New Stories

குட்டை நாய்

குட்டை நாய்-small dog

குட்டை நாய்

ஆனந்தமும், ஒளியும் போட்டியிட்டு ஆக்கிரமிக் கும் சுவர்க்க உலகத்தின் ஒரு வெளியிலே இரு நாய்கள் நின்றன. 

அவை அழகாய் இருந்தன; கண்களைக் கூசவைக்கும் ஒளிப்பிழம்புகளாய்க் காட்சி தந்தன. 

எல்லையற்ற ஆனந்த வாரிதியிலே அவை மிதந்து கொண்டிருந்தன. 

ஒன்று ஆண். மற்றது பெண். 

பூவுலகிலே, வாழ்வின் வசந்த காலமாகிய இளமைப் பருவத்திலே அந்த ஆண் நாயின் உயிர்க்காதலியாய் இருந்ததாம் அது. 

இன்று உடற்சட்டையைக் கழற்றி எறிந்து, சுவர்க்க உலகின் நிரந்தரவாசிகள் ஆனபின்னரும் பழைய உறவை மறந்து விடவில்லை. 

ஒன்று மற்றதன் முகத்தை நக்கிவிட்டது. மனித பாஷையிலே சொல்வதானால் ஒன்றை ஒன்று முத்த மிட்டது. 

“இந்த வாழ்க்கை உனக்கு கு னிமையாக இருக்கிறதா? எனக்கென்னவோ இது திருப்திப்படவில்லை. ஆசையுடன் என்னைக் கூவி அழைக்கும் எஜமானரையும், மடியிலே வைத்துத் தடவிக் கொடுக்கும் அவரின் மனைவி, குழந்தைகளையும் என்னால் மறக்கவே கூடவில்லை. அவர்கள் ஆசையோடு தந்த மீன் பொரியல், இறைச்சித்துண்டு, ‘பிஸ்கட்’ இவற்றை இப்பொழுது நினைத்தாலும் வாய் ஊறுகின்றது.” இவ் வாறு பெண் நாய் சொல்லிற்று. அந்த வேளையில் அதன் நீண்ட நாக்கிலிருந்து நீர் ஒழுகலாயிற்று. ‘நடுச் சமுத்திரத்திலும் நாய்க்கு நக்குத் தண்ணீர் என்ற பழமொழிக்கு அந்த வேளையில் அது சாட்சியாயிற்று. 

பெண்ணின் அறியாமை நிறைந்த வார்த்தைகளைக் கேட்ட ஆண் கலகல என்று நகைத்தது. அதன் சிரிப்பு, காதலிக்கு எரிச்சலை மூட்டிற்று. அது சொல்லியது, “நன்றி கெட்டவனே! எம் இனத்திற்கே உரிய நன்றி விசுவாசம் உனக்கு மட்டும் இல்லாமற் போனதேன்?” 

ஆண் நாய் பெருமூச்சுவிட்டது. “உண்மையை உணர்ந்தால் நீ இப்படி யெல்லாம் பேசமாட்டாய். எனது துன்பம் நிறைந்த அநுபவந்தான் உன் முட்டாள் தனமான பேச்சைக் கேட்டுச் சிரிக்கவைத்தது. மனிதர் கள் பொல்லாதவர்களடி, பொல்லாதவர்கள்” என்று அது நிதானமாக ஆனால், வெறுப்பிலே குமைந்தவண்ணம் கூறிற்று. 

பெண் மீண்டும் படபடத்தது. “உன் கூற்று அர்த்த மற்றது. மனிதர்களின் செல்லப்பிள்ளைகள்தாம் நாம். அவர்கள் எம்மீது காட்டும் பரிவே நிரந்தரமானது. அதைப் புரிந்துகொள்ளும் இதயம் உனக்கு இல்லை. நீ ஓர் அரக்கன்.” 

இப்பொழுது ஆண் சிரிக்கவில்லை. “உண்மையின் ஒரு பக்கத்தைத்தான் நீ கண்டிருக்கிறாய். அதன் மறு பக்கம் எவ்வளவு பயங்கரமானது என்று உனக்குத் தெரியாது”. என்று வேதனை ஊறி வழியுங் குரலிலே அது சொன்னது. 

பெண்ணுக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது. “நீ என்னதான் சொல்கிறாய்?” என்று அது ஆணை நோக்கிக் கேட்டது. 

