sirukathaigal

இட்டார் பெரியோர்

இட்டார் பெரியோர்

ஒரு நாள் நாரதர் பூலோக சஞ்சாரத்தை முடித்துக்கொண்டு வைகுண்டலோகம் சென்றார். அவரைக் கண்ட மகாவிஷ்ணு "நாரதா! பூலோகம் போய் வந்தாயே. அங்கு மக்கள் சுகமாயும் திருப்தியுடனும் இருக்கிறார்களா? நிறையச் செல்வம் படைத்தவர்கள் தான தர்மங்களைச் செய்கி றார்களா?" என்று கேட்டார்.

அதுகேட்டு நாரதர் சிரித்து "தேவா! தங்கள் கேள்விக்கு என்னால் சட்டென பதில் கூறமுடியவில்லை. தாங்கள் ஒரு தடவை பூலோகம் சென்று பார்த்தால் உண்மை நிலை தெரியும்" என் றார்.

விஷ்ணுவும் "சரி, நாம் இருவரும் சேர்ந்தே போவோம்" என்றார். இருவரும் வழிப்போக்கர்கள் போல உருமாறி ஒரு சிறிய ஊருக்குள் சென்றார்கள். 

அங்கே ஒரு பெரிய மாளிகையின் முன் நின்று அவர்கள் பார்த்தார்கள். அதன் வாசல் கதவு மூடித் தாளிடப்பட்டிருந்தது. அவர்கள் கதவைத் தட்டிக் குரல் கொடுத்துப் பார்த்தார்கள். ஆனால் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் வேறு ஒரு வீட்டிற்குச் சென்றார்கள். 

அந்த வீட்டின் கதவு திறந் திருந்ததால் அவர்கள் வீட்டிற்குள் சென்றார்கள். அவர்கள் தாம் வழிப் போக்கர்கள் என்றும் உண்ண ஏதாவது உணவு கொடுக்கும்படி அந்த வீட்டுக்காரனிடம் கேட்டார்கள். வீட்டுக்காரனோ அவர்களை வெளியே போகச் சொல்லிக் கதவைப் படாரென்று மூடித் தாளிட்டான்.

அவர்கள் இன்னும் சில வீடுகளுக்குப் போய் பார்த்தார்கள். ஒரு சிலர் ஒன்றும் இல்லை என்று விரட்டினார்கள். வேறு சிலர் ஏதாவது வேலை செய்து சம்பாதித்துச் சாப்பிடுவதுதானே என்று அறிவுரை கூறினார்கள். முடிவில் அவர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு குடிசைக்குச் சென்றார்கள்.

அவர்கள் 'ஐயா' என்று கூப்பிடவே குடிசைக்குள்ளிருந்து ஒரு கிழவன் வெளியே வந்தான். அவன் சிரித்தவாறே "உள்ளே வாருங்கள். யாரோ வழிப்போக்கர்கள் போலத் தெரிகிறது. நாங்கள் ஏழைகளானாலும் வீட்டிற்கு வந்தவர்களை எங்களது சக்திக்கு ஏற்றபடி உபசரிக்கத் தயங்கமாட்டோம்' என்றுகூறி உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

புதிதாக விருந்தாளிகள் வருவது கண்டு குடிசைக்குள் இருந்த கிழவி ஒரு கிழிந்த பாயை எடுத்துப் போட்டு அவர்களை உட்காரச் சொன்னாள். கிழவனும் "நீங்கள் சற்று இளைப்பாறுங்கள். அதற்குள் என் மனைவி சமை யல் செய்துவிடுவாள்" என்றான். 

அவர்கள் பாயில் உட்கார்ந்ததும் கிழவன் "முதலில் கொஞ்சம் பழமும் பாலும் சாப்பிடுங்கள். கொண்டு வருகிறேன்" என்றுகூறி குடிசைக்குப் பின்புறம் போய் ஒரு வெள்ளரிப் பழத்தைப் பறித்து எடுத்து வந்தான்.

அவன் வெள்ளரிப் பழத்தை நறுக்கி இரு துண்டுகளாக்கி ஒன்றை விஷ்ணுவிடமும் மற்றதை நாரதரிடமும் கொடுத்தான். பிறகு இரு சிறு கலயங்களில் பாலையும் கொண்டு வைத்து "முதலில் இதைச் சாப்பிடுங்கள். சற்று நேரத்தில் சாப்பாடு தயாராகிவிடும். பிறகு அதைச் சாப்பிடலாம்" என்றான். 

