நிலையானது எது?
நிலையானது எது?
மாளவதேச மன்னன் மரகதசேனன் திடீரென்று இறந்து விட்டான். அவனது தமையன் மாணிக்கசேனன் காட்டில் ஞானசேகரரின் ஆசிரமத்தில் துறவியாக வாழ்ந்து வந்தான். அவனுக்கு நாடாளும் ஆசையே இருக்கவில்லை. சிறு வயதிலேயே அவன் தன் பெற்றோர்களின் அனுமதி பெற்று ஆசிரமத்தில் சேர்ந்துவிட்டான்.
மரகதசேனனின் மந்திரிகளில் பெரியவரான சுபுத்தி ஞானசேகரரின் ஆசிரமத்திற்குச் சென்று மாணிக்கசேனனைக் கண்டு நிலைமையை எடுத்துக் கூறினார். அவர் "பிரபுவே! மரகதசேனரின் மகன் சிறு வயதினன். இப்போது பத்து வயதுதான் அவனுக்கு ஆகிறது. இன்னும் பத்து வருடங்கள் கழிந்த பிறகே அவனை சிம்மாசனத்தில் அமர்த்தலாம். தாங்கள் வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றால்தான் நாடு பிழைக்கும்" என்றான்.
மாணிக்கசேனன் தன் குருவைக் கண்டு சுபுத்தி சொன்னதை எல்லாம் அவரிடம் கூறினான். ஞானசேகரர் சற்று நேரம் யோசித்து 'நீ இவ்வளவு காலம் ஒரு துறவி போல வாழ்ந்தாய். இந்த ஆசிரமத்தை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என நான் எண்ணியிருக்கிறேன். அதற்கு இன்னும் சிறிது காலம் ஆகும். அதனால் நீ மாளவ நாட்டிற்குப் போய் நிலைமையைச் சரிப்படுத்து. அரசகுமாரனுக்கும் சொல்ல வேண்டியதைச் சொல்லிக்கொடு. எது எப்படியானாலும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் அதனை நன்கு நிர்வகி' எனக் கூறினார்.
மாணிக்கசேனனும் அதற்கு சம்மதித்து ஞானசேகரரிடம் விடைபெற்றுக் கொண்டு தலைநகருக்குச் சென்றான். அவன் ஞானசேகரர் கூறியபடி உடனேயே ஆட்சியில் கவனம் செலுத்தினான். அப் போது அவனுக்கு பொக்கிஷத்தில் பணம் இல்லை என்பது தெரிந்தது. பணம் தேவைப்படும் போது மக்கள் மீது வரிகளை உயர்த்தி பொக்கிஷத்தில் பணம் சேர்க்கிறார்கள் என்றும் அதிகாரிகள் கை நிறைய லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதும் அவனுக்குத் தெரிய வந்தது.
மாணிக்கசேனன் தன் தம்பியைப் போல அல்லாமல் மந்திரிகளைக் கூட்டி யோசனை கேட்டான். அதற்குப் பின் தன் தம்பியின் மனைவியான குணவதியிடமும் யோசனை கேட்டான். அவளும் "என் தந்தையிடம் நான் ஆட்சி முறை பற்றி நன்கு தெரிந்து கொண்டிருக்கிறேன். என் கணவர் என் யோசனைகளையோ அமைச்சர்களின் யோசனைகளையோ ஏற்றதும் இல்லை. தன் இஷ்டப்படி எல்லாம் செய்து கொண்டிருந்தார். அதனால் எல்லாம் சீர்குலைந்தது' எனக்கூறி தன் யோசனைகளையும் தெரிவித்தாள்.
"அதைக்கேட்ட குணவதி திடுக்கிட்டு "ஊஹும். கூடாது. நீங்கள் என் மகனுக்கு இருபது வயதாகும் வரை இங்கிருந்து போகும் பேச்சே எடுக்கக் கூடாது. அவனுக்கு இருபது வயதானதும் அவனை சிம்மாசனத்தின் மீது அமர்த்துங்கள். அதுவரை நம் நாட்டை எதிரிகள் தாக்காமல் தடுப்பது உங்கள் பொறுப்பு. இதை நீங்கள் செய்யாதுபோனால் எல்லோரும் உங்களைத்தான் ஏசுவார்கள்” என்றாள்.
அவளது கண்களில் ததும்பிய கண்ணீரும் இளவரசனின் இளம் பிராயமும் மாணிக்கசேனனின் மனதைக் கரைத்துவிட்டது. எனவே அவன் குணவதி கூறியபடி மேலும் சில ஆண்டுகள் இருக்கச் சம்மதித் தான். மாணிக்கசேனனின் ஆட்சி யில் அதிகாரிகளால் லஞ்சம் வாங்க முடியவில்லை. ஊழல் புரியும் அரசாங்க ஊழியர்கள் வேலையி லிருந்து நீக்கப்பட்டார்கள்.
