sirukathaigal

முயற்சி இருந்தால் சாதிக்கலாம்!

சொந்தமாக ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த, என் தங்கையின் கணவர், பக்கவாதத்தால் படுத்த படுக்கையாகி விட்டார். 

கல்லுாரி இறுதி ஆண்டு படிக்கும் மகள், 10ம் வகுப்பு படிக்கும் மகன், மருத்துவம் மற்றும் வீட்டு செலவு என, அனைத்தையும் சமாளிக்க முடியாமல், குடும்பமே கவலையில் மூழ்கியது. கொடுத்து உதவும் நிலையில், உறவுகளுக்கும் வசதியில்லை. 

இரண்டு நாட்கள், அப்பாவின் நண்பர்கள் உதவியுடன், ஆட்டோ ஓட்ட பழகினாள், மூத்த மகள். மூன்றாம் நாள், தாளே ஆட்டோ ஓட்டி, வருமானம் ஈட்ட துவங்கி விட்டாள். 

பெண் பிள்னைகள் படிக்கும் பள்ளிகளுக்கு சென்று, பெற்றோர்களிடம், 'பெண் பிள்ளைகளுக்கு பெண் ஓட்டுனர்' என்று, 'நோட்டீஸ்' கொடுத்து, அவர்களை தன் வசம் இழுத்தாள். 

பள்ளி குழந்தைகளின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாமல், தன்னைப் போல கஷ்டப்படும் பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக் கொடுத்தாள். வங்கியில் கடன் பெற்று, ஐந்து ஆட்டோக்களை வாங்கி, பள்ளி சவாரியை ஓட்ட வைத்தாள்.

பெண் ஒட்டுனர்களுக்கு சம்பளம் கொடுப்பதுடன், ஆட்டோ வாங்கிய மாத தவணையையும் செலுத்தி வருகிறாள். அவளுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது.

கல்லூரி பேராசிரியர்களின் துணையோடு, 'ஆன்லைனில்' சிறப்பு வகுப்பு மூலம் பயின்று. நல்ல மதிப்பெண் பெற்று. கல்லுாரி படிப்பையும் முடித்தாள். வளாக நேர்காணல் தேர்வில் தேர்ச்சி பெற்று, நல்ல வேலையிலும் சேர்ந்து விட்டாள். வங்கியின் மூலம் கடன் பெற்று, தான் வேலை செய்யும் அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்ல தேவையான கார்களை வாங்கினாள். 

நம்பிக்கையான மூன்று பெண் ஒட்டுனர்களை பணியமர்த்தி, தற்போது வானளாவ உயர்ந்து நிற்கிறாள். கணவர் படுத்து விட்டார். பெண் பிள்ளையை கட்டி கொடுத்து விடலாம் என்று இல்லாமல், மகளின் முயற்சிக்கு உறுதுணையாக நின்ற என் சகோதரியை நினைத்து, பெருமை படாத நாட்களே இல்லை. 

உழைத்து சம்பாதிக்கும் எந்த வேலையும் கேவலமானது இல்லை என்பதை, மனதில் கொள்ளுங்கள் பெண்களே!

 ஜேயரத் குமார், 

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."