sirukathaigal

அண்ணன் தம்பி !

 
அண்ணன் தம்பி !-Brother, brother!

அண்ணன் தம்பி !

தினமும் அதிகாலையில், 5:00 மணில்கெல்லாம் எழுத்து, நடைபயிற்சி முடித்து வந்ததும், வீட்டில், பேப்பருடன் சாய்வு நாற்காலியில் ஐக்கியமாவார், நீலகண்டன், ஆனால், இப்போதெல்லாம் குளித்து முடித்து வெளியே எங்கேயோ போய் வருவது, வீட்டிலுள்ள அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

மனைவி மணிமேகலைக்கு அறிந்து கொள்ள ஆர்வம் இருந்தாலும், தைரியம் இல்லை. அவரது எதிரே நின்று கேள்வி கேட்கும் திராணி, வீட்டில் வேறு யாருக்கும் இல்லை. அன்று துணிச்சலோடு, ''காலையில் தினமும் எங்க போயிட்டு வாரீங்க?" என்றாள், மணிமேகலை. "தினமும் அண்ணன், தம்பியை பார்த்துட்டு வரேன், " என்று முரட்டுக்குரலோடு கூற, மணிமேகலை வாய்பிளந்து அதிர்ச்சியில் உறைந்து போனாள்; அங்கிருந்த மூன்று மகன்கள் மற்றும் மருமகள்கள் ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றிருந்தனர்.

அத்தை... மாமா அவங்க அண்ணன் -தம்பியை தினமும் பார்த்துட்டு வர்றாரா?" வியப்புடன் கேட்டாள், மூத்த மருமகள். “அதான் எனக்கும் புரியல. 20 வருஷ பகை, பேச்சு வார்த்தை கிடையாது. 'என் உயிர் இருக்கும் வரையில் அவங்க முகத்தை பார்க்க மாட்டேன்'னு வீராப்பா பேசுனவரா இப்படி மாறிட்டார்... என்னால இத நம்பவே முடியல," மணிமேகலையின் பேச்சில் அதிர்ச்சி மிதந்துக் கொண்டிருந்தது. 

"அம்மா... நம் அப்பா பழசெல்லாம் மறந்துட்டார் போல," சொன்னான், மூத்த மகன். "அத்தே... பெரிய மாமாவையும், சின்ன மாமாவையும் சந்திக்கற விஷயம் இவ்வளவு நாளா எப்படி வெளிவராம இருந்துச்சு, இரண்டாவது மருமகள். "ஒண்ணுமே புரியலை. இது எவ்வளவு நாளாய் நடக்குது? மனுஷன் எனதயும் எங்கிட்ட சொல்றது இல்ல. அந்த ரெண்டு மாமாவின் மருமகள்கிட்ட கேட்டால், விஷயம் தெரிஞ்சுடப் போகுது. மூத்த மாமாவின் மருமகள் கீதாவிடம், நீ போன் கேட்டு கேளேன்,'' என, தன் மூத்த மருமகளை வற்புறுத்தினாள், மணிமேகலை.

 "ஹலோ கீதா...எங்க மாமாவும், உங்க மாமாவும் அடிக்கடி சந்திக்கறாங்களா?" "இல்லியே... இந்த வீட்டிற்கு நான் மருமகளா வந்ததிலிருந்து ரெண்டு மாமாவும் பக்கத்துல நின்னு பார்த்ததே இல்ல.எப்படி, இந்த சந்தேகம் வந்தது?" "இப்போ கொஞ்ச நாளாய், 'வாக்கிங்' போயிட்டு வந்ததும், 'அண்ணன், தம்பியை பார்க்க போறேன்'னு எங்க மாமாவே, அத்தையிடம் சொன்னாரு, அதான் கேட்டேன்.'