“நீ எனக்கு முந்திவிட்டாய். இல்லா விட்டால் நான் அனுபவித்த சித்திரவதை உன் கண்களிலே குருதிக் கண்ணீரை வடியச் செய்திருக்கும். அடியின் வேதனை யால் நான் அலறிய குரல் உனக்குக் கேட்டிருக்க நியாய மில்லை. நீதான் நித்தியானந்தப் பெருவாழ்விலே நிலை பெற்று விட்டாயே ! நான் அசக்தனாய், குட்டைய னாய்த் துடிதுடித்தபோது என் எஜமான் என்ன செய் தான் தெரியுமா? கண்ணீரின் நெடியே வீசப்பெறாத இந்த உலகத்திலே என் துன்பக் கதையைச் சொல்லக் கூடாது. வா. எல்லையற்ற வானவெளியிலே நீந்திய வண்ணம் அதைச் சொல்கிறேன்.” 

இவ்வாறு சொல்லிய வண்ணம் ஆண், வானவெளி யிலே தனது விந்தைச் சிறகுகளை விரித்துப் பறக்கத் தொடங்கியது. கேள்விக் குறிகளால் நிறைந்து பாரமாகி விட்ட உள்ளத்தோடு பெண் அதைத் தொடர்ந்தது. 

“நீ மறந்திருக்க மாட்டாய் என்றே நினைக்கிறேன். ஒருநாள் என் எஜமானின் வீட்டிற்குத் திருடர்கள் வந்த தும், நான் குரைத்த குரைப்பும், அதனால், திருடர்கள் பிடிபட்டதும் ஞாபகம் இருகிறதா?” 

“அந்தத் திருடர்களிலே ஒருவன் என் வயிற்றில் உதைத்த உதையால் நான் வாதைப்பட்டதும் உன் நினைவுத் திரையிலே அழியாமல் இருக்கும் என்று நம்பு கிறேன். உன் அன்பான அரவணைப்பும், எஜமானதும், அவன் குடும்பத்தினரதும் பாராட்டும் என் நோவை ஓரளவு மறக்கச் செய்தன.” என்று கூறி ஆண் சற்றே தன் பேச்சை நிறுத்தியது. பெண் இதுதான் சந்தர்ப் பம் என்று பிடித்துக்கொண்டது. “பார்த்தாயா, பார்த்தாயா? உன் எஜமானும், குடும்பத்தினரும் உன்னில் எவ்வளவு அன்பாய் இருந்திருக்கின்றனர்! எவ் வளவு நன்றியுள்ளவராய் உன்னைப் பாராட்டியிருக்கின்ற னர் / இவ்வளவையும் மறந்து நீ மனித வர்க்கத்தையே திட்டத்தொடங்கி விட்டாய். நன்றிக்கு இலட்சியமாய் வாழும் நாய்க்குலத்திற்கே நீ ஓர் அவமானச் சின்னம்! என்று அது பொரிந்து தள்ளியது. 

ஆண், அது பேசி முடிக்கும்வரை பொறுமையோடு காத்திருந்தது. உலகிலே கடவுளுக்காக வாத விவாதங் களிலே இறங்கி மண்டையை உடைத்துக் கொள்ளும் அதிபக்த சிகாமணி போன்று மூச்சுவிடாது பேசித் தள்ளிய தன் காதலியை அது, அநுதாபங்கலந்த கேலி யோடு நோக்கியது. போன ஜென்மத்தில் தன் எஜமா னால் கழுத்திற் சங்கிலிபூட்டி வைக்கப்பட்டுத் தழும்பேறி அதன் அடையாளம் இன்னமும் முற்றாய் மறைந்து போகாத இடத்தை, அது ஒரு தடவை நக்கிவிட்டுப் பெண்ணைப் பார்த்துப் பேசலாயிற்று. நீ அறியாது பேசுகிறாய். மனிதர்கள் பழுத்த சுயநலமிகள். அன்பே இல்லாதவர்கள். இரக்கமற்றவர்கள். அவர்களின் உள் ளங்கள் பாறாங்கற்கள். புத்தியற்ற நாம் அவற்றோடு மோதிக்கொள்கிறோம். இதன் பயன் எம் மண்டைகள் உடைவதுதான். குழந்தைகளுக்கு நாங்கள் விளையாட் டுக்கருவிகள். சீமாட்டிகளின் நாகரிகத்திற்குச் சின்னங் கள் நாம். அணைக்கும் அவர்களின் கைகளே பல சம யங்களில் எம்மை அடித்துத் துன்புறுத்துவதையும் நீ அறியாதவள் போலப் பேசுகிறாய்!’ 

