New

சிறு சேமிப்பு

சிறு சேமிப்பு-savings


சிறு சேமிப்பு


அம்மா, நான் பன்னிரண்டாவது வகுப்புத் தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவி” என்று சொல்லிக் கொண்டே ஒடி வந்தாள் செல்வி.

செல்வியின் சாதனை பிரமிக்க வைத்தது அஞ்சலையை. மகளைப் பள்ளியில் சேர்த்த அஞ்சலை மற்றபடி அவள் படிப்பிற்கு வேறு ஒன்றும் செய்யவில்லை. மற்ற மாணவ, மாணவியர் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்று டியூஷன் வகுப்பிற்குச் செல்ல, பண வசதியில்லாத செல்வி அவள் அறிவை மற்றும் நம்பியிருந்தாள்.

செல்வியின் தாய் அஞ்சலை ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் நான்கு வீடுகளில் வீட்டு வேலை செய்து கொண்டிருக்கிறாள். தந்தை தங்கராஜ் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். இருவரும் எட்டாவது வரைப் படித்தவர்கள்.

“அம்மா, என்னை காலேஜில் சேர்த்து படிக்க வை. நான் நன்றாகப் படித்து டீச்சர் ஆகவேணும்” என்று அடிக்கடி சொல்வாள் செல்வி.

வேலை செய்கின்ற வீடுகளில் சொல்லி ஏதாவது சூப்பர் மார்க்கெட், பெரிய துணிக்கடை, நகைக்கடை போன்ற இடங்களில் வேலை கிடைத்தால் குடும்பச் சூழலுக்கு உதவியாக இருக்கும் என்பது அஞ்சலை, தங்கராஜ் ஆகியோர் எண்ணம்.

நன்றாகப் படிக்கின்ற பெண்ணை மேல் படிப்புக்கு அனுப்ப வசதி இல்லையே என்ற வருத்தம் அஞ்சலைக்கு. மேல் படிப்பு வேண்டாம் என்றால் குழந்தை மனம் என்ன பாடு படும் என்பதை அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் மூன்றாண்டுப் படிப்பிற்கு சம்பளம், புத்தகங்கள் என்று ஐம்பாதாயிரம் வரை செலவாகும் என்று கேள்விப்பட்டாள்.

ஒரு வாரம் கழித்து க ல்லூரியிலி ருந்து கடிதம் வந்தது. “செல்வி, பள்ளியிலே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றிருக்கிறாள். ஆகையால் அவளுக்கு எங்கள் கல்லூரியில் கட்டணம் இல்லாமல் மேல் படிப்பு படிக்கலாம். கல்லூரி தங்கும் விடுதியில் கட்டணம் இல்லாமல் தங்கிப் படிக்கலாம். உடனே கல்லூரியில் சேரவும் என்று
அழைப்பு வந்தது.

அஞ்சலையின் மனம் மகிழ்ச்சிக்கும், வருத்ததிற்கும் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. உதவித் தொகையுடன் கல்லூரியில் சேர்க்கை கிடைத்தது அவளின் மகிழ்ச்சிக்குக் காரணம். ஆனால் கல்லூரியில் பயிலச் செல்லும் மகளுக்குத் தரமான துணிமணிகள், காலணி, பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வாங்குவதற்குத் தேவையான பணவசதி கையில் இல்லையே என்பதில் வருத்தம். பத்தாயிரம் ரூபாய் கடனாகக் கிடைத்தால் செலவினத்திற்கு சௌகரியமாக இருக்கும், ஆனால் யாரைக் கேட்பது என்று அவள் மனம் அலை பாய்ந்தது.

ஆட்டோ ஓட்டுவதில் வண்டி வாடகை, எரிபொருள், செலவுகள் போக கையில் கிடைக்கும் பணம் அதிகமில்லை. முதலாளியிடம் கடன் வாங்குவதும் கடினம்.

அஞ்சலை. வேலை செய்கின்ற வீடுகள் ஒவ்வொன்றிலும் முன்பணமாக இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் கிடைத்தால் அவள் தேவை நிறைவேறும். ஆனால் மாதா மாதம் கொஞ்சம் கொஞ்சமாக கடனைச் செலுத்தும் போது மாதச் சம்பளத்தில் துண்டு விழும். அதைச் சரிகட்ட நகை அடகு வைத்தோ, அதிக வட்டிக்கு கடன் வாங்கவோ நேரிடும்.

அடுக்கு மாடிக் குடியிருப்பில் வயதான தம்பதியர் மைதிலி, சிவராமன் வீட்டில் வேலை செய்து வருகிறாள் அஞ்சலை. நன்கு பழகக் கூடிய தம்பதியர் என்றாலும் பணவிஷயத்தில் சிவராமன் கறார் பேர்வழி. அனுசரணையாகப் பேசக்கூடிய மைதிலியிடம் கேட்டுப் பார்க்கலாம் என முடிவு செய்தாள் அஞ்சலை. அவர்களிடம் பணம் கிடைத்தால் மற்ற வீட்டுக்காரர்களிடம் அதைச் சொல்லி கடன் கேட்பது எளிது.

அஞ்சலையைப் பார்த்தவுடன் “என்ன அஞ்சலை? ஏன் கவலையா இருக்கே? செல்விக்கு கல்லூரியிலே தங்கிப் படிக்கிறதுக்கு உதவித் தொகை கிடைத்திருக்குன்னு கேள்விப்பட்டேன். சந்தோஷமா இருக்க வேணாமா” என்றாள் மைதிலி.

