நோய் தொற்றியது!
![]() |
| நோய் தொற்றியது!-The disease is contagious! |
நோய் தொற்றியது!
ஒரு காட்டினருகே உள்ள ஊரில் கைலாசம் என்ற கைராசிக்கார வைத்தியர் இருந்தார். அவர் தம்மிடம் வரும் நோயாளிகளுக்கு சிகித்சை அளித்து விட்டு அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கி வந்தார். எழை எளியவர்களுக்கு இலவசமாகவே சிகித்சை அளித்து மருந்து கொடுத்து வந்தார்.
அவரது மனைவி பார்வதிக்கோ அவரது இந்தப் போக்கு சற்றும் பிடிக்கவில்லை. தன் கணவன் கை நிறையச் சம்பாதித்து நகை, பட்டுப் புடவை என்றெல்லாம் வாங்கி வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டுமென அவள் ஆசைப்பட்டாள். ஆனால் அது அவளுக்குப் பகல் கனவு போலத்தான் ஆயிற்று.
ஒரு நாளிரவு பதினோறு மணி. கைலாசமும் பார்வதியும் தூங்கிக் கொண்டிருக்கையில் யாரோ அவர்களது வீட்டுக் கதவைத் தட்டினார்கள். பார்வதி இதென்ன தொல்லை என்று முணு முணுத்தவாறே கதவைத்திறக்கச் சென்றாள். அவள் பின்னாலேயே கைலாசமும் சென்றார். பார்வதி கதவைத் திறந்ததும் அங்கு ஒரு ராட்சஸன் நிற்பதைக் கண்டு பயந்து அலறினாள். கைலாசம் அவளது பயத்தைப் போக்கும் போதே ராட்சஸன் வீட்டிற்குள் நுழைந்து பொத்தென விழுந்தான்.
அவன் “எனக்கு கை கால் குடைச்சல். உடம்பெல்லாம் எரிச்சல் நாவறட்சி. நீங்கள் நல்ல வைத்தியர் என்று கேள்விப் பட்டு வந்தேன்'' என்றான். கைலாசமும் நிதானமாய் அவனது நாடியைப் பிடித்துப் பார்த்து விட்டு “நீ நோய் முற்றியபின் இப்போது என்னிடம் வந்திருக்கிறாய். பரவாயில்லை. ஒரு மாதம் தினமும் வந்து நான் கொடுக்கும் மருந்தை நீ உட்கொண்டால் உனது இந்த அமர மேக வியாதி மறைந்து நீ குணமடை வாய்" என்று கூறி சில மாத்திரைகளைக் கொடுத்து விழுங்கச் சொல்லி ஒரு கஷாயமும் கொடுத்தார். அவனும் அதைப் பருகிவிட்டு மறுநாள் நள்ளிரவு வருவதாகக் கூறி எழுந்து சென்றான்.
மறுநாள் ராட்சஸன் வந்த போது பார்வதி "அண்ணா! வைத்தியம் பார்க்க தினமும் வைத்தியருக்கு நூறு ரூபாய் கொடுக்க வேண்டும். இன்று கொண்டு வரவில்லை யானாலும் நாளை முதலாவது கொண்டுவா. வெறுங்கையுடன் வராதே" என்றாள்.
அது கேட்டு ராட்சஸன் கோபம் கொண்டு "இதோ பார்! அண்ணன், தம்பி என்றெல்லாம் உறவு கொண்டாடி பணம் பறிக்க முயலாதே. யாரிடம் எவ்வளவு பணம் உள்ளது எனக் கண்டு நான் அதைப்பிடுங்கிக் கொள்பவன். எனவே என்னிடம் பணம் கேட்பவனை அடித்துக் கொன்று விழுங்கி விடுவேன். இதைத் தெரிந்து கொள்'' என்றான்.
இதைக் கேட்டு பார்வதி வாயடைத்துப் போனாள். இனி ராட்சஸனிடம் பேசிப் பயனில்லை என்றும் அவன் தன் உறைவிடத்தில் சேர்த்து வைத்துள்ள பணத்தைக் கண்டு பிடித்து எடுத்துக் கொண்டு வருவது எனவும் அவள் தீர்மானித்துக் கொண்டாள். இரண்டு நாட்களுக்குப் பின் அவள் தன் கணவனிடம் தான் தன் பிறந்த ஊருக்குப் போய்விட்டு இரண்டு மூன்று நாட்களில் திரும்பி வந்து விடுவதாகக் கூறி வீட்டை விட்டுக் கிளம்பினாள். ஆனால் அவள் தன் பிறந்த ஊருக்குப் போகாமல் அவ்வூர் எல்லையில் ஒரிடத்தில் பதுங்கி மறைந்திருந்தாள்.
