இதய பூக்கள்
![]() |
இதய பூக்கள்-Heart flowers |
இதய பூக்கள்
ஆனை வெள்ளாப்புத்தான்.
இன்னம் ஒரு பக்கம் முழுசாக விடியவில்லை. இப்பொழுது வெளிக்கிட்டால் தான் சரியாக இருக்கும்……
குழந்தை முழித்துக் கொண்டது. விரல்களை மடக்கி, விரித்து தொட்டில் சாணையில் சித்திரம் வரைகிறது. அதனையும் தூக்கி மடியினில் வைத்து பாலூட்டினாள்.
குறுனல் அரசியில் காய்ச்சிய உப்புக் கஞ்சியை இறக்கி பால்போத்தலில் ஊற்றிக் கொண்டாள். மேல்மூடியை இறுக்கி அதன்மேல் விளிம்பிக்காயை வைத்து றப்பர் தொலியால் கட்டி விட்டாள்.
குழந்தையை இடுப்பில் தூக்கியாயிற்று. அகதி நிவாரணத்தில் கிடைத்த பிளாஸ்டிக் தாச்சியை தலையில் நிறுத்தி அதற்குள் கஞ்சிப் போத்தலையும், தண்ணியையும், தொட்டில் துணிகளையும் வைத்துக் கொண்டாள். வலது கையில் கீறு கத்தி. ஒரு பாவ நீளத்தில் இலந்தைத் தடியில் ஒரு பக்கம் கத்தியைப் பொருத்தி செய்த கோல் அது.
அவர் பாவித்த கீறு கத்தி அது. கடலோரமாக கண்டல் இடுக்குகளில் சகதித் தரையில் அரையடிக்கு கீறிக்கொண்டு வரும். மட்டியின் சிப்பித் தலையில் படும்போது ‘ணங்’ என்று சத்தம் கேட்கும். அந்தக் குழிக்குள் கைவிட்டு துளாவினால் உள்ளங்கை அகலத்திற்கு கண்டல் மட்டி கிடைக்கும். பத்து மட்டி எடுத்தால் காணும். ஒரு கறிக்கு செல்லா வாத்தியாக காணும். ஒரு நாளைக்கு நாற்பது ஐம்பது என்று கண்டல் மட்டி அகப்படும். அதனையே கூறு கட்டி விற்று வருவார். எப்படியும் இருநூறு ரூபாவுக்கு தேறும். அது போதும் அவர்களுக்கு பைப்
நிறைமாத சூலியாக அவள் இருந்தபோதுதான் அந்த பயங்கரம் நடந்தது. கண்டல் காடு, சுள்ளிக் காடு என்று கீறு கத்தியோடு சென்று நிலத்தைக் கீறி அவர் மட்டி தோண்டிக் கொண்டிருந்த போது…
அதே சத்தம். ‘ணங்’, ஆவலோடு கையைவிட்டு துளாவினார். அது மட்டியல்ல. ஆனால் என்ன இது….அங்கு இங்கு என்று தட்டித் தடவிப் பார்த்தபோது காதைச் செவிடாக்கும் ஓசையோடு வெடித்துச் சிதறியது. புதைவெடி…..இங்கு எப்படி?… வெள்ளத்தில் மிதந்துவந்து புதைந்து இருந்ததா?…
அவள் விதவையாகிப் போனாள்.
கிடைத்த பணம் எல்லாம் நாலுமாத ‘இத்தா’ வீட்டிலேயே கரைந்து போனது. அவர் விட்டுச் சென்ற சொத்து அந்தக் கீறு கத்தியும். குழந்தையும் தான்.
“புள்ள….. உம்மாவைப் புடிச்சிக்கோ”
நடை வேகத்தோடு புள்ளக்கு ஊதினாள். குழந்தைக்கு விளங்கியதா?….மார்போடு தலை சாய்த்து அவள் மீண்டும் உறங்கிப் போனாள்.
இரண்டு மைல் நடந்து கடலோரம் வந்துவிட்டாள். மணல் பரப்பை ஊடறுத்து கள்ளிப் பத்தைகளில் ஒரு வழிப் பாதையாக சதுப்பு நிலத்தையண்டி சேற்று நிலத்திற்கு வந்து விட்டாள். இங்குதான் கண்டல் மட்டி விளைந்து கிடக்கும்.
