sirukathaigal

வாழ்க்கைத் துணை

வாழ்க்கைத் துணை-life partner


வாழ்க்கைத் துணை

எங்கும் இருளின் ஆதிக்கமாக,மப்பும் மந்தாரமும் வானத்தை அடைத்து, தூறிக் கொண்டிருந்தது. மழை பசி வயிற்றைக் கிள்ளியது. அடிக்கடி வாசல் வரை வந்து, வீதியில் தலையை நீட்டி பார்த்தபடி இருந்தார், அன்னபூசம். இன்னமும் வந்தபாடில்லை, மங்கை.

'என்ன ஆயிற்று அந்த அம்மாளுக்கு... இந்நேரம் வந்து விடுவாளே... மனதில் கலவரம் கூடியது. அந்த அம்மாளின் காலதாமதம் இவரை என்னவோ செய்தது. சட்டையை மாட்டி, பஜார் பக்கம் சென்று, குடலை நிரப்பி வந்து விடலாமா என்ற எண்ணம் உதித்தது. அதற்கப்பால் மங்கை வந்து விட்டால், அவள் கொண்டு வரும் இட்லிகள் பாழாகி விடுமே. மனம் இரண்டுங்கெட்டானாய் தவித்தது. 

அவள் வருகையை எதிர்பார்த்து, சுகர் மாத்திரையை வேறு வயிற்றுக்குள் திணித்துக் கொண்டார். வயது மூப்பின் காரணமாக நான்கைந்து நோய்கள். முதலில் சுகர், அது துணைக்கு, பி.பி.,யை கூட்டிக் கொண்டது. அதற்கப்பால் கை, கால் குடைச்சல், நடக்க, படியேற சிரமம். இப்படி வயதின் படுத்துதலில் அலைக்கழிக்கப் பட்டவராய் இருந்தார். 

கலெக்டர் ஆபீசில், டபேதார் உத்தியோகம். எப்போதும் கலெக்டரின் நிழலாக உலா வர வேண்டும். சுகமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 35 ஆண்டு சர்வீசில், 22 ஆயிரம் சம்பளம். பொருத்தமான மனைவி, அருமையான மகனோடும் ஏகபோகமாய் வாழ்ந்து வந்தார். வசந்தம் தவழ்ந்த வாழ்வில், புயல் வீசியது. கட்டிய புண்ணியவதி, 40 வயதில் போய் சேர்ந்து விட்டாள். 

ஒருவாறு மனதைத் தேற்றி, தாயில்லா மகனை குறை தெரியாது, நன்றாகப் படிக்க வைத்து வளர்த்து, ஒரு வேலையில் சேர்த்து, அவன் நிமிர்ந்த பொழுதில் இவர் தளர்ந்திருந்தார். தகுதியில் உயர்ந்து, அயல்நாட்டு வாய்ப்பு வந்து, பறந்து விட்டான், மகன், தனி மரம் ஆனார், அன்னபூசம். உறவுகள் யாரும் மரம் அருகில் இல்லை. பூர்வீகம் தெற்குத் திசை, காஞ்சிபுரத்திற்கு இவர் வந்ததும், கொஞ்சம் கொஞ்சமாகச் சொந்த பந்தங்களின் தொடர்பு அறுந்திருந்தது. 

வெளிநாட்டு மோகத்தால் மகனும், அங்கேயே, 'செட்டில்’ ஆகிவிட்டான். ஆரம்பத்தில் ஆண்டிற்கு ஒருமுறை வந்து கொண்டிருந்தவன், இப்போது, அதுவும் இல்லை. எப்போதாவது மொபைல்போனில் அத்தி பூத்த மாதிரி பேசுவதோடு சரி. மனதைத் திடப்படுத்தி, தனியே வாழப் பழகிக் கொண்டார்.

இப்போது வயது: 73. ஹோட்டல் சாப்பாடால் வயிறு கெட்டவருக்கு, ஆறுதல் தந்தவள், மங்கை. முழுப் பெயர் மங்கையர்கரசி. வயது: 68. புறம்போக்கு இடத்தில் பிய்ந்து போன கொட்டகை ஒன்றில் வசித்து, இட்லி கடை நடத்தி வருபவள். இவரைப் போலவே காலம் கடத்தி வந்த, துணை இல்லாத பெண்மணி. 

காலையில், நான்கு இட்லி, மதியத்திற்கு கொஞ்சம் சாதம், இரவில், இரண்டு தோசை அல்லது சப்பாத்தி எடுத்து வந்து தருவாள். ஓய்வூதிய பணத்திலிருந்து, 3,000 ரூபாய் சாப்பாட்டிற்கும், 4,000 ரூபாயை மருந்து மாத்திரைக்கும், மீதியை சேமிப்பாகப் பத்திரப் படுத்துவார். எதை எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தவரை, பரிச்சயமான, மங்கையின் காலடி சத்தம் திசை திருப்பியது. 

