sirukathaigal

வரம்


வரம்

மீனாட்சி சுந்தரம் தனியார் மருத்துவமனை,

பிரசவ வார்ட் –

அறை எண் 13 – ஆபரேஷன் அறையின் முன்பு ,

அங்கும் இங்குமாக பட படப்புடன் நடந்து கொண்டு இருந்தான் நாராயணன்.

“கடவுளே , எங்களுடைய நீண்ட வருட கனவு , இந்த குழந்தை , திருமணம் ஆகி பதினெட்டு வருடம் ஆச்சு. நல்ல படியாக குழந்தையும் தாயும் நலம்ன்னு சொல்லணும் , உன்னை தான் முழுசா நம்பி இருக்கேன்” என்று மனதில் கடவுளை வேண்டியபடி நடந்து கொண்டு இருந்தான் நாராயணன்.

நாராயணன் வயது நாற்பத்தி நான்கு மேல் இருக்கும். வீட்டு புரோக்கர். கிடைக்கும் இதர வேலைகளையும் பார்த்து கை நிறைய சம்பளம்.

நாராயணின் மனைவி வள்ளி , பிரசவ வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளாள்.

அரை மணிநேரத்திற்கும் மேலாக உள்ளே சென்ற மருத்துவர்கள் , வெளியில் வரவில்லை. குழந்தை பிறந்த சப்தமும் கேட்காமல் நாராயணன் பரிதவித்து கொண்டு இருந்தான். முடிவில் குழந்தை அழும் சப்தம் கேட்க , பெருமூச்சு விட்டான் நாராயணன்.

சில வினாடிகளில் மருத்துவர்கள் , செவிலியர்கள் ஒருவர் பின் ஒருவர் வெளியில் வந்தனர். அனைவைரையும் ஏக்கதுடன் பார்த்து கொண்டு இருந்தான் நாராயணன்.

கடைசியாக வந்த செவிலியர் பெண் , கையில் குழந்தையுடன் வந்து , “வள்ளிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு” என்று கூறி குழந்தையை நாராயணனிடம் காட்டினாள்.

“கொஞ்ச நேரம் கழிச்சு , உள்ள போய் வள்ளிய பார்க்கலாம் “ என்று கூறிவிட்டு , அந்த செவிலியர் பெண் குழந்தையை உள்ளே அழைத்து சென்றாள்.

நாராயணனுக்கு வாய் விட்டு சொல்ல முடியாத அளவு எல்லையற்ற மகிழ்ச்சி. இந்த வயதில் தனக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறான் என்ற மகிழ்ச்சி.

சில நிமிடத்தில் , அறைக்குள் சென்றான்.

படுக்கையில் வள்ளி , சோர்ந்து போயிருந்தாள். வென்று விட்டதாக மகிழ்ச்சி முகத்தில் தெரிந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்களில் கண்ணீர் சிந்த ஆரம்பித்தனர்.

“நாம சாதிச்சிட்டோம். நமக்கு ஆண் குழந்தை பிறந்துட்டான்.” என்று வள்ளி கண்களில் கண்ணீருடன் கூறினாள்.

“ஆமா , வள்ளி எவளோ பேச்சு வாங்கிருக்கோம். சொந்தகாரங்க , அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க , நண்பர்கள் என எல்லாரும் அவங்களால முடிஞ்ச வரை பேசிட்டாங்க. நம் மனசை காய படுத்திட்டாங்க. அதுவும் எங்க அம்மாவும் , பேசிருச்சு “ என்று நாராயணன் தன் பங்கிற்கு கூறி கண்ணீர் சிந்தினான்.

“போகாத கோவில் இல்ல, வேண்டாத சாமி இல்ல, ஒரு ஆண் குழந்தைய பெத்துக்க துப்பில்ல என்று நம்மள ரொம்ப கேவல படுத்திட்டாங்க “ என்று வள்ளி கூற,

“இப்போ பேசுனவங்க எல்லாம் முகத்தை எங்க வச்சிபாங்க, கடவுள் இருக்கான் வள்ளி “ என்று நீண்ட தேடலுக்கு பின் தங்களுக்கு கிடைத்த ஆண் குழந்தையை கொஞ்சிய படி இருவரும் பேசி கொண்டு இருந்தனர்.

“நம்ம குடும்பத்திற்கு வாரிசு வந்துட்டான்” என்ற சந்தோஷ குரலில் கூறிய படி, நாராயணின் அம்மா பவுனு உள்ளே வந்தாள்.

உள்ளே வந்ததும் , குழந்தைய கையில் தூக்கி , குழந்தையின் கால்களில் nமுத்தமிட்டாள் பவுனு.

“நம்ம குடும்பத்திற்கு கிடைத்த வரம் , என் பேரன். நான் தான் சொன்னேன்ல , இந்த தடவ ஆம்பள பையன் தான் பிறப்பான்னு” என்று பவுனு பெருமிதம் பேசி கொண்டு இருந்தாள்.

“அம்மா நீ மட்டும் வந்திருக்க , பிள்ளைகளை எங்கே ? “ என்று நாராயணன் கேட்டு கொண்டு இருக்கும் போதே , ஒருவர் பின் ஒருவராக உள்ளே வந்து கொண்டு இருந்த நாராயணனின் நான்கு பெண் குழந்தைகள்.

நாராயணனுக்கு இது முதல் பிரசவம் அல்ல , இதற்கு முன்பு நான்கு பெண் குழந்தைகள் , மூத்த பெண்குழந்தை பனிரெண்டாவது படிக்கிறாள். இரண்டவது பெண் குழந்தை ஒன்பதாவது படிக்கிறாள். மூன்றாம் பெண் குழந்தை ஆறாவது படிக்கிறாள். நான்காவது பெண் குழந்தை பிறந்து இரண்டு வயது ஆகிறது.

நான்கு பேருமே பெண் குழந்தை , என்று ஊரெல்லாம் ஒரே பேச்சு. கேலி கிண்டல் செய்தார்கள். அவர்களின் வாயை அடைக்க கிடைத்த பரிசு தான் ஐந்தாவது ஆண் குழந்தை. குடும்ப வாரிசு.

பெண்குழந்தைகளும் வரம் தான் என்பதை புரிந்து கொள்ளாமல் , அதனை சாபமாக நினைத்து இருக்கும் மக்கள் சற்று இருக்க தான் செய்கிறார்கள். குழந்தையில் ஆண் – பெண் இரண்டும் மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்வோம்.

குழந்தையே நமக்கு கடவுள் தரும் வரம் தான்.

குழந்தைகள் இன்றி இருக்கும் தம்பதியினர் இன்று ஏராளம்.

அவர்களின் வலி அதிகமானது. தாங்கி கொள்ள முடியாத வலி.


 முற்றும்.

கதை ஆசிரியர்: மணிராம் கார்த்திக்

                                                                                                                   சிறுகதை : மணிராம் கார்த்திக்  

காமாட்சி அம்மன் கோயில் தெரு, மேல அனுப்பனடி, மதுரை

இந்த கதை என் சொந்த கற்பனை கதை , என்பதை உறுதி அளிக்கிறேன்




Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."