New Stories

தண்ணீ… தண்ணீ…

தண்ணீ… தண்ணீ…-Water… Water…

தண்ணீ… தண்ணீ…

சந்தனம் பூசிய மொட்டைத் தலைகளை வெயில் சுளீரென்று சுட்டது. வேலுமாணிக்கம் குடையை சித்ராங்கிக்கும், அவளின் தோளில் உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தைக்கும் நிழல் படும்படி பிடித்துக்கொண்டான். முக்கியமாக குழந்தைக்கு வெயில் பட்டுவிடக் கூடாது என்பதிலேயே இருவரின் கவனமும். பெரியவர்களாலேயே தாங்க முடியாத வெங்கோடை வெயில் இது. எட்டு மாதத் தளிருடல் எப்படித் தாங்கும்? தவிர, அம்மை பார்த்த உடல். நேற்றுதான் பத்தினித் தழையும் மஞ்சளும் கலந்தரைத்துக் குளிப்பாட்டினார்கள். நோய்க் கிருமி இன்னும் உள்ளே இருக்கும் என்பதால் பொடிப் பொடியாகச் சூட்டுக் கொப்புளங்கள் வந்துவிடும்.

வருசந்தோறும் வேச காலத்தில் அம்மை விளையாடுவது சகஜம்தான். வீட்டில் ஒருத்தருக்கு வந்தால் மற்றவர்களுக்கும் பரவும். அண்டை அயல்களுக்கும் தொற்றும். குறிப்பாக சிறுவர் சிறுமியர் மற்றும் குழந்தைகளே எளிதாக அம்மைத் தாக்குதலுக்கு ஆளாவார்கள். குழந்தைகள் பேரில்தான் அம்மாவான அம்மனுக்குப் பாசம். அதனால்தான் அவர்களிடம் அம்மை விளையாடுகிறது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். சூட்டினால் வரும் நோய் இது என்று நகர்ப்புறங்களில் சிலர் ஊசி போட்டுக்கொள்வர். ஆனால், கிராமிய நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் கொண்டவர்கள் என்பதால் இவர்களால் அதை ஏற்க முடிவதில்லை. எனவே, கடந்த ஒரு வாரமாக வீட்டில் வைத்து பத்தினித் தழையை அரைத்துப் பூசியும், பத்தினித் தழையால் வருடிக் கொடுத்துமே குழந்தை குணப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த வருடம் வெயில் அதிகமானதால் ஊருக்குள் அனேக வீடுகளிலும் அம்மை விளையாடியது. இவர்களின் குழந்தை கைக்குழந்தையானதால் மரண அவஸ்தை.. “கொளந்தை உசுரக் காப்பாத்திரு தாயீ… உனக்கு முடி காணிக்கை செலுத்தறோம்” என்று இருவரும் சூலக்கல் மாரியம்மனுக்கு வேண்டிக்கொண்டிருந்தனர். அதைச் செலுத்தி நேர்த்திக் கடன் தீர்ப்பதற்காகத்தான் இன்று போய்த் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

தானாவது ஆண், மொட்டையடித்ததில் பாதகமில்லை. சித்ராங்கிக்கு அழகே அவளின் அடர்ந்து நீண்ட கூந்தல்தான். அதை இழந்ததும் அவளது பொலிவே போய்விட்டதாகப் பேருந்தில் வரும்போது வேலுமாணிக்கம் வருந்தினான். என்றாலும் குழந்தையின் உயிரை விடவா தனது அழகு பெரிது என்று அவள் சமாதானப்படுத்தியிருந்தாள்.

நீண்ட மண் சாலை, கானலில் நடுங்கியபடி அவர்களின் எதிரே வெறிச்சோடிக் கிடந்தது. ஓர் ஊசாட்டமுமில்லை. வேலிகளுக்கு அப்பால் மேட்டாங்காடுகள் வெற்றாக வானத்தை வெறித்துக்கொண்டிருந்தன. இடைப்பட்ட ஒரு தென்னந்தோப்பு பட்டுப்போய், சொட்டு நீர்ப் பாசனத்துக்குக் கூட வகையற்றுவிட்ட கிணறு மற்றும் ஆழ்குழாய்க் கிணறுகளின் வறட்சியை உணர்த்தியது.