துாறலுக்குப் பயந்து, தலைக்கு முக்காடு சுற்றி, முந்தானைக்குள் கிண்ணத்தில், நான்கு இட்லிகளை கொண்டு வந்தாள். "மங்கையம்மா,பசி வயத்தை கிள்ளுது. ஏன் இம்மா நேரம்?" என, கிண்ணத்தைப் பிடுங்காத குறையாக வாங்கி, லபக் லபக்கென்று இட்லிகளை, சட்னியுடன் விழுங்கினார், அன்னபூசம்.

ஒவ்வொரு விள்ளலும் சுகமாய் உள்ளிறங்கியது. தண்ணீர் கொண்டு வந்து வைத்தாள், மங்கை. "என்ன பண்றது, மழை கொட்டிக்கிட்டிருக்கு. வர முடியல," என்று, மழையைச் சபித்தபடி, அவசர கதியில் சாப்பிடும் மனிதரைப் பார்த்ததும், அய்யய்யோ... மனுஷனை காக்க வைத்து விட்டோமே...' என்ற தவிப்பு, அவளை வாட்டியது.

தண்ணீரை எடுத்து பருகியபடியே, “ஊஹூம், மழைய சபிக்காதே. அது இல்லேன்னா மனுஷங்க இல்ல. பெய்யட்டும், விவசாயிங்க எப்படி. பொழைப்பாங்க,'' என்றார், அன்னபூசம், "சரி, நா போறேன். கடைக்கு மக்கள் வந்திருப்பாக," என, மறுபடி முக்காடு போட்டு, ஓட்டம் பிடித்தாள், மங்கை.

மங்கையின் கணவன் ஓடிப் போனப் பின், பிள்ளைகள் தான்தோன்றிகளாக ஆகி, கெட்டு அலையத் துவங்கினர். கேட்பாரின்றி, நாதியில்லாமல் ஆன பிறகு, அவளுக்குக் கொடுத்த சிறிய வரப்பிரசாதம், இட்லி கடை. பஞ்சாயத்தார் இடத்தில் போடப்பட்ட சிறிய குடிசை. அதனுள் சுள்ளி மற்றும் விறகுகளை போட்டு பற்ற வைக்க ஏதுவான கை அடுப்பு, ஒரு இட்லி குண்டான், நாலைந்து அலுமினியத் தட்டுகள். செய்யும் வேலைக்குத் துணையாய் மேலும் சில தட்டுமுட்டுச் சாமான்கள்.

ரிக் ஷா ஓட்டுபவர், மாடு மேய்ப்பவர், குப்பை கூட்டுபவர் மற்றும் தப்படிப்பவர் என்று, 10 - 15 பேர் வருவர். மதியம் இரண்டு அல்லது மூன்று கிலோ தக்காளி சாதம் அல்லது எலுமிச்சை சாதம் செய்வாள். அது காலியாக, 3:00 மணி ஆகும். இதில் விசேஷம் என்னவென்றால் பாதி பேர் காசே தர மாட்டார்கள். 'கொடுக்கல் வாங்கல்ல கரெக்டா இருக்கணும்...' என்பார், அன்னபூசம். 'போவட்டும், வயித்துக்குத்தானே சாப்பிடுறாங்க. புண்ணியம் வரும்...' என்பாள்.

'ஆமா, இப்போ புண்ணியம் தான் உன்னைக் காப்பாத்தி வருதாக்கும் 'ஒரு நோய் நொடி இல்ல, கை, கால் நல்லா இருக்குல்லா உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது...' அடங்கிப் போவார், அன்னபூசம். பல விஷயங்களில் இவருக்கு ஒத்தாசையாக இருப்பது. அவள் தான். கொஞ்சம் கஷாயம் வச்சுக் குடேன். ரொம்ப துாசாக் கெடக்கு, இந்த வீட்டைப் பெருக்கி வையேன்...' என்பார்.

சில சமயம், வீடு மெழுகுவாள். வீட்டில் இருக்கும் சில பண்ட பாத்திரங்களை அலம்பி வைப்பாள். துணிமணிகளைத் துவைத்து, உலர்த்துவாள். இவர் எதிர்பாராத வேலைகளை எல்லாம் செய்து முடிப்பாள். மங்கை. இது தவிர, இவர் தன் மனக் குமுறல்களையும் மங்கையிடம் தான் கொட்டித் தீர்ப்பார். இரண்டு பேரையும் பொறுத்தவரையில், ஒத்துப் போகிற ஒரே மாதிரி துரதிர்ஷ்டசாலிகள்.

'எந்த ஜென்மத்து பந்தங்களோ... ரெண்டும் ஒண்ணோட ஒண்ணு ஒத்தாசையாய் கெடக்குதுங்க பாவம்...' என்பர், ஊர் மக்கள்.  வயது, இருவரின் பழக்கத்திற்கு எதையும் கண், காது, மூக்கு வைத்துப் பேசத் துணை செய்யவில்லை. ஐப்பசி மாத அடை மழை ஜோராக தொடர்ந்த வண்ணமிருந்தது. வானொலியும், 'டிவி'யும், வானிலை நிலவரத்தைப் பிரகடனப்படுத்தின. அன்னபூசத்திற்கு, ஒட்டு வீடு, பாதிப்பில்லை. மங்கையின் குடிசை,நாலாபுறமும் ஒழுகியது.