இவற்றிற்குப் பதிலிறுக்கும் வகையில் பெண் ஏதோ சொல்ல வாயைத் திறந்தது. ஆண் அதைத் தன் பார்வையாலே அடக்கிவிட்டு, “சரி! சரி! நாம் வீணே வாதிப்பதால் ஆவதொன்றும் இல்லை, எங்கோ தொடங்கி எங்கோ முடித்து விட்டேன், பார்த்தாயா? இருக்கட்டும். மிகுதிக் கதையைக் கூறகிறேன் கேள்.” என்று அது தன் கதையைத் தொடர்ந்தது. பெண், அதன் வார்த்தைகளைக் கேட்டபடி அதன் பக்கலிலே பறந்தபடியிருந்தது. 

“நாள்கள் சென்றன. என் நோவும் சிறிது சிறிதாய்க் குறைந்து. மறைந்தது. பழைய அணைப்பிற்கும், அடிகளுக்குமிடையே, நான் உன் அன்பிலும், ஆதரவிலும் வாழ்வைச் சுவைத்து மலர்ந்து கொண்டிருந்தேன்.” 

“ஒருநாள் மோட்டார் வாகனம் ஒன்று யமனாய் வந்து உன் உயிரைக் கவர்ந்து சென்றது. என் வாழ் வின் ஒளி விளக்கே அணைந்தது போலாகிவிட்டது. அன்பே! அந்நாள்களில் நான் பட்டவேதனை இருக் கிறதே! அதை வார்த்தைகளில் வருணிக்கவே முடி யாது. வேனிற்பருவத்து நிலா மலர்ந்த இரவுகளிலும், சரற்காலத்தின் இனிய காலைப் பொழுதுகளிலும் உனக் காக, என் தனிமைக்காக நான் ஏங்கிப் பிரலாபித்துக் கதறியமை இன்றும் என் நினைவிலே பசுமை மாறாமல் இருக்கிறது.” இதைச் சொல்லியதும் ஒருமுறை அது தன் காதலியைக் கனிவோடு நோக்கியது. பெண்ணும் நாணித் தலைகுனிந்து தன் விழிப்பார்வையால் ஆணை ஆதூரத்தோடு நோக்கிவிட்டு, ‘சரி! மேலே சொல்’ என்றது. 

ஆண் தொடர்ந்தது. 

“காலம் சென்றது. பருவங்கள் மாறி மாறி வந்தன என் இளமையும் கருகிக்கருகி வந்தது. முதுமை என்மீது படையெடுத்தது. என் தோற்றத்தின் கவர்ச்சி மறைய, அதே வேகத்தில் என் எஜமானுக்கும், குடும்பத்தவர்க்கும் என்மீதிருந்த பற்றுதலும் மங்கலாயிற்று.” 

“ஒருநாள் என் வீட்டிற்குப் புதியவன் ஒருவன் வந் தான். என் ளமைப்பருவத்து வனப்பை நினைவூட்டிய அவன், வீட்டாரின் செல்லப்பிள்ளை யாகிவிட்டதில் எனக்கேற்பட்ட பொறாமை கொஞ்சமல்ல. மீண்டும் நான் எனது உரிமையை நிலைநாட்டப்புரிந்த போராட் டங்கள் வெட்கக்கேடானவை. சுருங்கச் சொன்னால் அவர்களுக்கு நான் வேண்டாத விருந்தாளியாகிவிட் டேன். எனினும், எனது நாய்க்குணத்தால் அவர்களின் உதைக்கும் கால்களிடையே சுருண்டு கிடப்பதே என் வழக்கமாயிற்று.” 

“வீட்டில் புதியவனுக்குத்தான் எல்லா உபசாரமும். அவன் தின்ற மிச்சசொச்சங்களையே நான் தின்னுமாறு எதிர்பார்க்கப்பட்டேன். சிலவேளைகளில் இந்த மிச்சி லுக்கும் அவன் பங்குபோட வந்து விடுவான். அந் நேரங்களில் நான் கோபத்தோடு அவன்மீது பாய்வேன். அவன் இளைஞன் அல்லவா? என்னைக் கடித்துக் குதறி விடுவான்? அந்த வேளையில் எஜமான் கண்டானோ தொலைந்தது ! என் எலும்புகளை அவன் நொறுக்கும் வேளையில் வீட்டாரெல்லாம் வேடிக்கை பார்ப்பார்கள்.” 

“நானே அவமானத்தில் கூனிக்குறுகிப் போய் ஒரு மூலையிலே போய்க்கிடந்து, உடல் வேதனையாலும், உள்ள வேதனையாலும் அழுது குமுறி அங்கலாய்த்துக் கொண் டிருப்பேன். என் அநாதைத்தனம். மிகப் பயங்கர மாக என்னை வதைத்து, வாட்டிக் கொண்டிருந்தது.” 