குடியானவர்கள் மாடு கன்றுகளுக்குக் கூட தண்ணியில்லாமல், தீவனத்திற்கும் பற்றாக்குறையாகி, எல்லையை ஒட்டி கேரளாவுக்குள் இருக்கிற எலிப்பாறை சந்தையில் விற்றுக்கொண்டிருக்கின்றனர். குடிநீருக்கே பெரும் தட்டுப்பாடு, பொதுக் குழாயில் நீர் வரத்து நின்று, நாலைந்து நாட்களுக்கு ஒரு முறை லாரியில் விநியோகம். அதுவும் அளவாகப் பத்துக் குடங்களே கிடைக்கும். தொலைதூரக் காடு களங்கள், குளம் குட்டைகள், ஆற்றுப் படுகையில் ஊற்றுப் பறிப்பு என்று சனம் அல்லாடுகிறது. வேலை வெட்டியும் இல்லாமல், பஞ்சம் பிழைக்கப் பலரும் அசலூர்களுக்குக் குடிபெயர்ந்துகொண்டிருக்கின்றனர்.

“நம்ம ஊரப் புடிச்ச சாபக்கேடு… விருத்திக்கே வர மாண்டீங்குது. இப்பத்தான் சந்து பொந்துகள்லகூட பூந்து போறாப்புடி சின்னச் சின்ன ஊருகளுக்கெல்லாம் பஸ்சுட்டிருக்கறாங்களாச்சே! நம்மூருக்கும் ஒண்ணு உடாமப் பாருங்கொ, காளியாவரத்துல எறங்கி எத்தன தொல நடக்க வேண்டியிருக்குது, இந்த வேகாத வெயில்ல!” என்று சித்ராங்கி சலித்துக்கொண்டாள்.

“வேலியோரத்துல அங்கொண்ணு இங்கொண்ணுன்னாவது மரம் மட்டைக இருக்கும். அதையும் வெட்டிப் போட்டாங்கொ. இல்லீன்னா இந்தளவுக்குக் காந்தாது’ என்றான் அவன்.

குழந்தை விழித்துக்கொண்டு சிணுங்கி அழுகை பிடித்தது. சமாதானப்படுத்தல்களோ, வேடிக்கை காட்டல்களோ பலனளிக்கவில்லை.

“பசிச்சிட்டுத்தான் அளுசுறா. பால் குடுக்கலாம்னா சித்தெ உக்கார்றக்கு ஓர்சலா ஒரு எடம் வேணுமே…!” அவளின் பார்வை இரு மருங்கிலும் தேடியது. சற்று அப்பால் வேலியோரம் வெட்டுக்குத் தப்பி நிற்கும் சாயப்பட்டை மரத்தின் அடியில், நிழலிலும் இளஞ்சூடாகக் கிடந்த கல்லொன்றில் உட்கார்ந்துகொண்டாள். வயிறு நிறைந்த குழந்தை, தாயின் மொட்டைத் தலையை விருப்பமற்றுப் பார்த்து அதைத் தொட்டபடி ‘ம்ம்… ஆ…’ என்று ஒலிக்குறிப்புகளை எழுப்பியது.

“உங்களையாட்டவே உங்க புள்ளைக்கும் நான் மொட்டை போட்டது புடிக்கலியாமா! கோயல்ல மொட்டை போட்டதுக்கப்பறம் நான் எடுக்க வந்தபோது அடயாளந் தெரியாம உங்ககிட்ட இருந்து எங்கட்ட வரவே மாண்டீன்னு அளுதா பாத்தீங்ளா அத்தன நேரம்?” என்றவள், “ஏண்டீ தங்கோம் – அம்மாவோட மொட்டத் தல நல்லால்லியா…? எல்லாம் என்னோட உசுருக்காகத்தான்!” என்று குழந்தையை அணைத்துக் கொஞ்சி முத்தமிட்டாள்.

ஒயர் கூடையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்த வேலுமாணிக்கம், “கொஞ்சமாத்தான் இருக்குதா?! எத்தன குடிச்சாலும் இந்த வெயிலுக்குத் தாகமே அடங்க மாண்டீங்குது. உனக்கு வேணுமா? இந்தா குடிச்சுட்டுக் குடு. எனக்கு ரெண்டு மொரடு இருந்தாலும் போதும்” என்று நீட்டி, அவள் குடித்துத் தந்த மீதத்தைக் காலியாக்கினான்.

பாதி வழிதான் கடக்கப்பட்டிருந்தது. மீண்டும் குடையை விரித்துக்கொண்டு நடை தொடர்ந்தனர். குழந்தையிடம் மழலை கொஞ்சியபடியே அவளும், அவர்கள் இருவரையும் பார்த்தபடியே அவனும் சென்றுகொண்டிருந்ததால், தூரத்திலிருக்கும்போது கவனத்தில் படவில்லை. ஓரளவு நெருங்கிய பிறகே மண் பாதையில் ஒருவர் விழுந்து சுருண்டிருப்பது தெரிந்தது.

