New Stories

ஐ லவ் யூ

ஐ லவ் யூ-i love you

ஐ லவ் யூ

இப்படியே இன்னும் கொஞ்சம் நேரம் உன் மார்புடன் முகம் புதைத்து உறங்கிக் கொண்டு, உன் அருகில் வந்து ,உறங்கும் உன் முகம் பார்த்து ஐ லவ் யூ என்று உன் காதோடு சொல்லிவிட்டு….எப்படி நீ எனக்குள் இப்படி நீக்கமற நிறைந்திருக்கிறாய் என்று எனக்குத்தெரியவில்லை. நீ இல்லாத நேரத்திலோ ,நான் உன்னை விட்டும் நீ என்னை விட்டும் பிரிய இருக்கும் நாட்களும் எவ்வளவு துன்பமானது என்று எனக்கு நன்றாகத்தெரியும். ஆனால் புன்னகை பூத்த முகத்துடன் மனதின்ஆழத்தில் அத்தனை துயரங்களையும் ஆழ்த்திக் கொண்டு ஆரத்தழுவி நெற்றியில் ஒற்றை முத்தம் இட்டு விடைபெறும் அத்த தருணத்தில் கண்கள் மறைந்து இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் பிரிந்து சென்ற நாட்களெல்லாம் எவ்வளவு இனிமையானது என்று இப்பொழுது நீ என் அருகில் இருக்கும் பொழுது எண்ணிப் பார்த்து சிரித்துக் கொள்கிறேன்.

காலையில் கண்விழிக்கும் பொழுது என் தந்தையின் முகம் பார்த்த பின்பு நான் பார்க்கும் முதல் முகம் நீ தான். உன் அருகில் கண்விழித்து நான் எழ முற்படும்பொழுது எப்படித்தான் தெரிந்து கொள்வாயோ? நான் கண்விழிப்பதை. அருகில் என்னை இழுத்து அணைத்து மூச்சு முட்ட முத்தம் இட்டு அன்பு செலுத்துவாய். எவ்வளவு முத்தம் இதுவரை நீ எனக்கு கொடுத்தாய் என்று பலமுறை நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு இப்பொழுது வரை நானச் சிரிப்பு மட்டுமே என் பதிலாக இருக்கிறது. என் செய்து என்னை முழுமையாக உன்னவள் ஆக்கிக் கொண்டாயோ? ஒவ்வொரு முறையும் காலையில் எழுந்து வாசல் படியில் அமர்ந்து நீ நாளிதழ் படித்தபடி செல்போனில் ஏதோ பார்த்துக் கொண்டு இருக்க பலமுறை தொலைவில் இருந்து உன் புறமுதுகை கண்டு ரசித்து இருக்கிறேன். அந்தக் கூந்தலை நீ சரி செய்யும் அழகும் நீ அமர்ந்திருக்கும் தோரணையும் என்னுள் மித மிஞ்சிய அன்பை ஏற்படுத்தும். ஆனால் பலமுறை அதை மனதுள் கண்டு ரசித்துவிட்டு உன் அருகில் ஏதும் தெரியாதவள் போல் நின்று உன்னை கண்களால் கவ்விக் கொண்டு இன்னும் உன்னை ஆரத்தழுவி ஆறுதல் பெற்றுச் சென்றிருக்கிறேன்.

ஒரு குவளை தேநீரில் அன்புடன் என் காதலும் அல்லவா கலந்திருக்கிறது. தேனீர் குவளையை நான் கொண்டு வருவதைக் கண்டும் காணாமல் மூழ்கி இருக்கும் வேளையில் உன்னை என் பக்கம் கவன ஈர்ப்பு தீர்மானம் செய்ய நல்ல சூட்டுடன் இருக்கிற தேனீர் கோப்பையை உன் தோள்களில் கடத்தி நீ ஆ… என்று கதறும் பொழுது உன்னை ரசித்து செல்வேன். நீ ஏகாந்தமாக என் மீது கோபமாக முகம் பார்த்து என்னைக் கடக்கும் பொழுது.. சாரி சொல்லி முத்தமிட்டு உன்னை ரசித்திருக்கிறேன். போடி ….குறும்புக்காரி எப்ப பார்த்தாலும் ஏதோ ஒன்று செய்வாய் ….என்று என்னை அலட்சியம் செய்து விட்டு நீ செல்வாய் .