சில நாட்களில் அவருடன் சேர்ந்து மட்டியெடுக்க வந்திருக்கிறாள். ஆனால் அப்போது கண்டல் மட்டி சீசன் இல்லை. பின் இருட்டுக் காலத்தில்தான் கண்டல் மட்டிகள் தரைக்கு அண்மித்து வரும். மற்றக் காலங்களில் சேற்றுப் பகுதியின் ஆழமான பகுதிகளுக்குச் சென்றுவிடும். அந்த நேரத்தில்தான் அவற்றின் பேறு காலத்தையும் வைத்துக்கொள்ளும்.
நட்சத்திர மீன்கள் உலவுகின்ற காலங்களிலும் மட்டிகளின் நடமாட்டம் குறைந்து விடும். நண்டு, கீளி என்று எந்த கரையோர ஜீவன்களையும் காணமுடியாது. முருகைக் கற்களில் விளையும் கடலணிமணியைக் கூட நட்சத்திர மீன்கள் தூக்கிச் சென்று விடும்.
கடலில் உள்ளே சென்றால் ஆழம் குறைந்த பரவல் பகுதிகளில் பாக்கு மட்டிகள் கிடைக்கும். பன்னல் எனப்படும் கடலையளவு சப்பட்டை மட்டிகளும் கும்பல் கும்பலாகக் கிடைக்கும். இருவருமாக பாக்கு மட்டியை வாரிக்கொண்டு வந்தார்கள். சுமக்கமுடியாத பாரம். கரையோரத்தில் சுள்ளிகளை மூட்டி தீ மூட்டினார்கள். பானைக்குள் நீருற்றி பாக்கு மட்டியை அள்ளிப் போட்டபோது வெப்பத்தில் வாய் பிளந்துவிட்டது. மட்டிச் சதையை எடுத்துக்கொண்டு மட்டிச் சிப்பிகளை மலை போல குவித்தார்கள். குவியலை, சுண்ணாம்பு சூளை வைத்திருப்பவர்களுக்கு விற்றுவிட்டால் அதிலும் கொஞ்சம் பணம் புரளும்.
“அவிச்சது போதும் புள்ள. மட்டி, வாய் பிளந்து விட்டது. அகப்பையால மட்டியை வாரி எடுத்து வெளியே போடு புள்ள.”
அவளும் அப்படித்தான் செய்தாள். அகப்பை மூக்கில் பானை இடறிவிட்டது. கொதிநீர் கைமுழுவதும் தெறித்துச் சிதறியது. “ஆ ஊ” என்று அழுதாள்…. கடற்கரையைச் சுற்றி ஓடினாள்…. வலி பொறுக்கமுடியாமல் கடல் நீருக்குள் கையை வைத்து அரற்றி அரற்றி அழுதாள்.
அதற்குள் பன்னப் பழம்போல் கொப்புளங்கள் தோன்றிவிட்டன அவை ஆறுவதற்கே ஒரு மாதம் சென்றது. இப்பொழுதும் கைகளில் தீக்காயங்களின் வடு இருக்கின்றது.
பச்சைப் பசேல் என்று கிளை பரப்பி நின்ற கண்டல் மரத்தில் தொட்டில் கட்டினாள். பழைய காலத்து காட்டா ஒயில் சேலை. அதனுடன் கலம்பக் கயிற்றை இணைத்து வாகாக தொட்டில் அமைத்தாள். அதற்குள் குழந்தையைக் கிடத்தினாள்…ஆனால் அவளால் தலையை உயர்த்த முடியவில்லை…..ஒரு கற்றை முடி குழந்தையின் கைகளுக்குள்பிணையாக இருந்தது.
“உம்மாட தலைமுடியை உடு புள்ள. உம்மா நாலுபாடு மட்டி பார்த்து வந்தாத்தான் நமக்கும் சோறு கிடைக்கும். கொஞ்ச நேரம் படுத்திரம்மா.”
குழந்தைக்கு என்ன விளங்கியிருக்கும்?….. பாலாகச் சிரித்து உறங்கிப் போனாள்.