அன்றிரவு ராட்சஸன் வைத்தியரைக் கண்டு மருந்து சாப்பிட்டு விட்டு காட்டினுள் உள்ள தன் குகைக்குப் போனபோது பார்வதியும் அவனைப் பின் தொடர்ந்து அவன் கண்ணில் படாமல் சென்றாள். ராட்சஸனின் குகையைக் கண்டு கொண்டபின் மறுநாள் இருட்டும் வரை அங்கேயே ஓரிடத்தில் ஒளிந்திருந்தாள். ராட்சஸன் அன்றிரவு மருந்து சாப்பிட குகையை விட்டுக் கிளம்பிச் சென்றதும் அவள் அவனது குகைக்குள் சென்று பார்த்தாள். அங்கு ஒரு பையில் தங்க நகைகளும் இன்னொரு பையில் தங்க நாணயங்களும் இருப்பது கண்டு ஒரேயடியாக மகிழ்ந்து போய் அவற்றைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு விடியும் வேளைக்கு ஊரை அடைந்து வீட்டிற்குச் சென்றாள்.
அப்போது கைலாசம் வீட்டின் பின்புறம் கிணற்றுங்கரையில் குளித்துக் கொண்டிருந்தார். தான் வந்ததை அவர் பார்க்கவில்லை என்று கண்டு பார்வதி தான் கொண்டு வந்த பைகளை பரண் மீது ஓரிடத்தில் ஒளித்து வைத்து விட்டு பரணிலிருந்து கீழே இறங்கினாள். அப் போது அவள் மிகவும் களைத்துப் போனதால் கட்டிலில்படுத்து விட்டாள்.
குளித்து விட்டு உள்ளே வந்த கைலாசம் கட்டிலில் படுத்திருந்த தன் மனைவியைப் பார்த்து "நீ எப்போது வந்தாய்? உன் உடம்புக்கு என்ன?” என்று கேட்டார். அவளும் "கைகால் குடைச்சல். உடம்பில் எரிச்சல் நாவறட்சி" என்றாள். கைலாசமும் "இது ராட்சஸனுக்கு வந்த நோய். உன்னை எப்படிப் பற்றிக் கொண்டது? சரி. அவனுக்குக் கொடுத்த மருந்தையே கொடுக்கிறேன். இரண்டு மூன்று நாட்களில் குணம் அடைந்து விடுவாய். அதுவரை சமையலை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறி குளிைகைகளையும் கஷாயத்தையும் கொடுத்தார்.
அன்றிரவு ராட்சஸன் வந்த போது கைலாசம் அவனைப் பரீட்சித்து பார்த்து விட்டு "உன் நோய் அதிசயிக்கத்தக்க விதமாய் போய் விட் டது. இனி நீ மருந்து உட்கொள்ள வேண்டியதில்லை" என்றார். ராட்சஸனும் “நான் காட்டை விட்டுப் போகப் போகிறேன். என் இருப்பிடத்தை யாரோ தெரிந்து கொண்டு நான் சேர்த்து வைத்திருந்த பணத்தையும் நகைகளையும் திருடிக் கொண்டு போய் விட்டார்கள். அதனால் உங்களுக்குப் பணம் கொடுக்க முடியவில்லை. இப் போது நோய் போய் விட்டது. மறு படியும் வந்தால் என்ன செய்வது?" என்று கேட்டான்.
கைலாசமும் "பரவாயில்லை. மறுபடியும் நோய் வாய்ப்பட்டால் பொறுத்துக் கொண்டு என்னிடம் வா.மருந்து கொடுக்கிறேன்" என்று கூறி அவனை அனுப்பினார். பிறகு அவர் தன் மனைவியிடம் "பார் இந்த அதிசயத்தை! அவனது பாவப் பணம் அவனை விட்டுப் போனதும் அவனது நோயும் போய் விட்டது'' என்றார்.
அப்போது பார்வதி "அந்த நோய் ராட்சஸனிடமிருந்து வந்து என்னைப் பற்றிக் கொண்டு விட்டது. அவனது பாவப் பணத்தை நான் தான் திருடி எடுத்து வந்து நம் வீட்டுப்பரண் மீது வைத்திருக்கிறேன். அதையெல்லாம் தலையைச் சுற்றி எங்காவது எறிந்து விடலாம்" எனக் கூறி தான் இரண்டு நாட்களில் செய்ததை விவரமாகக் கூறினாள். கைலாசமும் அவள் கூறியதைக் கேட்டு விட்டு "கவலைப்படாதே. நீ எடுத்து வந்த பணத்தை எல்லாம் கிராமத்து மணியகாரரிடம் கொடுத்து விடுவோம். அவர் மிகவும் நல்லவர். ஊர் நன்மைக்காக அந்தப் பணத்தை அவர் செலவு செய்வார். பாவப் பணம் உன்னை விட்டுப் போய் விடும். நீயும் உடனே குணம் அடைந்து விடுவாய்" என்றார். பார்வதியும் அவ்வாறே செய்யச் சொல்ல கைலாசம் பரண்மீதிருந்த இரு பை களையும் எடுத்துக் கொண்டு போய் மணியகாரரிடம் கொடுத்து அவற்றை ஊர் நலனுக்காகச் செலவு செய்ய சொன்னார்.
பாவப் பணம் வீட்டை விட்டுப் போனதும் பார்வதியும் குணமடைந்தாள். அவளைப் பற்றிய தொற்று நோய் போயே போய் விட்டது.
கதை ஆசிரியர்:வே. கிருஷ்ணன்
அம்புலிமாமா
Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best storie




கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."