி நடந்துக்கணுமோ அப்படி நடந்துக்கலாம்," சளைக்காமல் பதில் சொன்னதோடு, காரையும் வேகமாய் செலுத்தினான். ' “என் வாழ்க்கையிலேயே இன்னிக்கு தான் சந்தோஷத்தை உணர்கிறேன். தேங்க் யூ மிஸ்டர் தனா,” என்றாள், கார்த்திகா. “என் வேலையை நான் செய்யறேன், மேடம். இதுக்கெல்லாம் நன்றி சொல்லாதீங்க."

"இது ஒரு ஆரம்பம் தான், மிஸ்டர் தனா... அடுத்தடுத்த, 'அசைன்மென்ட்' இதை விட ரொம்ப கடுமையா இருக்கும். இதே புத்திசாலித்தனம், தைரியம் அதுலயும் இருக்கணும்.” “என்ன மேடம்... லைட்டா என்னை, 'ஷாக்' பண்ணி பார்க்கறீங்களா?” "லைட்டால்லாம் இல்லை தனா... ரொம்ப, 'சீரியசாவே' சொல்றேன். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா, நான் சுதந்திரமா வெளி உலகத்தையே இன்னிக்கு தான் பார்க்கிறேன்,' என்று மேலும் அவனுக்கு அதிர்ச்சியளித்தாள்.

"என்ன மேடம் சொல்றீங்க?" "எஸ்... அப்பாவால ஒரு, 'எஸ்கார்ட்’ இல்லாம எங்கேயும் போக முடியாது. நானும் ஆபீஸ் விட்டா பங்களா... பங்களா விட்டா ஆபீஸ்ன்னு, கடிவாள குதிரையா இருக்குறதால தான். ' "கொஞ்சம் புரியுற மாதிரி சொல்றீங்களா? "நான், எங்க போனாலும், அந்த விவேக் என்னை பின் தொடர ஆரம்பிச்சுடுவான். சுதந்திரமா நான் எதையுமே செய்ய முடியாது. எங்கேர்ந்து வருவான்னே தெரியாது... 'ஹாய் டார்லிங்'ன்னு என் முன்னால வந்து நிற்பான். குறுகுறுன்னு பார்ப்பான்," என்றாள், கார்த்திகா.

“ஓங்கி கன்னத்துல ஒண்ணு விட வேண்டியது தானே?" "அப்படி ஒருமுறை நான் அடிச்சுட்டு, அவனால பட்ட பாடு எனக்கு தான் தெரியும். ” “அப்படி என்ன பண்ணினான்?” “விடாம போன் பண்ணினான். 'சுவிட்ச் ஆப்? பண்றத தவிர, எனக்கு வேற வழி தெரியல. நான், போனை, 'சுவிட்ச் ஆப்' பண்ணவும், என் அப்பாவுக்கு போன் பண்ணி, 'எங்க கல்யாணம் எப்ப அங்கிள்'ன்னு கேட்க ஆரம்பிச்சுட்டான். ''அவரும், 'சுவிட்ச் ஆப்' பண்ணவே, அவனோட அப்பாவான தாமோதரனோடு, நேரா பங்களாவுக்கு வந்துட்டான். அப்பா உடம்பு இருக்குற நிலையில, அவருக்கு, பி.பி., அதிகமாகி ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்."

“என்ன மேடம்... நீங்க சொல்ற எல்லாமே மிகையான, சினிமாவுல வர்ற மாதிரியே இருக்கே. இப்படியெல்லாம் கூடவா ஒருத்தன் நடந்துப்பான்... உங்க செல்வாக்குக்கு, போலீஸ் கமிஷனருக்கு ஒரு போன் பண்ணினா போதுமே?" தனஞ்ஜெயனின் கேள்வி முன், கண்களில் கண்ணீர் தளும்ப, மவுனமானாள், கார்த்திகா. "ஐயோ, ஏன் மேடம் அழறீங்க?" "என்னால உங்க கேள்விக்கு எந்த பதிலையும் சொல்ல முடியாது, தனா.... சுருக்கமா சொன்னா, நான் மிகப்பெரிய பாவி. அவ்வளவு தான், இப்போதைக்கு என்னால சொல்ல முடியும்," என்றாள், கார்த்திகா. 

"நீங்க அழாதீங்க, மேடம், எல்லாம் சரியாயிடும். நாம முதல்ல, பணத்தை கோவில்ல சேர்ப்போம். அந்த திருப்பதி ஏழுமலையானையும் மனசார வேண்டிக்குவோம். நீங்க வேணா பாருங்க, இனி, எல்லாமே நல்லபடியா தான் நடக்கும்,” அவளுக்கு நம்பிக்கையளித்தான், தனஞ்ஜெயன். உண்டியலில் கட்டுக் கட்டாய் நோட்டுகளை போட்டு விட்டு, உயர் அதிகாரிகளின் துணையோடு, விசேஷ தரிசனத்தை முடித்தனர். கோவிலை விட்டு வெளியே வரவும். அவன் மொபைல் போன் ஒலித்தது. 