குப்புறப்படுத்து உடும்பு பிடிக்கிற வயசு. தத்துப் பித்தென்று எழுந்து நடக்க வேண்டிய பருவம் எதுவுமே இல்லை. எலும்பும் தோலுமாக தாய் குடிக்கும் குறுனல் கஞ்சியின் சத்தை பாலாக உறிஞ்சி போசாக்குத் தேடும் குழந்தை வேறு எப்படி இருக்கும்….
தொட்டிலுக்குள் குனிந்து முகத்தில் முத்தமிட்டு நிமிர்ந்தபோது கண்களில் நீர் திரண்டு கோர்த்துக் கொண்டது…அவர் இருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?….
ஒரு பாக பொழுது ஆகிவிட்டது.
கீறு கத்தியுடன் சேற்று நிலத்தில் புகுந்துவிட்டாள். ‘சதக் சதக்’ என்று கத்தியால் நிலத்தின் வயிற்றைக் கீறி கண்டல் மட்டியை தேடினாள்….
பத்து மணிக்குள் மட்டி தோண்டலை முடித்துக்கொள்ள வேண்டும். அதற்குள் வெயில் எறிவிடும். நமக்கு அமச்சது கிடைக்கும். கண்டல் மட்டியை அவள் சந்தைக்கு கொண்டு செல்லமாட்டாள். பெரியப்பாவின் பொடியன் வருவான். அவனிடம் கூறு கட்டி கொடுத்து விட்டால் அவன் நாலு ஒழுங்கை சுற்றி விற்றுவிடுவான். இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. கண்டல் மட்டி ரோசமாக விற்றுவிடும்.
தேர்ந்த கலைஞனின் கைலாகவத்தோடு கீறு கத்தியால் சகதி நிலத்தில் நெடுங் கோடுகள் இழுத்தாள். அங்கு இங்கென்று ஒலி வேறுபாடுகள். அந்த வேறு பாட்டின் சுரலயத்தில் கண்டல் மட்டியா, கல் குவியலா, கண்டல் வேரா என இலகுவாக அடை யாளம் கண்டுவிடுவாள். கண்டல் மட்டி என்றால் கீறு கத்தியை இடது கைக்கு மாற்றிக் கொண்டு வலது கையால் சேற்றில் துழாவி எடுத்து விடுவாள். அது இல்லையென்றால் மீண்டும் மாறா வேகத்தோடு கோடு கிழிப்பாள்.
மகள் அழும் சத்தம் மெல்லிதாக கேட்கிறது.
மட்டிப் பையையும் கீறு கத்தியையும் கீழே வைத்துவிட்டு மகளை நோக்கி நகர நினைத்தபோது கால் இடுக்கில் நண்டுக் குஞ்சொன்று ஊர்ந்து மேலேறியது.
அவளுக்குச் சிலீர் என்றது.
மறுபடியும் மகளை நண்டு நறுக்கியிருக்குமா?
பதை பதைப்போடு தொட்டில் கட்டியிருந்த கண்டல் மரத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாக…..
மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி அது. மேகம் மூட்டம் கொண்டு, அந்தா, இந்தா மழை கொட்டத் தொடங்கிவிடும் என்ற நிலையில் தனது மட்டி தேடும் போராட்டத்தை முடித்துக் கொண்டு மகளைக் கிடத்தியிருந்த தொட்டிலை நோக்கி நகர நினைத்தவளை நிலைகுலைய வைத்தது குழந்தையின் அழுகை ஒலி…
கீறு கத்தியையும் மட்டிப் பையையும் தூர எறிந்துவிட்டு ஓட்டமும் நடையுமாக ஓடிவந்து மகளை வாரி எடுத்தபோது குழந்தையின் உள்ளங்காலிலிருந்து இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.
தாயைக் கண்ட வெப்புசாரத்தில் மகள் மேலும் சத்தம் வைத்து அழத் தொடங்கினாள்.
சிவப்புக் கால் நண்டொன்று தனது கொடுக்குகளை இடுக்கிக் கொண்டு ‘தனக்கும் இதற்கும் தொடர்பில்லை’ என்று சாதிப்பது போல நிமிர்ந்து பார்த்து விட்டு ஓடத் தொடங்கியது.