ஒருநாள் ஞானசேகரர் மாளவ நாட்டின் தலைநகருக்கு வந்தார். அவர் மாணிக்கசேனனைக் கண்டு 'எனக்கு வயதாகிவிட்டது. நீ ஆசிர மத்திற்கு வா. நான் உனக்குச் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டு இமயமலைக்குப் போய் விடுகிறேன். நீயும் இங்கு வந்து இருபது ஆண்டுகள் இருந்து விட்டாய். இப்போதே என்னுடன் கிளம்பு” என்றார்.
கடந்த நான்கைந்து ஆண்டுகளில் மாணிக்கசேனனின் மனதில் அரசபோகங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை தலை தூக்கலாயிற்று. அதனால் அவன் ஞானசகரருக்கு நேரிடையாக எவ்வித பதிலும் கூறாமல் முதலில் அவரை குணவதியிடம் அழைத்துச் சென்றான்.
அவள் ஞானசேகரரின் கால்களில் விழுந்து வணங்கி “நீங்கள் மாணிக்கசேனரை நிரந்தரமாக இங்கேயே இருக்க அனுமதியுங்கள். அவர் ஆசிரமத்திற்குப் போக வேண்டாம்" என்றாள். அதற்குப் பின் மாணிக்கசேனன் அவையைக்"கூட்டி ஞானசேகரரின் விருப்பத்தைத் தெரிவித்தான். அது கேட்டு மந்திரிகளும், பிரபுக்களும் மற்ற பிரமுகர்களும் கண்கலங்கியவாறே ஞானசேகரரிடம் மாணிக்கசேனனை ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று வேண்டினார்கள்.
ஞானசேகரர் மாணிக்கசேனனைத் தனியாக அழைத்து “நீ துறவியான போதிலும் மாயையில் சிக்கிக் கொண்டாய். நிலையற்ற இந்த போக வாழ்விற்காக நிலையான ஞானமார்க்கத்தைவிட்டு விட்டாய் நன்றாக யோசி. உனக்கு ஒரு மாதகால அவகாசம் அளிக்கிறேன். இதற்குள் நீ ஆசிரமத்திற்கு வருவதாக இருந்தால் வா என்று கூறிப் போய் விட்டார்.
இதற்கு ஒரு வாரத்திற்குப் பின் பொக்கிஷத்தில் பணம் திருடிய திருடன் ஒருவன் அகப்பட்டான். அவன் மந்திரி ஒருவனின் மகன் என்று விசாரணையில் தெரிந்தது. அந்த விசாரணையின்போது மேலும் சில விஷயங்கள் வெளியாகின.
அவனை விசாரித்த நீதிபதி அவனுக்கும் அந்த மந்திரிக்கும் மரண தண்டனை விதித்தார். ஏனெனில் அவன் பலமுறை திருடித் தன் தந்தையிடம் அவற்றைக் கொடுத்து வைத்திருந்தான். தீர்ப்பைக் கேட்ட மந்திரி நீதி மன்றத்தில் கோபமாக நீதிபதியைப் பார்த்து "நீதிபதியாக இருக்க உனக்கு ஏது தகுதி? முன்பு ஒவ் வொரு ஆண்டும் உனக்கு லட்சம் வராகன்கள் லஞ்சம் கொடுத்து தானே வந்தேன். புதிய மன்னர் வந்ததும் நீ நேர்மையானவன் என நடிக்கிறாயோ?' என்று கேட்டான்.
அதுகேட்டு நீதிபதி “நீ வாய்க்கு வந்தபடி உளறுகிறாய். உன் சொல்லுக்கு மதிப்பே இல்லை. ஆனாலும் நீ என் மீது குற்றம் சாட்டுவதால் உன்னை அரசரே விசாரிக்க வேண்டும் என உத்தரவிடுகிறேன்" எனக்கூறி அந்த வழக்கை மாணிக்கசேனன் விசாரிப்பார் என்றார்.
மந்திரியோ பலமாக சிரித்து "மன்னர் என்னை எப்படி தண்டிக்க முடியும்? நான் பொக்கிஷத்துப் பணத்தைத் திருடுவதை அறிந்தும் அவர் என்னைப் பதவியில் இருக்கவிட்டு யோசனைகளைக் கேட்டுதானே நடக்கிறார். அவர் உதவி இராவிட்டால் என் மகன் பொக்கிஷம் வரை போயிருப்பானா? எங்கள் துரதிர்ஷ்டம் காரணமாக ஒரு நேர்மையான காவலாளி என் மகனைப் பிடித்து விட்டான்" என்றான்.