கிழவனும் கிழவியும் ஏழைகளான போதிலும் வீட்டுக்கு வந்தவர்களை உபசரிக்கும் விதம் கண்டு விஷ்ணு மகிழ்ந்து போனார். விஷ்ணு தன் கலயத்துப்பாலைக் குடித்துவிட்டுக் கீழே வைத்தார். அப்போது அதில் பால் நிறைத்து வழிந்தது. நாரதர் தனது வெள்ளரிப் பழத் துண்டைக் கொஞ்சம் கடித்துச் சாப்பிட்டுவிட்டுக் கீழே வைத்தார். அது முழுப் பழமாக ஆகிவிட்டது. இந்த அதிசயத்தைக் கண்ட கிழவன் ஆச்சரியப்பட்டு வந்திருப்பவர்கள் யாரோ மகாபுருஷர்கள் எனத் தெரிந்து கொண்டான்.

அவன் தன் மனைவியிடம் வந்திருப்பவர்கள் மகாபுருஷர்கள் எனக்கூறி தான் கண்ட அதிசயத்தைக் கூறினான். அவளும் ஆச்சரியப்பட்டவாறே தன் கணவனுடன் விருந்தாளிகள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்தாள். இருவரும் அவர்களை வணங்கி 'மகான்களே! நீங்கள் யார் என்பதைப் போதிய ஞானம் இல்லாத எங்களால் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் நீங்கள் சாமான்னிய மனிதர்களல்ல என்பது மட்டும் புரிகிறது. எங்கள் வீடு உங்கள் காலடிபட்டதால் புனிதமாகியது. எங்கள் அறியாமையால் நாங்கள் உங்களுக்கு ஏதாவது தவறு செய்திருந்தால் எங்களை மன்னியுங்கள்" என்றார்கள்.

அதைக்கேட்ட விஷ்ணு ஒரு குறையும் இல்லை. எங்களை மிக மிக நன்றாக உபசரித்தீர்கள். யாருடைய உதவியும் இல்லாமல் பணமும் இல்லாமல் வந்த விருந்தாளிகளை உபசரிப்பது கண்டு எங்கள் மனம் பூரிக்கிறது. நீங்கள் இருவரும் என்னோடு சற்று வெளியே வாருங்கள்" என்றார்.

அவர்களும் விஷ்ணுவுடனும் நாரதருடன் வெளியே வந்தார்கள். அவர்கள் வெளியே கண்ட காட்சியைக் கண்டு திகைத்துப் போனார்கள். ஏனெனில் எதிரே இருந்த மாளிகைகள். வீடுகள் எதுவும் இல்லாமல் ஒரு மைதானமாக இருந்தது. 

கிழவன் அவர்களைப் பார்த்து 'மகான்களே! இதென்ன கொடுமை! இங்கிருந்த வீடுகள் எல்லாம் என்ன ஆயின?" என்று கேட்டான். அதற்கு விஷ்ணு அவை எல்லாம் நிலத்தின் கீழே அமிழ்ந்து · விட்டன. பசி என்று வருபவர் களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் தம் வீட்டில் இடமளிக்காமலும், உணவளிக்காமலும் விரட்டும் அவர்கள் இருப்பதும் ஒன்று தான், இல்லாதிருப்பதும் ஒன்று தான். அதுபோகட்டும் உங்களுக்கு என்ன வேண்டுமோகேளுங்கள் கொடுக்கிறோம்" என்றார்.

கிழவனும் "எங்களுக்கு என்னவோ வயதாகிவிட்டது. நாங்கள் கோருவது ஒன்றேதான். எங் கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் மரணம் ஏற்பட வேண்டும். அது வரை கடவுளை வழிபட இங்கு ஒரு கோவில் இருந்தால் நல்லது என்று நினைக்கிறோம். இதுதான் எங்கள் ஆசை” என்றான். 

மறுவிநாடியில் அந்த மைதானத்தில் ஒரு அழகிய கோவில் தென்பட்டது. கிழவனின் குடிசையும் அழகியவீடாக மாறியது. அப்போது விஷ்ணு அக்கிழவனையும் ஆசீர்வதித்து "நீங்கள்தாம் உண்மையான மனிதர்கள். நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் சுகமாக வாழ்ந்துவிட்டு அது முடிந்த பின் அந்தக் கோவிலின் முன் இரண்டு ஆலமரங்களாக நீண்ட காலத்திற்கு இருந்து கொண்டிருப் பீர்கள்" என்று ஆசீர்வதித்து விட்டு நாரதருடன் மறைந்து போனார். 

அக்கிழத் தம்பதிகளும் தமக்குக் கிடைத்த செல்வத்தை தானதர்மங்களில் செலவிட்டு அக்கோவிலில் குடி கொண்டிருந்த தெய்வத்தை பூஜை செய்து கொண்டு பல ஆண்டுகள் வாழ்ந்தனர். அவர்கள் இறந்தபின் இரு ஆலமரங்களாகி அக்கோவிலின் முன் நின்று யாவருக்கும் பயன்பட்டார்கள். மக்கள் பெருந்திரனாக அக்கோவிலுக்கு வந்து அக்கிழத் தம்பதிகளின் புகழ்பாடி மரியாதை செய்தனர்.

சிந்து சங்கர்

அம்புலிமாமா



Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."