நண்டுக் கொடுக்கின் பிடிக்குள் தன் கால்துண்டுச் சதையை இழந்து விட்ட வலி பொறுக்க முடியாமல் குழந்தை வீரிட்டு அழத்தொடங்கியது.
அவள் ஓட்டமும் நடையுமாக இரண்டு மைல் தூரம் பேய் பிடித்தவள் போல ஓடிவந்து ஆஸ்பத்திரியில் காட்டி ஒரு வாரம் பத்து நாள் கூடவே இருந்து கண்விழித்து வைத்தியம் பார்த்தாள்…. அவளை விட்டால் தனது வாழ்க்கையில் வேறு என்னதான் பிடிமானம் இருக்கிறது? குழந்தை இல்லையென்றால் அவள் தொடர்ந்து வாழ்ந்துதான் என்ன பிரயோசனம்?….
ஒருவாறாக காயம் ஆறியது. ஆனால் வலதுகால் பாதத்தில் மாங்காய் பிளந்தது போல் அந்த வடு இன்னமும் இருக்கிறது.
இந்த காலத்தில் பெரியப்பாவின் மகன் கீறு கத்தியை தூக்கிக் கொண்டான். அவனால்தான் அவளுக்கு அந்த ஆஸ்பத்திரிக் காலத்தில் வொஜீபனம் கிடைத்தது.
குழந்தையின் அழுகை ஒலி கேட்டதும் அவளுக்கு பழைய ஞாபகம் தான் வந்தது. மீண்டும் நண்டு தான் கடித்திருக்குமோ?…. அவள் வேகமாக ஓடத் தொடங் கினாள்.
நல்லகாலம். அப்படியொன்றும் இல்லை. குழந்தை கைகளை ஆட்டி சாணைக் கயிற்றுப் பக்கம் திசைகாட்டிச் சிலிர்த்தாள்.
அந்தத் திசையில் அவள் பார்வை சென்று நிலைத்தபோது அடி வயிற்றில் ‘பகீர் என்றது. குழந்தையை அப்படியே விழுங்கும் நோக்கத்தோடு வந்திருந்த மலைப்பாம்பு ஆள் அரவம் கண்டதும் பின்வாங்கி ஊரத் தொடங்கியது.
மகளை வாரி எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கேவத் தொடங்கினாள். கொஞ்சம் தான் பிந்தியிருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய விபரீதத்தை நினைத்த போது அவளுக்கு மயக்கமே வரும்போல இருந்தது. அப்படியே நிலத்தில் குந்தி விட்டாள்.
ஆண்டவனே இது என்ன சோதனை, இந்தக் குழந்தையும் இல்லை யென்றால் நான் எப்படி தனியாக வாழ்வேன்…. நான் உயிரோடு இருக்கவே மாட்டேன்…. என் செல்வமே…..’
மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
அவளுக்குப் பசியெடுத்தது. சாப்பிடப் பிடிக்கவில்லை. போத்தலில் அடைத்து வைத்திருந்த உப்புக் கஞ்சியை எடுத்து தரையில் கவிழ்த்து விட்டாள்.
பாதிக்கஞ்சி மண்ணில் சங்கமமாகிக் கொண்டிருந்தபோது அவளுக்கு மனம் மாறிவிட்டது. இந்தக் கஞ்சி தன் குடலுக்குள் இறங்காவிட்டால் குழந்தைக்கு பால் இல்லாமல் போய்விடுமே. பாதி மண் கலந்தும் கலவாமலும் எஞ்சி நின்ற கஞ்சியை இயந்திர வேகத்தோடு விழுங்கி முடித்தாள்…தூரத்தில் உருண்டு கிடந்த விரும்பிக் காய் அவளை விநோதத்தோடு பார்த்துக்கொண்டிருந்தது.
பாம்பைக் கண்டு அரண்டிருந்த குழந்தை இன்னும் அந்தப் பயம் தெளியாமல் தாயின் நெஞ்சோடு மேலும் புதைந்து கொண்டது. குழந்தையின் கால் பாதத்தில் வடுவாக பிளந்திருந்த பழங் காயத்தை அவள் வாஞ்சையோடு வருடிவிட்டாள். இது முதல் தத்து . இன்று இரண்டாவது தத்து. இன்னும் எத்தனை தத்துக்களை இவள் சந்திக்க நேருமோ? தலை உயர்த்தி குழந்தையின்முகத்தை முத்தமிட்டு மீண்டும் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டாள்.