இதைச் சொல்லியதும் பழைய நினைவுகள் மனத் திரையிலே படம்விரிக்க, ஆண் விம்மி விம்மி அழுதது. பெண் அதனை நெருங்கி, மிகுந்த கனிவோடு தன் நாவி னால் அதன் கண்ணீரைரைத் துடைத்துவிட்டது. நீண்ட ஒரு பெருமூச்சை உதிர்த்துவிட்டு, ஆண் மேலும் தன் கதையைத் தொடர்ந்து சொல்லியது. 

“முதுமையின் இளைய சகோதரனாக நோய் வந்து என்னை ஆக்கிரமித்தது. புதியவன் கடித்த காயங்கள் கொஞ்சங் கொஞ்சமாய்ப் பெருத்து என் உடம்பெல் லாம் புண்களாயின. குட்டை நோய் ஏற்பட்டது. என் உடம்பே அழுகி ஒழுகலாயிற்று. இலையான்களும், தெள் ளும் நல்ல விருந்து கிடைத்து விட்டது என்று என்னைப் பதம்பார்த்தன. அவற்றைக் கலைத்துக் கலைத்து என் வாலும் சோர்ந்து போயிற்று. வாழ்வே நரகமாகி விட்டது.” 

“இந்நிலையில் ஒருநாள் என் பக்கத்தில் நின்று எஜமானும், அவன் வேலைக்காரனும் இவ்வாறு பேசிக் கொண்டார்கள்.” 

“இந்தச் சனியனை இனியும் வைத்திருக்கக்கூடாது. கொன்றுவிட வேண்டும்.” எஜமான் சொன்னவை இவை. 

“கட்டாயம் கொல்லவேண்டும். குட்டை பிடித்த நாய்க்கு விசர்பிடிக்க நாட்செல்லாது ஐயா. துவக்கை எடுத்து வரட்டுமா?” என்று வேலையாள் கேட்டான் 

”எஜமான் மிக அலட்சியமாக, ”சீச்சீ! இதற்கொரு தோட்டாவை வீணாக்குவதா? ஒரு உலக்கையை எடுத்து வந்து போடு தலையில் இரண்டு” என்றான்.” 

உடனே அந்த வேலையாள் ஓர் உலக்கையைக் கொண்டு வந்து, என் தலையைக் குறிபார்த்து ஓங்கினான். அந்தப் பசாசைப் பரிதாபமாக நோக்கியபடி மெல்ல எழுந்து ஓட முயன்றேன். முதுமையும், பிணியும் கொண்ட என் உடலைத் தூக்கியபடி ஓட நினைத்த நினைப்பு நினைப்பேயாய் நிற்க, நான் அவன் காலடியிலே சுருண்டு விழுந்து தீனக்குரல் எழுப்பினேன். என் விழிகள் “என்னை விட்டு விடப்பா” என்று அவனைக் கஞ்சின. அந்த அரக்கனோ சற்றும் இரங்கவில்லை.” 

“ஏற்கெனவே நோயின் கொடுமையால் வாதை யுற்றிருந்த எனக்கு இந்த அடி எப்படி இருந்திருக்கும்? ஆ…! அன்று நான் அடைந்த வேதனையை இப்பொழுது நினைத்தாலும் தேகம் நடுங்குகிறது!” 

“துப்பாக்கியாற் சுட்டாலும் ஒரு நிமிஷத்திலேயே விஷயம் முடிந்திருக்கும். ஆனால், என் எஜமான் எனக்காக ஒரு தோட்டாவைச் செலவழிப்பதைக் கூட விரும்ப வில்லை. ஒருநாள் அவன் உயிரையும், செல்வத்தையும் காப்பாற்றிக் கொடுத்த எனக்கு அவன் கொடுத்த நன்றிப் பரிசில்… உலக்கையடி!” 

“இப்பொழுது சொல். மனிதர் நல்லவர்களா? அவர்களை நம்பி நாம் வாலைக் குளைப்பதைவிடப் பைத்தியகாரத்தனம் வேறு இருக்கிறதா?” 

பெண் மெளனம் சாதித்தது.தோல்வியைக் கௌரவமாக ஏற்றுக்கொள்ளும் வழியே மௌனந்தானே! இந்தச் சமயத்தில் அவை ஒரு வீட்டின் மேல்மாடிக்குமேற் பறந்து கொண்டிருந்தன. அப்பொழுது அந்த மாடியிலிருந்து ஒரு சிறுவன், 

“வாலைக் குளைத்துவரும் நாய்தான் – அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா” 

என்று பாடினான். 

பெண்ணும் ஆணும் கலகலவென்று சிரித்தன. அடுத்த நிமிஷம் அவை சுவர்க்கப்பாதையை நோக்கி மேலெழுந்து பறந்தன. 


Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories

கருத்துகள் இல்லை