sirukathaigal

அன்புடன் அந்தரங்கம் குழந்தை ஏக்கம்



 குழந்தை ஏக்கம்-Baby longing



அன்புடன் அந்தரங்கம் 

குழந்தை ஏக்கம் 

வாசகர் கேள்வி: 

அன்புள்ள அம்மாவுக்கு

வயது: 32, கணவர் வயது: 36. என்னுடைய, 22 வயதில், காதல் திருமணம் செய்து கொண்டேன். இரு வீட்டினரையும் எதிர்த்தே நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். எங்கள் இருவரது பெற்றோரும் பணக்காரர்கள், சகல வசதி படைத்தவர்கள். 

அவர்களை மீறி, திருமணம் செய்து கொண்டதில், இரு வீட்டாருமே எங்களை ஒதுக்கி வைத்தனர். உறவினர்களின் கேலிக்கும் ஆளானோம். படிப்பை அரைகுறையாக முடித்திருந்த நிலையில், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடினோம். ஆனாலும், மனதிற்குள் ஒரு வைராக்கியம். எங்களை எதிர்த்த, கேலி செய்தவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும், அவர்களை விட ஒருபடி மேலாக வளர வேண்டும் என்று உறுதி எடுத்தோம்.

எங்களுக்குள் எந்த பிரச்னையும் எழாமல், இறுதி வரை கைக் கோர்த்து இந்த சவாலில்' வெற்றி பெற வேண்டும் என, முடிவு செய்தோம். நிரந்தரமான பணி எதுவும் கிடைக்காததால், கிடைத்த வேலைக்கு சென்று நான் சம்பாதிக்க' ஆரம்பித்தேன். சுய தொழில் செய்ய விரும்பி, நண்பர்களின் உதவியுடன், 'ஆட்டோமொபைல் ஓர்த் ஷாப்' ஒன்றை சிறிய அளவில் ஆரம்பித்தார், கணவர். 

வாழ்க்கையில் நிறைய சறுக்கல்களையும், அனுபவங்களையும் பெற்று, 10 ஆண்டுகளில் எங்களுக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கினோம். அதன்பின், ஏற்றம் மட்டுமே கண்டு வருகிறோம். எங்கள் இரு வீட்டாரையும் விட, இன்று நாங்கள் சகல வசதிகளுடன் இருக்கிறோம். இப்போது பிரச்னை என்னவென்றால், 10 ஆண்டுகள் ஓயாத ஓட்டத்தில், குழந்தை பெற்றுக் கொள்வதை பற்றி நினைத்துக் கூட பார்க்கவில்லை.

இப்போது, குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தபோது, கைக்கூடவில்லை. என்னிடம் தான் குறை என்று தெரிய, சிகிச்சை எடுத்து வருகிறேன். கோவில், குளம் என்று சுற்றி வருகிறோம். இப்படி வளர்ச்சியடைந்த நாங்கள், குழந்தை விஷயத்தில் தோற்று விடுவோமோ என்று பயமாக இருக்கிறது. 

ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். ஆனால், அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை, கணவர். இதன் காரணமாக, எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடுமோ, பட்ட கஷ்டமெல்லாம் வீணாகி விடுமோ என்று வருந்துகிறேன். எனக்கு நல்ல ஆலோசனை வழங்குங்கள். அம்மா.

ஆசிரியர் பதில்

அன்புள்ள மகளுக்கு

இருதரப்பு பெற்றோரையும் எதிர்த்து, நீங்கள் திருமணம் செய்து கொண்டது. வெறும் கரன்சி காகிதம் சம்பாதிக்கவா... தொடர்ந்து, 10 ஆண்டுகள், தலைதெறிக்க ஓடி இனிமையான தாம்பத்யத்தை தொலைத்துள்ளீர்கள்.

பணம் சம்பாதிக்கும்போதே தாம்பத்யம், அறுசுவை உணவு, தேன் நிலவு, சிறு ஊடல் கூடல், இசை, பூந்தோட்டம் அமைத்து பராமரித்தல், ஒருநாள் சுற்றுலாக்கள், சினிமா மற்றும் கோவில் என, எல்லா உல்லாசங்களையும் அனுபவித்திருக்க வேண்டும். 

கடந்த, 10 ஆண்டுகளில், சில பல லட்சங்களை சம்பாதித்த நீங்கள், இரு குழந்தைகளை பெற்றிருந்தால், உங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைத்திருக்கும். என்னிடம் தான் குறை என்று தெரிய...' என, எழுதியிருக்கிறாய். 

வயது, உடலியல் பிரச்னைகள், ஹார்மோன்ஸ் பிரச்னை, வாழ்க்கை முறை, சுற்றுப்புற சூழல் காரணிகள் மற்றும் மன ரீதியான பிரச்னைகள் என, அனைத்தையும் அலசி ஆராய்ந்து தான், பெண்களின் மலட்டுத் தன்மையை உறுதி செய்ய முடியும். பெரும்பாலான மலட்டுத்தன்மைகள் குணப்படுத்தக் கூடியவையே.

இனி, நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...

உங்கள் தொழில்களை நம்பிக்கையானவர்களிடம் ஒப்படைத்து, இரண்டாவது தேனிலவு போங்கள் இரண்டாவது தேனிலவு ஜெயிக்காவிட்டால், உங்களிருவர் உடல் நிலை பற்றி, நம்பர் ஒன் செக்ஸாலஜிஸ்டிடம் இரண்டாம் அபிப்ராயம் பெறுங்கள். 

மூன்று ஆண்டுகள் தரமான சிகிச்சை, தாம்பத்யம் பற்றிய மனநல ஆலோசனை பெறுங்கள் எல்லா முயற்சிகளும் தோற்றுப் போனால், இறுதியாக தத்து எடுத்துக் கொள்வதைப் பற்றி யோசிக்கலாம். கணவர் உறவில் குழந்தையை தத்தெடுக்க சொல்கிறாரா... அனாதை குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறாரா என்பதை பற்றி ஆலோசித்து முடிவு எடுங்கள்.

தத்து எடுக்க கணவர் சம்மதித்தால், அதற்கான அரசின் வழிகாட்டல்களையும், சட்ட விதிமுறைகளையும் கடைபிடியுங்கள். பெற்றால் தான் பிள்ளையா, தத்தெடுத்தாலும் பிள்ளை பிள்ளை தான். வறட்டு பிடிவாதத்தை விட்டு விட்டு, குழந்தைகளின் பேரன்பில் நீயும், கணவரும் நனையுங்கள்.


கதை ஆசிரியர்:சகுந்தலா கோபிநாத்  

வாரமலர்


Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best storie

 



கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."