பதற்றத்தோடு நடையை விரைவாக்கி அவரிடம் சென்றனர். வேலுமாணிக்கம் அவளிடம் குடையையும் பையையும் கொடுத்துவிட்டு, குனிந்து பார்வையிட்டான். அந்த நடுத்தர வயது நபர் யாரென்று தெரியவில்லை. அக்கம் பக்கங்களில் ஏதாவது ஊரைச் சேர்ந்தவரோ என்னவோ. அல்லது அசலூரிலிருந்து வந்தவராக இருக்கலாம். பஞ்சத்திலும் பட்டினியிலும் அடிபட்டவர் என்பது கந்தல் உடைகளையும், எலும்பு துருத்திய உடலையும் பார்த்தால் தெரிந்தது. பசி மற்றும் கடுமையான வெயிலால் கெளை தட்டியிருக்கக்கூடும்.

உயிர் இருக்கிறதா இல்லையா என்பதே தெரியாதபடி அனக்கமற்றிருந்தது அந்த உடல். அவன் நாடி பிடித்து, மூச்சையும் சோதித்ததில் உயிர் நூலிழையில் ஊசலாடிக்கொண்டிருப்பது புலப்பட்டது.

சித்ராங்கி குடை நிழல் அவர் மீது படும்படி நின்றுகொண்டாள். வேலுமாணிக்கம் அவரது முகத்தைத் திருப்பி, கன்னங்களைத் தட்டி உணர்வூட்ட முயன்றான். நிழல் படவும் யாரோ வந்துவிட்டார்கள் என்பதை அறிந்த உணர்வும் சேர, அந்த உடலில் சிறு சலனம் ஏற்பட்டது. காய்ந்த உதடுகள் கடைசித் துடிப்போடு, “தண்ணீ… தண்ணீ…” எனத் தீனமாக முனகின.

குத்திட்டு அமர்ந்திருந்த வேலுமாணிக்கம் தலையில் கை வைத்துக்கொண்டான். “அடப் பாவமே! இப்பத்தான மிச்சமிருந்த கொஞ்சூண்டு தண்ணியையும் குடிச்சோம். பக்கத்துல வீடு, களம் ஒண்ணும் கெடயாதே! வறக் காடாச்சே!” என்று பரிதவித்த அவன் அதையும் மீறி எதாவது வழி தென்படாதா என்பது போல சுற்றும் முற்றும் பார்த்தான். வறண்ட நிலமும் கானலும் மட்டுமே தென்பட்டன. அடி நெஞ்சில் பொங்கும் ஆற்றாமை, வேதனையாகி, முகத்திலும் துயரத்தைப் படியச் செய்தது. கையறு நிலையில் எழுந்து நின்றான்.

“ங்கோவ்… அவுரக் காப்பாத்தறக்கு ஒரே வளிதான் இருக்குது” என்றாள் சித்ராங்கி.

அவள் சொல்லாமலேயே அது என்னவென்று அவனுக்குப் புரிந்தது. குழந்தையையும் குடையையும் வாங்கிக்கொண்டு, “ம்ம்… சீக்கிரம் ஆகட்டும்!” என்று துரிதப்படுத்தினான்.

சுடுமணல் என்றும் பாராமல் அமர்ந்துகொண்ட சித்ராங்கி, தன் மடியில் அவரைத் தூக்கி எடுத்துக்கொண்டு பாலூட்டும் முனைப்புகளில் ஈடுபட்டாள். அதுவரையிலும் திறக்க முடியாமல் மூடியிருந்த இமைகளை, உயிரின் கடைசித் துளிகளைப் பயன்படுத்தித் திறந்த அவர், “வேண்டாந் தாயீ…” என்று முணுமுணுத்தார்.

“பரவால்லீங்கொ! ஆபத்துக்குத் தப்பில்ல” என்றபடி சித்ராங்கி அவரையும் ஒரு குழந்தை போல் நெஞ்சோடணைத்துக் கொண்டாள்.

கண்கள் பனிக்க, இமை மூடிக் கொண்ட அவரது உதடுகள், தன் உடலிலிருந்து ஆவியாகிக்கொண்டிருக்கும் உயிரை அவளின் நெஞ்சத்திலிருந்து மீட்டுக்கொண்டன.

சித்ராங்கி நிமிர்த்து தொலைதூர வெற்று வானத்தைப் பார்த்தாள்.



Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories

கருத்துகள் இல்லை