வீட்டுப் பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் ஒழுகலைத் தலையில் தாங்கச் செய்தாள். முடங்கிக் கிடப்பதற்கு தோதாக மண் தரை இல்லை. ஒரே நசநாப்பு. இன்று இரவைக் கழிப்பது ரொம்பவும் சிரமம் என்று பட்டது. மங்கைக்கு. காளி கோவில் முன் மண்டபத்தின் தங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில், தெருக்கோடி வரை போய் பார்த்தாள். ஆனால், இவள் துரதிஷ்டம் பொழுதோடு வெளிக்கதவை பூட்டிச் சென்றிருந்தார். பூசாரி. 

மழையால் மின்சாரமும் இல்லை. இருட்டின் ஆக்கிரமிப்பு, வயிற்றுப் பிரச்னை கூட பெரிதாய் தோணவில்லை. கட்டையை நாலு மணி நேரம் கீழே போட வேண்டும். அதுதான் இப்போதைய முக்கிய பிரச்னை என்று, எழுந்து வெளியே வந்தாள். அச்சமயம், பல ஆண்டுகளுக்கு முன் பிரித்துக் கட்டிய கொட்டகை நொடியில் சரிந்து நாசமானது.

'இந்நேரம் உள்ளே இருந்திருந்தால்...' என, நெஞ்சில் அச்சம் கூடு கட்டியது. விடுவிடுவென அன்னபூசத்தின் வீட்டை நெருங்கி, "ஐயா... ஐயா..." அபயக் குரல் கொடுத்தாள். கதவைத் திறந்து, "மங்கம்மா... என்ன ஆச்சு?" என்றார், அன்னபூசம். "கொட்டா சரிஞ்சிடுச்சி சாமி. போக்கிடம் இல்ல, " குரல் உடைந்து, கலங்கி அழுதாள். "பைத்தியக்காரி, உள்ள வா. 

ஒரு அனாதைக்கு. இன்னொரு அனாதை ஆதாவு. நனைஞ்சுட்டியா... மனம் கலங்காதே, உட்கார்,'' என்றார். "நாதியில்லாதவளா ஆயிட்டேனே... அரவணைச்ச கொட்டகையும் போயிருச்சே சாமி..." அழுதாள், மங்கை. அவளை கொஞ்ச நேரம் அழவிட்டார். அழுவது, அவள் மனக் காயங்களுக்கு மருந்தாக இருக்கட்டும் என்பது, அவர் கணக்கு. "மங்கை,நா ஒண்ணு சொன்னா ஏத்துப்பியா?” என்றார். மலங்க மலங்க விழித்தாள், மங்கை.

அன்னபூசத்தின் முகத்தை உற்றுப் பார்த்தாள். அவள் விழிகள், 'என்ன சொல்லப் போறீங்க?' என்ற வினாவைத் தாங்கி நின்றன. "இனிமே நீ எங்கேயும் போக வேணாம். இங்கேயே இருந்துக்கோ," என்றார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பதில் சொல்லத் தெரியாமல் விழித்தாள். "இதோ பார், நீ எனக்கு பொஞ்சாதி இல்ல, வப்பாட்டி இல்ல, காதலி இல்ல. ஆனா, நீ எனக்குத் துணை; வாழ்க்கைத் துணை. 

ஆதரவு இல்லாம  திக்கற்று, பரிதவிக்கிற ரெண்டு பேருக்குமே இந்தத் துணை அவசியமானது. இதுல எந்தக் களங்கமும் இல்ல. ஏன்னா, இது காமம் கடந்த உறவு. இனி, நாம ஒரே வீட்டுக்குள்ள தான் வாழ நேரிடும். இந்த உறவுக்கு, என்ன பேருன்னும் தெரியல. சாஸ்திர சம்பிரதாயம் அனுமதிக்கலேன்னாலும் அதப்பத்தி நாம கவலைப்படக் கூடாது. இந்த உறவு கட்டாயமானது. 

அதனால, நீ இதுக்குச் சம்மதிக்கணும், மங்கை ?" என்றார், அன்னபூசம். கூர்ந்து நோக்கியவள், பொறுமையாய் யோசித்தாள். 'ரெண்டு மனசுகளிலேயும் களங்கம் இல்லாதப்போ, இப்படி வாழறது ஒண்ணும் தப்பா ஆயிடாது...' என்ற நினைப்பு, அவள் மனதில் விரிய ஆரம்பித்தது. அன்னபூசம் பேச்சை ஏற்கும் தினுசில் மவுனமாக இருந்தாள். வெளியே வானம், 'சோ'வென்று மழையைக் கொட்டி, இவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தது.


கதை ஆசிரியர்:எம் கே சுப்பிரமணியன்

வாரமலர்


Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories


வாழ்க்கைத் துணை வாழ்க்கைத் துணை Reviewed by Sirukathai on ஜூலை 03, 2025 Rating:

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."