நண்பர் மகளின் துணிச்சலான செயல்!
![]() |
| நண்பர் மகளின் துணிச்சலான செயல்!-Brave act by a friend's daughter! |
நண்பர் மகளின் துணிச்சலான செயல்!
சமீபத்தில், நண்பர் மகளை பெண் பார்க்க வந்தனர், ஒரு குடும்பத்தினர். அரசுப் பணியில் இருக்கிறார் என்பதால், அதிகப்படியான வரதட்சணையை அடுக்கினர், வரனின் பெற்றோர்.
கடன்பட்டாவது கல்யாணத்தை முடிக்க நினைத்த நண்பர், அவர்கள் கேட்ட வரதட்சணைக்கு சம்மதித்தார். ஆனால், அந்த வரன் வேண்டாமென்ற முடிவில் உறுதியாக இருந்தாள், நண்பரின் மகள்.
அவளிடம், வரனின் பெற்றோர், வரதட்சணையில் சலுகை காட்டுவதாகக் கூறியும், விடாப்பிடியாக மறுத்து விட்டாள். காரணம் கேட்டதற்கு, 'வரனை பற்றி தெரிந்தவர் மூலம் விசாரித்ததில், தயவுதாட்சண்யம் பார்க்காமல் லஞ்சம் வாங்குபவரென்ற தகவல் கிடைத்தது.
மக்களின் வரிப் பணத்தில் ஊதியம் பெற்று, மக்களுக்கு செய்ய வேண்டிய வேலைக்காக, கூசாமல் லஞ்சம் கேட்பவர், எப்படி ஒழுக்கமான வாழ்க்கை வாழ முடியும். அவருடைய பாவத்தில் என்னையும் பலியாக்க வேண்டுமா. 'முன்பு, கடமையை மீறுவதற்கு லஞ்சம் கேட்டனர்.
இப்போது, கடமையை செய்வதற்கே லஞ்சம் கேட்க ஆரம்பித்து விட்டனர். பணத்திற்காக பண்பை அடகு வைப்பவரை நம்பி, என் வாழ்க்கையை எப்படி ஒப்படைக்க முடியும்.
'அதனால் தான், நிரந்தர வருமானம் பெறும் அரசு ஊழியராக இருந்தாலும், லஞ்சம் வாங்கும் இழிவான செயலுக்கு வெட்கப்படாதவராக இருப்பதால், அவரை மணக்க விருப்பமில்லை...' என்று, துணிச்சலோடு கூறினாள். தன் சுயநலத்தை மட்டுமே பார்க்காமல், சமுதாய சிந்தனையோடு செயல்பட்டவளை, மனதார வாழ்த்தினேன்!
கதை ஆசிரியர்: வெ.பாலமுருகன்,
வாரமலர்

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."