வாடை பெயர்ந்திருந்தது. கச்சான் தொடங்க இன்னம் நேரம் இருக்கிறது. கடல் காற்று வீசுகின்ற நேரம் அது. இந்தக் காற்றுத் திசையில் தோணிகளெல்லாம் அலுப்பின்றி கரைக்கு வந்துவிடும்.
ஆனால் இங்கு காற்று திசைமாறி வீசுகிறது. வாடை பெயர்ந்தவுடன் சோளகம் வேகம் கொள்ள வேண்டும். ஆனால் இன்று திசைமாறி சுழன்று வீசுகின்றது. கால்களுக்குக் கீழ் சொதசொதப்பான கறுப்பு நீர் மேலெழத் தொடங்கிவிட்டது.
வித்தியாசமான நிறமும் துர்நாற்றமுமாக காலில் சொற சொறக்கின்ற நீரிலிருந்து பாதுகாக்க தனது கீறு கத்தியையும் தொட்டில் துணியையும் வாரிக்கொண்டு நிமிர்ந்த போது….. இதென்ன ஊழிக் கூத்து?….
நூறு பாக தூரத்தில் கறுப்பு மயமாக அலையொன்று மேலெழுந்து…… மேலெழுந்து…. தென்னை உயரத்தையும் தாண்டி…. கரையைநோக்கி…. கன்றுபோட்ட பசுவின் வேகத்தோடு…
இனி தாமதிக்க நேரமில்லை.
கீறு கத்தி, தொட்டில் எல்லாவற்றையும் கைவிட்டாள். குழந்தையை தூக்கி பிளாஸ்டிக் தாச்சியில் வைத்தாள். தாச்சியை தலையில் வைத்துக் ‘கொண்டு ஓடத்தொடங்கினாள். முள்ளிச் செடிகள் காலைக் கீறி ரணமாக் குகின்றன. கண்டல் வேர்கள் விரலை உடைக்கின்றன. சேலை நழுவிப் போகப் பார்க்கிறது. கீழே குனிந்து பார்க்க நேரமில்லை. காற்றைவிட வேகத்தோடு கடல் கறுப்புக் கடல் துரத்தி வருகிறது. ஓட்டம் ஓட்டம்…. இதைத் தவிர இப்போது வேறு வழியில்லை….. யா அல்லாஹ்…. என்ட புள்ளையைக் காப்பாத்து…..
தலையில் குழந்தையின் சுமையோடு காலில் இரத்தக் காயங்களோடு அவளால் எவ்வளவு வேகத்தோடு ஓட முடியும்?…. கடலாகிப்போன ஊரோடு மக்களின் ஓலமும் ‘காப்பாத்துங்க காப்பாத்துங்க’ என்ற கூக்குரலும் அவளது காதுகளில் விழத்தான் செய்கிறது. அவளால் அதனை கவனிக்க முடியவில்லை. அதற்கு இப்போது நேரமில்லை… ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை…. ஒரே மூச்சோடு…. மகளையும் சுமந்துகொண்டு ஓடினாள்…. ஓடினாள்….
ஆனால் அவளால் முடியவில்லை. போர்க்கால வேகத்தோடு வந்த இராட்சத அலை அவளைப் பந்தாடியது. கன்னா மர உயரத்திற்கு வந்த கறுப்பு அலை அவளையும் சேர்த்துக்கொண்டு மரத்தில் மோதியது. மகளை தாங்கியிருந்த கைகள் வலுவிழந்து போனது. மரக்கிளையில் மோதிய வேகத்தில் நினைவிழந்து….. நினைவிழந்து….
தனது கரங்களில் இருந்து மகளையும் பிளாஸ்டிக் தாச்சியையும் யாரோ திருகிப்பறிப்பது போல…கனவுக் காட்சிபோல….. மலைப்பாம்பு தன்னையும் மகளையும் சுற்றி வளைத்து விழுங்குவது போல….