"அப்படியா... தினமும் எங்க மாமாவும், சின்ன மாமாவும், அதிகாலையில டீ குடிக்க போவாங்க. ஒருவேளை யாருக்கும் தெரியாம சந்திப்பாங்களோ!" “அப்படித்தான் இருக்கும் போல... சரி, சின்ன மாமா வீட்ல இந்த விஷயத்தை எப்டியாவது கிளறு. 20 வருஷமா பிரிந்திருந்த நம் குடும்பம், இப்பவாவது ஒண்ணா சேரட்டும்.'' "சரி, நான் அப்புறம் பேசுறேன்,' போனை துண்டித்தாள், கீதா. மூன்று நாட்கள், மூன்று குடும்பங்களும், நீலகண்டனுக்கு தெரியாமல் பரபரப்பாகி கொண்டிருந்தது. 

"தொடை நடுங்கி..." என்று அழைத்தார், நீலகண்டன். அவர் முன் வந்து, "கூப்பிட்டிங்களா?" என்றாள், மணிமேகலை, "கற்பூரத்தை வரச்சொல்லு!" "கற்பூரமா... ஓ கடைசி மருமகள்...' என, அவளை அழைத்தாள். ''என்னத்த ?" என்று, வந்து நின்றாள். "கற்பூரம்... இந்த மாத, வரவு - செலவு கணக்கெல்லாம் கொண்டு வாம்மா "சரி மாமா," என்றாள். "என்னங்க... ஒவ்வொரு மாதமும், கடைசி மருமகளுக்கு கணக்கு வழக்கு பொறுப்பு கொடுக்கறீங்க. 

மற்ற ரெண்டு மருமகள்களும் வருந்தமாட்டாங்களா?" "எதுக்கு அவளுக்கு கற்பூரம்ன்னு, பேர் வெச்சிருக்கேன். செம சுட்டி. எந்த விஷயத்தையும் கப்புன்னு புரிஞ்சிக்குவாள். அதனால், அவளுக்கு கற்பூரம்னு பேர் வெச்சேன். மூத்த மருமகளை, கலெக்டரம்மான்னு ஏன் பேர் வெச்சேன்? என்ன இருந்தாலும், அதிகாரத் தோரணை அவளிடம் அதிகமா இருக்குது. "இரண்டாவது மருமகளுக்கு, கோலமாவுன்னு பேர் வச்ச காரணம்... அவளை மாதிரி இந்த ஊர்ல யாரு கோலம் போடுவா? உனக்கு... தொடை நடுங்கி, நீ பயந்தாகொள்ளி. சரிதானா?” என, விளக்கமளித்தார். 

எதுவும் பேசாமல் நகர்ந்தாள், மணிமேகலை. நீலகண்டனுக்கு ஒரு அண்ணனும், ஒரு தம்பியும் இருந்தனர். அண்ணனும், தம்பியும் வெகுளியானவர்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புவர். புரிந்து கொள்ளும் தகுதி, கணக்கு வழக்கு இதெல்லாம் எட்டாக்கனி. நிதானம் தவறி இழப்புகளை சந்திப்பர். எந்தவொரு விஷயமானாலும், நீலகண்டனிடம் விவாதித்து தான் செயல்படுவர். ஆனால், முரட்டுக்குணமானவரா இருந்தாலும், துல்லியமான பேச்சு, செயல், சாமர்த்தியம், புத்திசாலித்தனம் உடையவர், நீலகண்டன். ஊரே பயப்படுமளவுக்கு கண்டிப்பானவர்.

