கல்யாண பந்தம்!

கல்யாண பந்தம்!-Marriage

கல்யாண பந்தம்!
“உங்க பெரியப்பா பையன் சந்திரன், போன் பண்ணினாரு போலிருக்கு," என்றார், ராஜன். "ஆமாம். அண்ணன், 50 வருட, திருமண நாள் கொண்டாடப் போறாராம். உறவு முறைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வீட்டில் இடம் பத்தாததால், பக்கத்தில் ஹோட்டலில் வச்சிருக்காராம். அழைப்பு அனுப்பறேன், கட்டாயம், மேகலா மற்றும் மாப்பிள்ளையையும் அழைச்சுட்டு வரச் சொன்னாரு,"என்றாள், சுந்தரி.
“நாம எங்கே போறது... நம் வீட்டுலயே, ஏகப்பட்ட பிரச்னை. நல்ல இடம்ன்னு நினைச்சு, கட்டிக் கொடுத்தோம். இப்ப, 'டைவர்ஸ்' வாங்கற நிலைமைக்கு வந்தாச்சு. அது சரி, பிள்ளை குட்டி இல்லாத, உங்க அண்ணன் எதுக்கு, 'வெட்டிங் டே'யை இப்படி விமரிசையாக கொண்டாடணும்?" “அப்படிச் சொல்ல முடியுமா, அது அவங்கவங்க விருப்பம். போவதும், போகாததும் நம்ப இஷ்டம்."
மேகலாவிடம் விபரத்தைச் சொல்ல, "கட்டாயம் போயிட்டு வருவோம். நம் சொந்தக்காரர்களைப் பார்த்து நாளாச்சு; எல்லாரையும் ஒரே இடத்தில் பார்க்கலாம். அதுவும் இல்லாமல், அத்தை மகள் சுபா வந்தா, அவகிட்டே சில விபரம் கேட்டு தெரிஞ்சுக்கலாம். அவ போன வருஷம் தான், 'டைவர்ஸ்' வாங்கினா," என்றாள்.
இது முழுக்க முழுக்க, என் அனுபவத்தில் நான் கண்டு கொண்ட உண்மை. இதை என் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ள பிரியப்படறேன். இதுதான் அதற்கான சரியான தருணம்ன்னு நினைக்கிறேன்... “பார்வதி, ஏன் ஒதுங்கி நிக்கிறே. இப்படி பக்கத்தில் வா... நம்மைப் பத்தி தான் பேசப் போறேன்,” என்றார், சந்திரன். கீழே அமர்ந்திருந்த எல்லாருக்கும், சந்திரன் என்ன சொல்லப் போகிறார் என்ற ஆவலுடன் அவரையே பார்த்தனர்.
“எங்களுக்கு திருமணமாகி, 50 வருஷம் ஆச்சு. திருமண வாழ்க்கையில், எங்களுக்கு குழந்தை இல்லை. அதை ஒரு குறையாக நினைக்காமல் வாழ்ந்துட்டோம். “எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தாலும், ஆரம்ப கால இல்லற வாழ்க்கை, அப்படி இல்லை. கல்யாணமான புதிது, எங்க இருவருக்கும் பல விதத்தில் ஒத்துப் போகலை. பார்வதி படிச்சவ, கிராமத்தில் வாழ ரொம்பவே யோசிச்சா.
"படிச்ச படிப்புக்கு எனக்கு சரியான வேலை கிடைக்கலை. கிராமத்தில் மளிகைக் கடை ஆரம்பிச்சேன். சண்டை, சச்சரவுகளோடு குடும்ப வாழ்க்கை நடந்தது. ஒரு கட்டத்தில், இரண்டு பேருமே சேர்ந்து வாழ விரும்பாமல் பிரிஞ்சுடலாமான்னு யோசிச்சோம். மனசளவில் வெறுத்துப் போயிருந்தேன். “என் நண்பரோடு பக்கத்தில் இருக்கிற மலைக்கோவிலுக்குப் போனேன்.