அன்று மாலைதான் அவளைக் கண்டெடுத்தார்கள். கன்னா மரக் கிளையில் தொங்கிக் கொண்டிருந்த அவளை கண் இடுக்குகள், காது, மூக்கு வாயெல்லாம் கறுப்ப நீர் திட்டுத் திட்டாக படிந்திருக்க உயிரிருக்கிறதா இல்லையா என்ற சந்தேகத்தோடு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.
ஆனால்…
அவள் உயிரோடுதான் இருந்தாள். மரத்தில் மோதிய காயங்கள் உடல் முழுக்க இரத்தவாறாக காட்சியளிக்க, முகமெல்லாம் கறுப்பு நிறமாக மாறி ஆளடையாளம் தெரியாமல்…… மூர்ச்சை தெளியாமல்… நினைவிழந்து….
பெரியம்மாவின் மகன்தான் இரண்டாவது நாள் அடையாளம் கண்டான். அவளால் பேச முடியவில்லை. உடல் முழுவதும் காயங்களுக்கு கட்டுப்போட்டு இருந்தது. மூக்குத் துவாரம் வழியாக உணவு சென்று கொண்டிருந்தது.
மூன்றாம் நாள் இலேசாக கண் விழித்தாள்.
“தம்பி எங்கடா என்ட புள்ள?…”
தம்பியால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவனும் இந்த மூன்று நாட்களாக தேடிக்கொண்டுதான் இருக்கிறான். குழந்தைகளின் இறந்த உடல்கள், கமராக்காரர்களால் பிடிக்கப்பட்ட படங்கள், ஆஸ்பத்திரி வார்டுகள்…. ஒவ்வொன்றாகப் பார்த்துத் தான் வருகிறான். தெரிந்தவர்களிடமெல்லாம் விசாரித்து வருகிறான். ஆனால் குழந்தை அகப்படவில்லை. இறந்ததற்கான அடக்கியதற்கான தடையங்களும் ஒன்று இல்லை.
“கொஞ்சம் பொறுங்க ராத்தா ஆறுதலாயிருங்க. பரீனா எப்படியும் கிடைத்து விடுவாள். எங்காவது யாராவது காப்பாற்றி வைத்திருப்பாங்க”
அவனது நம்பிக்கை வீண் போகவில்லை. ஆஸ்பத்திரி வட்டாரங்களுக்கு செய்தி ஒன்று கிடைத்தது. ஒரு வயது பெண் குழந்தை யொன்று தென்னை மர வட்டில் பிளாஸ்டிக் தாச்சியில் இருந்தவாறு மூன்று நாளைக்குப் பிறகு மீட்கப்பட்டு கொண்டு வரப்பட்டதாக…
அவன் விரைந்து விவரம் சேகரித்தான்.
ஆனால் குழந்தையின் முகத்தை பார்ப்பதற்கிடையில் உயர் பராமரிப்பு பிரிவுக்கு கொண்டு சென்று விட்டார்கள்.
“ராத்தா….”
“ம்….” அவளால் கண் விழிக்க முடியவில்லை.
“ராத்தா….”
“ம்….. சொல்லு தம்பி…. பரீனா கிடைச்சிட்டாளா?”
‘இல்லை’ என்று சொல்ல அவனுக்கு மனம் வரவில்லை.
“பரீனாட வயசில ஒரு புள்ளைய கண்டெடுத்திருக்கிறாங்க…. தென்னை மர வட்டுல இருந்ததாம். பெண் குழந்தை. ஒரு வயசு சொல்றாங்க, மூணு நாளா சாப்பாடு இல்லாம இருந்ததால ஐசி வாட்டுக்கு கொண்டு போயிட்டாங்க”
‘அது பரினாதானா?”
“தெரியாது. நான் பார்த்துச் சொல்றன்”
அவள் எழுந்து இருக்க பிரயாசப்பட்டாள். முடியவில்லை. மீண்டும் மயக்கமுற்றுப் போனாள்.
மாலையில் குழந்தையை வார்ட்டுக்கு கொண்டுவந்து விட்டார்கள். குழந்தைக்கு மயக்கம் தெளிந்திருந்தது. ஆனால் பலவீனமாக இருந்தது. கண் கூடுகள் எல்லாம் உள்வாங்கி…. மெலிந்து……
கட்டில் அருகில் வேறொரு தம்பதியினர் நின்று கொண்டிருந்தார்கள்.