ஒருமுறை, தொழில் துவங்குவதைப்பற்றி நீலகண்டனிடம் பேச, அண்ணனும், தம்பியும் வந்தனர். 'உங்க ரெண்டு பேருக்கும் இதெல்லாம் சரிப்பட்டு வராது. நீங்கெல்லாம் கூலி வேலைக்கு தான் லாயக்கு...' என்றார். ‘நீலகண்டா... எங்களை குறைச்சு மதிப்பிடாத. செயல்ல அப்படி இப்படி இருந்தாலும், தொழில்ல அக்கறையுடன் கணக்கு வழக்கெல்லாம் ஒழுங்கா பார்த்துப்போம். அதனால், எங்க மனைவி நகைகளை தரோம். நீதான் அடமானம் வெச்சு தரணும்... 'நல்லா யோசித்து முடிவு எடுங்க. விளையாட்டு காரியம் இல்ல. அனுபவம் உள்ளவங்களெல்லாம் கூட தோற்றுப் போனதும் உண்டு...' என்று அழுத்திச் சொன்னார். 

ரசீதில் இருந்த தொகையை விட பத்தாயிரம் குறைவாக இருப்பதாக கூறவும் அதிர்ச்சியடைந்தார், நீலகண்டன். நல்லா எண்ணி பார்த்தியா?' 'ஒரு தடவைக்கு பத்து தடவை எண்ணியாச்சு... பத்தாயிரம் கம்மியா இருக்கு...'  நான் ஒழுங்காத்தானே எண்ணிக் கொடுத்தேன். கொடுத்த பணத்தைக்கூட ஒழுங்கா பாதுகாக்க தெரியாத நீங்களெல்லாம் எப்படி தொழில் துவங்க நினைச்சீங்க. கை தவறி வீட்ல எங்காவது விழுந்திருக்கும்... போய் நல்லாத் தேடு...' 'உன் மேல உள்ள நம்பிக்கையில, கொடுத்த பணத்தை எண்ணாம அப்படியே பீரோவுலதான் வெச்சேன். 

'நாங்க நல்லா யோசித்துத்தான் முடிவு 'எடுத்தோம். நீ ரொம்ப விபரமானவன். உன் கைராசி நல்லா இருக்கு. நீதான், எங்க மனைவிமாருங்க நகைகளை அடமானம் வெச்சு, எங்களை வாழ்த்தி, உன் கையால் பணத்தை கொடு...' என்றனர். அவர்கள் பெருமையாகவும், தயவுடன் மற்றும் தொழில் ஆர்வத்துடன் கேட்டதால் ஒத்துக்கொண்டார், நீலகண்டன். நகையோடு அடகு கடைக்கு போய் பணத்தையும், ரசீதையும் வாங்கி வந்து கொடுத்தார். மறுநாள் அண்ணனும், தம்பியும், நீலகண்டன் வீட்டிற்கு அவசரமாக ஓடி வந்தனர்.

காலையில எண்ணும் போது தான் பணம் குறைஞ்சது. எங்களுடைய வீக்னெசை பயன்படுத்தி, நீயாவது தப்பு பண்ணிருக்கலாம்ல?' என்ற தம்பியை ஆ வேசமாக பார்த்தார்.  ‘என்னடா சொல்ற... என்னையே சந்தேகப்படுறீயா, ஓட்டு வழியா எத்தனை சொட்டு மழைத்துளி விழுதுன்னு சரியா எண்ணக் கூடிய நானா தப்பு பண்ணுவேன்... 'உங்களை மாதிரி நான் ஒண்ணும் அரை வேக்காடு இல்ல. போங்கடா, இனிமே உதவின்னு என்கிட்ட வந்து நிற்காதீங்க...’ என்றதும், அண்ணனுக்கு கொஞ்சம் சூடு ஏறியது. 

அர்த்தமில்லாமல் பேசி, எங்களை குத்தம் சொல்லாத. யானைக்கும் அடி சறுக்கும். நீ தப்பு பண்ணிருக்கலாம், இல்ல நீயே பணத்தை எடுத்திருக்கலாம்...' என்று யோசிக்காமல், சரமாரியாக வார்த்தைகளை விட்டார். வாக்குவாதம் முற்றி, 'என்னடா சொன்ன?’ என, அண்ணனை அடிக்க கை ஓங்கினார், நீலகண்டன். அதற்குள் அவர்களின் மனைவியர் ஓடி வந்து, 'பண்றதும் பண்ணிட்டு ஒண்ணும் தெரியாத ரெண்டு பேரையும் அடிக்க கை ஓங்குறது சரியில்ல...' என்று, அண்ணனின் மனைவி ஆவேசமாக, தம்பியின் மனைவியும் சேர்ந்து கொண்டாள்.

