sirukathaigal

தங்கம்

தங்கம்-Gold


தங்கம்


நகை விலை உயர்ந்து கொண்டே போவதால் மனக்கவலை அதிகரித்தது சுந்தரிக்கு. இரண்டு பெண் குழந்தைகளைப்பெற்ற பின் அடுத்ததாவது ஆண் குழந்தை பிறக்குமென்கிற எதிர்பார்ப்பில் மீண்டும் கருவுற்ற நிலையில் மூன்றாவதும் பெண்ணாகப்பிறக்க, வேதனையின் உச்சத்துக்கே சென்றிருந்தாள்.

“கல்யாணமாயி பத்து வருசமா குழந்தையே பிறக்கலைன்னு கோயில் கோயிலா சுத்தறா உன்ற அத்த பொண்ணு சுகன்யா. ஆம்பளக்கொழந்தையோ, பொம்பளக்கொழந்தையோ கடவுள் கொடுத்தத கையேந்தறத உட்டுப்போட்டு கவலப்படறதுக்கு என்ன கெடக்குது…? நகை, நகைன்னு சொல்லறியே… நாம் போட்ட முப்பது பவுனு நகைய வெச்சு முப்பது வருசமா நீ என்னத்தப்பண்ணிப்போட்டே….? மாப்ள கஷ்டப்பட்டு சம்பாதிச்சு குடும்பத்த காப்பாத்தறாரு. கொழந்தைகளை படிக்க வெக்கறாரு. அதே மாதர உன்ற பொண்ணுகள கட்டிக்கப்போற மாப்பிள்ளைகளும் காப்பாத்துட்டு. படிக்க வெச்சு வேலை வாங்கி கொடுத்தா சம்பாதிச்சு நகை வேணும்னா எடுத்துட்டு போறாங்க. அத உட்டுப்போட்டு அன்னாடும் கவலப்பட்டு உன்ற ஒடம்பக்கெடுந்துட்டீன்னா அதுக கல்யாணமாயி புள்ளப்பொறப்புக்கு பொறந்த ஊட்டுக்கு வந்தா ஒதவிக்கு ஆரு வருவா..‌?” தாயின் பேச்சு சரி என்றாலும் சமுதாயத்தில் உறவுகளுக்கு சமமாக பெண்களுக்கு நகை போடவில்லையேல் அவர்களுக்கு மதிப்பு கிடைக்காது என்பதை நினைத்தே வருந்தினாள்.

‘அந்த ஸ்கூல்ல சேத்தாம இந்த ஸ்கூல்ல சேர்த்து படிக்க வெச்சிருந்தா அத்தன பவுன், அந்தக்காரு எடுக்காம இருந்திருந்தா அந்தப்பணத்துக்கு இத்தன பவுனு, கொஞ்சம் சிக்கனமா இருந்து வெலை கம்மியா இருந்த போது மாசம் ஒரு பவுனு எடுத்திருந்தா இத்தன பவுனு…அதுக்கு பதிலா இத எடுத்திருந்தா அத்தன பவுனு….இதுக்கு பதிலா அத எடுத்திருந்தா இத்தன பவுனு…. அப்படி எடுத்திருந்தா இன்னைக்கு வீட்ல இருக்குமே முன்னூறு பவுனு…’ என நடந்து முடிந்ததை நினைத்து வருந்துவதே வாடிக்கையாகி விட்டது சுந்தரிக்கு.

இருக்கும் நகையை ஒரு பெண்ணுக்கு மட்டும் போட்டால் அதிகமாகத்தெரியும் எனக்கருதுவதால் உறவுகளில் திருமண நிகழ்வுகளுக்கு மூன்று பெண்களையும் அழைத்துச்செல்லாமல் ஒரு பெண்ணை மட்டுமே தன்னுடன் அழைத்துச்செல்வாள்.

