காதல் போயின்...
![]() |
காதல் போயின்...-If love is gone... |
காதல் போயின்...
பிரபாகருடன் பைக்கில் வந்து இறங்கிய, பூஜாவை புன்னகையுடன் எதிர் கொண்டாள், வசந்தி
"வாம்மா, நானே ,பிரபாகர்கிட்டே மதியம் லஞ்சுக்கு, பூஜாவை அழைச்சுட்டு வான்னு சொல்வேம்ன்னு இருந்தேன்
அதெப்படி ஆன்ட்டி இன்னைக்கு அம்மா ,ப்ரைடு ரைஸ் சிக்கன் கிரேவி செய்யறாங்க'ன்னு சொன்னாரு .அப்புறம் வராமல் இருப்பேனா, "நாளை இந்த வீட்டிற்கு மருமகளாக வரப்போகும் , உரிமையுடன் சொல்லிய பூஜா உள்ளே வந்தாள். இருவரையும் உட்கார வைத்து, சாப்பாடு போட்டாள்.
நீ, பிரபாகரை விரும்பற உங்கப்பாகிட்ட விஷயத்தை, சொல்லிட்டியா?'
'இல்லை ஆன்ட்டி..
லண்டனிலிருந்து இன்னும் இரண்டு நாளில் அப்பா வர்றாரு. நேரில் பேசறேன், ஒண்ணும் பிரச்னையில்லை. என் விருப்பத்துக்கு மாறாக, வீட்டில் நடக்க
மாட்டாங்க...
அதுவுமில்லாம, நான் இவரைக் காதலிக்கிற விஷயம், அம்மாவுக்கும் தெரியும்; சொல்லியிருப்பாங்க. எல்லாம் நல்லபடியாக நடக்கும், கவலைப்படாதீங்க. நான் தான் இந்த வீட்டு மருமகள். அதில் எந்த மாற்றமுமில்லை,'' என்றாள், பூஜா.
ஆறு மாதம் முன் தான், பிரபாகர் காதலிக்கிற விஷயம், வசந்திக்கு தெரியும். 'அம்மா, என்னோடு வேலை பார்க்கிற பூஜாங்கிற பெண்ணை, நான் விரும்பறேன். அவளும் என்னை மனசார விரும்பறா. பெரியவங்க சம்மதத்தோடு, இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கோம்.
'அவங்க அப்பா, லண்டனில், பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறாரு. பூஜாவும், அவங்க அம்மாவும் இங்கே இருக்காங்க. இவ கல்யாணம் முடிஞ்சதும், பூஜாவின் அம்மா லண்டன் போயிடுவாங்க. நீ நான் உன் மருமகள்ன்னு நம் வாழ்கை சந்தோசமாகப் போக்கும்மா...என்றான், பிரபாகர்.
பிரபாகரும் அவள் அக்கா அணுவும் சிறுவர்களாக இருக்கும்போதே, வசந்தியின் கணவர் காலமாகி விட்டார் .வசந்தி தான் அவர்களை வளர்த்து
ஆளாக்கினாள்.
'உன் மனசுக்கு பிடிச்சிருந்தால், நான் என்ன சொல்லப் போறேன். எனக்கும் பிடிக்கும். உன் அக்கா உள்ளூரில் தானே இருக்கா... அவளையும் ஒருநாள் வரச்சொல்றேன்.
பூஜாவை நம் வீட்டிற்கு கூட்டிட்டு வாப்பா..." என்றாள், வசந்தி. அதன்படி பூஜாவை அழைத்து வர, வசந்திக்கும். அனுவிற்கும் அவளை ரொம்பவும் பிடித்துப் போனது.
அம்மா... பார்க்க லட்சணமாக, தம்பிக்கு பொருத்தமானவளாக இருக்கா. நல்ல
இடமாகவும் தெரியது. உனக்கு, நல்ல மருமகள் தான் அமையப் போறா... என்றாள், அனு.
அதன்பின், அவளை அடிக்கடி வீட்டிற்கு பிரபாகர் அழைத்து வர, பூஜாவுடன் மிகவும் நெருக்கமானாள், வசந்தி. சாப்பிட்டு கொண்டிருந்த பூஜாவிடம், "சீக்கிரமே உன் வீட்டில் பேசி, கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யணும்... சீக்கிரம் கல்யாணத்தை முடிக்கணும் பூஜா," என்றாள், வசந்தி.
கோவிலுக்கு சென்று, 'பிள்ளையாரப்பா... பூஜாவின் அப்பா ஊரிலிருந்து வந்துட்டார். அவர் சம்மதித்து, பிரபாகர் - பூஜா கல்யாணம் நல்லபடியாக நடக்கணும். நீதான் எங்களுக்கு எப்போதும் துணை. என் மகன் வாழ்க்கையை நல்லபடியாக அமைச்சுக் கொடு... மனமுருகிப் பிரார்த்தித்தாள், வசந்தி. முகம் வெளிறி, சோர்வோடு வந்தான்,பிரபாகர்.