“இல்லைம்மா, செல்விக்கு புத்தகம், துணிமணி எல்லாம் வாங்கப் பத்தாயிரம் ரூபாய் வேணும். அதுக்கு என்ன பண்றதுன்னு நினைச்சுதாம்மா கவலைப் படறேன். நீங்க உங்களாலே முடிஞ்சதை இரண்டாயிரமோ, மூவாயிரமோ கொடுத்தா, நான் வேலை செய்யற மத்தவங்க வீட்டுக்காரங்க கிட்டேயும் கேட்டுப் பார்ப்பேன். மாசாமாசம் சம்பளத்திலே நீங்க கழிச்சிக்கலாம்.”

“ஐயாவைத்தாம்மா கேட்கணும். அவருக்கு இந்த மாதிரி கடன் கொடுக்கிறது எல்லாம் பிடிக்காது. கொஞ்சம் பொறுமையா இரு. நான் கேட்டுச் சொல்கிறேன்” என்றாள் மைதிலி.

இதைக் கேட்டவுடன் அஞ்சலையின் முகம் சுருங்கியது. வேலையில் சேரும் போது சிவராமன் சம்பளத்திற்குப்
பேரம் பேசியதை நினைவு கூர்ந்தாள். அஞ்சலை கேட்ட ச ம் ப ள த் தி ல் முன்னூறு ரூபாய் குறைத்துக் கொடுத்தார் சிவராமன்.

இவர்களிட ம் உதவி கிடைக்காது என்று அவள் உள் மனம் சொல்லியது. நம்முடைய நேரம் சரியில்லை என்று நொந்து கொண்டாள் அஞ்சலை. அஞ்சலை கிளம்பும் நேரத்தில் வந்து சேர்ந்தார் சிவராமன்.

நேராக அஞ்சலையிடம் வந்த அவர் அவளிடம் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார். வாய் பேச முடியாமல் திகைத்து நின்ற அஞ்சலை, சுதாரித்துக் கொண்டு, “ஐயா…நான் மாதம் ஐநூறு ரூபாயாக பணத்தைத் திருப்பித் தருகிறேன்” என்று தயங்கிய வண்ணம் சொன்னாள் அஞ்சலை.

“இது உன்னோட பணம், நீ திருப்பித் தர வேண்டாம்” என்றார் சிவராமன்.

“ஐயா…., நீங்க என்ன சொல்றீங்க, எனக்கு ஒன்னும் புரியலை”

“மூன்று வருடம் முன்னே, நீ வேலை தேடி வந்தப்போ, மூவாயிரம் ரூபாய் சம்பளம் கேட்டே. நான் இரண்டாயிரத்து ஐநூறு தரேன்னு சொன்னேன். பேரம் பேசி இரண்டாயிரத்து எழுநூறுக்கு ஒத்துக்கிட்டே. நீ அன்னைக்கு எ ன்னை திட்டிக்கிட்டே போயிருப்ப” என்று சிரித்தார் சிவராமன்.

“நீ வேலை கேட்டு வந்தப்போ செல்வியும் வந்திருந்தாள். ஒன்பதாம் வகுப்பு படிக்கிறா. நல்லா படிப்பா. காலேஜ் படிக்கணும்னு ஆசைப்படுது அப்படின்னு சொல்லிக்கிட்டிருந்தே”

“நீ கேட்ட மூவாயிரம் சம்பளம் கொடுத்திருந்தா எல்லாத்தையும் செலவு பண்ணி, பின்னாடி கஷ்டப்படுவே அப்படின்னு மனதிலே தோணித்து. அதனாலே, மாதம் முன்னூறு ரூபாய் சேமிப்புக் கணக்கிலே செல்வி பேரில போட்டு வந்தேன். இந்த மூன்று வருடத்திலே அது வட்டியோட சேர்ந்து பன்னிரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் இருக்கு.” என்றவர் அஞ்சலையிடம் வங்கிக் கணக்குப் புத்தகத்தை கொடுத்தார்.

“இந்த மாசத்திலிருந்து ஐநூறு ரூபாய் சம்பளம் அதிகமாகத் தரேன். நீ மாசம் முன்னூறு ரூபாயானும் சேமிச்சு வை. பணம் அதிகம் வரும் போது அந்த அதிகப் பணத்தையும் சேமிப்பிலே போடு. சேமிப்பு பழக்கம் இருந்தா, நாம மீதி பேர் கிட்ட கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் வராது இல்லையா” என்றார் சிவராமன்.

“செலவுக்கு அப்புறம் சேமிக்க பணம் மிஞ்ச மாட்டேங்குது ஐயா” என்றாள் அஞ்சலை.

“செலவுக்கு அப்புறம் பணம் மீதி இருந்தால் சேமிக்கலாம் அப்படின்னு இல்லாமல், கொஞ்சமாவது பணம் சேமிக்கவும் அப்படின்னு எடுத்து வை. மீதியை செலவு பண்ணு. இந்தப் பழக்கம் வந்தால் நிச்சயமாக சேமிக்க முடியும். இத நா சொல்லல வாரன் பஃபெட்னு ஒரு அறிஞர் சொல்லிருக்காரு” என்றார் சிவராமன்.

Sirukathai | Sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ்சிறுகதைகள்

கருத்துகள் இல்லை