இதைக் கேட்டு நீதி மன்றத்தில் இருந்தவர்கள் எல்லாம் கல்லாய்ச் சமைந்தனர். அப்போது மந்திரி 'மன்னருக்கு ஏன் பணம் தேவைப் பட்டது என்று கேட்கிறீர்களா? இப்போது ஒரு ரகசியத்தைக் கூறுகிறேன். துறவி எனப்படும் மன்னருக்குக் காட்டில் ஒரு மனைவி இருக்கிறாள். அவளுக்கு ஒரு மக னும் இருக்கிறான். அந்த மகனை மன்னர் இந்நாட்டு மன்னனாக்கத் தீர்மானித்திருக்கிறார். இதற்காகப் படைத் தளபதிகளில் பலருக்குப் பணம் கொடுத்து அவர்களைத் தம் பக்கம் சேர்த்துக் கொண்டிருக்கிறார். திடீரெனக் கலகம் செய்து சிம்மாசனத்தைக் கைப்பற்றுவதே அவர் திட்டம். இந்தக் கலகத்தில் ராணி குணவதியும் இளவரசர் பலசேனரும் கொல்லப்பட்டு விடுவார்கள். இந்தத் திட்டத்தில் எனக்கும் பெரும்பங்கு உண்டு" என்றான்.
இந்தத் தகவல் மாளவ நாட்டையே ஒரு குலுக்கு குலுக்கி விட்டது. எல்லோரும் இதற்கெல்லாம் மாணிக்கசேனன் பதில் சொல்லியாக வேண்டும் என்று வற்புறுத் தினார்கள். ராணி குணவதியும் கூட மாணிக்கசேனனின் விளக்கத்தைக் கோரினாள். தனக்கு எதுவுமே தெரியாது என மாணிக்கசேனன் கூறியும் யாரும் நம்ப வில்லை.
அப்போது குணவதி மாணிக்கசேனனிடம் "நீங்கள் குற்றமற்றவர் என்றும் அப்பழுக்கற்றவர் என்றும் நிரூபித்துக் காட்ட வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாட்டை விட்டுப் போய்விடுங்கள்: அப் போதுதான் உங்களுக்கு நாடாளும் ஆசை இல்லை என்பது தெளிவாகும்'' என்றாள்.
மாணிக்கசேனனும் "நான் ஒரு நிபந்தனையின் பேரில் நாட்டை விட்டுக் காட்டிற்குப் போய் விடுகிறேன். மந்திரிக்கு எதுவும் தெரியாது. நான் கூறியதன் பேரில் அவன் தன் மகனைப் பொக்கிஷத்திற்கு அனுப்பினான். நான் சொல்லிக் கொடுத்த பொய்களையே மந்திரி நீதி மன்றத்தில் கூறினான். அந்த மந்திரியை தண்டிப்பதில்லை என்ற வாக்குறுதி அளித்தால் நான் இங்கிருந்து போய் விடுகிறேன்' என்றான்.
அதுகேட்டு குணவதி ஆச்சரியப்பட்டு “அந்த மந்திரியைக் கொண்டு ஏன் இவ்வாறு பொய்களைச் சொல்ல வைத்தீர்கள்? ’ என்று கேட்டாள். அதற்கு மாணிக்கசேனன் நிதானமாக ‘நீங்கள் என்னிடம் காட்டும் அன்பு நிலையற்றது என்று என் குருநாதர் கூறினார். அதைப் பரீட்சிக்கவே இப்படிச் செய்தேன். நான் நாட்டின் மேன்மைக்காக எவ்வளவோ செய்தேன். அவற்றை எல்லாம் நீங்கள் மறந்து ஒருவன் என் மீது குற்றச்சாட்டுகளைக் கூறியதும் உண்மை எது என ஆராயாமல் என்னிடம் மட்டும் விளக்கம் கேட்டீர்கள். குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் என்று யாராவது மந்திரியைக் கேட்டீர்களா? மந்திரி உண்மையில் திருடன் அல்ல. ஆனால் திருடன் என்ற நிலையில் இருந்த அவன் கூறியதன் அடிப்படையில் நேர்மையான மன்னனிடம் விளக்கம் கேட்டீர்கள். இந்நாட்டில் திருடனையும் மன்னனையும் யாவரும் சமநிலை வைத்துப் பார்க்கிறீர்கள். எனவே எனக்குக் கிடைத்த பேரும் புகழும் நிலையற்றது. எனவே நிலையான ஞானமார்க்கத்திற்கே போகிறேன்” எனக் கூறிக் காட்டிற்குச் சென்றான்.
பாபநாசம்சாமா
அம்புலிமாமா




கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."