sirukathaigal

அதுக்காகத் தான் இந்தப் பயிற்சி


ஒரு தாய் தனது மகனிடம்

“இப்படி கவனம் இல்லாம ஜியாமெட்ரி பாக்ஸைத் தொலைச்சுட்டு வந்து நிக்கிறியே. இது தப்பு கோகுல். இருந்தாலும் உன்னை நான் மன்னிச்சுடறேன். நாளைக்கு வேற ஜியாமெட்ரி பாக்ஸ் வாங்கித் தர்றேன்” என்று மகனிடம் தன் மனைவி ரேவதி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான் கணேசன்...

ரேவதி இப்படிச் சொல்வது இது முதல்முறை அல்ல. சில ஆண்டுகளாகவே அவள் கோகுலிடம் இப்படித் தான் நடந்து கொள்கிறாள்...

ஒருமுறை கோகுல் கணக்குப் பாடத்தில் தோல்வி அடைந்த போது இப்படித் தான் அவனைத் திட்டிவிட்டு, பிறகு அவனிடம் மன்னிப்பதாகச் சொன்னாள். படிக்காமல் விளையாடி விட்டு வந்தாலும், வீட்டுப் பொருட்களை கைதவறி உடைத்தாலும் இப்படித் தான்...

முதலில் அவன் செய்தது தவறு என்று கண்டித்து விட்டு, பிறகு மன்னித்து விடுவதாகச் சொல்லி விடுவாள் ரேவதி...

“ஏன் ரேவதி, கோகுல் செய்யுற தப்புகளை எப்படியும் மன்னிக்கத் தான் போறே. பிறகு எதுக்காக அவன் கிட்டே அது தப்புன்னு சொல்லித் தேவையில்லாம குற்ற உணர்ச்சியைத் தூண்டி விடுறே...?” ரேவதியைத் தனியாக அழைத்துக் கேட்டான் கணேசன்...

“கோகுல் இப்ப டீன்ஏஜ்ல இருக்கான். இனி மேற்படிப்பு, வேலைன்னு வாழ்க்கையில எத்தனையோ பேரைச் சந்திக்கப் போறான்...

எத்தனையோ சூழல்களை எதிர்கொள்ளணும். இப்ப அவன் செய்யுற தப்புகளை தப்புன்னு நாம தான் சுட்டிக் காட்டணும். அப்ப தான் அதை இனி செய்யாம கவனமா இருப்பான். அதேநேரம் அவனை நாம மன்னிக்கிறோம்னு அவனுக்குத் தெரியணும்...

அப்பதான் மற்றவங்க அறியாம செய்யுற தப்புகளை அவன் மன்னிக்கவும் கத்துக்குவான். தப்பு செய்யாதவங்க மட்டுமில்லங்க, மற்றவங்க செஞ்ச தப்புகளை மன்னிக்கவும் தெரிஞ்சவங்க தான் முழு மன ஆரோக்கியத்தோட வாழ முடியும்...

அதுக்காகத் தான் இந்தப் பயிற்சி... ” என்றாள்.

இப்படிக் கூறிய மனைவி ரேவதியை புருவம் உயர்த்தி மகிழ்ச்சியோடு பார்த்தான் கணேசன்...

 பொறாமை, பிடிவாதம்,, வாக்குவாதம், புரிதலின்மை, போன்றதால் மன்னிப்பு என்பதே மறைந்து வருகிறது. பலருக்கு, தான் செய்தது தவறென்று தெரிந்தும், அதை ஒப்புக் கொள்வதற்கு தன்மானம்


இடம் கொடுப்பது இல்லை...!

 நம் தவற்றை மற்றவர்கள் சுட்டிக் காட்டும்போது அது உண்மையாக இருந்தால், அதை நேர்மையாக ஒப்புக் கொள்வோம். அது நம்மைப் பற்றிய நன்மதிப்பைத் தான் கூட்டும்...!

மிருகத்திற்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடே அவர்களுக்குள் மற்றவர்களின் சிறிய தவறுகளை மன்னித்து மறப்பது தான். “மன்னிப்பு கேட்பவன் மனிதன், மன்னிக்கத் தெரிந்தவன் பெரிய மனிதன்“ என்று சொல்வது உண்டு. இன்றைய சூழலில் அப்படிப்பட்ட மனிதர்களோ, பெரிய மனிதர்களோ காணக் கிடைப்பது அரிது...

மன்னிப்பு கேட்போம்...! 

மனதார மன்னிப்பு கொடுப்போம்...!!!


Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories


கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."