"மிஸ்டர் தனஞ்ஜெயன், உங்க, “இன்பர்மேஷன்” ரொம்ப கரெக்ட். ஆனா, எங்க, 'டீமால அவங்கள பிடிக்க முடியலை, தப்பிச்சுட்டாங்க...' என்றார்,சப் இன்ஸ்பெக்டர். தனஞ்ஜெயனுக்கு கொஞ்சம் சுருக்கென்றானது. "ஆமா, நீங்க தரிசனம் முடிச்சுட்டீங்களா?" என கேட்டார், சப் - இன்ஸ்பெக்டர். “இப்பதான் வெளிய வரேன். அவங்களை பிடிச்சிருந்தா, சந்தோஷப்பட்டிருப்பேன். விட்டுட்டீங்களே சார்," என்றான், தனஞ்ஜெயன்.

“நீங்க வருத்தப்படாதீங்க. அவங்க தற்காலிகமாதான் தப்பிச்சுருக்காங்க. நிச்சயம் பிடிபடுவாங்க,'' என்றார், சப்- இன்ஸ்பெக்டர். "அவங்களை பிடிக்க ஒரு வழி இருக்கு. சென்னையில விவேக்னு ஒருத்தர்..." என, தனஞ்ஜெயன் ஆரம்பிக்கவும், மிக வேகமாய் அவன் வாயை பொத்தி, பதற்றத்தோடு தடுத்தாள், கார்த்திகா. அவனுக்கும் புரிந்தது. போனை அவன் கையிலிருந்து பிடுங்கி, லைனை, 'கட்' செய்தாள், கார்த்திகா. “ஏன் மேடம், தடுக்கறீங்க... அந்த திருட்டு போலீசை பிடிக்க வேண்டாமா?" என்று சற்று ஆவேசமானான், தனஞ்ஜெயன்.

"இல்லை... எதுக்காகவும் போலீஸ்கிட்ட நம் விஷயம் எதையும் பேசாதீங்க," என்றாள். “என்ன மேடம் இது... விவேக்கோட ஆட்கள் தானே அவங்க ? விவேக்கை பிடிச்சு வெளுத்தா, அவங்க யார்னு தெரிஞ்சுட போகுது," என்றான். "நோ... அது, வேற மாதிரி போயிடும். "வேற மாதிரின்னா?" "மிஸ்டர் தனா... நான் உங்க ஜே.எம்.டி., நான் சொல்றதை கேளுங்க.'' சற்று கட்டளை குரலில் சொன்னாள், கார்த்திகா.

அவள் முகத்திலும் தர்மசங்கட ரேகைகள். அப்போது சிலர், வீடியோ கேமராவுடன் வந்து, கார்த்திகாவையும், தனஞ்ஜெயனையும் படம் பிடிக்க முனைந்தனர். "பெரிய டோனர் நீங்க... ஏதாவது சொல்றதா இருந்தா சொல்லலாம்," என்றார், நிர்வாக அதிகாரி. "நோ சார்... முதல்ல கேமராவை, 'வைண்ட் ஆப்' பண்ணுங்க. ப்ளீஸ், உங்களை கெஞ்சி கேட்டுக்கறேன்,'' என்று கேமரா கோணத்தை விட்டு விலகிச் சென்றாள், கார்த்திகா. கேமராவை தோளை விட்டு இறக்கினார், கேமரா மேன்.

"எந்த, 'பப்ளிசிட்டி'யையும் அவங்க விரும்பலை. இது, காணிக்கை பணம். பெருமாளுக்கு போய் சேர்ந்ததுல எங்களுக்கு சந்தோஷம். அது போதும் சார்..." என, நிர்வாக அதிகாரியிடம் கூறினான், தனஞ்ஜெயன். அச்சமயம், அவன் மொபைல் போன் திரும்ப ஒலித்தது. சற்று ஒதுங்கிச் சென்று, காதை கொடுத்தான். "என்ன தனஞ்ஜெயன், பணத்தை உண்டியல்ல போட்டுட்ட போலிருக்கு?" விவேக்கின் குரல், தனஞ்ஜெயனின் காது மடல்களை விடைக்கச் செய்தது. 

"ஆமாம், மிஸ்டர் விவேக்... ஒரு செகரட்டரியா, என் கடமையை, நல்ல காரியத்தோட துவங்கியிருக்கேன். என்னால உங்கள மாதிரி உத்தமர்களோட பேச்சை எல்லாம் கேட்டு நடக்க முடியாது. ஐ ஆம் வெரி சாரி, மிஸ்டர் விவேக்..." என்றான், தனஞ்ஜெயன். "நீ தப்பு பண்ணிட்ட... இருந்தாலும், உனக்கு போனா போகுதுன்னு, ஒரு வாய்ப்பு தரேன். அந்த வேலையை விட்டுடு. இல்ல, நிச்சயம் நீ உயிரையே விட வேண்டியிருக்கும்..." மறு முனையில், பலத்த எச்சரிக்கையுடன் போனை, 'கட்' செய்தான், விவேக், தனஞ்ஜெயனின் முகத்தில் அதிர்ச்சி ரேகைகளின் கோணலான ஓட்டங்கள் தென்பட்டது!

தொடரும்

கதை ஆசிரியர்: இந்திரா சவுந்தர்ராஜன்

வாரமலர் 


Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best storie

 

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."