sirukathaigal

அன்புக் கணவன் !

அன்புக் கணவன் !-Beloved husband!


அன்புக் கணவன் !

திட்டமிட்டபடி, நேரத்தைப் பயன்படுத்திக்  கொண்டிருந்தாள். ப்ரித்திகா. இன்று, அலுவலகத்தில் மிக முக்கியமான உள்நாட்டு, வெளிநாட்டு வல்லுனர்கள் கலந்து கொள்ளும் கூட்டம். முழுப் பொறுப்பும், பரித்திகாவுடையது. எதையும் பொறுப்பு, ஈடுபாட்டுடன் வெற்றிகரமாகச் செய்து முடிப்பாள் என, ப்ரித்திகா மீது நிறுவனத் தலைவருக்கு அளவற்ற நம்பிக்கை இருந்தது. 

பிற அலுவலர்களின் ஒத்துழைப்பை உள்ளன்புடன் பாராட்டி, சின்னச் சின்ன பரிசுகளை வழங்கி, மகிழ்விப்பாள்.உடன் பணிபுரிபவர்களின் இல்ல விழாவில் தவறாமல் கலந்து கொண்டு, குடும்பத்தினர் எல்லாரிடமும் பேசுவாள். பணிக்காக, குடும்பத்தையோ, குடும்பத்திற்காக அலுவலகப் பணியையோ விட்டுக்கொடுக்காமல் குறைபடாமல் பார்த்துக் கொள்வாள். 

காய் நறுக்க, பாத்திரம் தேய்க்க, வீடு துடைக்க துணி உலர்த்த ,தொட்டிச் செடி பராமரிப்பு என வீட்டு வேலைகளைச் செய்ய,இரண்டு பணிப்பெண்களை நியமித்துள்ளாள்.ஆனால் சமையலை  ப்ரித்திகா தான் செய்வாள். 'இரண்டு வேலைக்காரர்கள் தேவையா... அனாவசிய செலவு...' என கேட்பர், சிலர். 'கை நிறைய சம்பளம். கணவர், குழந்தையோடு ஆற அமர நேரத்தை செலவழிக்கணும்; அவர்களுக்குப் பிடித்த உணவுகளைச் சமைத்துத் தரணும்.

'டென்ஷன்' இல்லாமல், கிளம்பி அலுவலகம் போகணும். இப்படியெல்லாம் இருக்கணும்னா, உதவிக்கு, இரண்டு பேர் தேவை. 'அப்படி இல்லைன்னா வெந்தும் வேகாததை தின்று, அவசர அவசரமா ஓடி, 'டென்ஷனை ஏத்திக்கிட்டு, ரத்த அழுத்தத்தோடு வாழ வேண்டியது தான். கூடுதல் செலவு தான், அதனால் நஷ்டம் இல்லை...' என்பாள்.

இதனால் தான், ப்ரித்திகாவால் அலுவலக மற்றும் குடும்பப் பணிகளை ரசிச்சு செய்ய முடிகிறது.அரங்கத்தில் கூட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. தேவையான குறிப்பு, கோப்புகளை நிறுவனத் தலைவரிடம் இரண்டு வீடு துடைக்க, துணி உலர்த்த, தொட்டிச் செடி நாட்களுக்கு முன்பே கொடுத்து, விளக்கிக் கூறியிருந்தாள், ப்ரித்திகா.

நேற்று மாலை, கூட்டத்தில் விவாதிக்க வேண்டியவை, கூட்ட முடிவு, தங்கள் நிறுவனத்திற்குச் சாதகமாக அமைவதற்கான விஷயங்கள் பற்றி, நிறுவனத் தலைவரிடம் பேசினாள். நிச்சயம் இந்தக் கூட்டம், நற்பெயரையும், புராஜெக்டையும் பெற்றுத்தரும் என்று நம்பினார், நிறுவனத் தலைவர்.

ப்ரித்திகாவின் நுண்ணறிவு, நிறுவனத் தலைவருக்கு பிரமிப்பைத் தந்தது. இந்தப் பெண், எப்படி ஒரு விஷயத்தை பல கோணத்தில் சிந்திக்கிறாள்... ஆச்சரியப்பட்டுப் போனார். அவளைப் பாராட்ட மனசு விரும்பியது. இருக்கட்டும், நாளை கூட்டம் வெற்றிகரமாக முடியட்டும் என, தீர்மானித்துக் கொண்டார். 

கூட்டம் வெற்றிகரமாய் நகர்ந்து செல்வதில், ப்ரித்திகாவின் பங்கு அதிகமாக இருந்தது. அதற்காக அவள் அலட்டிக் கொள்ளவில்லை; யாரிடமும் அதிகாரம் காட்டவில்லை. குறிப்பிட்ட இடைவெளியில் உயர்தர இனிப்பு, கார வகைகள், காபி, குளிர்பானம் என, பரிமாறப்பட்டது. தீவிரமான பணியிடையே உண்டாகும் மன அழுத்தத்தை,சிறு தின்பண்டங்கள் இலகுவாக்கிறது என்பது தான் உண்மை. 

பசி தீர்ப்பதற்காக இவை வழங்கப்படுவதில்லை. நிறுவனத்தின் வெற்றியை நோக்கி,விவாதங்கள் பயணித்துக் கொண்டிருந்தது. நிறுவன லைவரிடம் சில விஷயங்களைத் தெளிஞபடுத்திக் கொள்ள விரும்பி, சில கேள்விகளைக் கேட்டார், ஸ்வீடன் நாட்டு வல்லுனர் தெளிவுபடுத்திக் கொண்டிருந்தார், நிறுவனத் தலைவர். ஆனால், அது, கேட்டவருக்குப் போதுமானதாக இல்லை.