வேகமாக அறைக்குள் சென்று, பத்தாயிரம் ரூபாயை எடுத்து வந்து, அவர்கள் முன் வீசினார். 'இனிமே நீங்க யாரோ, நான் யாரோ. நம் உறவெல்லாம் அத்து போச்சு. என் கண்ணுல முழிக்காதீங்க...' என்று, கதவை அடைத்தார், நீலகண்டன். வீட்டுக்கு போனதும், துணிகளுக்கு பின்னால், பத்தாயிரம் ரூபாய் சரிந்து கிடந்ததை பார்த்ததும், அதிர்ச்சியடைந்தார், அண்ணன். அய்யோவென்று தலையில் அடித்து, தம்பியோடு நீலகண்டன் வீட்டிற்கு வந்தனர். 'எங்களை மன்னிச்சிரு. இதெல்லாம் எங்களோட தப்பு தான். தெரியாம வார்த்தைகளை விட்டுட்டோம். அதெல்லாம் மனசுல வெச்சுக்காத.

நம் அண்ணன் - தம்பி உறவை அறுத்துடாதே. நாமெல்லாம் ஒரே தாய் வயிற்றுல பிறந்தவங்க. எங்க ரெண்டு பேரையும் உள்ளே கூப்பிடு...' என்றனர். ஆனால், அவர்கள் உறவை துண்டித்தார், நீலகண்டன். இருபது ஆண்டுகளுக்கு பிறகு அண்ணன், தம்பியை பார்த்துட்டு வருவதாக, நீலகண்டன் சொன்ன விஷயத்தை கேள்விப்பட்டு, அண்ணனும், தம்பியும் குதிக்க ஆரம்பித்தனர். மறைமுகமாக பகையை கரைக்க, நடக்காத ஒன்றை, நடந்ததாக சொல்லி விஷயத்தை கசிய வெச்சிருக்கான், நீலகண்டன் என, கருதினர். “உடனே, நாம அவனை சந்திக்கறது தான் முறை. 

நம் ரெண்டு குடும்பமும் அவன் வீட்டுக்கு போவோம்," என்றார், அண்ணன். இரண்டு குடும்பமும் படையெடுத்தது. “அத்தே... பெரிய மாமா குடும்பமும், சின்ன மாமா குடும்பமும் நம் வீட்டிற்கு வர்றாங்களாம்,' மூத்த மருமகள் விஷயத்தை சொன்னதும், மணிமேகலைக்கு புல்லரித்தது. சற்று நேரத்தில், அண்ணன் - தம்பி குடும்பங்கள் உள்ளே நுழைந்தது. பழங்கள், பலகாரங்களோடு வரிசையாக வந்து கூடத்தில் அமர்ந்தனர். குழந்தைகள் ஓடியாடினர். சாய்வு நாற்காலியில் அமர்ந்து கவனித்த நீலகண்டனுக்கு ஒன்றுமே புரியவில்லை. 

தன் வீட்டில் பூக்கோலம் நிறைந்திருப்பதை கவனித்தார். ஆனாலும், அனைவரையும் எதிர் கொள்ள முடியாமல் முகபாவனைகளை இறுக்கமாக வைத்திருந்தார். நீலகண்டனின் இருபுறமும் சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்த அண்ணனும், தம்பியும் அவரை கையெடுத்துக் கும்பிட்டனர். "நீலகண்டா... இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு, எங்களை மன்னித்து உறவை சேர்க்கணும் நினைச்சியே, உன் நல்ல உள்ளம் யாருக்குத்தான் வரும். தினமும் உன்னை நிலைத்து, அழாத நாட்களே கிடையாது,' என்றார், அண்ணன்.