“இது உங்கள் குழந்தையா”
“ஆமாம்”
“குழந்தையின் பெயர்?”
“நஸ்ரியா”
“நீங்கள் இந்த ஊரா?”
“இல்லை. கொழும்பு. ஆனால் எங்கட சொந்தக்காரங்க இங்க இருக்காங்க. தென்னந்தோட்ட றோட்டோரமா வரும்போதுதான் சுனாமி வந்தது. காரை உருட்டி புரட்டிப் போட்டது. எப்படியோ உயிர் தப்பிட்டோம். குழந்தை கிடைச்சது பெரிய பாக்கியம்.”
அவன் மலைத்துப் போனான். இது நஸ்ரியா இல்லை. பரீனாதான். இது எங்கட ராத்தாட புள்ளதான். இது அநியாயம். இது அநியாயம். இது விடயேலாது….
அவன் குழந்தையைத் தூக்கிக் கொண்டான். தம்பதியர் விறைத்துப் போனார்கள். “இது எங்க ராத்தாட புள்ள நான் தரமாட்டேன்.”
அவள் அழத்தொடங்கிவிட்டாள். குழந்தையைப் பறித்துக் கொண்டாள். “இது என்ட புள்ள. என்ட வயித்துல பொறந்த புள்ள. இவன் யாரு இங்க வந்து கரைச்சல் கொடுக்கிறது?”
அதற்குள் கூட்டம் கூடிவிட்டது.
அவன் மெதுவாக நகர்ந்து ராத்தாவின் வார்ட்டுக்குப் போனான். அவள் இவன் வருகைக்காகக் காத்திருந்தாள்.
“பரீனா கிடைச்சிட்டாளா”
“ஆமா ராத்தா…. ஆனால் கொழும்புக்கார குடும்பம் – கொஞ்சம் வசதியான ஆட்கள் போல. தங்கட மகள் ‘நஸ்ரியா’ என்று சொல்லிக்கொண்டு நிற்கிறாங்கள்.”
“இல்ல இல்ல…. அது ப-ரீனாதான்…..நான் விடமாட்டேன். என்ட புள்ளய நான் யாருக்கும் தர மாட்டேன், என்ட புள்ள எனக்கு வேண்டும்…… போய்த்தூக்கி வா…. தம்பி.”
தம்பி புறப்பட்டான்.
“தம்பி அவள்ர வலது கால் பாதத்துல நண்டு கீறுன காயம் இருக்கும். அதப்பாரு. அது இருந்தா…… அது என்ட குலக்கொடிதான்….”
தம்பி அம்பாக வெளியேறினான்.
கொழும்புத் தம்பதியினர் விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தனர்.
“வந்த இடத்துல கஷ்டப்பட்டுப் போனோம். நல்ல காலம் மூணு நாளைக்குப் பிறகாவது ஏங்கட மகள் கிடைச்சாள்.”
“இது உங்கட மகள்தானா?”
“ஆம்… இந்த வலது கால் பாதத்தைப் பாருங்க. ஏழு மாசமா இருக்கும் போது தாய்க்காரி பாத்ரூம்ல வழுக்கி விழுந்ததில குழந்தையும் அடிபட்டு பேசன் வெட்டுன காயம்….. இந்தா”
அவள் வலது காலை தூக்கிக் காட்டுகிறாள்.
கூட்டம் கலைந்து செல்கிறது.
அவனும்தான் அந்தக் காயத்தைப் பார்த்தான். மாங்காய் பிளவுபோல பிஞ்சிக் கால்களில் வடுவாக தெளிவாக இருந்தது.
“ராத்தா நீங்க வந்து பாருங்க அது அவங்கட குழந்தை எண்டுதான் சாதிக்கிறாங்க. கால் காயத்தைக்கூட ஆறு மாசத்தில் விழுந்த காயம் என்று சொல்றாங்க.”
அவனுக்கு கண்ணீர் முட்டிவிட்டது.
அவளுக்கு ஆவேசம் பிடித்துவிட்டது.