மகன் முகம் பார்த்து கவலையுடன் , "என்ன பிரபா என்னவோ போல் இருக்கே... உடம்புக்கு ஏதும் பண்ணுதா... ஆபிசில் வேலை அதிகமா... காபி கொண்டு வரட்டுமாப்பா...
"பூஜாவோட அப்பா ஊரிலிருந்து வந்துட்டதா சொன்னியே... கல்யாண விஷயத்தை அவர்கிட்ட சொல்லிட்டாளா... என்னப்பா சொன்னார்," என்றாள், வசந்தி, "எல்லாம் முடிஞ்சு போச்சு,' என்றான்.
"என்ன பிரபா சொல்ற... எது முடிஞ்சு போச்சு?"
“எங்க காதல்... நான், அவளோடு வாழணும்ன்னு ஆசைப்பட்டது. நீ, மருமகள்ன்னு கனவு கண்டது, எல்லாம் முடிஞ்சு போச்சு..." என்றான். 'ஐயோ, கடவுளே... பிள்ளைக்கு இப்படியொரு ஏமாற்றத்தைக் கொடுத்துட்டியே...' என, மனதில் நினைத்தபடி, "என்னப்பா விஷயம்... பூஜா. ரொம்ப நல்ல பெண்ணாச்சே. அவங்க அப்பா சம்மதிக்கலைன்னாலும் உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னாளே... என்னப்பா நடந்துச்சு"
"அவங்கப்பா, லண்டனில் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காராம். கோடீஸ்வர சம்பந்தம், லண்டன் வாழ்க்கை. என்னைக் கல்யாணம் பண்ணிட்டு வாழறதை விட, ராஜபோக வாழ்க்கை கண்ணெதிரில் தெரியும்போது... அந்த வாழ்க்கையை தேடி போகப் போறா...
'அதனால, 'பெத்தவங்க சம்மதிக்கலை. நாம் பிரிஞ்சுடுவோம்'ன்னு ஒரே வார்த்தையில் சொல்லிட்டா... இன்னும் ஆறு மாதத்தில் கல்யாணம் பண்ணி, லண்டன் போயிடுவாளாம், என்றான், பிரபாகர்.
மனசார காதலித்தவள், இப்படியும் மாறுவாளா என, வசந்தியால் நம்ப முடியவில்லை. "வேணும்னா, நான் பூஜாகிட்டே பேசிப் பார்க்கட்டுமா,"என்றாள்,வசந்தி.
"எதுக்கும்மா... ‘என் பிள்ளையை ஏமாத்திடாத... கல்யாணம் பண்ணிக்க'ன்னு கெஞ்சப் போறிங்களா .வேண்டாம்மா," என்றான் .அணுவும் விஷயம் தெரிந்து அம்மாவுடன் சேர்ந்து அவளும் கவலைப்பட்டாள். சை...இந்தப் பெண்ணு இவ்வளவு மோசமானவளா ... நம்ப வைத்து கழுத்தறுத்துட்டாளே...பிரபா ,
இரண்டு நாளா ஆபிஸ் போகலை . வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கான். சரியா சாப்பிடறதில்லை. அவனை நினைச்சா, எனக்கு வேதனையாக இருக்கு, அனு என்றாள். வசந்தி. "சரிம்மா, நீ கவலைப்படாதே. நாளைக்கு வீட்டிற்கு வர்றேன். தம்பிகிட்டே பேசி, அவனை சமாதானப்படுத்துவோம்.
இரண்டு வருஷமாக காதலிக்கிறாங்க. மன வருத்தம் இருக்கத்தானே செய்யும். சரி, நீ தைரியமா இரு, " போனில் அம்மாவுக்கு சமாதானம் சொன்னாள், அனு. அன்று இரவு - "பிரபா...இட்லி சாம்பார் செய்திருக்கேன். மதியமும் சாப்பாடு வேண்டாம்ன்னு சொல்லிட்ட... வந்து சாப்பிடுப்பா,” என்றாள், வசந்தி.
"பசியில்லைம்மா. நீ சாப்பிட்டு படு, காலையில் பார்க்கலாம். ஒரு டம்ளர் பால் மட்டும் கொடு,” என்றான். பாலை வாங்கி, அறை கதவை சாத்திக் கொண்டான். மறுநாள் பொழுது விடிய, எந்த வேலையும் செய்ய நாட்டமில்லாமல், மகன் எழுந்து வரட்டும் என, காபி கூடப் போடாமல் அவனுக்காகக் காத்திருந்தாள், வசந்தி.காலை, 7:00 மணிக்கெல்லாம் கதவைத் திறந்து வெளியே வருபவன், மணி, 9:00 ஆகியும் கதவு திறக்கவில்லை.
