சிறுமி சிரித்தாள்!
![]() |
| சிறுமி சிரித்தாள்!-The girl laughed! |
பண்ணையார் பாலய்யா தன் வயல்களைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினான். அவனுக்கு சம்பளமில்லாமல் எடுபிடி வேலைகளைச் செய்பவள் அப்பண்ணையில் வேலை செய்யும் பொன்னனின் மகள் வள்ளி. அன்று அவள் பண்ணையாருக்குப் பின்னால் சோற்று மூட்டையைச் சுமந்து கொண்டு போய்க் கொண்டிருந்தாள். ஓரிடத்தில் வயல் வரப்பில் நடந்து கொண்டிருந்த பாலய்யாகால் வழுக்கிக் கீழே விழுந்து விட்டான். அவனால் எழுந்திருக்கக் கூட முடியவில்லை.
பாலய்யாவின் உடம்போ பருமனானது. கை கொடுத்துத் தூக்கி விட வள்ளியால் முடியாது. அதனால் அவன் வள்ளியைக் கூப்பிட்டு "யாராவது பெரியவனை கூட்டிவா. அவனால் தான் என்னைத் தூக்க முடியும்" என்றான். வள்ளி சுற்றிலும் பார்த்தாள். அடுத்த வயலின் சொந்தக்காரன் சின்னசாமி நின்று கொண்டிருப்பதைக் கண்டு வள்ளி ஓடி அவனிடம் கீழே விழுந்து கிடக்கும் பாலய்யாவை தூக்கி விட வருமாறு வேண்டினாள்.
சுப்பன் காத்தானைக் கடித்து கொண்டு விட்டு வள்ளியோடு பாலய்யா விழுந்து கிடக்கும் இடத்திற்கு வந்து அவனைத் தூக்கி நிறுத்தி "உங்களுக்கோ வயதாகி விட்டது. யாரையாவது உடன் கூட்டிக் கொண்டு வயல் சுற்றிப் பார்க்க வருவது தானே. இந்தக் காலத்தில் யாருக்கும் பிறருக்கு உதவ வேண்டுமென்ற எண்ணமே இல்லை. இந்த வள்ளி சொன்னதைக் கேட்டு இரக்கப் பட்டு வந்தேன்" என்றான்.
பாலய்யாவின் உடல் மீதும் ஆடைகளிலும் சேறும் சகதியும் ஒட்டி இருந்தது. சுப்பன் ஓடிப் போய் ஒரு இரட்டை மாட்டு வண்டியைக் கூட்டி வந்து அதில் பாலய்யாவையும் வள்ளியையும் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தான். பாலய்யாவின் மனைவி அவன் வீட்டிற்குள் நுழையும் போதே, "இதென்ன வேஷம்?" என்று கேட்டுச் சிரித்தாள். "என் மீது பரிதாபப்பட்டு வள்ளிதான் உதவிக்கு ஆளை அழைத்து வந்தாள். நீயோ என்னைப் பார்த்து சிரிக்கிறாயே'' என்று சிடுசிடுத்தான்.
வள்ளி உள்ளே போய் பாலய்யாவின் மருமகளிடம் "நான் போய் சிநேகிதி பூவாயியைப் பார்த்து விட்டு நொடியில் வந்து விடுகிறேன்" என்றாள். அவளோ "இப்போது பூவாயியிடம் என்ன பேச்சு? வீட்டில் நிறைய வேலை இருக்கிறது. அதை எல்லாம் செய்து விட்டுப் போ" என்று கூறிப் பாத்திரங்கள் தேய்க்க எடுத்துப் போட்டாள். பாத்திரங்கள் தேய்த்து முடித்ததும் துணி துவைக்கும் வேலை தரப்பட்டது. அதன்பின் பாலய்யாவின் மனைவி வள்ளியைக் கூப்பிட்டு "மொட்டை மாடியில் வடாம் உலர்த்தி இருக்கிறேன் காக்காய் வந்து கொத்தாமல் பார்த்துக் கொள்" என்று கூறி உட்கார வைத்து விட்டாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் அவளது தந்தை பொன்னன் அங்கு வந்தான். அப்போது வள்ளி "அப்பா! நான் இப்போது போய் பூவாயியிடம் பேசி விட்டு ஒரே நிமிஷத்தில் வந்து விடுகிறேன்" என்றாள். பொன்னனும் "இவளுக்கு அவளிடம் பேச என்ன விஷயம் இருக்கிறது? பண்ணையார் வயலில் விழுந்தது ஒன்றுதானே. அதை எப்படி அவளிடம் சொல்கிறாள் என்று நானும் கேட்கிறேன்" என எண்ணி அவளைப் போகச் சொன்னான். அதன் பின் அவள் பின்னாலேயே அவளுக்குத் தெரியாத விதமாய் அவன் அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.
பூவாயியும் வள்ளியின் வயதுப் பெண்ணே. பாலய்யாவின் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் வேலை செய்பவள். அவ்வீட்டுக் கொல்லையில் தோட்ட வேலை செய்து கொண்டிருக்கும் அவளை வள்ளி அணுகினாள். வள்ளியைக் கண்ட பூவாயி தான் வேலை செய்வதை நிறுத்தி விட்டு "வா வள்ளி! என்ன சமாசாரம் சொல்லப் போகிறாய்?" என்று கேட்டாள். வள்ளியும் "முதலில் நீ சொல்ல வேண்டியது ஏதாவது இருந்தால் சொல்'' என்றாள். அவள் சொல்ல ஒன்றும் இல்லை என்றாள்.
அப்போது வள்ளி "இன்று பண்ணையார் வயலில் விழுந்து விட்டார்'' என்றாள். ''எப்படி விழுந்தார்?" என்று பூவாயி கேட்க வள்ளியும் 'யானைக் குட்டி போல உருண்டார்" என்று பண்ணையார் விழுந்ததை வர்ணித்தாள் பிறகு அவள் 'எனக்கு அப்போது சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிக் கொண்டேன். ஏனென்றால் சிரித்தால் குற்றம் அதற்குக் கூட சுதந்திரமில்லை. பண்ணையார் விழுந்தது பற்றி அவரது மனைவியும் மற்றவர்களும் சுதந்திரமாய் தமக்குத் தோன்றியபடி கருத்துக்களை வெளியிட்டார்கள் ஆனால் அடிமையாய் வேலை செய்யும் நமக்கு சுதந்திரமும் இல்லை சிரிப்பும் இல்லை. அங்கெல்லாம் சிரிக்க முடியாது. உன் எதிரில் மனம் விட்டுச் சிரிக்க முடிகிறது" என்றாள்.
பொன்னன் இவ்வாறு அவர்கள் பேசியதைக் கேட்டு விட்டு அங்கிருந்து சென்றான். அடிமை நிலையிலுள்ள தன் பெண்ணால் சிரிக்க முடியவில்லை. வேலைக்கு அனுப்பாமல் படிக்கப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பினால் சுதந்திரமாய் அவள் தன் வயதுப் பெண்களுடன் சிரித்துப் பேசுவாள்.
பொன்னன் வீட்டிற்குப் போனதும் தன் மனைவியிடம் விஷயத்தை விளக்கி ''நாளை முதல் வள்ளி யார் வீட்டிற்கும் வேலை செய்யப் போக மாட்டாள். பள்ளிக் கூடத்திற்குப் போவாள்'' என்றான். வள்ளி விடுதலை பெற்றாள். சிரித்தாள்.
கதை ஆசிரியர்:சௌம்யா கிருஷ்ணசாமி
அம்புலிமாமா



கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."