சமரசம்
![]() |
சமரசம் -samarasham |
சமரசம்
“ரம்மு…அடியே ரம்மு…,”
“ரம்யான்னு அழகா பேர் வச்சிருக்கா. அதென்ன ரம்மு, விஸ்கின்னு கூப்டறது!” அடுக்களையிலிருந்து கோபமாக வெளிப் பட்டு கேட்ட ரம்யா பாட்டிக்கு அறுபது வயதாகிறது.
“உன்னை அப்படிக் கூப்டறதுல ஒரு கிக் வரதுடி!” விஷமச் சிரிப்புடன் சொன்னார் ரகு தாத்தா. வயது அறுபத்தைந்து.
“வரும்..வரும்..எப்படி? பிராந்தி, பீர் சாப்டு வருமே, அது மாதிரியா?”
“இல்ல, அத விட ஜாஸ்தியா…”
“ஏது, ஏது, சின்ன வயசு அனுபவமா?”
“ம்ஹூம். இப்போதான் அந்த அனுபவமே வந்திருக்கு.”
“என்ன சொல்றேள்?” முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க கோபத்துடன் கேட் டாள் பாட்டி.
“அடி போக்கத்தவளே ! உன்னை என் வாயால ‘ ரம்மு’ ன்னு கூப்டேன் பாரு. அதத் தான் சொன்னேன்!”
“ஓஹோ! சரி.எதுக்கு இப்ப கூப்பிட்டேள்?”
“இல்ல.ஆமே வெறிச்சோடிக் கெடக்கு! எல்லாரும் எங்க போயிருக்கா?”
“தீம் பார்க்காம். அங்க போயிருக்கா. நீங்க நன்னா அசந்து தூங்கிண்டிருந்தேள். எழுந்ததும் சொல்லச் சொன்னா.”
“நான் மூஞ்சி அலம்பிண்டு வரேன். லோடாடாவுல காஃபி ரெடி பண்ணிவை. சாப்டுட்டு நாமளும் கெளம்பலாம்.”
“எங்க கெளம்பறது?”
“நம்ம நகர்ல இருக்கற தீம் பார்க்குக்குதான்.”
“என்னது, நம்ம நகர் ல தீம் பார்க்கா? என்ன உளர்றேள்?”
“அடியே ரம்மு! வர்றவாள்ளாம் உட்கார்ந்து பேசுவாளேல்லியோ? அப்படி பேச தீம் வேணும். ஸோ தீம் பார்க்..ஹ..ஹ…ஹ…ஹ..!”
“அய்ய..போறும் அசடு வழியறது!” என்ற பாட்டி யோசிக்க ஆரம்பித்தாள்.
தாத்தாவுக்கு பொறுமை தாளல்ல.
“என்னடி யோசனை? உன்ன யாராவது கிட்நாப் பண்ணிடுவாளோன்னு பயமா?”
“ஆமா…நான் சின்னப்பொண்ணு பாருங்க! என்னத் தூக்கிண்டு போகப்போறா!”
“ஒரு வேளை என்கூட வர வெட்கமா…அப்படின்னா நீ முன்னாடி நட. நான் பின்னாடி பத்தடி gap விட்டு ஃபாலோ பண்றேன் !”
“ஐயோ! ஏன் இப்படி அபத்தமா பேசறேள்?”
“சரி என்ன தயக்கம் சொல்லு!”
“இருங்க..மொல்ல மூஞ்சி அலம் பிண்டு வாங்கோ. சூடா காஃபி போட்டு எடுத்துண்டு வரேன்.”
தாத்தா முகம் அலம்பிண்ட கையோடு பாட்டி கொடுத்த காஃபியை ஓரே விழுங்கில் காலி செய்தார். லோட்டாவை அருகில் இருந்த டீபாமீது வைத்தார்.
“இப்போ சொல்லு!”
“வேற ஒண்ணுமில்ல..இன்னிக்கு சாயங்காலம் டி.வியில நல்ல படம் போடறாளாம்! ஆனா பழைய படம்”
“படம் பேரென்ன?”
“ரம்பையின் காதல்.”
“அட சட், எத்தன தடவை பார்ப்பே?”
“அருமையான படம்! சுடுகாட்டுல சாமியார் பாடற பாட்டை இன்னிக்கெல்லாம் கேட்டுண்டிருக்கலாம்!”
“சரிதான். உனக்கு வயசாகிடித்துங்கறத ப்ரூவ் பண்றே!”
“எப்படி?”
“சுடுகாட்டப் பத்திப் பேசறயே!”
“‘சமரசம் உலாவும் இடமே’ங்குற பாட்டு. தீர்க்கமான அர்த்தங்கள்! எல்லாக் காலத்துக்கும் பொருத்தமான சாகாவரம் பெற்ற பாட்டு!”
பாட்டி அருகில் வந்து நின்றவர், “சரி..நான் டிரஸ் பண்ணிண்டு கெளம்பறேன். ரம்பையின் காதலா இல்ல ரம்யாவின் காதலாங்குறத நீ முடிவு பண்ணிக்கோ!”
பாட்டியின் கன்னம் வெட்கத்தில் சிவக்க, தாத்தாவுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
Sirukathai | Sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ்சிறுகதைகள்
கருத்துகள் இல்லை