“பிரபா... பிரபாகர்..." கதவை பலமாக தட்டினாள், வசந்தி. எந்த பதிலும் இல்லை. உடம்பெல்லாம் படபடக்க, கண்களில் நீர் பெருக, 'கடவுளே ஏதாவது தப்பான முடிவுக்குப் போய் விட்டானா...'கை நடுங்க, மகளுக்கு போன் செய்தாள்.
"அம்மா பதறாதே, ஒண்ணும் ஆகாது... பிரபாட்ட, போன்ல பேசினியா," என்றாள், அனு. "போன், 'ஸ்விட்ச் ஆப்'ன்னு வருது. கதவைத் தட்டினா என்னன்னு கேட்பான். ஐயோ... எனக்கு பயமாக இருக்கு. அக்கம் பக்கத்தில் கூப்பிடறேன். நீ உடனே வாம்மா," என்றாள்.
அம்மா, அவசரப்படாதே... நானும் அவரும் புறப்பட்டு, பத்து நிமிஷத்தில் அங்கே வர்றோம். நீ விடாமல் கதவைத் தட்டு. பலமாக சத்தம் போட்டு கூப்பிடு. இதோ வந்துடறோம்,'' என்றாள்,அனு.
அழுதபடியே, மகன் அறை முன் வந்து, "பிரபா... பிரபாகர்... கதவைத் திறப்பா..." தட்டினாள்.
அடுத்த நிமிடம் கதவு திறந்து, தூக்க கலக்கத்தில் நின்றான், பிரபாகர்."சாரிம்மா... ராத்திரி ரொம்ப நேரம் முழிச்சிட்டிருந்ததால, அசந்து துாங்கிட்டேன். என்னம்மா ஆச்சு... ஏன் அழறே ?" என்றான்.
"பிரபா... நீ கதவைத் திறக்கலைன்னதும், மனசு படபடப்பாயிடுச்சு... இரண்டு நாளாக நீ சரியா சாப்பிடாமல், ஆபீசுக்குப் போகாததால், ரொம்பவே பயந்துட்டேன்பா.''
“பூஜா என்னை விட்டுட்டு போயிட்டா... தப்பான முடிவுக்கு போயிட்டேன்னு பயந்துட்டியா.. அம்மாவை அணைத்து, .'அழைத்து வந்து கட்டிலில் உட்கார வைத்தான். அதற்குள் அனுவும், அவள் கணவரும் பதட்டத்துடன் வர, “அம்மா,உங்களையும் பயமூறுத்திடாங்களா", என்றான் பிரபாகர் .
"இரண்டு நாளா மனசளவில் காயப்பட்டது, வேதனைப்பட்டது உண்மை தான். என் காதல் கல்யாணத்தில் முடியும்ன்னு கனவு கண்டேன். அது கனவாகப் போயிடுச்சு. எப்ப என்னை விட, பணம் தான் பெரிசுன்னு விலகினாளோ... அவளை நினைச்சு உருகி... நான் உயிரை விடணும்ன்னு நினைக்கிறது, முட்டாள்தனம்.
“அவள் இருக்கும் இடத்தில் வேலை பார்க்க வேண்டாம்ன்னு... எங்க பிராஞ்ச் மனோகர்கிட்ட நேற்று பேசி, வேறு பிராஞ்சுக்கு என் வேலையை மாத்திக்கிட்டேன். என்னை பெற்று, வளர்த்து ஆளாக்கிய, உன்னை பாதுகாக்க வேண்டியவன். நிச்சயம் உன்னை விட்டு போக மாட்டேன்.
“எனக்கான வாழ்க்கை இருக்கும்மா... என் மேல் உண்மையான அன்பு செலுத்த இத்தனை உறவுகள் இருக்கும் போது, நான் தப்பான முடிவு எடுக்க மாட்டேன், வருத்தப்படாதீங்க. காதல் மட்டும் வாழ்க்கை இல்லம்மா, அதையும் தாண்டி வாழ்க்கை இருக்கு.
"உனக்கான மருமகள் இவள் இல்லை. காலம் ஒருநாள் உனக்கான மருமகளை உன்கிட்டே கொண்டு வந்து சேர்க்கும் வருத்தப்படாதேம்மா," என, அன்போடு சொல்லும் மகனை, கண்ணில் வழியும் நீரைத் துடைத்து, பெருமிதம் பொங்க பார்த்தாள்,வசந்தி.
கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."