"நம் ரத்தப்பாசம் உன் மனசுல இருக்கறதை அறியாம, இத்தனை நாளாய் விலகி இருந்துட்டோம். எங்களுக்கு இருக்கற தாக்கம் தானே உனக்கும் இருந்திருக்கும்... ஏதோ விதி விளையாடிருச்சு, ” என்றார், தம்பி. இரண்டு பேரும் மாறி மாறி பேசிக் கொண்டிருக்க... வீட்டுக்குள் அழகழகாய் ஜொலிக்கும் மருமகள்களையும், சதோதர மனைவியரை காணும்போது, வீடு, திருவிழா கோலம் பூண்டது போல் காணப்பட்டது. ஒருவருக்கொருவர் அருகருகில் பரஸ்பரம் விசாரிப்பதும், சிரிப்பு சத்தங்களையும் பார்க்கும்போது பழைய கோபம் மறைய ஆரம்பித்தது. தம்பியை பார்த்து வெறுமனே புன்னகைத்தார், அண்ணன்.  

பெயருக்காக ஏதெதோ ரெண்டு வார்த்தை பேசினார். இதை கவனித்த மணிமேகலை மனதில், பூ ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது. இந்த ஒற்றுமைகளை காணத்தானே இத்தனை வருஷம் காத்திருந்தேன். அன்று பெரிய விருந்தே நடந்தது. மாலை, 6:00 மணிக்கு அனைவரும் கிளம்பி சென்ற பின், “தொடை நடுங்கி...' என்று அழைத்தார், நீலகண்டன்.

"என்னங்க?'' “என்ன நடக்குது... இவங்க எதுக்காக வந்தாங்க" "என்னங்க ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்கறீங்க. உங்க மனசுல பழசெல்லாம் மறந்து, அண்ணன் - தம்பி மேல பாசம் வந்திடுச்சே." "எத வெச்சி சொல்ற,"  ''காலையில், 'வாக்கிங்' போயிட்டு வந்ததும், 'அண்ணன் - தம்பியை பார்க்க போனேன்'னு, நீங்கதானே சொன்னீங்க." அப்போதுதான் அவருக்கு எல்லா விபரமும் புரிய ஆரம்பித்தது. கொஞ்ச கொஞ்சமாக சிரித்து, பலமாக சிரித்தார். “என்னங்க சிரிக்கறீங்க?" "போடி பைத்தியக்காரி... நடைபயிற்சி முடித்து குளிச்சிட்டு, அண்ணன் – தம்பியை பார்க்க போனது உண்மை தான். 

அது இவங்களை இல்ல, கோவில்ல இருக்கற, பிள்ளையாரையும், முருகனையும்..." என்றதும், ஆடிப்போனாள், மணிமேகலை. ஒருபுறம் நகைச்சுவையாக இருந்தாலும், வெட்கப்பட்டவளாக மருகினாள். எல்லாரையும் மாத்தி பேர் வைத்து கூப்பிடுபவர், சாமிக்கு அண்ணன் - தம்பின்னு வெச்சது தெரியாமல் போனதை நினைத்து சற்று வருந்தினாள். மாத்தி பெயர் வைக்கிற பழக்கம் ஒரு புறம் இருந்தாலும், பிரிந்திருந்த அண்ணன்  தம்பி குடும்பம் ஒன்று சேர்ந்ததை நினைத்து மகிழ்ச்சியுடன், பூஜையறைக்குள் புகுந்து, பிள்ளையாரையும், முருகனையும் நன்றியுடன் வணங்கினாள், மணிமேகலை.



கதை ஆசிரியர்: பால்கண்ணன் 

வாரமலர் 



Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best storie

 

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."