தன் வாழ்க்கைக்கு இருந்த ஒரேயொரு பற்றுக்கோடு. அதுவும் கைநழுவி போகப் போகிறதா?… பரீனா இல்லாமல் நான் எப்படி சீவிப்பது?…..
மூக்கிலும் கையிலும் மாட்டியிருந்த பிளாஸ்டிக் குழாய்களை ஆவேசத் துடன் கழற்றி வீசினாள். மேலாடையால் உடம்பைப் போர்த்துக் கொண்டாள்.
வார்டெல்லாம் – நடையெல்லாம் சனங்களின் ஒப்பாரி.
‘மூனு பிள்ளைகள் தாயே. தாயும் தகப்பனும் கடலோடு போயிட்டாங்க. இனி இந்தப் புள்ளைகள்ர கதி?…’
‘எல்லாம் எட்டு உருப்படி. மூத்தது ரெண்டும்தான் உழைக்கிற வயசு ரெண்டுமே போயிற்று….. இனி அந்தக் குடும்பம் என்ன பாடுபடப்போவுதோ?’
‘என்ட உம்மா, என்ன உட்டிட்டு எங்கம்மா போன நீ?’
‘ஊடும்போய் தொழிலும்போய் வல வள்ளம் எல்லாமே போயிற்றுது… இனி என்ட குடும்பத்த எப்படிக் காப்பாத்துவேன்.’
எல்லாக் குரல்களையும் வேதனைகளையும் செவிமடுத்துக்கொண்டே அவள் வேகம் வேகமாக கைவீசி ஆவேசம் வந்தவள் போல பரீனா இருந்த இடம்தேடி ஓடினாள். பின்னால் பெரியப்பா மகன்.
உடம்பெல்லாம் இரத்தக் காயங்கள். மரத்தோடு அடிபட்டதில் உடலில் பலவீனம். விண்விண் என்று வலி…. அத்தனையும் சகித்துக்கொண்டு அவள் பரீனாவைக் காண நடந்து வந்திருந்தாள்.
அவள் மனிதில் மெல்லிதாக – மின்னல் கீற்றாக ஒரு சிந்தனை…. “பரீனாவை நல்ல வாழ்வு வசதியோடு என்னால் எதிர்காலத்தில் வாழ வைக்க முடியுமா?…
தம்பியின் கைகளை பிடித்துக்கொண்டாள்.
கீறு கத்தி அவள் இதயத்தை வரி வரியாக பிளந்து இரத்தம் சொட்டுவது போல் உணர்வு மேலோங்கியது. கால்கள் தளரத் தொடங்கின.
பரீனா பரீனா பரீனாதான். சந்தேகமில்லை. கால்பாதத்தைத் தூக்கி அந்த மாங்காய்ப்பிளவு காய்த்தைப் பார்த்தாள். சந்தேகமில்லை. இது பரீனாதான்.
குழந்தை கண் விழித்து அரக்க, பரக்க பார்க்கிறது.
வலது கண் இமையை மருவினாற்போல கறுப்புமச்சம்…. இருக்கிறதா?…… ஆமாம் இருக்கிறது. இது அவருக்கும் இருந்தது…. ஆமாம் இது பரீனாதான்…
இரண்டு கைகளாலும் அள்ளி கன்னங்களில், காதுகளில், கண்களில், முத்தமிட்டாள்…… அந்தக் குழந்தையும் நினைவற்ற மயக்க நிலையில் ஆவு ஆவு என்று கைகளை வீசி அவள் கழுத்தை கட்டிக் கொண்டது.
கீறு கத்தி மறுபடியும் இதயம் நோக்கி….
இடது புறங்கையால் கண்ணீரை துடைத்துக்கொண்டு தனது கழுத்தை கட்டிக் கொண்டிருந்த இரு பிஞ்சிக் கைகளையும் விலக்கி, மார்பில் வைத்துவிட்டு மெதுவாக திரும்பி நடந்தாள்.
‘ராத்தா…..பரீனாவை விட்டுப்போட்டு இது நம்ம குழந்தை அல்லவா?’
அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள்
பரீனாவின் தாயாக மட்டும் அல்ல
அவள் எதிர்காலத்தை நினைத்த தாயாகவும்.
கருத்துகள் இல்லை