அங்கே ஒரு பெரியவரைச் சந்தித்தேன். என்னமோ தெரியலை, அவர்கிட்டே என் மனசில் இருப்பதை சொல்லணும் போல இருந்துச்சு. “எல்லாத்தையும் அமைதியாகக் கேட்டவர், அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை இதெல்லாம் ரத்த சம்பந்த உறவுகள். இது, கடவுள் நமக்குக்கொடுத்தது.
மனைவிங்கிறது, மூணு முடிச்சு போட்ட பந்தத்தால், உங்களோடு வாழ வந்தவள். காலமெல்லாம் உன்னோடு இணை பிரியாமல் வாழப் போகிறவள்.''அன்பு,பாசம்,இதெல்லாம், முழு மனசோடு இவள் எனக்கானவள், எனக்கு உரிமை உள்ளவள்ங்கிற நினைப்போடு வாழ ஆரம்பிக்கும்போது, தன்னால் வரும்.
உன் மனசிலும் அந்த நினைப்பு வரணும். அப்ப உன் மனைவிகிட்ட குறை கண்டுபிடிக்க தோணாது. "அன்பு, பாசம், அதை மறக்க வச்சுடும். அவள் தப்பானவளாகவே இருந்தாலும், நீ விட்டுக் கொடுத்து போ. ஒரு கை ஓசை சத்தம் வராது. உன்னுடைய இந்தப் பக்குவம், நிச்சயம் அவ மனசிலும் மாற்றத்தைக் கொண்டு வரும்.
"காலங்கள், அவள் மனசிலும் அன்பை விதைக்கும். சந்தோஷமான வாழ்க்கைக்கு அர்த்தமே இதுதான்பா. வாழ்ந்து பாரு. தாம்பத்ய வாழ்க்கையில் குறைகளே தெரியாதென அவர் சொன்னது, என் மனதில் பதிந்தது. அன்னையிலிருந்து என் மனைவியை நான் பார்த்த பார்வையே வேறு.
“அந்த பெரியவர் சொன்னது நுாற்றுக்கு நுாறு உண்மை. என்கிட்டே ஏற்பட்ட மாற்றம், அவள்கிட்டேயும் பிரதிபலித்தது. காலங்கள் நகர, இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களுக்கா சண்டை போட்டோம்ன்னு, நாங்களே நினைச்சு, சிரிச்சோம்.
ஒருவர் மேல் ஒருவர் நாங்க வச்சிருந்த பாசம், எங்களுக்குக் குழந்தை இல்லைங்கிறதைக் கூட பெரிசா தெரியல. "இதோ, 50 ஆண்டுகள் நிறைவா வாழ்ந்துட்டோம். இப்ப நம் இளைய தலைமுறைகள் மற்றும் கல்யாணமான நம் உறவுகள், இரண்டு வருடம், மூன்று வருடம் கூட சேர்ந்து வாழ் முடியாமல், ஏதாவது குற்றம், குறைகளோடு சுலபமாக விவாகரத்து வாங்கிடறாங்க. மனசுக்கு வருத்தமா இருக்கு.
''எனக்கு தெரிஞ்சு, நம் குடும்பத்திலேயே இரண்டு, மூணு, 'டைவர்ஸ்' நடந்தாச்சு. கல்யாணங்கிறது ஆயிரம் காலத்து பயிர். எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களைத் தள்ளி வச்சு, உண்மையான அன்போடு, பரஸ்பரம் விட்டுக் கொடுத்தலுடன் வாழ ஆரம்பிங்க. காலங்கள் நிச்சயம் உங்களுக்குள், மாற்றத்தை ஏற்படுத்தும். இது என் அனுபவத்தில் நான் தெரிஞ்சுக்கிட்டது.
"இப்போதைக்கு வக்கீலிடம் போக வேண்டாம்பா... என், 'ஈகோ'வை விட்டு, ஊருக்குப் போகலாம்ன்னு இருக்கேன். அவர்கிட்டே மனசு விட்டு பேசறேன். நாளடைவில் எல்லாம் சரியாயிடும்ன்னு தோணுது, '' என்று, மேகலா சொல்ல, அவரது மனம், அண்ணனுக்கு ஆயிரம் கோடி நன்றிகள் சொன்னது.
கதை ஆசிரியர்:பரிமளா ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."