எனக்குப் பிடிக்கும் என்று ஆசையாக நீ வாங்கி வரும் புளிப்பு மிட்டாய்களும் பூக்களும் உன் அன்பை எப்பொழுதும் எனக்குச் சொல்லிவிடுகிறது. உனக்கு என்னிடம் என்ன வேண்டுமோ அதையும் தவறாமல் எப்பொழுதும் நீ என்னிடம் கேட்டு பெற்றுக் கொள்வதில் உனக்கு நிகர் நீயே. பலமுறை என்னை முத்தமிடுவதாகச் சொல்லி என் காதோரம் வந்து என் காதுக்குள் முத்தமிட்டுச் செல்வாய். என் செவிப்பரை முழுக்க உன் முத்த ஓசை தான் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது .

சமையலறையில் எனக்கு நீ உதவ முயலும் பொழுது பாத்திரம் தேய்க்க எனக்குப் பிடிக்காது என்பதை நீ புரிந்து கொண்டு நாள் முழுவதும் நான் போட்டுச் சென்ற பாத்திரங்களை நீ எனக்கு துணையாக நின்று அதை தூய்மைப்படுத்தும் பொழுது என் தாயாகவே பல நேரம் மாறிவிடுகிறாய். என் ஒவ்வொரு அடம் பிடித்தலிலும் நீ எனக்குள் நீக்கமற வியாபித்து இருக்கிறாய் . கடைவீதிகளுக்கு செல்லும் பொழுது நான் ஏதேனும் பொருள் வாங்கிக் கொள்ளட்டுமா என்று கேட்டால். உனக்கு வேண்டுமென்றால் வாங்கு… வேண்டாம் என்றால் விட்டுவிடு… என்று எனக்குச் சுதந்திரத்தைக் கொடுத்து விட்டு இது உனக்கு வேணாம் என்று சொல்லி நீ என்னை அழைத்து வரும் பொழுதும் நீ இது வாங்கிக்கோ நல்லா இருக்கும் உனக்கு என்று சொல்லும் பொழுதும் கண்ணாடியில் என் பிம்பத்தை நானே பார்ப்பது போல் தோன்றுகிறது.

என் பல நூறு புலம்பல்களை முதல் முதலாகக் கேட்பது போலவே கேட்டுத்தீர்வு தருவாய். உன் கோபமும் பலவகையில் நான் கண்டு ரசித்திருக்கிறேன். உன்னிடம் பரிசு கேட்டால் நான் தான் உனக்குப் பரிசு வேற என்ன பரிசு உனக்கு வேண்டும் என்று கேட்பாய் எப்படிச் சொல்ல.. சொல்லில் தான் உன் பேரன்பு நீக்கமற நிறைந்து இருக்கிறது என்று நான் நன்கு அறிவேன்.

என்னை என் தந்தைக்குப் பிறகு தாங்கும் நல்ல ஆண்மகன் நீ. மீண்டும் நீ எனக்கு அடுத்த பிறவியில் எதுவாக வேண்டும் என்று எனக்கு இறைவனிடம் வரம் கேட்கத் தெரியவில்லை. எதுவாயினும் நீ எனக்கு எல்லாமும் ஆக இருக்க வேண்டும். அதுவே என் ஆசை. இங்கு உன்னோடு வாழ்தல் இனிது என்று சொல்லி அன்பு முத்தம் இட்டேன் நீ இருப்பதாக எண்ணி என் அருகில் இருந்த தலையணைக்கு…

கண்விழித்துப் பார்த்த பின் கனவு என்று உணர்ந்தேன். கனவிலாவது இப்படி நான் எதிர்பார்த்த துணைவன் கிடைத்தால் நல்லது என்று புலம்பிப் புன்னகைத்து அன்றாடப் பணியை செய்ய முற்பட்டாள் தன்வி….


Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories

கருத்துகள் இல்லை