ஸ்வீடன் நாட்டு வல்லுனர் மற்றும் நிறுவனத் தலைவரை அணுகி, பணிவுடன், “எக்ஸ்க்யூஸ்மி சார்!" என்றாள், ப்ரித்திகா.  ஓ.கே., என்ற விதத்தில் இருந்தது, நிறுவனத் தலைவரின் சமிக்ஞை. மழையென, தெளிவாக, நிதானமாக விபரங்களை வரிசைப்படுத்தினாள், ப்ரித்திகா. வல்லுனரின் முகத்தில் வியப்பு நிறைந்த மகிழ்ச்சி. ''ஓ.கே., ஓ.கே..'' வந்திருந்த அனைவரும், நிறுவனத் தலைவருடன் கை குலுக்கி, ஒப்பந்தம் கையெழுத்தானது.

விஷயம் அலுவலகம் முழுவதும் பூங்காற்றாய் பரவியது. எங்கும் மகிழ்ச்சி அலை. மதிய உணவு, ஐந்து நட்சத்திர உணவு விடுதியில் ஏற்பாடாகி இருந்தது. நிறுவனத் தலைவருடன் ப்ரித்திகாவும் இணைந்து, விருந்தினரை உபசரித்தாள். பெயருக்கு முந்திரி, பாதாம் என்று நெய்யில் வறுத்த  பருப்புகளோடு தங்கள் உணவை முடித்துக் கொண்டனர், நிறுவனத் தலைவரும், ப்ரித்திகாவும்.

தன்னுடன் அலுவலகம் திரும்பிய, ப்ரித்திகாவை, மற்ற ஊழியர்கள் முன்னிலையில் புகழ்ந்தார்; அவளின் திறமையைப் பலவிதங்களில் பாராட்டினார், நிறுவனத் தலைவர். அவளின் இருக்கைக்கு வந்து, அதுவரை அணைத்து வைத்திருந்த மொபைல் போனை உயிர்ப்பித்தாள்,ப்ரித்திகா. யாரெல்லாம் அழைத்திருக்கின்றனர் என, அவளின் கண் பார்த்துக் கொண்டே வந்தது.

நிஷாந்த். அவளின் கணவன், இருமுறை அழைத்திருக்கிறான். ப்ரித்திகாவின் அலுவலகத்தில் முக்கியமான கூட்டம் நடைபெறுவதும், அவளின் பங்களிப்பு அதிமுக்கியம் என்பதும், அவனுக்குத் தெரியும். ஆனாலும், அழைத்துள்ளான். நிஷாந்தை போனில் தொடர்பு கொண்டாள், ப்ரித்திகா. "ப்ரீ... மீட்டிங் எப்படி இருந்துச்சு?'' அவனின் கேள்வியில் ஆர்வம் கொட்டிக் கிடந்தது. 

“சக்சஸ்ங்க... ரொம்ப பெரிய ஆபர். கம்பெனியோட வளர்ச்சி எங்கேயோ போயிடும்,' உற்சாகம் நிரம்ப கூறியவள், “என்னைக் கூப்பிட்டிருக்கீங்களே... ஏதும் விஷயம் உண்டா" என்றாள்.
"ஆமா, ப்ரீ... யாருக்கோ, 'ஆன்லைன்' மூலம் பணம் அனுப்பணும்ன்னு சொன்னியே..." 

"ஆமாங்க, மதியம் வரை, 'மீட்டிங்' நடந்ததாலே அனுப்ப முடியல. இதோ, இப்ப அனுப்பிடறேன். நல்லவேளை நினைவுபடுத்தினீங்க.” "வேணாம், ப்ரீ... விபரம் கொடு.நான் அனுப்பிடறேன்,” அவசரமாக மறுத்தான், நிஷாந்த். “ஏங்க, நீங்க அனுப்பினா என்ன... நான் அனுப்பினா என்ன? ‘ஆன்லைன்’ல தானே அனுப்பப் போறோம்." "வேணாம்னா, கேளு ப்ரீ.' அவன் குரலில் லேசான அலுப்பும், கண்டிப்பும் தெரிந்தது. 

''நீ குறிப்பு அனுப்பு, நான் பார்த்துக்கிறேன்." "சரிங்க, இதோ அனுப்புறேன். ஏன்னு மட்டும் சொல்லுங்க.
"ப்ரீ... ஏதாவது அவசரத்திலே தப்பா அனுப்பிடுவே. அப்புறம், பணம், 'வேஸ்ட்' ஆயிடும். உனக்கு அந்த விபரம் எல்லாம் பத்தாது," என்றான். ஆத்திரத்தில், 'நிஷாந்த்' என்று குரல் கொடுக்க நினைத்த ப்ரித்திகா, மென்மையாய், வீணாக எதற்கு விவாதம் என்று நினைத்து, ''சரிங்க!" என்றாள். 

சட்டென்று அவள் மனதில் நிறுவனத் தலைவரும், மற்ற நண்பர்களும் பாராட்டியது வந்து போனது.கூடவே அவள் அதரத்தில் புன்சிரிப்பும் நெளிந்து நின்றது. சிரிப்பின் பொருள் ப்ரித்திகாவுக்கு மட்டுமே புரியும்.


கதை ஆசிரியர்:உ.அனார்கலி 

வாரமலர்


Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best storie

 

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."