சுந்தரியின் சித்தி பெண் பைரவி தனது ஒரே பெண்ணுக்கு அதிகமான புதிய டிசைன் நகைகளைப்போட்டு உறவுப்பெண்ணின் திருமணத்துக்கு அழைத்து வந்திருந்ததைப்பார்த்து கவலையின் உச்சத்துக்கே சென்றாள். ‘மூன்று பெண்களுக்கும் நாம் இப்படி நகை போட முடியுமா? கணவனின் வருமானம் போதாதே….?’ என நினைத்த போது வருத்தம் மேலோங்கியது.

“சுந்தரி அக்கா…. எனக்கு கல்யாணமான போது மூணு பவுன் நகைதான் எங்க வீட்ல போட்டாங்க. ஆனா முப்பது பவுனு உங்க வீட்ல உனக்கு போட்டாங்க. இப்ப என்ற பொண்ணுக்கு நூறு பவுனு எடுத்து வெச்சிருக்கறேன். நீ மூணு பொண்ணுங்களுக்கும் முன்னூறு பவுன் போடுவியா…? முடியாது தானே….? பாத்தியா கடவுளு நெலமைய தலைகீழா மாத்திப்போட்டாரு. உன்ன விட நாந்தானே இப்ப ஒசத்தி….” என குத்திக்காட்டிச்சொன்னதால் அன்று இரவு தூக்கம் வரவில்லை.

“இப்படிப்பட்ட சொந்தக்காரங்க எதுக்கு வேணும்? நம்ம நெலமையப்பார்த்து ஏளனமாவா பேசுவாங்க?” என கணவனிடம் கூறி கண்ணீர் சிந்தினாள்.

“நகை நெறையா போட்டுட்டா மட்டும் சந்தோசம் வந்திருமா? உன்னோட சித்தி பொண்ணோட பொண்ணுக்கு படிப்பு வரலே… பத்தாவது வரைக்கும் தான் படிச்சிருக்கா. அவ படிச்ச படிப்புக்கு வேலை கெடைக்காது. கவர்மெண்ட் பள்ளிக்கூடத்துல செலவில்லாம படிக்க வெச்சுட்டு நாம படிக்க கட்டின அளவு பணத்த வெச்சு நகை எடுத்திருக்கா. அதனால மாசமானா ஊட்டு வாடகை கெடைக்கிற மாதர மாப்பிள்ளைக்கு கொடுத்தாத்தான் அவளால வாழ முடியும். அதனால நகை போட்டு கொடுக்கோணும். ஆனா நம்ம பொண்ணுங்க நல்லா படிச்சிருக்காங்க. வேலைக்கு போயி சம்பாதிப்பாங்க. அவங்களுக்கு நகை எதுக்கு போடோணும்? ஏதோ ஒன்னத்தான் செய்ய முடியும். நீ கவலைப்படாமத்தூங்கு” எனக்கூறிய கணவனின் பேச்சும் சரிதான் எனப்பட்டதால் மேலும் ஆராய்ந்து பார்த்ததில் பல விசயங்கள் புரிய ஆரம்பித்தது.

‘வரும் வருமானத்தில் உயர்படிப்பை அதிக செலவழித்து பெண்களைப்படிக்க வைத்து அதிக நகைகளையும் போட நடுத்தரக்குடும்பத்தால் எவ்வாறு முடியும்? படிக்காத பெண்களுக்கு நகை எடுக்க முடியும். அந்த நகை அவர்களுக்கு பாதுகாப்பு. படித்த பெண்களுக்கு படிப்பே பாதுகாப்பு. இதில் ஏதாவது ஒன்று தானே சாத்தியம் எனும் போது ஒருவரைப்பார்த்து மற்றவர் கவலைப்படுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?’ என்பதைப்புரிந்த போது  நிம்மதியானாள் சுந்தரி.





Sirukathai | sirukathaigal | Tamil kathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories

தங்கம் தங்கம் Reviewed by Sirukathai on மே 15, 2025 Rating:

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."